எங்கே சோழனின் குண்டலம்?

எங்கே சோழனின் குண்டலம்?

தமிழில் அரசியல் படங்கள்

ஒரு வசதிக்கு 1947 இல் இருந்தே தமிழில் அரசியல் படங்கள் துவங்கி விட்டன என்று சொல்லலாம். நாம் இருவர் என்று ஒரு படம்.

மெய்யப்பன் இயக்கத்தில், ஏவிஎம் காந்தியம் முழக்கியது. பாரதியார் பாடல்கள் கிளர்ச்சியூட்டின. சுதந்திர இந்தியாவைப் பற்றின மக்களின் கனவுகளை இந்தப் படமும் தூண்டியது. வழக்கமான புராணப் படங்களில் இருந்து விலகிச் சமூகம் பற்றிப் பேசின. இந்தப் படத்தை ஒரு அறிவார்ந்த வழியாகவே இதை எடுத்தவர்களும், திரைப்பட ரசிகர்களும் நினைத்திருக்க வேண்டும். அரசியல் பேசுவதே மேலும் ஒரு அடி எடுத்து வைப்பதுதான் என்று கருதியிருக்க வேண்டும். மக்கள் அதில் மகிழ்வுடன் பங்களித்திருக்கிறார்கள் என்பதை படத்தின் வெற்றியை வைத்து முடிவு செய்து கொள்ள முடியும். நான் சொல்ல முயலுவது என்னவென்றால் மக்கள் தாங்கள் வாழும் காலத்தின் விமர்சனத்தை எப்போதும் அறிய விரும்புகிறார்கள். அதில் மாற்றமே இல்லை இன்று வரையில். எவ்வளவோ சினிமா வளர்ந்ததற்கு அப்புறமும், யாரிடமும் உரையாடுகிற பல்வேறு தளங்கள் இருந்த போதிலும் ஜோக்கர் வெற்றி பெற்றதை அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

47 க்கு முன்னால் தியாக பூமி பேசிய தேசியம் சரியாய் எடுபடாமல் போனாலும் பின்னால் பல படங்கள் வந்தன. வ.உ.சி, பாரதியார், கட்டபொம்மனை எல்லாம் திரையில் பார்த்தோம். இயல்பாகவே, ‘விக்’ வைத்துக் கொண்டு சிவாஜி பொடி வைத்துப் பேசிய பல படங்களையும் தேசியப் படங்களாய் விளக்கம் சொல்லுகிற ஒரு கோஷ்டி எப்போதும் இருந்தது. குறைந்தபட்சம் அந்த மாதிரிப் படங்களில் சோ போன்றவர்களாவது மற்றவர்களை இடித்துரைப்பதன் மூலம் தேசியச் சேவையாற்றினர்.

வேறு ஒரு கோணத்தில் இப்போது பராசக்தியை குறிப்பிடலாம். அதற்கு முன்னால் வந்த ஓர் இரவு, தாய் மகளுக்கு கட்டிய தாலி, ரங்கோன் ராதா போன்ற படங்களை பின்னால் பார்க்க முடிந்திருக்கிறது. சந்தேகமே இல்லாமல், சினிமா பாஷையில் சொல்வதெனில், அவைகளில் ஒரு ஞூடிணூஞு இருந்தது. சமூகக் கொடுமைகளின் மீது அவர்கள் வைத்த விமர்சனம், இதை யாராவது சொல்லுவார்களா என்று எதிர்பார்த்திருந்த ஒன்றுதான். எச்சில் தெறிக்க சகலத்தையும் பேசும் பொதுக் கூட்டங்களை பெருக்கினார்கள். அவைகள் சினிமா எனப்பட்டன. திராவிட அரசியல் அதிகாரத்துக்கு வந்த போது அதன் வீரியமும் காரியமுமெல்லாம் வேறு பலவாயிற்று. அவர்களுடைய சினிமாவில் இடம் பெற்ற அரசியல் சுட்டியதெல்லாம் வீரப்பனை, அசோகனை, நம்பியாரை ஒழித்துக் கட்டுவது தான். எம்.ஜி.ஆர்.தான் பங்கு பெற்ற திரைப்படத்தின் அத்தனை நுட்பங்களையும் அறிந்திருந்தார், அவரது படங்கள் உறுதியான டெக்னிக்குகளை எடுத்துக் கொண்டிருந்தன, ஆனால் அவரால் நான் ஆணையிட்டால் தான் பாட முடிந்தது. வலுவான சினிமாவின் மொத்த உருட்டுக் கட்டைகளையும் வீசி மக்களை சரித்து வேறு ஒரு திராவிடம் சொன்னார். ஒருவேளை அக்காலத்துக்கு அதுதான் சரியாய் இருந்திருக்கும், இறுதியாய் திராவிட சினிமா சன் பிக்சர்ஸ் தயாரித்த காயலான் கடைப் படங்களை வைத்து காசடித்ததுடன் நிறைவடைந்தது. இதில் எவ்விதமான தொடர்ச்சியோ வளர்ச்சியோ பொதுவாய் இருந்திருக்கவில்லை. சினிமா சக்தி மிகுந்த பிரச்சார உபகரணம் தான் என்று விவாதமென்றால் வானவில்லை அட்டை செட்டு போட்டுக் காட்டியது தவிர்த்து மக்களின் அசலான உரிமைகளுக்கு ஒரு இலையைக் கூடக் கிள்ளிப் போட அவர்களால் ஆகவில்லை. ஒரு நல்ல சினிமா அந்த உவர்நிலத்தில் இருந்து எழ முடியவில்லை.

திரைப்படத்தில் மக்களிடம் அரசியல் பேசி விழிப்புணர்ச்சி கொள்ள வைப்பதற்கு உண்மையான சமூகக் கோபமும் அக்கறையும்  வேண்டும். அது ஓரளவிற்கு இடதுசாரிகளிடம் இருந்தது. அவர்கள் பசியைக் கிளிஷேவாக எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையான சுரண்டல்களைச் சொல்ல முயன்றார்கள். நிமாய் கோஷ் மூன்று படங்கள் செய்திருக்கிறார். பாதை தெரியுது பார், சூறாவளி போன்ற படங்கள் பெரும் அர்ப்பணிப்புகளுக்குப் பின்னால் நிகழ்ந்தவை. பழக்கங்களின் தடத்தில் சுற்றிய மக்கள் அப்போது அவைகளை அடையாளம் கண்டு கொள்ளாமல் தவறியிருக்கலாம். அவை சுட்டிக் காட்டிய பிரச்சினைகள் தீவிரமானவை. ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன் எல்லா முனைகளிலும் தீவிரமான ஒரு அரசியல் படம். ஆயினும் பிரச்சாரமே இல்லாமல் மிக ஆழமான ஒரு கதையைச் சொல்லி மக்களை நிலைகுலையச் செய்த ஒரு படத்தைப் பற்றி சற்று விரிவாய் குறிப்பிட விரும்புகிறேன், அது துலாபாரம்.

1969 இல் வந்தது. தோப்பில் பாசி எழுதிய கதையை வின்சென்ட் இயக்கினார்.   முதலில் மலையாளத்தில் வந்த படம்தான். அது இந்தியாவின் பசி முகத்தைச் சித்தரித்த படம். தனது நோக்கத்தை மிகச்சரியாய் சொல்லும் அளவிற்கு அது நுணுக்க மான திரைக்கதையைக் கொண்டிருந்தது. கீழ்த் தட்டு மக்களின் எந்த அல்லாட்டங்களையும் அறியாத கதாநாயகி அங்கு வந்து சேர்ந்து, யூனியன் தலைவன் ஒருவனைத் திருமணம் புரிந்து கொண்டு வாழ்வைத் துவங்குகிறாள். அதில் கணவனை இழந்த நாயகி மூன்று பிள்ளைகளுடன் வறுமையில் உழலுவதைச் சினிமாவாக இல்லாமல்  சொன்னார்கள். நமது குழந்தைகள்தான் பசியில் கருகுவது போலிருந்தது. நாம் எதையும் செய்ய அருகதையற்றவர்கள் என்பது போலிருந்தது. அந்தக் குழந்தைகள் திருடுவதற்கு முற்பட்ட போது நமக்கு அவமானமாயிருந்தது. கதாநாயகி அவைகளுக்கு கொடுக்க வேண்டிய சோற்றில் விஷம் கலந்த போது வெகு தீரத்துடன், ரோஷத்துடன் அதை நாம் சரி என்றே அங்கீகரிக்கிறோம். மூன்று குழந்தைகள் இறந்து, சாகாமல் பிழைத்த கதாநாயகியைச் சட்டம் வளைக்கிறது. நீ குற்றவாளி என்கிறது.

ஒரு மனிதப் பிறவி பசித்துச் சாகும்போது வராத யாரும் இப்போது வராதீர்கள் என்று கூக்குரலிடுகிறாள் அவள். சமூகம் அவளுக்கு ஒரு பட்டம் சூட்டிக் களிப்புற்று, நீதி வழங்கி அடுத்த வேலைக்கு போயிருக்கும் என்பதில் என்ன ஐயமிருக்க முடியும்?

எனது நண்பனுக்கு மிகவும் பிடித்த அரசியல் படம் அமைதிப்படை. எப்போதுமே சிரித்து விழுந்து கொண்டு அதைப் பார்க்க விரும்புவான். இதே டைப்பில் முன்பு முகமது பின் துக்ளக் படமும் உண்டு. அதற்கு ரசிகர்கள் உண்டு. திராவிட அரசியலையே கிண்டல் செய்து கொண்டு மணிவண்ணன் பல படங்களை உருவாக்கினார். ஒரு படம் கூட வழக்கமான டெம்ப்லேட்டில் இருந்து ஒரு இன்ச் கூட நகரவில்லை என்பது முக்கியம். எனினும் மக்கள் அரசியலின் இடுக்கு சந்துகளுக்குள் எட்டிப் பார்த்து கிசுகிசுத்துக் கொள்ள முடிந்தது. அநேகமாய் எல்லாமே அவர்களுக்குத் தெரிந்ததுதான். ஆயினும் அது பொதுவெளிக்கு வந்ததில் கொஞ்சம் பேர் ஞானமடைந்தனர். கொஞ்ச காலத்திற்கு முன்பெல்லாம் தீய சக்திகள் பாதாளத்தில் ஒளிந்திருந்தன. அவர்கள் உருமாற்றமடைந்து பொது வெளியில் நின்று, தூய வெள்ளையாடை உடுத்தி வெட்டிட்டு வா, குத்திட்டு வா என்றனர். சமீபத்தில் கூட ஒரு படத்தின் கதையை  கேட்டபோது அதன் இயக்குநரிடம் படம் பூராவும் இப்படி வெள்ளையாடை தெறித்தால் ரசிகர்களின் கண்கள் கூசிப் போகுமே என்றிருந்தேன். கொஞ்சம் குறைத்தார் என்று நம்பிக்கை. அரசியல்வாதிகள் வில்லன்களாய் வருவதெல்லாம் அரசியல் படங்கள் என்றால் தமிழின் மொத்த படங்களும் அரசியல் படங்கள்தான்.    

கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் படமானதில் சந்தோஷமுண்டு. அச்சமில்லை, அச்சமில்லை ஒரு அரசியல் சித்திரம் தான். மலையாளத்தில் எம்.டி.வி, தாமோதரன் ஆகியோருடைய அரசியல் திரைக்கதைகள் பலவும் மறு ஆக்கம் செய்யப்பட்டு தமிழிற்கு வந்தன. இனி ஒரு சுதந்திரம் என்கிற படமே கூட கன்னடம் தான். மணிவண்ணன் அதைக்கொண்டு வந்தது ஒரு அக்கறையால் தான்.

யாரையும் குறைசொல்ல ஒன்றுமில்லை. நம்மைதான் நமது படங்கள் பிரதிபலிக்கின்றன. வெள்ளத்தனைய மலர்   நீட்டம். அரசியலே நீர்த்துப்போனதாய் இருக்கும்போது அவற்றை அலசி ஆராய்வதில் எதைப் பிரிக்க முயலும். கதா புருஷன், முகாமுகம் போன்ற படங்கள் நமக்கு மரபில்லை. ரேவோ, மிருனாள் சென்னோ, கட்டக்கோ, கோவிந்த் நிகாலனியோ, அரவிந்தனோ சினிமாவில் பேசிய அரசியலை இங்கே பேச வேண்டிய மயக்கமே எழவில்லை என்று சொல்ல வேண்டும். சொல்லி இருந்தால் யார் பார்த்திருப்பார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் இன்று நாம் தீவல்ல. கண்டுபிடிக்காத காட்டுக்குள் இருப்பவர்கள் அல்ல. எந்த காய்ந்து போன கிராமத்திலும்  கோக்கும் பெப்ஸியும் கிடைக்கிறது. உலக சீப்பு, உலக சோப்பு, உலக சொறி களிம்பு என்று எல்லாவற்றையும் பாவிக்கிற நமக்கு ஒரு ஓரத்தில் கொஞ்சம் உலக சினிமாவையும் பார்வைக்கு வைத்துக்கொண்டால் என்ன? சில இலக்கியவாதிகளுக்கு இழுப்பு வருவதைப் பார்த்து பலரும் பயந்து போயிருக்கிறார்கள் என்பது ஒரு உண்மை. நான் சொல்ல வருவது எளிமையானது, வானத்திற்கு கீழே உள்ள அரசியல் அனைத்தும் வேண்டிய வரையில் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன. நாம் சில துவக்கங்களில் இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டிய விரிவை நாம் அங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம். 

யார் எத்தனை சப்பைக்கட்டு கட்டினாலும் மெட்ராஸ் ஒரு அசலான அரசியல் படம்.

அந்தப் படத்தை பற்றி எழுதத் துவங்கினால் அதற்கு ஒரு முடிவே இராது. ஆயினும் அந்தப் படத்தைக் கொண்டு வருவதற்கான களத்தைப் புதுப்பேட்டைதான் அமைத்துக் கொடுத்தது என்று நம்புகிறேன். சொல்லப்போனால் மெட்ராசைவிட தூய்மையானது இது. எல்லா அர்த்தத்திலும் சினிமா. விளிம்பில் இருந்து எழுந்து வந்தவன் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுகிற ஒரு நீண்ட கதை. இழந்தும், அவமானப்பட்டும், பதுங்கியும், பாய்ந்தும், சதிகளை துரோகங்களைப் பிரயோகித்தும், கொன்றும், தப்பித்து ஓடியும் ஒரு கல்வித் தந்தையாய் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுகிற முடிவில் நாம் காண்பது நமக்கு முன்னே இருக்கிற அத்தனை அரசியல் பிரபலங்களையும்தான். அவர்கள் கொன்றும் கொடுத்தும் வந்திருக்கிறார்கள். அவர்கள்தான் நம்மை ஆளுவார்கள். அவர்களில் யார் வேண்டும் என்பதை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் எந்த விமர்சனமும் செய்யாமல் தனது போக்கில் போகிற படத்தில் இல்லாத அரசியலில்லை. கதாநாயகனேகூட தர்மத்தின் பக்கம் நிற்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் அதிகார அரசியல் முகத்தை செல்வராகவன் நிறுவிக் காட்டினார். படம் வந்த போது சீயென்று முகம் சுழித்தவர்கள் பதட்டத்துடன் இப்போது திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காலப்போக்கில் இன்னும் பலரும் அதைப் பாராட்ட இருக்கிறார்கள். இதைத்தான் நான் முன்பு புரிந்து கொள்ள வேண்டிய துவக்கம் என்றேன்.

இதற்கு பிறகு பல படங்கள் வந்திருக்கின்றன.

ஆயிரம் ஆண்டுகள் பின் தங்கிய ஒரு இனம் மீண்டும் வீழ்த்தப்படுகிறது. அந்தப் போரைத் தொடர வட சென்னையின் கூலி ஒருவன் வந்து அவர்களுடன் இணைந்து கொள்ளுகிறான் என்பதில் இல்லாத அரசியலா? செல்வா புதுப்பேட்டையைக் காட்டிலும் கனமான ஒரு படைப்பை வைத்தார். தமிழ் அறிவுஜீவிகள் சோழர்காலத்துக் குண்டலம் எங்கேயென்று கேள்வி கேட்டார்கள். மேப்பை விரித்து ஜியாகரபி ஜிலேபி கேட்டார்கள். விவாதமே கூட வராமல் ஆயிரத்தில் ஒருவன் மூழ்கியது. என்றாலும் சில விஷயங்களை நம்பலாம்.

அரசியல் அடிப்படையை அசைத்துப் பார்க்கிற சினிமாக்கள் தமிழில் எப்போதோ துவங்கி விட்டன.அது இன்னமும் வீரியம் கொள்ளும். நான் படத்தின் கதைகளை எழுதி நிரப்பாமல் கோடிட்டு செல்லுவதற்குக் காரணம் உண்டு. எல்லாவற்றையும் தேடிக் கண்டடையும் ஒரு பண்புதான் எதையும் வாழ வைக்கிறது. வட்டமடித்துப் பார்க்கலாம். நாம் கவனிக்க முடியாது போன பலவற்றிலும் இருந்து கண்டடைந்தவற்றிலிருந்தே நமது தேவைகளை அறியலாம்.

நமது தேவைகள்தான் நமது திரைப்படங்களையும் உருவாக்குகின்றன. ஒருவேளை ஏதாவது ஒரு திரைப்படம் நமது அரசியல் விடுதலைக்கு, மானுட தலைக்கு காரணமாய் அமையாது என்று ஏன் அவ நம்பிக்கை கொள்ள வேண்டும்? 

செப்டெம்பர், 2017.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com