ஏலியன்கள் துரத்தும் கனவு!

ஏலியன்கள் துரத்தும் கனவு!

என் கனவுகள் எல்லாமே திரைப்படங்கள்தான் என எப்போதும் தோன்றும். நான் பார்க்க விரும்புகிற திரைப்படங்கள். மிகச்சிறிய வயதிலேயே உண்டான திரைப்படங்களின் மீதான மோகமும் ஆர்வகுறுகுறுப்பும் அவ்வகையில் என் கனவுகளை மாற்றி அமைத்து இருக்கலாம். பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் செல்வபுரம் சிவாலயா தியேட்டர் வாசலில் நின்று படம் ஓடும் சத்தத்தை வைத்தே மனதுக்குள் நானாக இட்டுக்கட்டி சினிமா கதைகளை புனைந்துகொண்டிருந்த பள்ளிக்காலங்கள். அதனாலேயே என் கனவுகளில் சுவாரஸ்யமற்ற கனவுகளே கிடையாது. காரணம் என் கனவுகள் எல்லாமே இன்டர்ஆக்டிவ் திரைப்படங்களை போலத்தான் இருந்திருக்கின்றன. நானே என்கனவுகளை வடிமைத்திருக்கிறேன். அதனாலேயே எல்லா கனவுகளையும் இன்னும் கொஞ்சம் நீளாதா என்கிற ஏக்கத்தோடேதான் முடித்திருக்கிறேன். பாதிக்கனவில் எழுவது பாதி படத்தில் எழுந்து வருவதைப்போன்ற அதே உணர்வையே கொடுத்திருக்கிறது.

என் கனவுகளில் எல்லா எஞுணணூஞும் உண்டு. ஹாரர், த்ரில்லர், ரொமான்ஸ்..  சிறுவனாக இருந்தபோதெல்லாம் டெர்மினேட்டர், ஏலியன், ஜூராசிக் பார்க், ட்விஸ்டர் மாதிரியான சைன்ஸ் பிக்சன் ஆக்சன் திரைப்படங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். யாராவது என்னை கடத்தி செல்வார்கள், ரோபோக்கள் என்னை துரத்தி வந்து சுட்டுகொல்லப்பார்க்கும், என்னுடைய மாமாவை தங்கையை நண்பர்களை பக்கத்து வீட்டு குழந்தைகளை ஏலியன்கள் துரத்தும். ஏனோ இந்த ஆக்சன் கனவுகளில் நான் நாயகனாக ஒருநாளும் இருந்ததில்லை. நானுமே ஒரு பாத்திரங்களில் ஒருவனாகவே அந்த மிருகம் நம்மை நோக்கிதான் வருது ஓடுங்க என்று யாரோ கத்துவார்கள், கூட்டத்தோடு நானும் ஓடிக்கொண்டிருப்பேன். டீன்ஏஜை தொட ஆரம்பித்த பிறகும் ஆக்‌ஷன் ஜானர்தான் என்றாலும் அதில் ரொமான்ஸ் காட்சிகள் இடம்பிடிக்க தொடங்கின. ஏலியன்களோடும் ரோபோக்களோடும் பூதங்களோடு ஆடிக்கொண்டிருந்தவன் சிம்ரன் சினேகா ரம்பாவோடு ஆடத்தொடங்கி இருந்தேன்.

ஒரளவு வளர்ந்து வேலைக்கு செல்லத்தொடங்கிய பிறகு இவ்வகை கனவுகளில் டீடெயிலிங் அதிகமாகி இருப்பதை கவனிக்க ஆரம்பித்தேன். அதாவது அதுவரை ஏர்போர்ட் என்பதை திரைப்படங்களில்தான் பார்த்திருப்பேன். இப்போது நிஜமாகவே ப்ளைட் ஏறி ஊர் சுற்றத்தொடங்கிய பிறகு கனவுகளில் வருகிற ஏர்போர்ட் அச்சு அசலாக இருக்கும். என்ன சிறுநீர் முட்டிக்கொண்டிருந்தால் கனவு ஏர்போர்ட்டில் கழிப்பறை தேடுவேன். அங்கே யாரோ துப்பாக்கியோடு என்னை கொல்ல காத்திருப்பார்கள். ‘டேய் யப்பா  ஒன்பாத்ரூம் போய்க்கறேன் அப்புறம் சுட்டுக்கடா' என்பதாக வசனங்கள் வரும்.

இதே காலக்கட்டத்தில் வாழ்வின் மீதும் மனிதர்கள் மீதும் வெறுப்பு எல்லைமீறி செல்ல ஆரம்பிக்கவும், கனவுகளில் வன்முறையின் அளவு ஒரு ஸ்பூன் ஏறத்தொடங்கி பின் அது ஒரு கரண்டியாகி... பிறகு லாரி லாரியாக லிட்டர் லிட்டராக தெறிக்கத்தொடங்கியது. அதற்கு நான் பார்க்கத்தொடங்கிய திரைப்படங்களும் காரணமாயிருக்கலாம். புதுப்பேட்டை, பருத்திவீரன், கற்றது தமிழ், சுப்ரமணியபுரம் என இப்படங்களின் தாக்கம் கனவுகளையும் பாதிக்கத்தொடங்கி இருந்தது. எழுதத்தொடங்கிய பிறகு கனவுகளை எல்லாம் கதைகளாக எழுதிப்பார்த்துவிட தோன்றும். ச்சே இது நல்ல கதையாக இருக்கிறது இதை சிறுகதையாக எழுதி விகடனுக்கு அனுப்பலாம் நிச்சயம் தேர்வாகும் என்று கனவு ஓடிக்கொண்டிருக்கும்போதே தோன்றும். தூங்கி எழுந்ததும் இந்தக்கனவை எழுதுறோம் கதையை அனுப்புறோம் என முடிவெடுப்பதும், பிறகு தூங்கி எழவும் என்ன கதை அது நியாபகமே வரலையே என குழப்பமாவதும் தொடங்கியது. இதற்காக பக்கத்திலேயே ஒரு குறிப்பேட்டை வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தேன். பிறகு மொபைலில் குறிப்பு எடுக்கவும் தொடங்கினேன். ஆனால் அந்த குறிப்புகளால் ஒரு பயனும் இல்லை. காரணம் குறிப்பெடுத்த எதுவுமே கதையாக தேறியது இல்லை! அல்லது கனவுகளை கதைகளாக உருமாற்றுகிற வித்தை இன்னும் கூடவில்லையோ என்னவோ.

 சினிமாவில் திரைக்கதை எழுத்தாளனாக இப்போதும் கனவுகளை விரட்டுகிறேன். இப்போதும் ஏலியன்கள் துரத்துகின்றன. இப்போதெல்லாம் கனவுகளில் நுட்பங்களை மனம் தேடத்தொடங்குகிறது. இந்த இடத்தை ஜம்ப்கட் பண்ணிக்கலாம். இங்கே கொஞ்சம் மியூசிக் போட்டுக்கலாம். இந்தக்கனவு வெற்றிமாறன் டைரக்டர் பண்ணின மாதிரி இருக்கே... இந்தக்கனவுல லாஜிக்கே இல்லை. இந்த கனவு இன்னும் கொஞ்சம் நீளாதா..

அக்டோபர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com