தீபாவளி சினிமா

Cinema is the most beautiful fraud in the world.  -Jean-Luc Godard.

அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி, 1952. அந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு. இயக்குநருக்கு முன் அனுபவம் கிடையாது. ஒளிப்பதிவாளர் இதுவரை ஒரு ஷாட் கூட எடுத்ததில்லை. முக்கியமான வேடத்தில் நடிக்கும் யாருக்கும் முன் அனுபவமில்லை.  பிரபலமில்லாத ஒரு சிதாரிஸ்ட் (Sitarist) தான் இசையமைப்பாளர். படத்தின் பட்ஜெட் எழுபதாயிரம் ரூபாய். ராணா தத்தா, படத் தயாரிப்பிற்கு உதவுவதாக வாக்களித்து பணம் கொடுத்தார். ஆனால் அவரது மற்ற படங்கள் ஊற்றிக் கொள்ள, மேலும் பணம் தரமுடியாதென்று கைவிரித்துவிட்டார். இயக்குநர் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி கொஞ்சம் படமெடுத்தார். பின் படப்பிடிப்பை தொடர்வதற்கு  பணம் சேர்க்க கிராபிக் டிசைனராக வேலை பார்த்தார். ஆசையாக சேகரித்து வைத்திருந்த கிராமபோன் ரிக்கார்டுகளை விற்றார். மனைவியின் நகைகளை அடகு வைத்தார்.இவ்வளவும் படத்தை முடிக்க உதவவில்லை. அவ்வப்போது நடந்து கொண்டிருந்த படப்பிடிப்பு ஒரு வருடம் நடக்கவில்லை.

படம் பிடிக்க உதவி கேட்டு மாநில முதல்வரை அணுகினர். சம்மதித்த முதல்வர் அதிகாரிகளை அதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்க்க சொல்ல, பார்த்தவர்கள் கிராமப்புற அபிவிருத்தியை முன்னிருந்தும் படம் என அபிப்பிராயப்பட கடன் கொடுக்க முடிவானது. தடைப்பட்ட படப்பிடிப்பு தொடர்ந்தது. அந்த காலகட்டத்தில் நியூயார்க் மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட்டின் துறைத் தலைவர் மன்ரோ வீலர் இந்தியா வந்தவர் இந்த படம்  பற்றி கேள்விப்பட்டு இயக்குநரைச் சந்திக்கிறார். அவர்களது சந்திப்பு இயக்குநருக்கு உதவியாக முடிந்தது. இயக்குநரின் திறமை நம்பிக்கையளிக்க, அடுத்த வருடம் மே மாதத்தில் தங்களது அமைப்பில் நடக்கும் விழாவில் உங்களது படத்தை திரையிட உதவ முடியும், ஆனால் அதற்குள் படத்தை முடிக்க முடியுமா? என்றார்.

1955ல் நியூயார்க் நகரில் திரையிடப்பட்ட படத்திற்கு அமோக வரவேற்பு. அந்த திரையிடல் இயக்குநரை உயரத்திற்கு ஏற்றிவிட்டது. அதற்கு பின் தான் சத்யஜித் ரே என்ற பெயர் மெல்ல பிரபலமாயிற்று. நியூயார்க்கில் திரையிடப்பட்டு சில மாதங்களுக்கு பின் தான் பதர் பாஞ்சாலி இந்தியாவில் வெளியானது.

பதேர் பாஞ்சாலி வெளியாகி அறுபது ஆண்டுகள் ஆகிறது.

இனம், மொழியை கடந்து பூகோளத்தின் எல்லா பகுதி மனிதர்களையும் பதேர் பாஞ்சாலி நெகிழ வைத்ததற்கான  காரணமென்று சத்யஜித் ரே , “என்னுடைய எந்த படமும் குறிப்பாக பதேர் பாஞ்சாலி, இந்த நாடு முழுக்கவும் வெளிநாட்டிலும் பார்க்கப்படும் என்று நினைத்ததே இல்லை. அனைவருக்கும் பொதுவான உணர்வுகள், உறவுகள், பாத்திரங்களை வெளிப்படுத்த முடிந்தால் எல்லைகளைக் கடந்து பிற மொழியினராலும் ரசிக்கப் படலாம் என்பதற்கு இதுவே உதாரணமாக அமைந்தது” என இதைப் பதிவு செய்கிறார்.

கடந்த நாற்பது வருடங்களில் மொழியைக் கடந்த பொதுவான உணர்வுகளை பிரதிபலிக்கும் தமிழ் படங்களை வரிசைப் படுத்தும் முயற்சியை அந்திமழை முன்னெடுத்துள்ளது. இந்த இதழில் முதல் பட்டியல் தான். இது வரை தமிழ் சினிமாவை யாரும் இப்படி வகைப்படுத்தியதில்லை.

அந்திமழை தேர்ந்தெடுத்த திரைப்படங்களுடனான தங்கள் அனுபவத்தை தமிழகத்தின் பல பிரபலங்களும் எழுத்தாளர்களும் இந்த இதழில் பதிவு செய்கிறார்கள்.

விடுபட்ட படங்களுடனான உங்கள் அனுபவத்தை எங்களுக்கு அனுப்பினால் இந்த பட்டியலை முழுமையாக்கலாம்.

Grand Illusion, Breathless , Bicycle Thieves போன்ற பிரமாதமான படங்களுக்கு முன்  இதெல்லாம் தூசு என்று யாராவது உரக்க குரல் கொடுக்கலாம். எனது கல்லூரி காலங்களில் நானும் அப்படி குரல் உயர்த்தியவன் தான். அப்போது என்னை விட வயதில் மூத்த நண்பர்,‘திருப்பதி கோவில் பிரம்மோற்சவம் சிறப்புதான், ஆனால் எனக்கு நம்மூர் முப்பிடாதி அம்மன் திருவிழா தான் உசத்தி’ என்று பதிலளிப்பார்.

வரும் பக்கங்களில் உள்ள திரைப்படங்கள் தமிழர் வாழ்வை அழகாக பதிவு செய்ததை யாரும் மறுப்பதற்கில்லை.

-அந்திமழை இளங்கோவன்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com