பிரிந்துபோது உற்சாகம் சேர்ந்தபோது காணோம்
ஓவியம்: ரவி பேலட்

பிரிந்துபோது உற்சாகம் சேர்ந்தபோது காணோம்

மூதறிஞரும் பெருந்தலைவரும் அவர்களது இளமையில் மோதிக் கொண்டதெல்லாம்- திரைக்குப் பின்னால்தான்! ஆனால் அதில் அரசியல் காரம் இருந்தது. உண்மை. ஒருவரை ஒருவர் ‘ஜெயிக்க' உற்சாகம் காட்டினார்கள்.

ஏன் இவர்களிடையே பிரிவு? காமராஜ், தீரர் சத்தியமூர்த்தியின் நேரடி சீடர். சத்தியமூர்த்தி காங்கிரஸ் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர். தமிழில் சூடாகவும் சுவையாகவும் பேச வல்லவராக இருந்தார். தொண்டர் படை சூழ அவர் வீடு காட்சி தந்திருக்கிறது. தொண்டராக வந்து அவரது சீடரானார் காமராஜ். உலக அரசியலில் இருந்து பிரிட்டிஷாரின் அக்கிரம ஆட்சியில் நடக்கிற சேதிகள் வரை காமராஜரின் திறன் மிகுந்த மூளை அங்கே கற்று, பட்டை தீட்டப்பட்டது.

1935-இல் காங்கிரஸ் தேர்தலில் களம் இறங்கியபோது தமிழ்நாட்டுக்கு சத்தியமூர்த்தி பிரசார பீரங்கி. அவருடன் பயணித்து பிரசார நுணுக்கங்களையும் காமராஜ் அப்போதே கற்றுக்கொண்டுவிட்டார்.

ஜஸ்டிஸ் பார்ட்டியின் செல்வாக்கு மிக்க ஏ.ராம சாமி முதலியாரை எதிர்த்து வாகைசூடினார் சத்தியமூர்த்தி. இருவரிடையே நடந்த பிரசார யுத்தம், அரசியல்வாதிகள் படிக்கவேண்டும் என்பார்கள். கூர்மை, பண்பு இரண்டும் பளிச்சிட்ட விவாதங்கள். வெற்றி பெற்ற சத்தியமூர்த்தி ‘ஜஸ்டிஸ் கட்சியை ஆழக் குழிதோண்டி புதைத்தாகி விட்டது‘ என்றார். அது திராவிட இயக்கமாக முளைவிட்டது வேறுவிஷயம். ராஜாஜி அப்போது முதலமைச்சர் ஆனார். வெற்றிக்குக் காரணமான சத்தியமூர்த்தி அமைச்சராவார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாந்தனர். ராஜாஜி அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. காமராஜ் ‘குரு'வுக்கு அவமரியாதை செய்யப்பட்டதாக குமுறினார். அதுவே ராஜாஜியுடன் கருத்து வேறுபாடாகிற்று. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து விலக முடிவு செய்ய, ராஜாஜியின் பதவியும் முடிவுபெற்றது.

அந்த காலகட்டத்தில் காந்தியார் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய வந்தார். அவர் சென்னைக்கு வந்தபோது எழும்பூர் ரயில் நிலையத்தில் அவருக்கு வரவேற்பு வழங்க தடபுடல் ஏற்பாடுகள். ராஜாஜி வரவேற்பு நாயகராக இருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த காமராஜ், ரயில் நிலையம் வந்தபோது அவரை அப்போது துணை கமிஷனராக இருந்த பார்த்தசாரதி அய்யங்கார் ( இவர் ராஜாஜி ஆட்சியில் 1952-இல் சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்தார்) உள்ளே விடவில்லை. காம்ராஜர் உடனே காரில் பறந்து, அதற்கு முந்தைய ரயில் நிலையத்தில் காந்தி வந்த ரயிலில் ஏறி, காந்தியுடன் எழும்பூர் வந்து இறங்கினார். ராஜாஜி கோஷ்டிக்கு அதிர்ச்சி. இந்த சிறுமோதல்கள் பெரிதாக, காந்தியே ராஜாஜியை ஆதரித்தார். ஒரு ‘க்ளிக்' (Clique) கும்பல் ராஜாஜியை எதிர்ப்பதாக காந்தி கூறிவிட, தமிழ்நாட்டில் காந்தியையே எதிர்த்து, காங்கிரஸ் முழக்கமிட்டது.

எனக்கு தமிழக விவகாரம் புரியவில்லை என ‘ஹரிஜன்' இதழில் எழுதினார் காந்தி.

ராஜாஜி 1952-இல் தமிழக முதலமைச்சர் ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. காங்கிரஸுக்கு அந்த தேர்தலில் மெஜாரிட்டி இல்லை. மொழி வாரி மாநிலம் பிரிக்கப்படாத, பெரிய மாநிலமாக இருந்த காலம் கம்யூனிஸ்ட் கட்சியின் சக்தி மிகுந்த தலைவர்கள் எதிர்க்கட்சியாக இருந்ததால் அவர்களை சமாளிக்க ராஜாஜிதான் சரியானவர் என்று பிரதமர் நேரு முடிவு கட்டி, ‘கொல்லைப்புற' வழியாக முதல்வர் ஆனார் ராஜாஜி.

பல கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏக்களை இழுத்து, மந்திரி பதவி தந்து, ஆட்சியை நிலை நிறுத்தினார் அவர்.

ராஜாஜி பதவியேற்ற அன்று காய்ந்து கிடந்த சென்னையில் பெருமழை பொழிந்தது என கல்கி தலையங்கம் தீட்டினார். ஆட்சியில் ராஜாஜி பல கெடுபிடிகள் செய்தார். ‘சுத்தமான' ஆட்சியை விரும்புகிறவர். கோட்டைக்கு கட்சிக்காரர்கள் வரத் தடை, இப்படிப் பல. அப்போதே கருமேகங்கள் சூழத் தலைப்பட்டது! அதிரடித் திட்டங்கள் அறிவித்தார். நல்ல திட்டங்களே! நடுவில் கல்விக் கொள்கையைச் சொன்னார். ‘பாதி நேரம் பாடக்கல்வி.. பாதிநேரம் தொழில்கல்வி' என்பது பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த பணம் இல்லை, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் இந்த திட்டம் பெரிதும் உதவும் என்றார். ஆனல் அவர் தவறுதலாக ‘பாதி நேரத்தில் மாணவர்கள் தங்கள் குலக் கல்வியை கற்க வழி' என்று சொன்னார்!

அவ்வளவுதான்! அது ‘குலக்கல்வித் திட்டம்‘ என்று ஆகிவிட்டது. சாதிவித்தியாசம் இன்னமும் மறையவில்லை! இப்போதே அப்படித்தான் இருக்கிறது. குலக்கல்வித் திட்டம் என்பது அதுவரை படிப்பறியாதவர் தலைதூக்குவதை தடுப்பதாக ஆயிற்று.

அந்த சமயத்தில் டாக்டர் வரதராஜுலு நாயுடு பிறந்தநாள் விழா வந்தது. அதில் பேசிய காமராஜ், ‘அறுபது வயதுக்கு மேல் அரசியல் தலைவர்கள் பதவியில் இருக்கக் கூடாது‘ என்றார். ராஜாஜியை மறைமுகமாகத் தாக்கினார். குலக்கல்வித் திட்டம் என்ற பிரசாரத்துக்கு ராஜாஜிக்கு எதிர்ப்புகள் கிளம்ப, சட்டமன்றத்தில் பெரும்பான்மை குறைவதை அறிந்து பதவி விலகினார் அவர். காமராஜர் முதல்வர் ஆனார்! முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்தார். காமராஜுக்கு சென்னை மாநகராட்சி வரவேற்பு கொடுக்கத் தீர்மானித்தது. அதை ஏற்க மறுத்தார். பூண்டி நீர்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயர் சூட்ட மாநகராட்சி மறுத்தது உண்மை. சத்தியமூர்த்தி பெயர் சூட்டும் வரை அந்தப் பக்கம் தலைவைக்க மாட்டேன் என்றார்!

காமராஜர் ஆட்சி சிறப்பாகத் தான் நடந்தது. ஆனால், ராஜாஜியின் பாராட்டைப் பெற்ற நிகழ்ச்சி ஏதும் இல்லை.

அப்போது ராஜாஜி பம்பாயில் ஒரு பொதுக்கூட்டத்தில், ‘ பரவாயில்லை உங்கள் மாநிலம்! படித்து பட்டம் பெற்ற ஒருவரை முதல்வராகக் கொண்டிருக்கும் பாக்கியம் பெற்றது' எனப் பேசினார்.

‘காமராஜரைப் பதவி இறக்க ராஜதந்திரியான ராஜாஜி காத்திருக்கிறார்‘ என்றார் ஒரு முன்னாள் தியாகி. உண்மை.

1962லேயே திமுகவுடன் உறவுகொள்ள முயன்றார். சரிப்பட்டு வரவில்லை. சுதந்தரா கட்சி தொடங்கி 1967 தேர்தலில் திமுகவுடன் உறவு கொண்டார். அவர் திமுகவுக்கு ஆதரவு தந்தது பிராமணர்களுக்கு பயத்தை ஊட்டியது. ஏற்கெனவே சென்னை மாநகராட்சி திமுக கையில்.

‘பிராமணர்கள் பயப்படவேண்டாம். பூணூலைக் கையில் பிடித்துக் கொண்டு திமுகவுக்கு ஓட்டுப்போடுங்கள்‘ என்றார். போட்டார்கள். அதற்கு முன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் திமுகவுக்கு ராஜாஜி ஆதரவு தந்தார்.

மாணவர்கள் தைரியமாக இந்தியை எதிர்த்துப் போராடுங்கள் என அறைகூவல் விடுத்தார். 1935-இல் ராஜாஜிதான் இந்தியை தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தார்!

1967 தேர்தலில் காமராஜர் தோற்றார். அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த நேரம். அவர் தோற்று தமிழ்நாட்டில் காங்கிரஸ் பதவி இழந்தது.

‘ராஜாஜி நோக்கம் நிறைவேறிவிட்டது!‘என்றார் முதிய காங்கிரஸ் தியாகி.

இருவர் கருத்துவேறுபாடுகளும் திரைமறைவு நாடகமாக இருந்தன. மரியாதைக் குறைவான வார்த்தைகள் பேசப்படவில்லை.

காமராஜர் 1963-இல் பதவி விலகி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆனார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த பதவி கிடைத்து பல ஆண்டுகள் ஆகி இருந்தன. பதவியேற்ற பின் காமராஜர் சென்னை வந்தபோது, ராயப்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் அவரை வரவேற்கக் காத்திருந்தார் ராஜாஜி! உ ள்ளுக்குள் ஓடிய காங்கிரஸ் ரத்தம்தான் காரணம்!

அண்ணா மறைந்து கலைஞர் ஆட்சி. ராஜாஜி இப்போது திமுக ஆட்சியை ரசிக்கவில்லை. மதுவிலக்கை நீக்கி, மதுவிற்பனையை கலைஞர் தொடங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொட்டும்மழையில் கலைஞரை சந்தித்து மதுவிலக்கை ரத்து செய்யவேண்டாம் எனக் கோரினார்!

1971 தேர்தல்வந்துவிட்டது. காங்கிரஸை இந்திரா பிளவு படுத்தியிருந்தார். காமராஜர் ஒதுக்கப்பட்டார்.

‘ பழைய காங்கிரஸ்‘ அவரது!

இந்திராவுடன் சாமர்த்தியமாக கூட்டணி அமைத்த கலைஞரை முறியடிக்க காமராஜருடன் கூட்டு  சேர்ந்தார் ராஜாஜி. திமுகவுக்கு எதிரான பிரசாரக் கூட்டங்களுக்கு பெரும் கூட்டம் அலைமோதிற்று. ராஜாஜியும் காமராஜரும் மெரினா கடற்கரையில் பேசிய கூட்டத்துக்கு வரலாறு காணாத கூட்டம். திமுக தலைவர்களே பயந்துபோனார்கள்!

ஆனால் நடந்தது வேறு. நாடெங்கும் இந்திராவின் எழுச்சி சுனாமியாக இருந்தது. இங்கே யாரும் அதை அறியவில்லை. அந்த ஆழிப்பேரலை காமராஜர்- ராஜாஜி கூட்டணியை மூழ்கடித்துவிட்டது.

‘மெரினா பொதுக்கூட்டத்தில் ராஜாஜி வெற்றித் திலகமாக காமராஜர் நெற்றியில் குங்குமத் திலகம் இட்டார். அது நாமமாகப் போய்விட்டது,' என்றார் அந்த வயதான தியாகி.

அதன் பிறகு...

அரசியல் எங்கோ போய்விட்டது. ராஜாஜி மறைந்தார். எமர்ஜென்சி வந்தது. அந்த அதிர்ச்சியில் கவலைப்பட்டு காமராஜரும் மறைந்தார்.

எதிரும் புதிருமாக இருந்த அந்த மாபெரும் தலைவர்கள் சேர்ந்து வெற்றி பெற்றிருந்தால்...

தமிழகத்தின் தலையெழுத்து மாறியிருக்குமா?

இந்தக் கேள்வியால் என்ன பயன்?

ஏப்ரல், 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com