அடிச்சது பாருங்க... அதிருஷ்ட காத்து; விவசாயியை கோடீஸ்வரர் ஆக்கிய தக்காளி!

அடிச்சது பாருங்க... அதிருஷ்ட காத்து; விவசாயியை கோடீஸ்வரர் ஆக்கிய தக்காளி!

‘விவசாயமே படுத்துவிட்டது; கூலிக்கு ஆள் கிடைப்பதில்லை; விளைபொருட்களுக்கு நல்ல வில்லை கொடுப்பதில்லை’ என்பது விவசாயிகளின் ஆல் டைம் புலம்பலாக இருக்கும். அதில் உண்மையும் இருக்கும் என்றாலும், இந்த நிலைமையை மாற்றுவதாகச் சொல்லும் அரசியல்வாதிகள் ஆட்சி முடியும்வரை எதுவும் செய்வதில்லை.

இந்தப் பின்னணியில் தக்காளி விலையேற்றம் ஒரு சில விவசாயிகளை லட்சாதிபதி ஆக்கியுள்ளது. இந்த அதிருஷ்ட காற்றால் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தக்காளி விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

புனே மாவட்டம் ஜூன்னார் தாலுகா பஞ்கர் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வர் கெய்கர் (வயது 36). இவர் தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டு இருந்தார். திடீரென்று தக்காளி விலை ஏறியதால், அவருக்கு ஒரே மாதத்தில் ரூ.3 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

சில சமயம் தக்காளி அடிமாட்டு விலைக்கு போகும்போது தக்காளியை சாலையில் கொட்டுவதையும், தக்காளி பயிரை அழிப்பதையும் வழக்கமாக செய்கின்றன. . இதேபோன்று ஈஸ்வர் கெய்கரும் கடந்த 2 மாதங்களுக்கு முன் விலை போகாத தக்காளியை குப்பையில் கொட்டி வீணடித்து இருக்கிறார். இருப்பினும் மனம் தளராமல் மீண்டும் தக்காளி பயிரிட்ட அவருக்கு தற்போது ஜாக்பாட் அடித்து இருக்கிறது.

“எனக்கு 18 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 12 ஏக்கரில் தக்காளி பயிரிட்டேன். கோடை வெயிலில் இருந்து பயிரை பாதுகாக்க கடின முயற்சி மேற்கொண்டேன். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கடந்த ஜூன் 11-ந் தேதி எனக்கு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.37 கிடைத்தது. கடந்த 18-ந் தேதி கிலோ ரூ.110-க்கு விற்றேன். ஜூன் 11-ந் தேதி முதல் இதுநாள் வரை 3 லட்சத்து 60 ஆயிரம் கிலோ தக்காளி அறுவடை செய்து அதன் மூலம் ரூ.3 கோடி சம்பாதித்துள்ளேன். இன்னும் ரூ.50 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று நம்புகிறேன். தக்காளி சாகுபடி மற்றும் போக்குவரத்து என சுமார் ரூ.40 லட்சம் செலவு ஆனது.

கடந்த காலங்களில் தக்காளியால் நஷ்டங்களை சந்தித்தேன். 2011-ம் ஆண்டு ரூ.15 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. கடந்த ஆண்டில் உற்பத்தி செலவு அளவுக்கு தான் வருமானம் கிடைத்தது. கடந்த மே மாதம் கூட கிலோவுக்கு ரூ.2.50 மட்டுமே விலை போனதால் தக்காளியை சாலையில் கொட்டினேன். தற்போது நல்ல லாபம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தந்துள்ளது” என்கிறார் அவர்.

பெரும்பான்மை மக்கள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டாலும், இதுபோன்ற விவசாயிகளுக்கு இது வாழ்நாள் ஜாக்பாட்!

logo
Andhimazhai
www.andhimazhai.com