உரித்து எடுத்து வைத்த உண்மைகளின் உலகம்

உரித்து எடுத்து வைத்த உண்மைகளின் உலகம்

நாவல் பிறந்த கதை

அப்போது நான் எழுதிக்கொண்டிருந்தது வேறொரு நாவல். சுமார் நாற்பதாயிரம் சொற்கள் வரை வளர்ந்து, திடீரென்று ஒரு நாள் சரியில்லை என்று தோன்றிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஐந்து மணி நேரத்துக்குக் குறையாமல் எழுதிக்கொண்டிருந்தேன். எழுதுவது பெரிய விஷயமில்லை. பின்னங்கழுத்தில் ஒரு தார் டின்னை  யாரோ கட்டி வைத்தாற்போல ஒரு வலி இழுக்கும். எந்தப் பக்கம் திரும்பினாலும் எலும்பை நொறுக்குவது போலத் தாக்கும். பிறவி குண்டர்கள் அப்படியெல்லாம் நேரங்காலம் பார்க்காமல் உட்கார்ந்து வேலை செய்யக்கூடாது. ஆனால் எனக்கு வேறு வழியில்லை. இதைத் தவிர வேறொன்றும் தெரியாது.

எழுதிக்கொண்டிருந்த நாவல் பாதியில் நின்றுவிட்டதில் மிகவும் சோர்ந்து போனேன். மீண்டும் எப்போது தொடங்குவேன் என்று தெரியாது. மீண்டும் என்றொரு கட்டம் அதற்கு இருக்குமா என்றும் தெரியாது. அந்தச் சமயத்தில் மூன்று தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருந்தபடியால் பகலெல்லாம் அந்தப் பணி இருக்கும். இரவு பத்து மணிக்கு மேலே நாவல் எழுத அமர்ந்து விடிய விடிய எழுதுவேன். ஒரு நாளில் அதிகபட்சம் மூன்று மணி நேரம் தூங்கினாலே அதிகம். முழுநேரக் குடிகாரனைப் போலக் கண்ணெல்லாம் சிவந்து, முகம் ஊதி, கைகால்களெல்லாம் முறுக்கிக்கொண்டு வலியெடுத்து, நிற்க-நடக்கக் கூடச் சிரமப்பட்டேன்.

அத்தனை அவதிகளையும் அனுபவித்து நாற்பதாயிரம் சொற்களைத் தொட்ட பிறகு அந்நாவல்  நின்றுபோனது.

நல்லது. துயரத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தால் மீளவே முடியாமல் போய்விடும். நின்று போன நாவலைப் பழி வாங்குவதற்காகவேனும் இன்னொரு நாவலைத் தொடங்கி எழுதி முடித்துவிடுவது என்று முடிவு செய்தேன்.

ஒரு விஷயம். நாவல் எழுதுவதில் ஒரு சூட்சுமம் உண்டு. எழுதுபவனுக்கு மட்டும்தான் அதன் பிரம்மாண்டமும் அது கோரும் பெருவலியும் தெரியும். நின்று போகும் நாவல்கள் அனைத்துக்கும் பெரும்பாலும் ஒரே ஒரு காரணம்தான் இருக்கும். எழுதுபவனின் சொந்த அனுபவத்தின் சதவீதம் குறைவாகவும் அவன் உள்வாங்கி வெளிப்படுத்தும் சங்கதிகளின் சதவீதம் அதிகமாகவும் இருந்தால் அப்படி ஆகும். எனவே புதிதாகத் தொடங்கும் நாவலில் ஒரு சதவீதம்கூட சொந்த அனுபவத்துக்கு அப்பாற்பட்ட எதுவும் இருக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். அத்தகைய கருப்பொருள்கள் இரண்டு அப்போது என்னிடம் இருந்தன. அதிலொன்று, பூனைக்கதை.

எண்ணிப் பார்த்தால் சிறிது திகைப்பாக இருக்கிறது. இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டிலிருந்து சின்னத்திரை நெடுந்தொடர்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருக்கிறேன். இடையில் ஒரு நாள்கூட எழுதாமல் இருந்ததில்லை. என் அப்பா இறந்த அன்று இரவுகூட எழுதினேன். தவிர, ஒரு சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்களுக்கே  எப்போதும் எழுதி வந்திருக்கிறேன். இரண்டாயிரத்துப் பத்து முதல் பதின்மூன்று  முடியும்வரை ஐந்து தொடர்களுக்கு ஒரே சமயத்தில் எழுதியிருக்கிறேன். ஒரு பேய் அல்லது பிசாசாக மட்டுமே வாழ்ந்திருக்கிறேன். ஆனால் எக்காலத்திலும் அதில் இரண்டறக் கலந்ததேயில்லை. ஒரு வழிப்போக்கனாகக் கூட உணர்ந்ததில்லை. சரியாகச் சொல்வதென்றால் அப்போதெல்லாம் குன்றேறி யானைப் போர் கண்டிருக்கிறேன்.

எழுத்து சார்ந்து எனக்கிருந்த திட்டங்கள் சரியாக நடைபெற வேண்டுமானால் அதற்கு முதலில் பொருளாதாரம் சார்ந்த கவலைகள் எனக்கு இருக்கக் கூடாது. இதில் தீர்மானமாக இருந்தேன். என் பொருளாதாரத் தேவைகளுக்காக நான் தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுத முடிவு செய்தேன். எனவே, என்னால் ஆகக்கூடிய நேர்த்தியையும் அர்ப்பணிப்பையும் அந்தப் பணிக்கு முழுமையாக அளித்தேன். ஆனால் உழைப்பளவில் மட்டும்தான். சிந்தனை அளவில் அல்ல. படைப்பூக்க வெளிப்பாட்டளவில் அல்ல.

இது புரிந்துகொள்வதற்குச் சற்று சிரமமானது. தரையில் இழுத்துப் போட்டுத் தோலை உரித்துக் காட்டுவதென்றால் இப்படிச் சொல்லலாம். ஒவ்வொரு நெடுந்தொடரிலும் நான் இருப்பேன். செயல் புரிந்துகொண்டிருப்பேன். ஆனால் சொல்வதைச் செய்வதுடன் சரி. எனக்களிக்கப்படும் கதை, கதைக் களன், காட்சிகள் சிறப்பாக இருந்தாலும் சரி, மோசமாக இருந்தாலும் சரி. பொருத்தமாக இருந்தாலும் சரி. அபத்தமாக இருந்தாலும் சரி. கேள்வி கேட்க மாட்டேன். கருத்து சொல்ல மாட்டேன். இதுதான் காட்சி என்று சொல்லிவிட்டால், அதை வசன வடிவத்துக்கு மாற்றிக் கொடுத்துவிடுவேன். அந்தக் காட்சி மிகச் சிறந்த வசனம் ஒன்றைக் கோரினால் அது தன்னால் வந்து விழும். ஆக அபத்தமானதாக மட்டுமே இருக்க வேண்டுமென்றாலும் பொருட்படுத்த மாட்டேன்.

ஒரு கதாசிரியன் இப்படி இருக்க முடியுமா என்றால் என்னால் முடிந்தது. ஏனெனில் அந்தப் பணியைப் பணியாக மட்டுமே பார்த்தேனே தவிர, என் இலக்குகளை அங்கே நான் வைத்திருக்கவில்லை. ஒரு தலைசிறந்த காட்சி ஊடக வசனகர்த்தாவாக வேண்டும் என்று நான் முடிவு செய்திருந்தால் என் முயற்சிகள் வேறு விதமாக இருந்திருக்கும். அதில் நிச்சயமாக வெற்றி கண்டிருப்பேன். ஆனால் வாழ்வில் தோற்றிருப்பேன். அது நிச்சயம். என் நோக்கம், நான் உத்தேசித்திருந்த நாவல்களை எழுதவும் உலக அரசியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளவும் எனக்குத் தேவையான பொருளாதாரச் சுதந்தரத்தை அந்தத் துறையிலிருந்து பெற வேண்டும் என்பதுதான். அதனால்தான் ஒரு பங்களிப்பாளனாக என்றுமே அதில் நான் இல்லை. இறுதி வரை ஒரு சிறந்த கடைநிலை ஊழியனாக மட்டுமே பணியாற்றினேன்.

ஒரு நாள் இரு நாளில்லை. பதினேழு வருடங்கள் அப்படித்தான். எத்தனை தயாரிப்பாளர்கள், எத்தனை விதமான இயக்குநர்கள், எவ்வளவு திரைக்கதை ஆசிரியர்கள், எத்தனை எத்தனை நடிக நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்களைச் சந்தித்தேன் என்பதற்குக் கணக்கே இல்லை. அத்தனை பேரையும்விட நான் ஆழமாக அங்கே நேசித்தது, ஷெட்யூல் டைரக்டர்களைத்தான்.

அது ஓரினம். இயக்குநருக்கும் தயாரிப்பு நிர்வாகிக்கும் இடைப்பட்ட ஓரினம். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் அவர்களாலேயே தீர்மானிக்கப்படும். என்றென்றைக்கு எந்தெந்தக் காட்சிகளைப் படம் பிடிக்க வேண்டும், எவ்வளவு எடுத்தால் அன்றைய கணக்கு தீர்க்கப்படும், எத்தனை எபிசோடுகள் கைவசம் வேண்டும், அதற்கு எவ்வளவு காட்சிகள் வேண்டும், அதற்கு எத்தனை நாள் படப்பிடிப்பு நடத்த வேண்டும், என்றைக்கு ஒரு யூனிட், என்றெல்லாம் இரண்டு யூனிட், எத்தனைக் காட்சிகளுக்கு ஜெனரேட்டர் வேண்டும், எதையெல்லாம் செலவில்லாமல் வீதியில் வைத்தே எடுத்துவிடலாம் - ஒவ்வொன்றையும் திட்டமிடுகிற வேலையைச் செய்பவர்கள் அவர்கள்.

இது பெரிதல்ல. ஒரு ஷெட்யூல் டைரக்டர் என்பவர் அதிகாரபூர்வமாக இரண்டு பெண்களை மணந்தவர்களைப் போலத்தான் படப்பிடிப்புத் தளத்தில் செயல்படுவார். இயக்குநருக்கு சாதகமாக, அவர் முகம் சுளிக்காத விதமாக அனைத்தையும் ஏற்பாடு செய்து தரவேண்டும். மறுபுறம், செலவு இழுத்துவிட்டான் என்று தயாரிப்பாளர் நினைத்துவிட்டால் கணப் பொழுதில் தூக்கியடித்து-விடுவார். அதையும் சமாளிக்க வேண்டும். மிகவும் சிரமமான பணி.

எனக்கு சினிமா துறையில் பணியாற்றும் ஷெட்யூல் டைரக்டர்களைத் தெரியாது. அவர்களுக்கும் இந்தக் கஷ்டமெல்லாம் இருக்குமா, அல்லது அங்கே வேறு மாதிரியான பணியா என்று தெரியாது. தொலைக்காட்சித் தொடர்களின் உலகில் பரிதாபத்துக்குரியவர்கள் அவர்கள். ஒரு நெடுந்தொடர் ஆரம்பிக்கிறதென்றால், அது ஐந்நூறு, ஆயிரம் எபிசோடுகள் கடந்து நிறைவடைவதற்குள் அந்தத் தொடரில் குறைந்தபட்சம் ஏழெட்டு ஷெட்யூல் டைரக்டர்கள் மாறியிருப்பார்கள். நான் பணியாற்றிய ஒரு நெடுந்தொடர் நிறைவடைந்த பின்பு என் போனில் உள்ள contact listஐத் திறந்து Schedule என்று போட்டுத் தேடியபோது பதினாறு பெயர்கள் அகப்பட்டன. அது ஆறேழு வருடங்கள் நீண்டு நிறைந்த தொடர் என்பது மட்டுமல்ல காரணம். அந்தப் பணி அவ்வளவு சிரமமானது. யாரையும் எதிலும் நீடித்திருக்க விடாது.

அந்நாள்களில் நான் அதிகம் உரையாடியது அவர்களுடன்தான். ஒவ்வொரு நாளும் ஒரு ஷெட்யூல் டைரக்டரின் தொலைபேசி அழைப்பில்தான் தொடங்கும். இரவு ஒன்று அல்லது இரண்டு மணிக்கு அவர்களது அழைப்புடன்தான் நாள் நிறைவடையும். இடைப்பட்ட பொழுதிலும் அவர்கள்தாம் அதிகம் பேசியிருப்பார்கள். அவர்களுடன்தான் அதிகம் சண்டை போட்டிருப்பேன். அவர்களைத்தான் இஷ்டத்துக்குத் திட்டியிருப்பேன். அவர்களும் என்னைத்தான் ஜென்ம எதிரியாகக் கருதுவார்கள் என்று நினைத்துக்கொள்வேன்.

இப்போது எண்ணிப் பார்த்தால் சகிக்கவே முடியாத கொடூரம் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு சீரியலில் ஒரு ஷெட்யூல் டைரக்டர் ஒரு குறிப்பிட்ட நாளில், அன்றைய பணிகளை முடித்துக்கொடுத்துவிட்டு விலகியிருப்பார். மறுநாள் வேறொருவர் அதே பணிக்குச் சேர்ந்து என்னைக் கூப்பிடுவார். ‘இன்னியலேந்து நாந்தான் சார்’ என்று சொல்லிவிட்டு அன்றைய படப்பிடிப்புக்கான காட்சிகளைச் சொல்லிவிட்டு போனை வைப்பார். முதல் நாள் வரை உயிரும் உடலும் போலப் பழகியவரை அழைத்து ஏன், என்ன ஆயிற்று என்று இரண்டு வார்த்தை பேசத் துடிக்கும். ஆனால் நேரம் இருக்காது. இங்கே இந்தப் புதிய ஷெட்யூல் டைரக்டர் போனை வைத்ததுமே இன்னொரு உதவி இயக்குநர் அழைத்து, சீன் ரெடியா என்பார். எழுதத் தொடங்கினால் நள்ளிரவு வரை வேறெதுவும் நினைவில் இராது. பிறகு விடிந்து இன்னொரு நாள் தொடங்கும். இன்னும் பத்து காட்சிகள் வந்து நிற்கும். அதற்கு நம்மை ஒப்புக்கொடுத்தால் அடுத்த நாளும் எப்படியோ விடிந்துவிடும். புதிய ஷெட்யூல் டைரக்டர் அதற்குள் எழுபது எண்பது முறை அழைத்துப் பேசியிருப்பார். அவர் மட்டும்தான் நினைவில் இருப்பார். விட்டுச் சென்றவர் பெயர்கூட மறந்துவிடும். திடுக்கிட்டு ஒரு வாரம் கழித்து நினைவுக்கு வந்து அவரை அழைத்தால் அவரது எண் கிடைக்காது. என்னைப் போல வேறொரு வசனகர்த்தா அல்லது திரைக்கதை ஆசிரியருடன்  அவர் பேசிக்கொண்டிருப்பார்.

பெற்றோர், மனைவி, மகளுக்குப் பிறகு என் வாழ்வின் பெரும்பகுதியை நிரப்பியது ஷெட்யூல் டைரக்டர்களின் சமூகம்தான். அவர்களது உலகை ஒரு நாவலாக்க எண்ணியிருந்தேன். அதைத்தான் எழுதவும் ஆரம்பித்தேன். அதுதான் பூனைக்கதை ஆக வெளிவந்தது.

ஒரே ஒரு விவகாரத்தைச் சொன்னால் இது நிறைந்துவிடும்.

பூனைக்கதையின் நாயகன் மயில்சாமிக்கு நிஜ வாழ்வில் ஒரு ‘மாதிரி’ உண்டு. அந்த ஷெட்யூல் டைரக்டர் எனக்குச் சிறிது நெருக்கமான நண்பரும்கூட. நாவலின் களத்தை அவரிடம் விவரித்து, உங்களை வைத்துத்தான் இதை எழுதப் போகிறேன் என்று சொல்லியிருந்தேன்.

‘எழுதுங்க சார். நல்லாத்தான் இருக்கும்’ என்றார்.

எழுதி முடித்த விவரத்தைச் சொன்னபோது, மகிழ்ச்சி சார் என்று சொன்னார். பிறகு அது புத்தகமாக வந்தபோது ஒரு பிரதியைக் கொடுத்து, ‘இது உங்கள் கதை. படித்துப் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்’ என்றேன். சரி என்று வாங்கிச் சென்றவரைச் சில மாதங்களுக்குப் பிறகு சந்தித்தபோது, ‘அட ஆமால்ல? ஒரு புக்கு குடுத்திங்க. மறந்தே போய்ட்டேன் சார். நமக்கெங்க இதுக்கெல்லாம் டைம் இருக்குது?’ என்றார்.

‘இது உங்கள் கதை அல்லவா? உங்களைக் கதாநாயகனாக வைத்து எழுதியிருக்கிறேன் அல்லவா? அதுகூடவா உங்கள் ஆர்வத்தைத் தூண்டவில்லை?’

‘தப்புதான் சார். படிச்சிடுறேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

மேலும் சில மாதங்களுக்குப் பிறகு பூனைக்கதைக்கு ஒரு விருது கிடைத்தது. ‘படித்தீர்களா?’ என்று அப்போதும் கேட்டேன்.

‘படிக்கணும்னு எடுத்து வெச்சிருந்தேன் சார். டைரக்டர் எடுத்துட்டுப் போனாரு. திருப்பித் தரவேல்ல. அதோட நானும் மறந்துட்டேன்.’

இக்கணம் வரை என் நாவல்களில் எனக்கு விவரிக்க முடியாத, பிரத்தியேகமான மகிழ்ச்சியைத் தருகிற ஒன்றைச் சொல்வதென்றால் பூனைக்கதையைத்தான் சொல்வேன். அதன் கட்டமைப்பு, அப்படியே தொலைக்காட்சித் தொடருலகின் கட்டமைப்பை ஒத்திருக்கும்.  தொடர்களின் கட்டமைப்பல்ல. அந்த உலகம் எவ்வாறு இயங்குகிறதோ அந்தக் கட்டமைப்பு. அதன் திசைவேகம். அதன் வெயில், மழை, குளிர் காலங்கள். அதன் கனம். அதன் கண்ணீர். அதன் வெப்பம். அதன் வறட்சி. மீட்சியற்ற பெருவாழ்வின் அடையாளமற்ற துயரங்கள்.

இக்கணம் வரை அந்த ஷெட்யூல் டைரக்டர் அந்த நாவலைப் படிக்கவில்லை. இக்கணம் வரை அந்தத் துறையில் வேறு யாருக்கும்கூட அதைப் படித்துப் பார்க்க நேரம் அமையவில்லை.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com