முழுமையான நடிகர்! : சீனு ராமசாமி

முழுமையான நடிகர்! : சீனு ராமசாமி

தென்மேற்குப் பருவக்காற்று விஜய்

சேதுவுக்கு நாயகனாக முதல்படம். அந்த படத்துக்காக நடிகர் தேர்வு நடந்தபோதுதான் சேதுவும் அதில் கலந்துகொண்டார். அவரைப் பார்த்ததுமே நான் மனதில் வைத்திருந்த நாயகன் பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அவர்தான் என்று தீர்மானம் ஆனபிறகு படப்பிடிப்புக்குப் புறப்பட்டோம். அங்கே போனதும் அவரிடம் முழு திரைக்கதையையும் கொடுத்து வாசிக்கச் சொன்னேன். அவர் முழுக்கதையையும் உள்வாங்கி தன் நடிப்பின்மூலம் அதை மெருகேற்றினார். அந்த படப்பிடிப்பு 34 நாட்கள்தான். அதில் ஒருபோதும் அவரை படப்பிடிப்பில் கடிந்துகொள்ளும் சந்தர்ப்பமே உருவாகவில்லை. அந்த அளவுக்கு முழுமையான ஈடுபாடு. அப்போதே இவரது வளர்ச்சி அபிரிமிதமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

தன் நடிப்பு ஆளுமைமீது துளிகூட அவருக்கு சந்தேகம் இல்லை. திரைக்கதையின் போக்கைப் புரிந்துகொண்டு, நடிப்பை,அழகாக, கவித்துவமாக வெளிப்படுத்துவார். இன்றைய வணிக சினிமாவில் எல்லாவகையான இயக்குநர்களுக்கும் வேலை தரக்கூடிய ஒரு நடிகனாக அவர் இருக்கிறார். கலைப்பட இயக்குநர்கள், திரில்லர் பட இயக்குநர்கள், ஆக்ஷன் பட இயக்குநர்கள், எதார்த்த பட இயக்குநர்கள்- எல்லோருக்கும் வேலை தரக்கூடியவராக அவர் மாறி இருப்பது எனக்கு அவர் மீது ஆச்சரியத்தையும் ப்ரியத்தையும் உருவாக்கிஉள்ளது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

கதையின் போக்கைக் கவனித்து கதை என்ன செய்கிறது? நாம் அதில் என்ன செய்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு பரந்த மனப்பான்மையுடன் அணுகுவார் சேது. வெறும் நாயகத்தன்மை என்பதைப்  பற்றிமட்டும் கவலைப்படாமல் கதைக்கு முக்கியத்துவம் தரக்கூடியவராக சேது உருவாகி இருக்கிறார்.

அவரது வருகை இங்கே நடந்திருக்கும் முக்கியமான மாற்றம். அது வளர்ந்துவரும் இளம் நடிகர்களுக்கு ஊக்கம் தரக்கூடிய ஒன்று. ஒரு ஜொலிக்கும் நட்சத் திரமாக ஆனால் போதும் என்று நினைப்பவர்களை இது சிந்திக்க வைத்துள்ளது. நல்ல நடிகனாக இருந்தாலே நட்சத்திரமாக மாறலாம் என புதிய திசையின் கதவுகளை சேது திறந்து வைத்துள்ளார் என நான் நினைக்கிறேன்.

சேதுபதி கூத்துப்பட்டறையில் இருந்து வந்தவர் என்பதால் ஒரு கதையை படித்து உணரக்கூடிய ஆற்றல் அவரிடம் உண்டு. எனவே தென் மேற்குப் பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை,

அடுத்ததாக எடுக்க இருக்கும் படம் எல்லாவற்றுக்குமே திரைக்கதையை புத்தகவடிவில் அவரிடம் நான் கொடுத்துவந்துள்ளேன். ஒரு நடிகனாக அவருக்குள் எழும் கேள்விகளை ஒரு இயக்குநராக அக்கேள்விகள் சரியாக இருக்கும்

பட்சத்தில் அவற்றை விவாதிக்கும் கடமையும் எனக்கு உண்டு.

இடம்பொருள் ஏவல் படப்பிடிப்பின்போது ஒரு

சண்டைக் காட்சி. ஒரு சண்டை நடிகருக்கு ஒரு

சின்ன வசன உச்சரிப்பு சரியா வரலை. சீக்கிரமா அந்தக் காட்சியை எடுத்தாகவேண்டிய நிர்ப்பந்தம். எப்போதுமே நடிகர்களின் அருகே சென்றுதான்

சொல்லித்தருவேன். அன்று நான் மிகத் தொலைவில் நின்றேன். எனவே திரும்பத்திரும்ப மைக்கில் அந்த வசனத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அவரால் சரியாகப் பேசமுடியவில்லை. சேது வேகமாக என்கிட்ட வந்து, சார், அவர் பேசமாட்டார் சார்... அவருக்கு பேச்சு வராது சார் என்று சொன்னார். அப்போது எனக்கு நான் உபயோகிக்கவேண்டிய முறை புரிந்தது. நான் அருகே சென்று அவரிடம்

சொல்லிக் கொடுத்து, அதற்கான அவகாசத்தைக் கொடுத்து அந்த காட்சியைப் படமாக்கினேன். மற்ற நடிகர்கள், இயக்குநர் ஏதோ அழுத்தத்தில் கத்துகிறார் என்று விட்டுவிடக்கூடும். ஆனால் சேது தன் உடன் நடிக்கும் சக நடிகர்கள் மீது அக்கறை காட்டக்கூடியவர்.

மனதளவில் பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்கிற எண்ணம் ஒரு தவிப்பாகவே அவருக்கு இருப்பதை நான் பார்க்கிறேன்.                          

பொதுவாக, ஒவ்வொரு காட்சியிலும் நாம் எதிர்பார்ப்பதைவிட மெருகேற்றி நடிக்கிறவர் சேது. இது முழுமையாக தர்மதுரை படத்தில் வெளிப்பட்டதாக நான் நினைக்கிறேன். தான்

நேசித்த பெண்ணின் தற்கொலைக்குப் பின்னர், தன் தம்பிகளை அரிவாளை வைத்து தாக்கும் காட்சி தர்மதுரையில் வரும். அப்போ அவங்க அம்மா அதட்டியதும் நெகிழ்ந்து, ‘இப்படி பண்ணிட்டாய்ங்க' என்று சொல்லும் காட்சி. அக்காட்சியில் சேது காட்டிய ஆக்ரோஷமும், அம்மா கூப்பிட்டதும் அரிவாளை கீழே போட்டு விட்டு அம்மாவை

 அணைத்து அழுவதும், வாசலில் அமர்ந்து புலம்புவதுமான நடிப்பெல்லாம் ஒரு முழுமையான நடிகனால் மட்டுமே தரமுடியும்.

நான் இதுவரை ஆறு படம் எடுத்துள்ளேன். அதில் மூன்றில் சேது நடித்திருக்கிறார். இப்போ எடுக்க இருக்கும் ஏழாவது படமும் சேதுபதி நடிக்க இருக்கும் படம்தான். நான் என்ன செய்தேன் என்றெல்லாம் எனக்குத்தெரியாது. நான் வாழ்வதற்கு ஒரு வேலையைச் செய்கிறேன்.சேது என் கதைகளைப் புரிந்துகொண்டவர். நான் ஒரு படத்தில் அவரை நடிக்கவைத்தேன். அவர் மேலும் மூன்று படங்களை எடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ( வாய்ப்பு என்றால் அவர் வருத்தப்படுவார்) எனக்கு தந்திருக்கிறார். ஒரு ஆண் பிள்ளை பெற்றிருந்தால்கூட அந்த பிள்ளை நமக்கு இந்த அளவுக்குச் செய்யுமா என்று தெரியாது. சேது செய்திருக்கிறார்!

பலம்: சேதுவின் முழுமையான நடிப்பாற்றல், கதைத் தேர்வு, எல்லா வகையான இயக்குநர்களுக்குமான ஒரு நடிகராக இருப்பது.

பலவீனம்: அவர் கொஞ்சம் தன் உடம்பைப் பற்றி கவனம் செலுத்தவேண்டும். நேரத்துக்கு சாப்பிட்டு, நிம்மதியாக உறங்கி, ஓய்வெடுத்து பின்னர் உழைக்கவேண்டும்.

நவம்பர், 2018.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com