அன்னப்பட்சிகளின் நடனக் கதை

அன்னப்பட்சிகளின் நடனக் கதை

பெண்ணென்று சொல்வேன் 10

பெண்ணின்  மொழி, திசை, இசை, வாசம் வீரம்,ஈரம், கவிதை, உயிர் என பெண்பாலை பற்றிப் பேசும் உலகப்படங்களை பற்றி ஜா.தீபா எழுதும் இத்தொடர் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அந்திமழையில் வெளிவரும்.

புகழ்பெற்ற அமெரிக்க நடிகையான கேத்ரீன் ஹெப்பெர்ன் ஒரு சமயம் சொன்ன வாசகம், ‘நடிப்பதென்பது ஒரு சிறப்பானத் தொழிலே ஆயினும் அது கிறுக்குத்தனத்தையும் கூடவே கொண்டது.இன்னொருவரைப் போல நடிக்கிற நம்மை நாமே அதில் விற்றும் விடுகிறோம்’. தன்னை யாரோ ஒருவராக சிறிது நேரத்திற்கு கடத்திக் கொள்வதுநடிப்பதில் இருக்கிற சுவாரஸ்யம். இந்தப்புனைவு நிலைக்குள் சிக்கிக் கொண்டு உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் கதையாக சொல்ல வருகிறது அமெரிக்கத் திரைப்படம் ‘Black swan’ (2010).

நியூயார்க் நகரில் பிரபலமான பாலே நடனப் பள்ளி ஒன்றின் மாணவி நீனா. பாலே நடனத்தின் மேல் நீனாவுக்கு இருக்கிற கட்டுக்கடங்காத ஆர்வமும்,தீவிரமும்,அவளின் இரவு நேரக் கனவுகளைக் கூட ஆக்ரமித்து விடுகின்றன.பயந்த சுபாவம் கொண்ட நீனாவுக்கு அவள் அம்மாவே துணையாகவும், தகுந்த வழிகாட்டியாகவும் இருக்கிறாள்.வழக்கம்போல தன்னுடைய நடனப்பள்ளிக்கு நீனா ஒருநாள் செல்கிறபோது, முன்பு அங்கு ஆடிக் கொண்டிருந்த  நடனப்பெண் பெத்-திற்கு  ஒய்வு அளிக்கப்பட்டிருப்பதை அறிகிறாள். அது அவளை வருத்தமடையச் செய்கிறது.  அதே சமயம்  உடன் இருக்கும் மற்ற நடனப் பெண் கலைஞர்கள் பெத்திற்கு வயதானதைச் சொல்லி அது பற்றிக் கிண்டல் செய்து பேசுகிறார்கள். இது நீனாவை பெரிதும் பாதிக்கிறது.

அந்த நடனப் பள்ளி அந்த வருட ஆரம்பத்தினை  ‘ஸ்வான் லேக்’ என்கிற புதிய இசைநாடக நிகழ்வோடு துவங்கத் திட்டமிடுகிறது. ஒரு மந்திரவாதியின் சாபத்தால் இளவரசி ஒருத்தி அன்னப்பறவையாக மாறி விடுகிறாள். எப்போது ஒரு ஆண் எந்த எதிர்பார்ப்புமில்லாது தன்னுடைய தூய்மையான காதலை அந்த அன்னப்பறவையிடம் மீது வைத்து, அதனை பறவையிடம் எடுத்துச் சொல்கிறானோ அப்போது தான் அவளது  சாபம் நீங்கி பறவை இளவரசியாக மாறும் என வழியும் சொல்கிறார் மாந்திரீகர். அதேபோன்றே ஒரு இளவரசன் அந்த அன்னப்பறவையைக் காதலிக்கிறான். அவன் தன் காதலை சொல்லவும் வருகிறான். அப்போது பொறாமையும்,குரோதமும் கொண்ட ஒரு கருப்பு நிற அன்னப் பறவைதன் சாமர்த்தியத்தால் அக்காதலனைத் தன் பக்கம் ஈர்த்து விடுகிறது. இதனால் தன்னுடைய சாபம் நீங்காமலேயே வெள்ளை அன்னப் பறவை உயிரை விட்டுவிடுகிறது. இந்த ‘ஸ்வான் லேக்’ கதையைச் சொல்லும் அந்த இசை நாடகத்தின் இயக்குனரான தாமஸ் என்பவர்,  இதில் வரும் வெள்ளை மற்றும் கருப்பு அன்னப்பறவைகளாக நடிப்பதற்கு ஒரு புதுமுக நடிகைத் தேவை என்றும், அதற்கான தேர்வு நடக்கும் நேரத்தையும் சொல்லிச் செல்கிறார்.நீனா மற்றும் அங்கிருக்கும் மற்ற அனைத்துப் பெண்கள்  கண்களிலும் ஆசையும்,ஆர்வமும் மின்னுகிறது.

ஒரு சமயம் நீனா தனிமையில் உட்கார்ந்திருக்கும்போது யாரோ கூச்சலிடும் சத்தம் கேட்கிறது. திகைக்கும் அவள் சத்தத்தினைத் தொடர்ந்து அத்திசைக்கு செல்கிறாள். அங்கு ஒரு அறையில் ஒய்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்த பெத்சத்தமிட்டபடியேபொருட்களை விசிறி அடித்துக் கொண்டிருக்கிறாள். முதல் நாள் வரை புகழின் உச்சத்தில் இருந்த தன்னை ஒய்வின் பெயரைச் சொல்லி விலக்கியதன் கோபத்தினைஅவள் வெளிப்படுத்துவதாக நீனாஅறிகிறாள் . பெத் அந்த அறையை விட்டு அகன்றதும்,அந்த அறைக்குள் செல்கிறாள் நீனா. சிதறிக் கிடக்கின்ற பெத்தின் பொருட்கள்  ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்க்கிறாள். அவற்றிலிருந்து லிப்ஸ்டிக் மற்றும் சிறுகத்தி போன்ற சில பொருட்களை எடுகிறாள். பிறகு அவற்றை தனது கைப்பைக்குள் மறைத்தும் கொள்கிறாள்.

மறுநாள் நடிகைக்கான தேர்வு நடக்கிறது.தேர்வில் நீனா ஆடுகிறாள். அது மிக மென்மையான ஒரு ஆட்டமாக இருக்கிறது. . அவள் ஆடி முடித்ததும், பக்கத்தில் வருகிற தாமஸ் அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக, ‘என்னுடைய நாடகத்தில் வெள்ளை அன்னப்பறவை மட்டுமே இருக்குமானால், உன்னைத் தவிர வேறு யாரையும் யோசித்துக்கூட இருக்கமாட்டேன்.... அத்தனை மென்மையாக ஆடுகிறாய்...’ என்கிறார். நீனாவுக்கு பூரிப்பாகிவிடுகிறது. அடுத்த கணம் தாமஸ், இப்போது கருப்பு அன்னப்பறவையாக மாற வேண்டும்’ என சத்தமாகவும் கடுமையாகவும் சொல்கிறார். தொடர்ச்சியாக ஒரு உத்வேகம் மிகுந்த இசையின் சப்தம். நீனா ஆடத் தொடங்குகிறாள். அவளால் கருப்பு அன்னப்பறவைக்கான உடல் மொழியைக் கொண்டுவர முடியவில்லை. ஒரு முக்கியமான கட்டத்தில் எவ்வளவோ முயன்றும் முடியாமல் தன் நிலை தவறி அவள் கீழே விழுந்து விடுகிறாள்., மற்றக் கலைஞர்கள் அனைவரும் சிரித்து விடுகிறார்கள்.

அன்று இரவு தனது வீட்டில் நீனா உடையை கழற்றுகிறபோது முதுகில் நகக்கீறல்கள் பட்ட தழும்புகள் இருக்கின்றன. அவளுடைய அம்மா அதனைப் பார்த்து விடுகிறாள். ‘மறுபடியும் உன்னை நீயே  காயப்படுத்திக் கொள்வதை  தொடங்கிவிட்டாயா?’ எனத் திட்டியபடி அவளைத் தரதரவென இழுத்துக் கொண்டு போய் அவள் நகங்களை வெட்டி விடுகிறாள்.

அடுத்த நாள் நீனா தாமசை சந்திக்கிறாள். ‘’இரவு முழுவதும் ஆடிப் பார்த்தேன். இப்போது எனக்கு நம்பிக்கை இருக்கிறது, என்னால் ஆட முடியும் என்கிறாள்.அதற்கு அவர் ‘‘நான் உன்னை பத்து வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். எப்போதும் பயந்துபோன முகத்தோடவே காணப்படுகிறாய்..... ஏன் உன்னை ஒரு வித கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்திருக்கிறாய்..?’ என்று கேட்கிறார். அதற்கு நீனா தனது அமுங்கியக் குரலில்  ‘நான் மிகத் துல்லியமாக ஆட நினைக்கிறேன்’ என்கிறாள் .தாமஸ் சிரித்து விடுகிறார். ‘துல்லியம் என்பது கட்டுப்பாட்டிற்குள் உன்னை வைத்துக் கொள்வது மட்டுமல்ல......’ என்று சொல்லி விட்டு,  அந்த கதாப்பாத்திரத்திற்கு வெரோனிகா என்ற பெண்ணைத் தேர்வு செய்ய முடிவு செய்திருப்பதாக  கூறுகிறார். அவள் மிகுந்த ஏமாற்றம் அடைகிறாள். அத்துடன் அங்கிருந்து செல்லும் நீனாவை நிறுத்தி, ‘என் முடிவை மாற்றுவதற்கு முயற்சி செய்ய மாட்டாயா?’ எனக் கேட்கிறார். எதிர்பாராத அந்த கணத்தில் அவர் அவளை முத்தமிட தொடங்க நீனா அவரை பலவந்தமாக தள்ளி விட்டு ஓடி விடுகிறாள்.

தேர்வு பெற்றவர்களின் பட்டியல் ஒட்டப்பட்டிருக்கும் செய்தி எங்கும்  பரவுகிறது. அனைவரும் பட்டியலைப் பார்க்கும் விருப்பத்தில் ஓடுகிறார்கள். வெரோனிகா நீனாவைக் கடக்க நேர்கையில் நீனா அவள் தேர்ந்தெடுக்கப் பட்டமைக்கு  வாழ்த்துகள் சொல்கிறாள். அப்போது வெரோனிகா, ‘உன் வாழ்க்கையிலேயே மட்டமான நகைச்சுவை ஒன்றினை இன்று தான் சொல்லியிருக்கிறாய்’ எனக் கோபமாக சொல்லிவிட்டு செல்கிறாள். எதுவும் புரியாத நீனா, ஒரு உந்துதலில் பட்டியலைப் போய் பார்க்கிறாள். அவளால் நம்ப முடியவில்லை. அன்னப்பறவை இளவரசி என்ற கதாப்பாத்திரத்திற்கு நேராக நீனாஎன்ற பெயர் எழுதப்பட்டிருக்கிறது.திகைப்பு மூடிய அவளை அனைவரும் கட்டிப் பிடித்து வாழ்த்து சொல்கின்றனர். அவர்களிடம் இருந்து விடுபடும் அவள்கழிப்பறைக்குச் சென்று மகிழ்ச்சி மிகுதியால் அழுதபடி தன் அம்மாவுக்கு தொலைபேசியில் விஷயத்தை சொல்கிறாள். கட்டுப்படுத்தமுடியாத உணர்வு மிகுதியில்  அவள் கழிவறையை விட்டு வெளியே வருகையில் முன் பகுதியில் இருந்த கண்ணாடியில், அவளது பெண்மையை இழிவுபடுத்தும் சொல் ஒன்று எழுதப்பட்டிருப்பது. அதிர்ச்சியின் கணத்தில் உறையும் அவள் அதை வேகமாக அழிக்கத் தொடங்குகிறாள்.

வீட்டிற்கு வந்தப் பிறகு உடையை மாற்றமுனைகையில் முதுகுக்குப் பின்னால்நகங்களால் கீறிய அடையாளத்தைஇம்முறையும் பார்க்கிறாள். தன்னுடைய உடலில் இந்தக் கீறல்கள் எப்படி விழுகின்றன என்பது தெரியாமல் குழம்பிப் போகிறாள் நீனா. அவளுடைய அம்மா அதைப் பார்க்காத விதமாக அதை மறைக்கிறாள். அம்மா மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக கேக் வாங்கி வந்திருக்கிறாள். முன்னால் அந்தப்பெரிய கேக்கினைப் பார்த்ததும், இனி உடலை கட்டுக்கோப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது இது போன்று தன்னால் சாப்பிட முடியாது..என்கிறாள் நீனா. கோபத்தில் முழு கேக்கினையும் அப்படியே குப்பைத் தொட்டிக்குள் போடுவதற்காகப் போகிறாள் அம்மா . இதை எதிர்பார்க்காத நீனா அவளைத் தடுத்து  அம்மாவின் திருப்திக்காக கேக்கின் சுவையைப் புகழ்ந்துகொண்டே விழுங்கத்துவங்குகிறாள்.

அடுத்த நாளிலிருந்து நீனாவுக்கு பயிற்சி தொடங்குகிறது. எத்தனை முயற்சி செய்தும் மென்மையான மனம் கொண்ட அவளால் ஆவேசமான கருப்பு அன்னப்பறவைக்குத் தகுந்த உடல் மொழியினைக் கொண்டு வர முடியவில்லை. தாமஸ் பல நேரங்களில் அவளிடம் கோபப்படுகிறார். ஒரு நேரம் அங்கே நடனம் கற்கும் லில்லி என்கிற பெண் ஆடுவதைக் காட்டி, இந்த பெண் எவ்வளவு அழகாக ஆடுகிறாள் பார் அப்படியே நீ ஆடி விடு’ என்கிறார். இதற்காக கடும் முயற்சி எடுத்துக் கொகிறாள் நீனா.

நீனாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தும் விழா நடக்கிறது. அந்நேரத்தில்நீனாவின் முகத்தில் துளியும் பதற்றம் இருக்கக் கூடாது என்றும்  புன்னகைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் சொல்லிஅழைத்துப் போகிறார் தாமஸ். அந்நேரத்தில் நீனா தனது  விரலைப் பார்க்கிறாள். அதன் நகக்கண்ணிலிருந்து நகம் பிய்ந்து ரத்தம் வடிகிறது. தன் பதற்றத்தை மறைத்து புன்னகைக்க முயற்சிக்கிறாள். வாஷ் பேசினில் விரலினைக் கழுவுகிறாள். ரத்தம் போகாமல் பெருகியபடியே இருக்கிறது. அத்துடன் தோலும் உரிந்து கையோடு வருகிறது. பயத்தில் கண்ணை மூடிக் கொள்கிறாள். மறுபடியும் கண்ணைத் திறக்கையில் அவள் விரலில் அடிபட்ட சுவடு எதுவும் இல்லாது காணப்படுகிறது விரல்.

அந்த விழாவிலிருந்து நீனா கிளம்புகையில் பெத் அவளை சந்திக்கிறாள். தன்னுடைய வாய்ப்பை நீனா பிடுங்கிக் கொண்டதாக கருதும் அவள்  மோசமான வார்த்தைகளால் கண்டபடித் திட்டுகிறாள். நீனாவின் உடைவை தாமஸ் சமாதானப்படுத்துகிறார்.

மறுநாள் பயிற்சியின் போது, முந்தைய இரவில் நடந்த ஒரு விபத்தின் போது  பெத் தன் கால்களைப் பறி கொடுத்த செய்தி நீனாவுக்கு கிடைக்கிறது. நீனாவினால் இந்த சம்பவத்தினைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போகிறது. ‘இது நான் எதிர்பார்த்தது தான். அவள் மிகச் சிறந்த நடனக் கலைஞராக உருமாறும்போதே அவளுடைய குணத்திலும் மென்மை குறைந்துக் கொண்டே வந்துவிட்டது’ என்கிறார் தாமஸ் நீனாவிடம். நீனாவுக்குத் தனக்கும் அப்படி நிகழ்ந்து விடுமோ என அச்சம் வந்து விடுகிறது. அவளை சமாதானம் செய்கிறார்தாமஸ்.

பயிற்சி ஒவ்வொருநாளும் தீவிரமாகிக் கொண்டே போகிறது. அதுபோலவே நீனாவின் உடலிலும் ஒவ்வொருநாளும் நகக்கீறல்கள் பதிந்துக் கொண்டே இருக்கின்றன. அவள் அம்மாவுடன் பேசுவதைக் குறைத்துக் கொள்கிறாள். இந்த நாடகத்தினால் உன்னுடைய இயல்பே மாறி வருகிறது என அவள் அம்மா எடுத்துச்சொல்லும்போது கோபப்படுகிறாள்.

ஒருநாள் நீனாவைத் தேடி லில்லி வீட்டிற்கு வருகிறாள். தன்னுடன் சாப்பிட வெளியே வருமாறு அழைக்கிறாள். போக வேண்டாம் என நீனாவின் அம்மா தடுக்கிறாள். அதை மீறி நீனா லில்லியுடன் செல்கிறாள். லில்லி நீனாவுக்கு தன்னுடைய ஆண் நண்பர்களை அறிமுகப் படுத்துகிறாள். நீனா குடிக்கும் பானத்தில் லில்லி எதையோ கலந்து வைத்து விட அதை அறியாமல்  குடித்து விடஅவள் தன் வயத்தினை  இழக்கிறாள். லில்லியுடன் வீட்டிற்கு வரும் நீனா, அம்மா கேட்டதற்கெல்லாம் தாறுமாறாக பதில் சொல்கிறாள். ஒரு கட்டத்தில் தன்னை மீறி அம்மாவையே அடித்துவிட்டு லில்லியுடன் படுக்கை அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொள்கிறாள்.

மறுநாள் எழுந்திருக்கும் நீனா பயிற்சிக்கு தாமதமாகிவிட்டதை உணர்கிறாள்.மிகுந்த பதட்டத்துடன் செல்கிறாள். அங்கு அவளுடைய கதாபாத்திரத்தில் லில்லி பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். அதிர்ச்சியும் திகைப்பும் கொள்ளும் நீனா லில்லியை சந்தித்து, ‘என்னை எழுப்பிவிடாமல் நீ மட்டும் இங்கு வந்து பயிற்சி செய்கிறாய், என்னை ஏமாற்றி விட்டாய்’ எனக் கோபப்படுகிறாள்.‘உன்னுடைய வீட்டிற்கு நான் வந்தேனா..என்ன உளறுகிறாய்? ..நீ வரத் தாமதமானதால் சாதாரணமாகத் தான் பயிற்சி செய்தேன்’ என்கிறாள்.அப்போதுதான் லில்லி தன்னுடைய வீட்டிற்கு வந்தது தன்னுடைய கற்பனை  என நீனாவுக்கு தெரிந்து போகிறது.

தனக்கு மாற்றாகலில்லியை தயார் செய்வதைத் தெரிந்து கொண்டதும் மிகுந்த மன அழுத்ததிற்கு உள்ளாகிறாள் நீனா. தாமசிடம், ‘லில்லி எனக்கு எதிராக வேலை செய்கிறாள்..அவளை எனக்கு மாற்றாக போடாதீர்கள்’ எனக் கெஞ்சுகிறாள். ‘ஒரு பாதுகாப்புக்காக மற்றொரு நடிகையைக் கைவசம் வைத்திருப்பது எல்லா இடத்திலும் நடப்பது தான்’ என தாமஸ் சொல்லி விடுகிறார்.

தாமசுடன் லில்லி மிக நெருக்கமாக இருப்பது போன்றதான கற்பனையில் இருக்கிறாள் நீனா. மேடை நிகழ்ச்சி நடக்கும் நாள் வருகிறது. உடல் நிலை சரியில்லாமல் அன்றும் தாமதமாக வருகிறாள் நீனா. அப்போதும் தனக்கு முன் லில்லி தயாராக இருப்பதைக் கண்டு, வேகமாக தனக்கான ஒப்பனையைச் செய்து கொள்கிறாள். முதலில் வெள்ளை அன்னப் பறவையாக இருக்கும் காட்சிக்கான உடை அணிகிறாள்.காலுறைபோடும்போது தனது விரல்கள் அன்னப்பறவையின் விரல்கள் போன்றேவடிவாக ஒட்டியிருப்பதைப் காண்கிறாள். உடனே விரல்களைப் பிரிக்க முயற்சி செய்கிறாள். முடியாமல் போகிறது. அப்படியே தன்னுடைய காலுறைகளுடன் ஆடச் செல்கிறாள். நாடகத்தின் முதல் பகுதி நடக்கிறது.ஆட்டத்தின் போது தன் நிலையிலிருந்து விலகித் தடுமாறி விட நேர்ந்துவிடுகிறது.

அடுத்து கருப்பு அன்னப்பறவையின் காட்சி. உடைகளை மாற்றுவதற்காக ஒப்பனை அறைக்குள் வருகிறாள். அங்கு ஏற்கனவே லில்லி  ஒப்பனை செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். கோபம் கொண்ட அவள், லில்லியைக் கீழேத் தள்ளி விட்டு உடைந்த கண்ணாடியால் அவளைக் குத்தி விடுகிறாள். அதன் பிறகு லில்லியின் இறந்த உடலை குளியலறைக்குள் தள்ளி விட்டுவிட்டு கருப்பு அன்னப்பறவையாக மேடைக்கு செல்கிறாள். இப்போது அவள் ஆட ஆட அவளது உடலில் கரிய நிற இறக்கைகள் முளைக்கின்றன. கால்கள் காற்றில் சுழல்வது போல் சுழலுகின்றன. அவள் மனதளவில் குரோதமும், வன்மமும் கொண்ட அன்னப்பறவையாக மாறுகிறாள். அந்தக் காட்சி முடிந்ததும்பார்வையாளர்கள் கைத்தட்டி ஆராவாரம் செய்கிறார்கள்.

இப்போது நாடகத்தின் இறுதிக் காட்சி.மீண்டும் அவள் வெள்ளை அன்னப் பறவையாக மாற வேண்டும். மாறுவதற்காக தயங்கியபடி ஒப்பனை அறைக்குள் செல்கிறாள். உள்ளே  கண்ணாடித் துண்டுகள்  சிதறிக் கிடக்கின்றன. குளியலறையை கவனிக்க அதன் கதவிடுக்கிலிருந்து ரத்தம் வெளியேறுவது தெரிகிறது. அவசரமாய் ஒரு துணி கொண்டு ரத்தத்தினை மறைக்கிறாள்.அப்போது யாரோ கதவினைத் தட்டுகிறார்கள். பயந்து போகும் நீனா தயக்கத்துடன் கதவைத் திறக்கிறாள். அங்கு லில்லி நின்று கொண்டிருக்கிறாள். நீனாவுக்குநம்ப முடியவில்லை.அதிர்ச்சியின் உறையும் அவளிடம் ‘மிக நன்றாக ஆடினாய்’ எனப் புகழ்ந்துப்பாராட்டிப் பேசிவிட்டு செல்கிறாள் லில்லி. அவள் போனதும் குளியலறை கதவைத் திறக்கிறாள். அதில் லில்லியின் பிணமோ, அதன் சுவடோ கூட இல்லை. ஆனால் கண்ணாடி மட்டும் உடைந்து சிதறி கிடக்கின்றது.

இப்போது வெள்ளை அன்னப்பறவை தன்னுடைய உயிரை விடும் காட்சி. மேடையின் ஒரு உயரத்திற்குச் சென்று அங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மெத்தையின் மீது குதிக்க வேண்டும். குதிப்பதற்கு முன்பாக அவள் பார்வையாளர்களைப்பார்க்கிறாள். கூட்டத்தில் அவளுடைய அம்மா உணர்ச்சி மேலீட்டில் அவளுக்காக உட்கார்ந்திருகிறாள். நீனா அவளைப் பார்க்கிறாள்.பிறகு மெதுவாக உயரத்தில் ஏறி அங்கிருந்துக் கீழே விழுகிறாள். அவளை மெத்தைத் தாங்கிக் கொள்கிறது. பார்வையாளர்கள் கரகோஷம் செய்கிறார்கள். தாமசும் லில்லியும், மற்றக் கலைஞர்களும் நீனாவை நோக்கிஉற்சாகமாக ஓடி வருகிறார்கள். அருகில் வந்ததும் அனைவரும் அதிர்ந்து போகின்றனர்.  வயிற்றில் இருந்து ரத்தம் பெருகுகிறது.  அதன் மேலே உடைந்த கண்ணாடிஒன்று குத்தப்பட்டிருப்பது தெரிகிறது. அப்போது மெல்லிய குரலில் நீனா சொல்கிறாள், ‘என்னால் இப்போது துல்லியமாக  உணர முடிகிறது’ என்று.

நீனாவின் மேல் அவள் அம்மாவுக்கு இருக்கிற கட்டுப்பாடு தகர்க்கும் கணத்தில் தான் நீனா தன்னை முழுமையாக தனது கற்பனைகளுக்குள் ஊடுருவ விட்டுக் கொடுக்கிறாள். கண்ணுக்குத் தெரியாத அச்சத்திற்கு காரணமாக நீனா மனதில் அவளுடைய அம்மாவின் உருவமே பதிவாயிருக்கிறது. ஒரு ஒடுக்கப்பட்ட பெண் மனது உருவாக்குகிற கற்பனைகளும், சித்திரங்களும்  அதன்  நிஜ உலக யதார்த்தங்களும் தருகிற அதிர்வுகளை சித்தரிக்கிறது  இந்தப் படம். இதை இயக்கியவர் Darren Aronofsky.வெறும் சம்பவங்களின் தொடர்ச்சியாக மட்டும் காட்சிகள் இல்லாமல் அதன் தன்மைகளின் அக உலக ஆழங்களையும் எடுத்துணர்த்துவது இந்தப் படத்தின் அம்சமான சிறப்பு.

ஜா.தீபா சென்னையில் வாழும் எழுத்தாளர் , திரைப்படத்துறையில் உதவி இயக்குநராக பணிபுரிகிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com