அமிர்தம்சூர்யா

கவிதைத்திருவிழா

ஆசுவாசப்படுத்தலில்...

தேனீர் தியானமும் நிழல் நாட்குறிப்பேடும்

1. தேனீர்

என்னை தேடிக் கொண்டிருந்த நீ

ஆயுதமற்ற என் பதுங்குக் குழியில்

கால் இடறி வீழ்ந்தபோது

ஆயுதத்தைத் தவறவிட்டதையும்,

நிராயுதபாணியான நாம் இப்போது

தேநீர் பருகிக் கொண்டிருப்பதையும்

நமது அதிகாரவாதிகளுக்கு

தெரிவித்துவிடவேண்டும்

பாவம்ஆசுவாசமாய்

தேநீர் குடித்துநீண்டநாள் ஆனது அவர்களுக்கும்.

2....மக்கா

எம்வூட்டு ஆதி சொத்து

அம்போன்னு கொள்ளப் போதே

ஒப்பாரியின் கடைசி வரி

காற்றென கவ்வுகிறது

எல்லோரையும்.

மலர் வளையத்தினுள்ளிருப்பது

சூடேற்றி வளைத்த முங்கிலோ

யாரோ வீசியெறிந்த சைக்கிள் டயரோ

எதுவாயினும் அதுசூன்யத்தின் சாயலாகவும்

இரண்டு கழித்தல் குறிகள்

மையத்தில் மோதிக் கொள்வதாய்

சவுக்கு கழிகள் குறுக்காக வைத்து கட்டியிருப்பது

உனக்கும் எனக்குமான பூசலாகவும்

அசோக மரத்தின் பசுமை உருவி

வட்டமாய் பூசி , நிகழ்பொழுதை

நறுமணத்தல் கழுவும் மலர்களின் பிணைப்பு

இருப்பின் நிர்பந்தமாகவும்தோன்றுகிறது சிலநேரம்.

வசித்து விட்டு விடைபெறும் அந்நபரின்

கோயில் கோபுரமென நிற்கும்

பாதங்களின் கீழ்சமர்ப்பித்த மலர் வளையத்திற்குள்

கழன்று கொண்டிருக்கும்

இறப்புக்கு எதிரான வாழ்வின் நெடியை

துக்க வீட்டிற்கு வந்தவர்கள்

யாருக்கும் தெரியாமல்தத்தம் இல்லத்திற்கு

கொள்ளையடித்து செல்ல ... தேடிபிடித்து ஒவ்வொருவரையும் மரிக்காமல் பின் தொடர்கிறது - ஒப்பாரியின் கடைசி வரி.

*********************** 

தீரா வேட்டையின்

உத்வேகத்தில் மத்தென மாறி

இடையறாது மண்ணை கடை

கையில் விளிம்பில் தெறிக்கும்

பச்சை துளிகளால் வெளியெங்கும்

வேட்டையின் கருணையை

நிரம்பி வழிய செய்யும்

ஒற்றை புல்லின் துளிவேர்

முற்றத்தில் வந்து வீழ்ந்தபோது

தெரியாதிருந்தது அது தனிமையை உண்ணுமென்று.

*************************

அன்று நீ நகரமான தினம்

கிழக்கு மாடவீதியில்அதிகாலை உறக்கத்திற்கு

தவமிருக்கும் காமம்தாங்கியின்

அந்தரங்க வலி அறையினுள் முடங்க

மோகவலையை வாசலில்

வீசிவிட்டு காத்திருப்பாள்

இரவு போஜனத்திற்கு

கண்ணி வைத்து கிழப்பரத்தை.

மேற்கு மாட வீதியில்

புட்டத்தை தட்டும்

கடைக்காரனின் அவமதிப்பை

உதறிவிட்டுஒற்றை ரூபாய் பிச்சையை

வாங்கி செல்லும் அரவாணிக்கு எதிரே

பக்தி வழிய பல்லக்கில்தூக்கி வருவர்

அர்த்த நாரீஸ்வரரை.

கவிஞர் அமிர்தம் சூர்யா*

1966 -ல் பிறந்து சென்னையில் வேர் பிடித்து 85 களிலிருந்து இலக்கிய களத்தில் இயங்கி வருபவர் அமிர்தம் சூர்யா.நவீன ஓவியம் , நவீன நாடகம் , விமர்சனம் , கருத்தரங்க உரை என பல தளங்களிலும் செயலாற்றி வருபவர்.* அமிர்தம் - என்ற சிற்றிதழை இயக்கியவர்

2000 -ல் " உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை " என்ற தலைப்பில் கவிதை தொகுப்பு .

2001 ல் " முக்கோணத்தின் 4 வது பக்கம் " என்ற கட்டுரைத் தொகுப்பு.

ஜனவரி 25, 2008

logo
Andhimazhai
www.andhimazhai.com