அழைத்து வா! - போதியின் நிழல் 6

அழைத்து வா! - போதியின் நிழல் 6

பட்டுமெத்தையில் புரண்டு கொண்டிருந்தான் கியோ வென் தாய். அவனது குறுந்தாடி வண்ணப்பூச்சுகளால் சிவந்து இருந்தது, அந்த இரவில் எரிந்த சிவப்பு நிறமான விளக்கில் மேலும் சிவப்பாய் தெரிந்தது.காவ்சாங் நகரம் வெப்பமான பூமி என்பதால் அரண்மனையின் சாளரங்கள் திறந்திருந்தன. உள்ளே வந்த காற்றும் அனலாகவே இருந்தது. மன்னனான கியோ வின் மணிமுடி அந்த அகன்ற அறையில் ஒரு மஞ்சத்தில் இருந்தது. அதில் இருந்த ஒற்றை ரத்தினக் கல் சுடர் விட்டுப் பிரகாசித்து அந்த அறையில் நிரம்பியிருந்த சிவந்த ஒளிக்கு மேலும் வலு சேர்த்துக்கொண்டிருந்தது. கியோ திடீரென்று எழுந்து அமர்ந்துகொண்டான். கால்களை மடக்கி அமர்ந்தவன், சாளரத்தின் வெளியே நோக்கினான். இருளில் எங்கோ ஒரு நட்சத்திரம் தெரிந்தது. நகரின் பௌத்த மடாலயம் ஒன்றில் மணி ஒலிக்கும் சப்தம் மென்மையாகக் கேட்டது.

கியோ பௌத்த மதத்தை தழுவிய மன்னன். அவனது நாடு முழுக்க மழுங்க சிரைத்த, சிவந்த, வெண்ணிற ஆடைகள் உடுத்த பலநாடுகளைச் சேர்ந்த துறவிகள் மடாலயங்களில் நிரம்பியிருந்தனர். ஓவ்வொருவரும் ஒவ்வொரு சாஸ்திரங்களில் விற்பன்னர்கள். தினமும் அவர்களுடன் அளாவளாவி கியோ பேரின்பம் அடைந்து கொண்டிருந்தான். ததாகதரின் புண்ணிய சொற்களை, போதிசத்துவர்களின் அருள்மொழிகளை, திருவாழ்வை அவர்கள் வாய்வழியாகக் கேட்டு இன்புற்றுக் கொண்டிருந்தான். தன் மதத்துக்காக தன் செல்வங்கள் எல்லாவற்றையும் வாரி வழங்கிக் கொண்டிருந்தவன் அவன்.

அருகில் இருந்த இகு என்கிற சிறு நகரில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு ஒற்றர் தலைவன் வந்திருந்த ஒருவன் சொன்ன சேதி கியோவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

‘‘சீன தேசமே வியந்து பாராட்டும் மிகப்பெரிய அறிஞர் ஒருவர் பேரரசரின் கட்டளையை மீறி அங்கிருந்து எல்லை கடந்து ததாகதரின் தேசம் நோக்கிச் செல்கிறாராம். அவரை நம் வணிகர்கள் சீன தேசத்துக்குள் கண்டிருக்கின்றனர். அவர் மொழிந்த உரைகளைக் கேட்டவர்கள் கையில் இருந்த பொருளையெல்லாம் அவருக்கே காணிக்கையாகக் கொடுத்துவிட்டனராம். ஆனால் அவரோ அதில் ஒன்றைக் கூடத் தொடவில்லையாம். அப்படியே திரும்பக்க கொடுத்துவிட்டாராம். மிகவும் வற்புறுத்தினால் வாங்கி அப்படியே அருகில் இருக்கும் பௌத்த விகாரத்துக் கொடுத்துவிடுகிறாராம். ஆகவே அவர் எங்கு போனாலும் பௌத்த ஆலயத்தினர் பெரு மகிழ்வு கொண்டு அவரை உபசரிக்கிறார்கள். பாலைவனத்தைக் கடந்து எப்படி அவர் தனியாளாக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இகு தேசம் வந்து பின் அங்கிருந்து அவர் தென்மேற்காகப் பயணம் செல்வார்.’’ என்றான் அவன்.

‘‘ அவர் பெயர் என்னவாம்?’’

‘‘யுவான் சுவாங் என்பதாகும்’’

கியோ உள்ளம் உணர்ச்சிப்பெருக்கில் நிரம்பியது. அறையில் இருந்த சாக்கியமுனியின் சிற்பம் நோக்கி தலை தாழ்த்தினான். அந்த பெயரை சில ஆண்டுகளாக சீன தேசத்திலிருந்து வரும் பிக்குமார்கள் வியப்புடன் சொல்லக் கேட்டுள்ளான். சில நாட்களாக அவன் கனவில் ததாகதரைக் காண்பது வழக்கமாயிருந்தது. மழித்த தலையுடம் கிழக்கிலிருந்து மேற்குநோக்கி பயணம் செய்யும் அவரது உருவத்தை அவன் கண்டுகொண்டே இருந்தான். பயணத்தால் அவர் நலிவுற்று, ஆடைகள் நைந்து, உதடுகள் உலர்ந்து இருக்கும் தோற்றம் வந்துகொண்டே இருந்தது. அதன் அர்த்தம் புரியாமல் குழம்பிக்கொண்டே இருந்தன் கியோ. இப்போது விளங்கிவிட்டது.

‘‘ அவர் இகுவுக்குள் வந்ததும் அப்படியே அவரை அழைத்துகொண்டு இங்கே வரவேண்டும். நமது ஆட்கள் எவ்வளவு பேரை வேண்டுமானாலும் அழைத்துக்கொள். இது எனது கட்டளை. இகு மன்னனிடம் கூறிவிடு.’’ என்ற அவன் ஒரு ஓலை நறுக்கில் உத்தரவை எழுதியும் கொடுத்தான்.

கியோவுக்கு உலகில் உள்ள அத்தனை அறிஞர்களும் தன் அவையில் இருக்கவேண்டும் என்று ஆசை. அதற்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.

யுவான் சுவாங்கை மேற்கொண்டு பயணம் செய்ய அனுமதிக்காமல் தன் தேசத்துக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற திட்டம் அவனுக்குள் உருவாகிவிட்டது. தன் விருந்தோம்பலை மீறி அத்துறவி தன் பயணத்தை தொடர அவன் விடப்போவதில்லை.

இதற்கிடையில் சற்று வரலாற்றுத் தகவல்களை வாசகர்கள் நலனுக்காக இங்கே பார்த்துவிடலாம்.

கியோ ஆட்சிசெய்த நகரம் அன்றைக்கு காவ்சாங் என்று அழைக்கப்பட்டது. இப்போது சீனாவில் உள்ள டர்பான் மாவட்டத்தில் இருக்கும் நகரமாக அது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஹுவோ&சௌ என்று அது இப்போது அழைக்கப்படுகிறது. அங்கு தோச்சாரிய மொழி பேசப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். யுவான் சுவாங் பயணம் மேற்கொண்ட ஏழாம் நூற்றாண்டில் காவ்சாங் நகரம் செல்வம் கொழிக்கும் நகரம். கோபி பாலைவனத்தின் நடுவில் இருந்த அந்நகரம் சீனப்பேரரசுக்குக் கட்டுப்பட்டதாக இருந்தாலும் சுற்றுவட்டாரத்தில் பிற அரசுகளால் அஞ்சப்படுவதாக இருந்தது. கியோவின் ஆணையை மீறுவோர் அங்கு யாரும் இல்லை. அதனாலோ என்னவோ பின்னர் அவன் சீனப்பேரரசுக்கு பணிய மறுத்தான். யுவான் சுவாங் இந்தியாவுக்குள் பயணம் மேற்கொண்டிருந்த 16 ஆண்டுகளில் எவ்வளவோ வரலாற்று மாற்றங்கள் ஏற்பட்டன. அதில் ஒன்று சீனப்பேரரசு காவ்சாங் மீது படையெடுத்து கியோவைத் தண்டித்ததும் ஆகும். எப்படியும் தன் மீது படையெடுக்க மாட்டார்கள் என்று ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் கியோ இருந்துவிட்டான். ஆனால் ஆக்ரோஷமான சீனப்படைகள் எல்லைக்குள் நுழைந்ததும் அவன் திடீரென்று அச்சத்தால் பீடிக்கப்பட்டு இறந்துவிட்டான். அவன் மகன் புத்திசாலி. சீனப்படைத்தளபதியிடம் சரணடைந்தான். ஆனாலும் நகருக்கு ஏற்பட்ட பேரழிவைத் தடுக்கமுடியவில்லை. ஆகவே யுவான் சுவாங் தன் சுற்றுப் பயணம் முடிந்து திரும்பிவருகையில் இந்த நாடே இல்லை. ஆனால் கியோவுடன் யுவான் சுவாங்குக்கு ஏற்பட்ட சந்திப்பு அவரது பயணத்தில் மிக முக்கியமான ஒன்றாகும்.

சாளரம் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்த கியோ, படுக்கையை நோக்கித் திரும்பி வந்து படுத்துக்கொண்டான். யுவான் சுவாங்கை அழைத்துவருமாறு ஓலை அனுப்பிய தினத்தில் இருந்து அவனது கனவில் ததாகதர் வருவது நின்று போய்விட்டது. அதை சில நாட்களில் உணர்ந்துகொண்டுவிட்ட கியோவின் ஆவல் மேலும் அதிகரித்தது. தன் வருகையை குறிப்பால் உணர்த்தக்கூடிய வல்லமை கொண்ட எந்த ஒரு மனிதரையும் காண ஆவல் மிகுவது வழக்கம்தானே?
யுவானுக்காக ஏற்கெனவே ஒரு மாளிகையை ஒழித்து, அதில் சிறப்பான ஏற்பாடுகளை செய்துவைத்திருந்தான் அவன். ஏனோ அந்த இரவில் அங்கு சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் அவனுக்கு உருவாகியது. மஞ்சத்தில் இருந்து எழுந்தான். அறைக்கதவைத் திறந்து வெளியே வந்தவனைக் கண்ட காவலன் ஒருவன் அருகே ஓடிவந்தான். அவனிடம் பந்தமொன்றை எடுத்துக்கொண்டு தன்பின்னே வருமாறு பணித்தவாறு தன் அரண்மனையை விட்டு வெளியே வந்தான் கியோ.

அரண்மனைக்கு எதிரே இருந்த ராஜவீதியில் ஐந்தாறு மாளிகைக்கு அப்பால் சிறுதோட்டத்துடன் இருந்த ஒரு மாளிகையை தயார் செய்து வைத்திருந்தான் அவன்.

அதை நெருங்கியவுடன் வியப்புற்றான் அவன். மாளிகை முழுக்க விளக்குகள் எரிந்தன. செவ்வாடை அணிந்த துறவியர் அங்கும் இங்கும் நடமாடிக்கொண்டிருந்தனர். மன்னன் வருகையை யாரும் லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. அழகியதொரு நறுமணம் காற்றில் பரவி இருந்தது. பவுத்த கோஷங்கள் காற்றில் ஒலித்தன. ஏதோ ஒரு புகழ்பெற்ற மடாலயத்துக்குள் வந்துவிட்டது போல உணர்ந்தான் கியோ.

அம்மாளிகையின் நடுவே விரிக்கப்பட்டிருந்த பெரிய சிவப்பு நிறக்கம்பளத்தின் நடுவே அமர்ந்தார் ஒரு இளம் துறவி. உயரமான உடல், எதிரே பெரிய சுவடி ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. அவர் தனியாக அமர்ந்து வாசிப்ப்பில் ஆழ்ந்திருந்தார். அவரைக் கண்டதும் கியோவின் மனதில் பெருத்த அன்பும் மதிப்பும் பெருகின. அவருக்கு முன்னே அமர்ந்த கியோவுக்கு சட்டென்று ஒரு எண்ணமும் சந்தேகமும் உதித்தது. யுவான் சுவாங் வருகைக்காக ஒழித்து வைத்த இம்மாளிகையில் வந்திருக்கும் இவர் யார்? இப்படி ஒரு அறிஞர் வருகை நமக்குத் தெரியாமல் எப்படி நிகழ்ந்தது? கியோவுக்கு எதுவும் புரியவில்லை.

‘‘மரியாதைக்குரிய பிக்குவே,..’’ கியோ மெல்ல அழைத்தான். அவர் காதில் விழுந்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை. எனவே மெதுவாக கனைத்து தன் வருகையை அவருக்கு உணர்த்த முயன்றான். எந்தப் பலனும் இல்லை. திரும்பிய அவன் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த காவலனை அருகே அருகே வரும்படி சைகை செய்தான். கையில் பந்தத்துடன் அருகே வந்த காவலன் முகத்தில் ஒரு புன்னகை உதித்தது. கியோ அவன் முகத்தை உற்றுக்கவனித்தான். அவன் அறையில் இருக்கும் ததாகதரின் அதே முகம். மேனி எங்கும் சிலிர்க்க, திடுக்கிட்டான் கியோ.

மறுகணம் தன் அறையில் வியர்வை உடல் எங்கும் ஆறாக ஓட மஞ்சத்தின் மேல் தான் திடுக்கிட்டு விழித்தவண்ணம் படுத்திருப்பதை உணர்ந்தான். வெளியே பொழுது விடிந்ததன் அடையாளமாக பறவைகளின் குரல்கள் கேட்டன. மறுகணம் இன்று எப்படியும் யுவான் இங்கு வந்துசேர்வார் என்கிற எண்ணம் அவனுக்குள் முளைவிட்டு பெரும் மரமாக வளர்வதை பிரமிப்புடன் கவனித்தான் கியோ.

-பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com