ஐம்பதாண்டுகளுக்கு முன்பு புதையுண்டு போன ஒரு உண்மை வரலாறு” - படித்ததும் கிழித்ததும் பாகம் - 2

ஐம்பதாண்டுகளுக்கு முன்பு புதையுண்டு போன ஒரு உண்மை வரலாறு” - படித்ததும் கிழித்ததும் பாகம் - 2

பாமரன் எழுதும் தொடர்- 16

இதோ…

இதுவரை மறைக்கப்பட்ட….

திரிக்கப்பட்ட வரலாறொன்று ரத்தமும் சதையுமான சாட்சியங்களோடு விண்ணுயர எழுந்து நிற்கிறது.

கீழ்வெண்மணியில் தீயின் நாக்குகள் தின்ற அந்த 44 தோழர்களது தியாகம் வெறும் கூலி உயர்வுப் பிரச்சனையின் பொருட்டு மட்டும் எழுந்த ஒன்றா ? ஆணித்தரமாக இல்லையென்று மறுக்கிறது இந்நூல்.

விவசாயத் தொழிலாளர்கள் கூலியை உயர்த்திக் கேட்டார்கள். மறுத்தார்கள் பண்ணையார்கள். இதனால் ஏற்பட்ட தகராறில் கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் ஒன்றுகூடி குடிசைகளுக்குத் தீ வைத்துவிட்டார்கள் எனக் குறுக்கக்கூடிய நிகழ்வா இக்கொடூர நிகழ்வு ?

ஒரு திசை திருப்பப்பட்டுவிட்ட…

கூலி உயர்வுப் பிரச்சனையாக மட்டும் குறுக்கப்பட்டுவிட்ட…

ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் புதையுண்டு போன ஒரு உண்மை வரலாற்றை வெளிக்கொணர்ந்திருக்கிறது இந்தப் புத்தகம்.

அந்த வரலாற்றை நாம் அறியவேண்டுமென்றால்… நாற்பதுகளில் இருந்து எழுபதுகளின் மத்தியப் பகுதி வரையிலும் நாகை தாலூகா தொடங்கி கீழத் தஞ்சை வரையிலும் கிளைவிட்டுப் பரவியிருந்த திராவிடர் கழகத்தினது திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கம் குறித்தும்…. கம்யூனிஸ்ட் கட்சியினது செங்கொடி இயக்கம் குறித்தும்… பண்ணையார்களை “பிதாமகர்”களாகக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி குறித்தும்… பிற்பாடு வந்த திமு.க.வினது தடுமாற்ற நிலைப்பாடுகள் குறித்தும்…. துல்லியமாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாம் அதன் கள நிலவரங்களையும் இக்கட்சிகள் வகித்த  கதாபாத்திரங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதை வேரடி மண்ணிலிருந்து கிளையின் நுனிவரை அப்படியே நம் முன் எடுத்து வைக்கிறது இப்புத்தகம்.

“விவசாயக் கூலிகள் சம்பளம் என்பதை மற்ற தாலூகாக்களை விட, நாகை தாலூக்காவில் கூடுதலான கூலியைப் பெற்று வந்தார்கள் என்பதே உண்மை.” என ஆணித்தரமாக தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்கிறார் தன் வாழ்நாள் முழுக்க அப்பகுதி விவசாயத் தொழிலாளர்களுக்காக உழைத்த… அதன் பொருட்டு ஒரு ”முக்கொலை” சம்பவத்தில் குற்றவாளியாக்கப்பட்டு தூக்குமேடை வரை சென்று வந்த ”ஏ.ஜி.கே” என்றழைக்கப்படும் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன்.

”சோற்றை மட்டுமே முன் நிறுத்தாமல் சுயமரியாதையை முன்னிறுத்தியதுதான் இச்சூறையாடல்களுக்கே பிரதான காரணம்” என்கிற அச்சு அசலான உண்மையை அம்மக்களோடே உண்டு உறங்கி வாழ்ந்த… ஏ.ஜி.கே. ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்திருக்கிறார். அவரது இறுதிக் காலங்களில் சலியாது சந்தித்து ஏ.ஜி.கே.வின் எண்ண ஓட்டங்களை அப்படியே பதிவு செய்து நூலாக நம் கரங்களில் தவழ விட்டிருக்கிறார் பசு. கவுதமன். அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது ரிவோல்ட் பதிப்பகம்.

திராவிடர் கழகம் கவனிக்கத் தவறியவை…. கம்யூனிஸ்ட் கட்சி கவனித்தும் கடைபிடிக்கத் தவறியவை… சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சுயமரியாதை என பெரியாரின் பிரதான பங்களிப்புகளை முன்னிறுத்தத் தவறிய செங்கொடி இயக்கம்… “காமராசர் ஆதரவு” நிலைப்பாட்டில் பண்ணையார்களின் மூர்க்கங்களை பெரியாரின் காதுகளுக்கு எட்டாவண்ணம் பார்த்துக் கொண்ட நாகை திராவிடர் கழகத் தலைமை… என எண்ணற்றவை புதைந்து கிடக்கின்றன இப்புத்தகத்தினுள்.

திராவிடர் கழகத்தில் இருந்து விலகி கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போராடிய போதிலும் ”ஏ.ஜி.கே. கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்துவிட்டாலும் பெரியாரை விட்டு வெளிவர மாட்டேன் என்கிறார்” என செங்கொடி இயக்கத்தினர் சொல்ல….

நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு மீண்டும் திராவிடர் கழகத்தில் இணைந்து பணியாற்றிய போதிலும் “ஏ.ஜி.கே. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வந்துவிட்டாலும்கூட, இன்னும் அவர் மார்க்ஸியவாதியாகத்தான் நடந்து கொள்கிறார்.” என கருஞ்சட்டை இயக்கத்தினர் சொல்ல…

தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனோ…. ”வயல் வெளிகளில்…. களத்து மேடுகளில் பெரியாரும் மார்க்சும் கைகோர்த்தனர்” எனச் சிலாகிக்கிறார்.

இதுதான் இந்த நூலின் மகத்துவம்.

மறைக்கப்பட்ட வரலாற்றை வாங்கி வாசிக்க : 98849 91001

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com