கண்ணை மறைத்த அகங்காரம்! - போதியின் நிழல் 28

கண்ணை மறைத்த அகங்காரம்! - போதியின் நிழல் 28

வினிதபிரபாவிடம் சாஸ்திரங்களையும் பல சுவடிகளையும் யுவான் சுவாங் கற்றுக்கொள்வதில் 14 மாதங்கள் கழித்தார். நானும் அவர் படிக்கும் இடத்தில் அமர்ந்து சுவடிகளைப் புரட்டிப் பார்ப்பேன். வினித பிரபா எப்போதெல்லாம் சூத்திரங்களுக்கு விளக்கம் தருவாரோ அப்போதெல்லாம் நானும் இருப்பேன். ஆனால் யுவானுக்கு ஒருமுறை எதைச்சொன்னாலும் போதும். அப்படியே நினைவில் நிற்கும். எனக்கோ காஞ்சியில் வேகவதி ஆற்றில் எழுதிய எழுத்துப்போல உடனே காணாமல் போய்விடும். அதுபற்றிக் கவலையும் எனக்கு இல்லை. இப்பிறப்பில் எனக்கு இவ்வளவு போதும் என்று தீர்மானிக்கப் பட்டிருக்கிறது போலும் என்று தீர்மானித்துக் கொள்வேன். இப்பிறப்புடன் என் வாழ்க்கை சக்கரம் நின்றுவிட வேண்டும் என்றுதான். இந்த காவி உடையைப் பூண்டேன். இதோ தெய்வப்பிறவியாய் தோன்றும் யுவானுக்கு சேவை செய்வதையே இப்போது கடமையாகக் கருதுகிறேன். அவர் ஆடைகளைத் துவைப்பது, தண்ணீர் தருவது, அவர் இரவில் நெடுநேரம் படிக்கும்போதோ, எழுதும்போதோ, விழித்திருந்து விளக்குகளைத் தூண்டிவிடுவது என்று என் நேரத்தைக் கழித்தோம்.

வினிதபிரபாவிடம் இருந்து போதுமான அளவுக்கு கற்றபிறகு யுவான் விடைபெற்றார். எங்கள் குழுவினரும் அவருடன் கிளம்பினோம். அங்கிருந்து தமஸ்வனா, ஜலந்தரா, குலு, பரியாத்ரா வழியாக தென் கிழக்காகப் பயணம் செய்து மதுரா தேசத்தை அடைந்தோம்.

சாரிபுத்திரர், மவுத்கல்யாயனர், பூர்ணமைதிரேயானிபுத்திரர், உபாலி, ஆனந்தர், ராகுலர் - போன்ற புத்தரின் முக்கியமான சீடர்களின் ஸ்தூபிகள் அங்கே இருந்தன. ஆண்டுதோறும் முக்கியமான தினங்களில் பிக்குகள் கூடி இங்கே வழிபாடுகள் நடத்துவர். யுவான் இந்த ஸ்தூபிகளைக் கண்டு பெரும் உணர்ச்சிவயப்பட்டதை நான் உணர்ந்தேன். மதுராவுக்கு வெளியே உபகுப்தர் என்கிற மாபெரும் அறிஞரால் உருவாக்கப்பட்ட விஹாரம் இருந்தது. அங்கே அவரது தலைமுடியும் நகங்களும் வைக்கப்பட்டு இருந்தன. அந்த விஹாரத்தின் வடக்குப்பக்கத்தில் ஒரு கல்லால் ஆன அறையைக் கண்டோம். இருபது அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்ட அறை அது. அதனுள்ளே ஏராளமான சிறுசிறு மூங்கில் குச்சிகள் குவிந்து கிடந்தன. கணவன் மனைவியரை ஞானமடையச் செய்யும்போது அதன் நினைவாக ஒரு மூங்கில் குச்சியை இந்த அறைக்குள் போடச்செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம் உபகுப்தர்.

இன்னும் கிழக்காக பயணம் செய்து மாபெரும் வெள்ளப்பெருக்குடன் ஓடிக்கொண்டிருந்த கங்கை நதியின் கரையோரம் ஒரு மாலைநேரத்தில் வந்துசேர்ந்தோம். அதன் அழகில் மயங்கி எங்கள் குழுவினர் அங்கேயே இரவில் தங்கினோம். அருகில் ஜெயகுப்தர் என்கிற அறிஞரின் விஹாரம் இருப்பது பற்றிக் கேள்விப்பட்டு மறுநாள் அங்கு சென்றோம். அவர் பௌத்தத்தில் சௌத்ரானிக பள்ளியைச் சேர்ந்தவர். யுவான் அங்கேயே ஒரு மாதம் தங்கி அவரிடம் சில ஐயங்களைக் கேட்டுத் தெளிந்தார்.


பின்னர் ஒருநாள் கங்கையைக் கடந்து அதன் கிழக்குக் கரைக்கு வந்தோம். அது மத்திபுரம் என்கிற தேசம். அதன் மன்னர் ஒரு சூத்திரர். ததாகதரின் தர்மம் அங்கும் செழித்து இருந்தது. ஏராளமான விஹாரங்கள் இருந்தன. பெரும் ஹீனயான அறிஞரான குணபத்திரர் இந்த தேசத்தைச் சேர்ந்தவரே. சுமார் நூறு சாஸ்திரங்களை அறிந்தவரான இவர் முதலில் மகாயானத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் பின்னர் ஹீனயானத்துக்கு மாறினார். பெரும் ஞானவலிமை பெற்றவரான பிக்கு தேவசேனா வாழ்ந்த காலம் அதுஅவரால் துஷித சொர்க்கத்துக்கு செல்லவும் திரும்பிவரவுமான வல்லமை இருந்தது. குணபத்திரர் அவரிடம் சென்று தனக்கு சில ஐயங்கள் இருப்பதாகவும் அதை மைத்ரேய பகவானிடம் கேட்டறிந்து கொள்ள விரும்புவதாகவும் கூறி தன்னை துஷித சொர்க்கத்துக்கு அனுப்புமாறு வேண்டிக்கொண்டார். அவரும் அப்படியே செய்தார்.
ஆனால் அந்தோ பரிதாபம்! குணபத்திரருக்கு அகங்காரம் கண்ணைமறைத்தது.

மைத்ரேயரைக் கண்டதும் தரையில் விழுந்து பணிய குணபத்திரருக்குத் தோன்றவில்லை. வெறுமனே வணக்கம் மட்டும் தெரிவித்தார். அத்துடன் மைத்ரேயர் இங்கே சும்மா உட்கார்ந்திருக்கிறார். நானோ எப்போதும் சாஸ்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவன். இவரிடம் கேட்டு எந்த பலனுமில்லை என்று அவருக்குத் தோன்றியது. உடனே பூமிக்கு அவர் திரும்பி அனுப்பப்பட்டார். இப்படி மூன்றுமுறை துஷித சொர்க்கத்துக்கு அனுப்பப்படும் பேறு அவருக்குக் கிட்டியும் மைரேய பகவானைக் கண்டதும் குணபத்திரரின் அகங்காரம் அவரை தன் ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. குணபத்திரர் வெறுங்கையுடனே திரும்பினார். அவர் ஸ்தாபித்த விஹாரத்துக்குச் சென்று அங்கே தங்கினோம். அதற்கு சற்றுத் தள்ளி சங்கபத்திரர் என்கிற மாபெரும் அறிஞர் வாழ்ந்து மரணம் அடைந்த விஹாரம் இருந்தது. அங்கு சென்றபோது சங்கபத்திரர் பற்றிய கதையைக் கூறுமாறு கேட்டுக்கொண்டோம்.
சங்கபத்திரர் காசுமீரத்தைச் சேர்ந்தவர். வசுபந்து போதிசத்துவர் வாழ்ந்த காலம் அது. சங்கமித்திரர் சும்ஜார் 12,000 சுலோகங்களை இயற்றினார். அத்துடன் ஏராளமான விளக்கங்களையும் எழுதினார். என்னதான் பெரிய அறிஞராக இருப்பினும் அவருக்கு வசுபந்துவைச் சந்தித்து தன் கருத்துக்கள் சரியா என்று கேட்டறிய வேண்டும் என்ற தணியாத ஆவல் இருந்தது. ஆனால் வசுபந்துவைச் சந்திக்காமலே மரணம் அடைந்தார். பிற்பாடு ஒருமுறை இங்குவந்த வசுபந்து சங்கபத்திரரின் எழுத்துக்களைக் கண்டார். அவற்றின் அழகிலும் கருத்தாழத்திலும் மனதைப் பறிகொடுத்து பெரிதும் பாராட்டினார். அவரது சாஸ்திரங்களுக்கு நியாயனுசரா சாஸ்திரா என்று பெயரும் சூட்டினார்.
சங்கபத்திரர் மரணம் அடைந்தபிறகு அவருக்கு ஒரு மாந்தோப்பில் ஸ்தூபி அமைக்கப்பட்டது. அந்த ஸ்தூபியைக் கண்டபோது அங்கும் ஒரு கதையைக் கேட்டோம். சங்கபத்திரரின் மரணத்துக்குப் பின்னால் இந்த ஸ்தூபியின் வழியாக விமலமித்ரா என்கிற இன்னொரு அறிஞர் வந்தார். அவரும் சாஸ்திரங்களில் கரை கண்டவர். தன் சாஸ்திரங்களை எழுதிமுடித்து அங்கீகாரம் அடைவதற்கு முன்பே சங்கபத்திரர் இறந்துவிட்டதை அறிந்த அவருக்கு சங்கபத்திரர் எழுதியவற்றை மேலும் விரிவாக்கி எழுதி, வசுபந்துவைவிட இவரை புகழ்பெறச் செய்யவேண்டும் என்று தோன்றியது. வசுபந்துவின் கோட்பாடுகளை சற்றுத் தாழ்த்தி தன் சீடர்களிடன் பேசவும் செய்தார். ஆனால் இப்படிச் சொன்னவுடனே, ரத்தம் கக்கி கீழே விழுந்தார் இதற்குக் காரணம் தன் எண்ணங்களே என்பதை அறிந்த விமலமித்ரா உடனே தன் சீடர்களிடம் அதைப் பகிர்ந்துகொண்டதுடன் தான் எழுதத்தொடங்கியதையும் கிழித்து எறிந்தார். பின்னர் தரையில் பெரும் பள்ளம் தோன்றி அவரது உடல் மறைந்தது.

விமலமித்ராவுக்கும் அங்கே பெரிய ஸ்தூபி ஒன்றை அமைத்திருந்தார்கள். இவற்றை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அங்கே மரத்தை ஒன்றில் அமைதியே உருவாக அமர்ந்திருந்தார் முதிய பிக்கு ஒருவர். நான் அவரை எளிதாகக் கடந்து சென்றேன். ஆனால் யுவான், அவரைக் கண்டதும் தரையில் விழுந்து வணங்கினார். அதனால் எங்கள் குழுவினர் அனைவரும் நின்றோம். அவர் யாரென்று எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ‘‘மித்ரசேனர்’’ என்று யுவான் மரியாதையுடன் உச்சரிக்க, நாங்கள் அத்துணை பேரும் வேரற்ற மரங்கள் போல விழுந்து வணங்கினோம்.

பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com