கனா மீது வருபவன் - 12

அப்புவின் இருளோட்டம் ராசாவின் மனம் ஒரு தீர்மானத்திற்குள் திடப்படுவதற்கு முன் நிகழ்ந்துவிட்டது. தயாராக இருந்தும் தவறிழைக்கப்பட்டுவிட்டதாக மனது அடைந்த குற்றவுணர்வு வேறு அவனது தன்னியல்பை புறந்தள்ளியது. அவன் அப்பு ஓடிய திசையை நோக்கியே ஓடினான். அப்புவின் ஓட்டத்தின் வேகத்தினைக் கடந்து அப்புவினை தன்னால் அடைந்துவிட முடியும் என்ற நம்பிக்கையை தக்க வைத்துக்கொண்டு ஓடினான்.

அப்பு மணிமேடையை வந்து அடைந்ததும் அவனுக்கு மூச்சு இறைத்தது. கால் தள்ளிவிட்டது. வயிற்றிலோ, நெஞ்சிலோ இடைப்பட்ட ஏதோ ஒருஇடத்திலோ வலிப்பது போல் இருந்தது. அவன் வடசேரி சாலையின் போக்கிற்கு திரும்பினான். இதை கணித்து வைத்திருந்த ராசாவும் அதே சாலைக்குத் திரும்புகிற எண்ணத்தில் துரத்தினான். இருள் மட்டுமே உதவக்கூடும் என அப்பு நம்பியிருந்த பட்சத்தில் ரோடு முழுவதும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன என்பதால் அவன் நகராட்சி அலுவலகத்தின் பாதையை தேர்ந்தெடுத்தான். ராசா ஒரு முன்யோசனையாக குனிந்து ஒரு நயங்கல்லினை எடுத்து வைத்துக் கொண்டான். வழியில் யாரையோ கண்டுவிட்ட அப்பு அவரை சந்திக்கும் சாக்கில் திரும்பி சாலையைப் பார்த்தான். ராசா கல்லினை எடுப்பது தெரிந்ததும் ஆத்திரம் மண்டைக்குள் பாய்ந்தது. அப்பு முன் நின்றவரிடம் ஏதோ சொன்னான். வாட்டமும் வயிறுமாக இருளின் கரையில் வந்த அந்த நபர் ராசாவின் முன் வந்து “யாருல நீ?”என்றார் தன் அச்சுறுத்தும் குரலில்.

வெளிச்சம் பட்டதும் அது அசோகன் அண்ணன் என ராசாவுக்குத் தெரிந்தது. அவன் நெஞ்சு படபடக்க அசோகனின் முன் நின்றான்.

நகரின் சிறப்பு வாய்ந்த சண்டைக்காரர்கள் பற்றியப் பட்டியல் குறிப்புகளை யாரேனும் எழுதத் தலைப்பட்டால் அசோகனின் பெயர் அலுங்காது குலுங்காது இடம்பெறுவது சர்வ நிச்சயம்.

அடிநுணுக்கமும், பிடிநுட்பமும் கொண்ட பெருமை வாய்ந்த சண்டைக்காரன். யாராவது  அடித்து வாங்கியாக வேண்டிய ஒரு நிலை வந்தால் கையால் காலால் வாங்குவதில்லை. முழுவதும் மண்டையால் தான். அதே போல் தான் கொடுப்பதிலும் தன் கை கால்களை பயன்படுத்துவது குறைவே. பெருந்தலைக்காரன்.

தலை பார்ப்பதற்கு மொந்தன் காய் மாதிரி பிதுங்கியிருப்பது போல காணப்பட்டாலும் எதிரிகள் அசோகனின் கைகளுக்குள் சிக்குண்டால் அகப்படுபவரின் தலையின் நிலை விவரணைகளைத் தாண்டி பரிதாபத்திற்கு உரியது. அசோகன் தன் மண்டையை தேங்காய் உடைக்கும் பாறைக்கோலாய் கருதிக் கொள்ளும் தருணம் அது. அதற்கென தனி சாகசம் வேண்டும். அதன் முத்திரைகளை மறுநாளில் வாங்கியவர்களின் தலை மீது காண நேரிடலாம். வாகன பயிற்சிக்கூடங்களில் காணப்படுவது போன்ற பல்வேறு குறிகள் தலையின் பல இடங்களிலும் குறுக்கும் நெடுக்குமாக ஒட்டப்பட்டிருக்கும். சில தலைகளைச் சுற்றி முழுமையற்ற வெள்ளை பர்தாக்கள் கூட காணப்படும்.

அசோகனுக்கு ராசாவை இன்னார் என்று புரிந்தது.

“எதுக்கு அவனப் போயி தொரத்துதே?”

என்று கேட்டவனின் பார்வையில் நகராட்சியின் மங்கிய வெளிச்சத்தில் கூட ராசாவின் மேலுதட்டு வீக்கம் தெரிந்தது.

“என்னலே கல்கோனா மாதிரி வீங்கிருக்கு?” என்று அசோகன் கேட்க, “குத்திட்டாண்ணே....” என்றான் ராசா. அசோகன் திரும்பினான். அப்பு தெறித்து விட்டான்.

“சல்லி மாதிரி இருந்துட்டு வேலையக் காட்டிட்டானா? ஜ்ஜெண்டக்கு பய! பாத்துலே..அவனுக்கு அண்ணமாரு செரி கெடையாது..”என்றான்.

ராசா அங்கிருந்து நகரும்போது கல்லினைப் பத்திரப்படுத்திக் கொண்டான். அசோகனுக்கு சற்று புறுபுறுப்பாக இருந்தது. சற்று அசந்த நேரத்தில் நம்மையே அடகு வைத்துவிட்டுப் போய்விட்டானே என்று.

வெகு நேரம் சுற்றியும் அப்புவினைக் காண இயலாத ஆற்றாமையில் ராசா தெருவிற்கே மீண்டும் வந்தான். மட்டுப்படுத்த இயலாத கோபத்தின் துணை கொண்டு அவன் அப்புவின் வீட்டை குறிவைத்து நடந்தான்.

வீக்கம் அழுத்தியதில் மேலுதடு உறுத்தியது. விரலினைக் கொண்டு தொடப்போகையில் தன்னிச்சையாக உதடு விலகப்போக வலி இழுத்துக் கொண்டு பரவியது. வாயெல்லாம் வேதனித்தது. வீங்கியப்பகுதி உடம்பை விட்டு அந்நியமாகிப் போனது போன்ற உணர்வு வருத்தமாய் நொம்பரப்படுத்தியது. ராசா நிக்கர் பாக்கெட்டினுள் பதுங்கியிருந்த கல்லினை தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

அப்புவின் வீட்டின் முன் வந்து நின்றபோது அப்புவின் அம்மா கமலம் தனது நாசித்துவாரங்களால் பட்டணம் மூக்குப் பொடியினை வைத்து இழுத்து உச்சிக்கு ஏற்றிக் கொண்டிருந்தாள்..

“அப்பு இருக்கானாக்கா?”

ராசாக் கேட்டதும் அவள் ராசாவைப் பார்த்தவிதம் சற்று கலவரமான அறிகுறியாகப் பட்டது. வீக்கம் துலக்கமாகத் தெரிய அதனை விசாரிக்க மனமற்று

“யாம்போ?”என்று கேட்டாள்.

“அவனப் பாக்கணும்.”என்றான் ராசா.

“அவன யாம்போத் தேடுதே?” என்று அவள் மீண்டும் கேட்கவும் உள்ளிருந்து ஒரு கரகரத்தக் குரல்,

”யாருலே இந்த நேரத்துல அப்புவத் தேடி வாரது?” என்று கேட்டது.

அப்புவின் அப்பாவாக இருக்கக்கூடும்.

“அவன் நேரமே ஓறங்கிட்டாம்போ” என்றாள் அப்புவின் அம்மா.

அப்புவைத் தவறவிட்ட அவமனநிலையில் ராசாத் திரும்பினான்.

முடுக்கின் முனைக்கு வருகையில் அப்புவின் இரண்டாவது அண்ணன் பயில்வான் சபாவை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

அப்பு இடம் கொடுத்து விட்டு நகர சபா அவனை பார்த்தபடியே சென்றான்.

நடையை விட வேகமாக முந்திக்கொண்டு வந்தது அழுகை. ராசா அதற்கு முட்டுக் கொடுக்க முயற்சித்தான். அழுகையைத் தடுக்க முனைகையில் உதட்டினை மடக்கிகொள்ள நேர அது வலியாக சிரமப்படுத்தியது. அதற்குள் வேறு வழி கண்டு அழுகை கண்ணீராய் திரண்டு வந்தது. தெருவிளக்குகளும் கடை விளக்குகளும் நீர்த்துளியின் பின்னே மங்கலாய் கனன்றன.

அவன் செக்கடி மாடன் இருந்த திசையினை நோக்கினான். மறைத்து நின்ற வீடுகளேத் தெரிந்தன. எனினும் பொதுவானம் நட்சத்திரங்களைக் கொண்டு அவனை சாந்தப்படுத்தியது. இமைகளில் துளிர்த்த நேரம் நாசியும் ஈரப்பத்ததினை உணர்த்த புறங்கையினால் துடைத்துக் கொண்டான்.

வீட்டிற்குப் போக விரும்பாமல் அவன் செல்லம் ஆச்சியின் வீட்டின் படித்திண்ணை மீது எம்பி ஏறினான். நிக்கர் பாக்கெட்டினுள் கிடந்த கல் திண்ணை மீது இடித்தது.

“பாட்டு பொஸ்தம்......பாட்டு பொஸ்தம்......

மதுரையை மீட்ட .சுந்ந்ந்தர பாண்டியன்..... பாட்டு பொஸ்தம்...

பதினாறு வயதினிலே ......பாட்டு பொஸ்தம்.....’’

என இருளினை மேவிக் கொண்டு சினிமாப்பாடல் புத்தகத்தினை விற்பவன் ஒரு கையில் புத்தகப் பையினை வைத்துக் கொண்டு மறுகையில் புத்தகக் கட்டுகளை சீட்டுக் கட்டுகளை விரிப்பது போல உதறி விரித்துக் கொண்டு கூவியபடியே நடந்தான்.

ஒரு திண்ணைக்கும் மறு வீட்டு திண்ணைக்கும் நடுவாக தலையணை போல் அடை கொடுக்கப்பட்டிருந்த திண்டின் மீது தலையை சாய்த்துக் கொண்டு கால்களை நீட்டினான் ராசா. காற்று இலகுவாக வீசியது. அவன் தலையினைக் கோதி பிராதுக் கேட்டு வந்தது. அவன் முகந்திருப்பிக் கொண்டான்.

ஒருபோதும் வினைகளை வலியச் சென்று இழுக்கவிரும்பாத தனக்கு விரோதம் கொள்ளத்தக்க சம்பவங்களை வடிவமைப்பது யார் என கோர்வையற்ற எண்ணங்களால் சிந்தித்தான் ராசா.

மழையின் தூதுவன் போல முன்கூட்டி வானில் வந்த மின்னல் ஒழுகிவிட்டுச் சென்றது.

வீட்டின் ஞாபகம் வந்ததும் எழுந்து கொள்ளும் விருப்பம் இல்லாது கிடந்த அவனை ஒரு பறவையின் முறிவொலி போன்ற அச்சம் தரத்தக்க சத்தம் திடுக்கிடச் செய்தது. ஒலி ஒன்றாய் இல்லாமல் பலவாய்ப் பிரிந்தும் திரிந்தும் கேட்டது. ஒவ்வொன்றும் ஒரு பறவையின் குரலின் ஒலி. ஒவ்வொரு ஒலியிலும் ஒவ்வொரு விதமான வலி. மிதமானதும், மீளமுடியாததும், மீளவேமுடியாததும், மீளதவிப்பதும், மீளவேண்டியதுமான வலிகள்.

எல்லா வலிக் குரல்களிலும் ஒவ்வொரு விதமான மரண அறிவிப்பு.

“அது அப்படித்தான். ஒவ்வொரு சாவுக்கும் ஒரு சத்தம் இருக்கும்”

யாரோ தலைமாட்டிலிருந்து பேசினார்கள். மூட்டையைக் கட்டிக் கொண்டு துணி விற்க வந்தவர்களாக இருக்கக்கூடும்.

“சாவும்போது எப்படி சத்தம் கேக்கும்?”

ஒரு சிறுவன் மறுத்துக் கேட்டான்.

“கேக்கறவனுக்குக் கேக்கும். முன்னோர் கூப்பிடும்போது யாராலேயும் தடுக்க முடியாது.’’

முதலில் பேசியவரின் குரல் பதில் கொடுத்தது.

“முன்னோருன்னா?”

சிறுவன் மீண்டும் மறித்தான்.

“சாவக் கொண்டு வாரவங்க..”

“அவங்களப் பாக்க முடியாதா?”

“ஒனக்கு அது எதுக்கு?. இப்ப ஒன் சோலியப் பாரு”

மரண நெருக்கத்தின் அஞ்சுதல் போலவே மீண்டும் அக்குரல் கேட்டது.

“இப்போ கேக்குதுல்லா” சிறுவன் கேட்டான்.

அவன் அவ்வொலியைக் கூர்ந்து கவனித்தான்.

அப்போது மறுத்துப் பேசிய சிறுவனின் குரல் தனக்கு மீண்டும் பரிச்சயப்பட்ட குரலாகத்  தோன்றியது.

அவன் மேலும் அக்குரலினை அறிய தலைப்பட்டபோது தான் அவனுக்கு அப்படித் தோன்றியது.

அது தன்குரல்! அவன் குரலே தான்!

அவன் உடனே தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்க்க முயன்றான்.

தலைப்பாகையுடன் ஒரு கால் மடக்கிப் போட்டுக் கொண்டு ஒருவர் மறுதிண்ணையில் உட்கார்ந்திருந்தார். அவனைப் பார்த்து புன்னகைத்தார்.

நெஞ்சு பழக்கமில்லாத வேகத்தில் துடித்தது. துடித்த துடியின் அதிர்வில் உடம்புத் தூக்கிப்போட மிரண்டு போய் எழுந்து பார்த்தான்.

திண்ணைக் காலியாகக் கிடந்தது.

சுற்றிலும் கவனித்தான். யாருமே இல்லை.

எனினும் முன்பு கேட்ட அதே ஒலி கேவல் போல இப்போதும் தொடர்ந்து கேட்டது. அழுகையின் பெருந்துயரை வெளிப்படுத்தும் செம்மையற்ற அந்தக் கேவல் கேட்ட மாத்திரத்திலேயே நசுங்கியது போல் திரிந்து ஒலித்தது.

அவனுக்குத் துல்லியமாகத் தெரிந்தது. அது தாஜ் அக்காவின் குரல்.

தாஜ் அக்காவின் குரல் நெறிபடும் நிலையில் விதம் மாறிக்கொண்டு வருகிறது.

அடிவயிற்றில் யாரோ கனலை வைத்தது போல எரிந்தது. அவன் திண்ணையை விட்டு குதித்து தாஜூவின் வீடு நோக்கிச் சென்றான். காதினுள் ஏதோ வைத்து அடைத்து வைத்தாற்போல இடைஞ்சலாக தோன்றியது.

தாஜூவின் வீட்டுக்கதவு சாத்தப்பட்டுக் கிடந்தது.

தட்டிப் பார்க்க தயக்கம் தடையாக இருந்தது. வீட்டினுள் மேலும் பற்பல குரல்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தன. தற்போது தாஜூவின் அழுகை விசும்பலாக மாறிக் கொண்டிருந்தது.

ராசா நகர மனமின்றி பதட்டத்துடன் அவ்விடத்திலேயே நின்று கொண்டிருந்தான். குரல் பரிமாற்றங்களிடையே தாஜூவின் அம்மா கதவினைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

ராசாவை அங்கு கண்டதில் சற்று திகைத்துப் போன அவள் எகிறிக் கொண்டு வந்த வெற்றிலை எச்சிலை நடையோடையில் துப்பினாள்.

“ஏம்லே இங்க நிக்கே?”

”ஒரு மாதிரி சத்தம் கேட்டது உம்மா”

“என்ன சத்தம்?”

“தாஜூக்கா அழ மாதிரி உம்மா”

உம்மாவின் வெள்ளை முகத்தின் ஒரு துளி ரத்தம் சுண்டி சிதறி சிவந்து விட்டுச் சென்றது.

வழமையான அவள் கண்களின் கூர்ந்த ஒளி நனைந்திருந்தது.

“தாஜூக்காவும் அழல

பேரிக்காவும் அழல

வூட்டுக்குப் போயி படுல..”

என்றாள் தாஜூவின்  உம்மா.

அவன் வேதனைச் சுமையால் நகர்ந்தான்.

கால்களை பின்வழியே யாரோ இழுத்தாற்போல் இருந்தது.

தன் வீடு இருக்கும் திசைக்கு வந்ததும் நின்றான்.

‘’நடு சாமத்துல யாருமே தெருவுக்குள்ள வரக்கூடாதுல்லா..அம்மன் காவலுக்கு வேண்டி மாடம்மாரு நடமாடுவாவோ..” யாரோ எப்போதோ சொன்னது வெறும் தெருவின் மீது கவிந்து கிடந்த பாதி இருளைக்கொண்டு பயமுறுத்தியது.

ஏனோ இப்போது பார்த்து அழுகை வந்தது. உடல் உள்ளுக்குள் கேவியது. ஒரே நேரத்தில் இறைவன் பலபேரை அழ வைத்துக் கொண்டிருக்கிறான். இது அவனது ஒரு வேலையாகவே இருக்கக்கூடும் என்று ஒரு எண்ணம் அவனது அழுகையை மேலும் பலப்படுத்தியது.

அதேநேரம் தெருவின் நடுவே உடலை உதறிக்கொண்டு நுழைந்து வந்தது டாமி.

எங்கும் திரும்பிப் பார்க்காத அதன் நடை தாஜூவின் வீடு இருக்கும் சந்து வந்ததும் தடைபட்டது. வழக்கமாக தாஜ் சாய்ந்து நிற்கும் சுவற்றினை ஏறிட்டுப் பார்த்தது. பிறகு முன்னோக்கி நடந்தது. ராசாவை கடக்கவிருந்த நேரத்தில் சட்டென்று திரும்பி ஓடி வந்து அவனை மோதிக் கொண்டு நின்றது. தனது வாலை ராட்டினம் போல சுழற்றியது.

அந்நேரத்தில் நினைவின் பிசகாக தான் நினைத்துக் கொண்டது உண்மையில் இது போன்றதாக இருக்குமோ என ராசா நினைத்தான்.

செல்லம் ஆச்சியின் திண்ணையில் தான் படுத்துக் கிடந்தபோது தன்  குரலுக்கு மேலே இருந்த பெரியவரிடம் மறித்து உரையாடியது தனது குரலினைக் கொண்டு இந்த டாமியாக இருக்குமோ என்று. டாமி வேறு தலையாட்டியது. ராசாவுக்கு தலை சுற்றியது. பாக்கெட்டில் கிடந்தக் கல்லின் கூர்மை உடம்பை உரசியது.

(கனா தொடரும்)

(அய்யப்பன் மகாராஜன் நாகர் கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர்  தன் இளமைக்கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத்தொடர் இது.

logo
Andhimazhai
www.andhimazhai.com