‘ஸீரோ மியூசிக் ஃபெஸ்டிவல்'
‘ஸீரோ மியூசிக் ஃபெஸ்டிவல்'

தமிழகத்தில் கலை விழாக்களே ஏன் இல்லை?

திசையாற்றுப்படை  - 11

அருணாச்சல் பிரதேசத்திலுள்ள ‘ஸீரோ' (Ziro) எனும் சிறு நகரம் இரண்டு விசயங்களுக்காக நினைவு கூரப்படுகிறது. ஒன்று அந்த ஊரில் வசிக்கும் ‘அப்பதானி'  எனும் பழங்குடி சமூகத்திற்காக. இரண்டாவது கடந்த பத்து ஆண்டுகளில் ‘ஸீரோ மியூசிக் ஃபெஸ்டிவல்' எனும் பெயரில் பரவலாக அறியப்பட்டுள்ள இசைத் திருவிழா மூலமாக. ஸீரோ என்ற பெயர் எப்படி வந்தது என்று உள்ளூர்காரர்கள் சிலரிடம் விசாரித்தபோது அவர்களுக்கு இப்படியான கேள்விக்கு என்ன அவசியம் என்பதுபோல பார்த்தனர். ஏதாவதொரு காரணம் இருந்துதானே ஆகவேண்டும்.

ஊர்ப்பெயராய்வுகள் செய்யக்கூடிய ஒருவரை அங்கிருந்த நான்கு நாட்களில் சந்திக்க வாய்க்கவில்லை. ஸீரோ நகருக்குச் செல்ல அஸ்ஸாம் தலைநகரான கௌகாத்தியிலிருந்து அருணாச்சல் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு புகைரதத்தில் ஓர் இரவு பயணிக்கவேண்டும். ஒரு மாநில தலைநகரின் புகைரத நிலயத்திற்கான எந்த லட்சணமும் இல்லாத அந்த ரயில்நிலையத்திலிருந்து சுமாராக இரண்டுமணி நேரம் மலைப்பாதையில் ‘முள்ளும் மலரும்' சரத்பாபு போல் 'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்' பாடிக்கொண்டே பயணித்தால்  ஸீரோவைச் சென்றடையலாம். மலைப் பயணம் ஒத்துக்கொள்ளாத என்னைப் போன்றவராக  இருந்தால் தலைச் சுற்றலும் வாந்தியுமாகப்  போய்ச்சேரலாம். நானும் என் மகளும் வாந்தி எடுத்துக்கொண்டே போய்ச் சேர்ந்தோம். என் துணைவியாருக்கு எந்த அசௌகரியமும் ஏற்படவில்லை. எந்த மலையிலும் ஏறி இறங்கக்கூடியவர்களல்லவா மனைவிகள்! 

ஸீரோ வழக்கமான ஒரு சுற்றுலாத்தலம் அல்ல. ஆனாலும் அந்த இரவு ரயில் வண்டி பயணிகளால் நிரம்பி வழிந்தது. பெரும்பாலும் இளைஞர்கள். அதிலும் பெரிய முதுகுப் பை. மூக்கில் வளையமிட்ட சிக்கனமான ஆடையணிந்த யுவதிகள். கைகளிலும் பின்னங்கழுத்துகளிலும் விதவிதமான டாட்டு (பச்சை) வரைந்துகொண்டவர்கள். பால் வேறுபாடு இல்லாமல் அரைக்கால் டவுசர்களில் எதைப்பற்றியும் கவலையற்ற முகபாவனை கொண்டவர்கள். ஜோடிகளாலும் நண்பர்குழாம்களாலும் உற்சாகம் வழிந்தோடியது.

பத்து ஆண்டுகளாக  நடைபெற்றுவரும் ‘ஸீரோ இசைவிழாவிற்குச் செல்லும் உற்சாகமே அது. இசைவிழா நடக்குமிடம் ஓர் அழகிய பள்ளத்தாக்கு. புல்வெளிகளால் ஆன மேடும் பள்ளமுமான ஒரு மேய்ச்சல்வெளி. அந்நகரத்தின் பெரும் ஒன்றுகூடல்கள் அங்கு நிகழுமென்று ஊகிக்க இடமுண்டு. செப்டம்பர் மாத இறுதிவாரத்தில் ஐந்து நாட்கள் நடக்கிறது இந்த இசைவிழா. பெரும் மழைபெய்யும் வாய்ப்புகள் குறைந்த இதமான குளிரும் எரிக்காத வெயிலுமான பொருத்தமான  காலநிலை.

வடகிழக்கு மாநிலங்களுக்கே உரித்தான பசுமையும் அதற்கு முரணான வளர்ச்சியின்மையையும் கொண்ட நகரம். ஒரு ஊரில் மக்கள் சாப்பிடும் உணவின் தன்மையையும் தரத்தையும் வைத்தே அந்த சமூகத்தின் வளமையை அளவிட்டுவிடமுடியுமல்லவா? ஒரு மதிய உணவிற்காக உணவு விடுதிக்குப் போனோம். அடிப்படை உணவு அரிசிதான். கொஞ்சமாக அரிசி சோறும் பருப்பு எனும்பெயரில் பருப்புத்தண்ணீரும் பெயருக்கு கொஞ்சம் காய்களுமாக. பன்றி இறைச்சி அல்லது கோழி அல்லது மாட்டிறைச்சி. மீனுக்கும் பஞ்சமில்லை. ஓரிடத்தில் நாய் ஒன்று தீயில் வாட்டப்பட்டு வெட்டப்படுவதற்குக் காத்திருந்ததையும் பார்க்க முடிந்தது.  ஆனாலும் நாம்  நம் உணவகங்களில் மதிய உணவென்ற பெயரில் மூன்று நான்கு கூட்டு பொறியல்கள், பருப்பு-நெய், சாம்பார், வத்தக்குழம்பு அல்லது மோர்க்குழம்பு, ரசம், தயிர் அல்லது மோர், அப்பளம் கடைசியாக பாயாசம். முத்தாய்ப்பாக ஒரு வாழைப்பழம் அல்லது பீடா. இத்தனையையும் முடித்துவிட்டு இன்னிக்கு ஒரு சிம்பிள் வெஜ் சாப்பாடுதான் என்று கூசாமல் சொல்லும் மாநிலத்திலிருந்து வந்தவனுக்கு இந்த உணவின் எளிமை திகைப்பாக இருந்தது.  வீடுகளிலும்கூட இத்தனை விரிவான பட்டியல் இல்லையென்றாலும் நம் சராசரி மதிய உணவை இங்குள்ள உணவோடு ஒப்பிடவே முடியாது.

அருணாச்சல் பிரதேசத்தில் 30% கிறித்தவர்களும் 29% இந்துக்கள் 2விழுக்காட்டிற்கும் குறைவாக இஸ்லாமியர்கள் மற்றும் மிகக்குறைந்தளவில் சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்களும் வாழும் மாநிலம். ஆட்சி மொழி ஆங்கிலம். இங்கு 26 பழங்குடி சமூகங்களும் இச்சமூகங்களை ஒட்டிய கிளைச் சமூகங்கள் பலவும் உண்டு என்கிறார்கள். இங்கிருக்கும் பழங்குடி சமூகங்களில் அப்பதானி எனும் சமூகப் பெண்கள், அவர்களுடைய மூக்கு அலங்காரத்திற்காக பரவலாக அறியப்பட்டவர்கள். மூக்குத்தியை பெரிய நெற்றிப்பொட்டளவுக்கு பெரியதாக்கி மூக்கின் அமைப்பையே மாற்றியிருப்பார்கள்.

ஒருவகையில் தங்களைத் தாங்களே அலங்கோலப் படுத்திக்கொள்வதைப் போன்றதுதான். இந்த விசித் திரத்திற்குப் பின்னாலும் ஒரு சிறிய கதை உண்டு. அந்தக்காலத்தில் அப்பதானிப் பெண்களை மற்ற பழங்குடி இளைஞர்கள் கடத்திசென்று பாலியல் துன்புறுத்தல்கள் / திருமணங்களில் ஈடுபட்டதாகவும், அதைத் தவிர்க்க இந்த வழிமுறையை உருவாக்கியதாகவும் அதிகாரபூர்வமில்லாத தகவலர்களின் மூலம் அறிந்து கொண்டோம். சிறிய உருவத்தில் இன்றும் அந்த அலங்காரத்தோடு இருக்கும் வயதான மூதாட்டிகளைப் பார்க்கமுடிந்தது. நம்மூரில் காதுவளர்த்து\ தண்டட்டி போட்டது பழங்கதையாய் போனதுபோன்று இந்த மூதாட்டிகள் மூக்கலங்காரத்தின் கடைசித் தலைமுறையாக இருப்பார்கள்.

சீனா, மியான்மர் எனப்படும் அந்நாளைய பர்மா, பூட்டான் ஆகிய நாடுகளின் எல்லைகளோடு இணைவதால் இந்தியா கூடுதல் கவனத்துடன் இருப்பதைப் பார்க்கலாம். முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநிலம் அருணாச்சல்பிரதேசம். எங்கு நோக்கினும் ராணுவ வீரர்கள். தடுப்பரண்கள். இந்தியராக இருந்தாலும் இணையவழியில் ஒரு சிறப்பு அனுமதிபெற்ற பின்னரே அனுமதிக்கப்படுவோம். சீனா தன் வரைபடத்தில் அருணாச்சலபிரதேசத்தையும் இணைத்து வைத்துக் கொண்டு முரண்டுபிடிப்பதால் இத்தகைய ராணுவ கெடுபிடிகள் என்கிறார்கள். சுதந்திரமாக நீங்கள் முடிவெடுக்கும் சூழல் இருந்தால் நீங்கள் எந்த நாட்டைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று எங்களுக்கு வாடகைக் காரோட்டிய ஒருவரிடம் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே. இந்தியாதான் என்றார். மகிழ்ச்சியாக இருந்தது. பேச்சுவாக்கில் பின்னர் தெரிந்தது. அவர் உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்தவர். இங்கு வந்து தொழில் செய்பவர் என்று. பலசரக்குக் கடை. சொந்தமாக கார்களை வாடகைக்கு விடுபவர். மண்ணின் மைந்தர்களின் மனவோட்டம் என்னவென்று தெரியவில்லை.

மதுக்கடைகள் அதிகம் தென்பட்டன. எங்கள் காரோட்டி சொன்னார். மது விலை மலிவென்று. தமிழகத்தில் 150 ரூபாய்க்கு விற்கப்படும் பியர் அங்கு 60 ரூபாய்தான். ஆனாலும் கடைகளில் சொல்லிக்கொள்ளும்படியான கூட்டமோ, தள்ளாடி நடக்கும் விழுந்து கிடக்கும் யாரையும் பார்க்கவில்லை. கிவி பழங்கள் வீட்டுத்தோட்டங்களில் புடலங்காய் மாதிரி காய்த்துத் தொங்குகின்றன. கிவியிலிருந்தும் இன்னபிற பழங்களிலிருந்தும் தயாரிக்கும் உள்ளூர் ஒயினும் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் ரைஸ் பியரும் தராளமாகக் கிடைக்கக் கூடியவை. வீடுகளில் தயாரிக்கக் கூடிய பானங்கள்.

சரி. இசை விழாவிற்கு வருவோம். பகல் 11மணியிலிருந்து நள்ளிரவு வரை இசை மழைதான்.இந்த விழாவில் என்னைக்  மிகவும் கவர்ந்த விசயம், ஒட்டு மொத்த விழாவையும் ஒரு திட்டவட்டமான கருத்தியல் பின்புலத்தோடு வடிவமைத்திருக்கிறார்கள் என்பதுதான்.

இந்த இசைவிழாவின் சிறப்பு சுயாதீன இசைக் கலைஞர்கள் மற்றும் உள்ளூர் பாரம்பரிய இசைக்கலைஞர்களை ஊக்குவிக்குவிப்பதாக இருப்பதுதான். ஆதலால் வடகிழக்கு மாநில இசைக் கலைஞர்கள், இந்திய மற்றும் உலகளவிலான மாற்றுத் தளத்தில் செயல்படும் இசைக் கலைஞர்களுக்கான மேடையாக இதை உருவாக்கியிருக்கிறார்கள். சுற்றுச்சூழலைப் பேணுகின்ற , உள்ளூர் வாழ்வாதாரங்களை ஊக்குவிப்பதாக இந்த விழா இருக்கிறது. பார்வையாளர்கள் அமர்வதற்குக்கூட பிளாஸ்டிக் நாற்காலிகள் இல்லை. அரங்கில் எங்கும் பிளாஸ்டிக் குவளைகள், பைகளைக் கூட பார்க்கமுடியவில்லை. பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக காகிதக் குவளைகள், மூங்கில் குவளைகள். அரங்க அமைப்பு மற்றுமான அலங்காரங்கள் அனைத்தும் மூங்கிலால் உருப்பெற்றிருந்தன.

ஐந்து நாட்களுக்கான கட்டணம் ஏறத்தாழ பத்தாயிரம் ரூபாய்கள். அங்கு வருபவர்களைப் பார்க்கும் போது கட்டணத்தைப் பற்றிக் கவலைப் படுகிறவர்களாகத் தெரியவில்லை. வளாகத்திற்குள் மதுவைத் தவிர பிற போதை வஸ்துகள் நுழைந்துவிடாமல் இருக்க பெருமுயற்சி எடுத்துக்கொள்கிறார்கள்.  பிரதான நன்கொடையாளர் ‘சிக்னச்சர்' பிராண்ட் விஸ்கி என்பதால் அவர்களுடைய மதுபானமும் உள்ளூர் ‘ரைஸ் பியர்' மற்றும் ஒயின் வகைகளும் கிடைக்கும். எல்லாம் இருந்தும் எவ்வித ரசாபாசங்களும் இல்லை என்பது மட்டுமல்லாமல் கலைஞர்களை மதிக்கின்ற பொதுவெளியில் கண்ணியமாக நடந்து கொள்கிற  நாகரீகமான ரசிகர்களாக இருப்பதையும் குறிப்பிட்டாகவேண்டும். விழாவின் இறுதிநாளில்  பழங்குடிப் பாரம்பரிய உடையணிந்த 900 பெண்கள் ஆடிய நடனம் குறிப்பிடத்தக்கது. சிக்கலில்லாத சிறிய அசைவுகளுடன் நகர்ந்துகொண்டே ஆடுகின்ற அந்த நடனம் ஒரு சடங்குத் தன்மையுடன் இருந்தது.

முடிந்து ஊர்திரும்பும் போது எனக்கு எழுந்த பிரதானமான கேள்வி. தமிழகத்தில் ஏன் இத்தகைய விழாக்கள் நடப்பதில்லை.  அதிலும் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக கலை உலகத்தைச் சார்ந்திருப்போர் ஆளும் மாநிலமான தமிழகத்தில் பெயர் சொல்லக்கூடிய, நம் மாநிலத்திற்கு வெளியே உள்ளவர்களை ஈர்க்கக் கூடிய எந்த விழாக்களும் இல்லை. மார்கழியில் சென்னையில் நடக்கும் கர்னாடக இசைவிழாவைத் தவிர சமகால கலை சார்ந்த தேர்ந்த திட்டமிடலுடன் நடக்கக்கூடிய எந்த விழாக்களும் இல்லை. சமீபத்தில் தமிழக அரசு முன்னெடுத்துள்ள இலக்கியவிழாக்களிலும் கூட ஒரு தொழில்முறை திட்டமிடலைக் காணமுடியவில்லை. ஒரு வேளை சினிமா தவிர்த்து வேறெந்த கலைகளையும் ஆதரித்து என்னவாகப் போகிறது என்று ஆட்சியாளர்கள் கருதுகிறார்களா? நம் அண்டை மாநிலமான கேரளாவில் ஆண்டுக்கு மூன்று முக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார்கள்.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் உலகத் திரைப்படவிழா மற்றும் இலக்கிய விழா, திருச்சூரில் நடைபெறும் உலக நாடகவிழா, இவை தவிர இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கொச்சி ஆர்ட் பினாலே எனும் பிரம்மாண்ட நிகழ்வு. சுற்றுலாவோடு கேரளாவின் அடையாளங்களாக இந்த விழாக்கள் மாறியிருக்கின்றன. மற்ற மாநிலத்துக்காரர்களைக் கவர்வது ஒருபுறமிருக்க, இந்த விழாக்கள் அங்கு வாழும், வளரும் இளைய தலைமுறையினருக்கு எந்தவிதத்தில் உதவுகிறது என்பது மிக முக்கியமானது. கலைகளை ரசிப்பது, புதிய கலைஞர்களை சந்திப்பது, பொதுவெளியில் பால் பாகுபாடின்றி புழங்குவது ஆகிய அனுபவங்கள் அவர்களை கலையுணர்வு மிக்கவர்களாகவும் மேம்பட்ட குடிமக்களாகவும் மாற்றியுள்ளதைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தின் அடையாளமாக முன்மொழியக்கூடிய ஒரு கலை சார்ந்த நிகழ்வை நாம் யோசிக்கவேண்டியது அவசியம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com