திரை இசைத் திலகம்” கே.வி. மகாதேவன் -25

திரை இசைத் திலகம்” கே.வி. மகாதேவன் -25

“பாச் நமக்கு கடவுளின் வார்த்தைகளைக் கொடுத்தார்.  மொசார்ட்  நமக்கு கடவுளின் சிரிப்பைக் கொடுத்தார்.  பீதோவன் நமக்கு கடவுளின் ஒளியைக் கொடுத்தார்.  கடவுள் நமக்கு வார்த்தைகள் இல்லாமல் பிரார்த்தனை செய்வதற்காக இசையைக் கொடுத்தார் " -  (ஜெர்மனியின் ஒபரா இசைக் களஞ்சியத்தில் இருந்து)

எம்.ஜி.ஆர் சொன்னதைக் கேட்டதும் திகைத்துப்போனார் சின்னப்பா தேவர்.

"ஏன் முருகா? நம்ம படங்களுக்கு மாமா போடுற பாட்டெல்லாம் நல்லாத்தானே வந்திருக்கு?" - என்று கேட்டார் அவர்.

"நான் இல்லைன்னு சொல்லலையே.  மாமாவோட திறமை யாருக்குமே வராதுதான்.  இருந்தாலும் இந்த தடவை புதுசா வேற யாரையாவது போடவைக்கலாமே என்றுதான் சொல்லவந்தேன். விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு இந்தப் படத்துலே வாய்ப்பு கொடுக்கலாமே" என்றார் எம்.ஜி.ஆர்.

"அதுவும் சரிதான்" என்று ஒப்புக்கொண்ட தேவர் தன் வழக்கப்படி மடி நிறைய பணத்தை எடுத்துக் கட்டிக்கொண்டு கிளம்பினார்.

எம்.எஸ். விஸ்வநாதனின் வீடு.

தன்னைத் தேடி வீட்டுக்கே வந்த சின்னப்பா தேவரை மலர்ச்சியுடன் வரவேற்றார் விஸ்வநாதன்.

"முருகா.  என்னோட அடுத்த படம் "வேட்டைக்காரன்".  எம்.ஜி.ஆர். ஹீரோ.  இந்தப் படத்துக்கு நீங்கதான் இசையமைச்சுக் கொடுக்கணும். இந்தாங்க பணம்.  இது அட்வான்ஸ் இல்லே.  சிங்கிள் பேமென்ட்.  பத்தலைன்னா சொல்லுங்க.  எவ்வளவு வேணுமோ வாங்கிக்குங்க"  - என்று மடியிலிருந்து பணத்தை அப்படியே முன்னாலிருந்த மேஜை மீது கொட்டினார் தேவர்.

திகைத்துப்போன எம்.எஸ்.வி. தனது சம்மதத்தைச் சொல்ல வாயெடுத்த வேளையில் அருகில் அமர்ந்துகொண்டு நடப்பதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த விஸ்வநாதனின் தாயார் சின்னப்பா தேவர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே "பளார்" என்று மகனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.

"நன்றி கெட்டவனே.  பழசை மறந்துட்டியா?  ஒரு காலத்துலே உடுத்தின துணிக்கு மாத்துத் துணிகூட இல்லாம சேலத்துக்கு போனப்போ ஒரு தகப்பனைப் போல உனக்கு அன்பு காட்டி செலவுக்கு பணமும் போட்டுக்க சட்டையும் கொடுத்து உதவின அந்த புண்ணியவான் வேலை செய்யுற இடத்துலே நீ அடி எடுத்துவைக்க நினைக்கலாமா?" என்று மகனைப் பார்த்து ஆவேசத்துடன் கூறியவர் அந்த வேகத்துடனேயே தேவரின் பக்கம் திரும்பி, "அய்யா.  தப்பா நெனைக்காதீங்க. நீங்க எத்தனை லட்சத்தை கொட்டிக் கொடுத்தாலும் என் மகன் உங்களுக்கு பாட்டுப் போட்டுக் கொடுக்க மாட்டான்.  உங்க வழக்கம் போல அய்யரை வச்சே பாட்டுப் போட்டுக்குங்க. அதுதான் நல்லது." என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி அவரை திருப்பி அனுப்பி வைத்தார் எம்.எஸ்.வி.யின் தாயார்.

அன்னையின் ஆணைக்கு அடிபணிந்த மகன் என்பதால் மெல்லிசை மன்னர் அந்தப் படத்துக்கு மட்டும் என்று அல்ல - தேவர் பிலிம்ஸ் தயாரித்த எந்தப் படத்துக்கும் இசை அமைக்கவே இல்லை என்பது வியக்க வைக்கும் தகவல்.

நேராக எம்.ஜி.ஆரிடம் வந்து நடந்ததைச் சொன்னார் தேவர்.

"சரி சரி.  மாமாவே இசை அமைக்கட்டும்." என்று சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.

"வேட்டைக்காரன்"  -  எம்.ஜி.ஆர். ரசிகர்களால் இன்றளவும் மறக்கமுடியாத படம்.  முதல் முதலாக சென்னை "சித்ரா" திரை அரங்கில் காடும் அதைச் சார்ந்த மரமும் போன்ற செட்டிங்கின் பின்னணியில் படத்தில் எம்.ஜி.ஆர். அணிந்திருந்த"காஸ்ட்யூமில்" அவரது கட்-அவுட்டை ரசிகர்களே அமைத்து படம் வெளிவந்த நாளை திருநாளாகக் கொண்டாடிய படம்.

மக்கள் திலகத்துடன் நடிகையர் திலகம் இணைந்த மூன்றாவது படம்.  இதற்குப் பிறகு அவர் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடிக்கவே இல்லை. இந்தப் படத்துக்காக கே.வி.மகாதேவன் அமைத்த பாடல்கள் எம்.ஜி.ஆரைப் புகழேணியின் உச்சத்துக்கே கொண்டு சென்றன.

"உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்"  - பாடல் ஒன்றே போதுமே. இன்றளவும் படம் எத்தனை முறை வெளியிட்டாலும் இந்தப் பாடலுக்கு உள்ள மவுசு குறைவதே இல்லையே!

கண்ணதாசனின் அமரத்துவம் பெற்ற வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மகாதேவன் அமைத்திருக்கும் பாடல்.

காட்சி அமைப்புப்படி பார்த்தால் இந்தப் பாடல் ஒரு ஈவ்-டீசிங் காட்சிக்கான பாடல் .  ஆனால் அதிலும் கூட நல்ல கருத்துக்களைப் புகுத்தி இருப்பது மக்கள் திலகத்தின் தனி ஸ்டைல்தான்.

மறக்கவே முடியாத சரண வரிகள்.

"பூமியில் நேராக வாழ்பவர் எல்லாரும் சாமிக்கு நிகரில்லையா.

பிறர் தேவை அறிந்துகொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா"

"மாபெரும் சபைதன்னில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்.

ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவன் என்று போற்றிப் புகழவேண்டும்"

பாடலில் சொல்லப்பட்ட கருத்துக்கள் மக்கள் மனதில் ஆணித்தரமாகப் பதியும் வண்ணம் மெட்டமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.

"மஞ்சள் முகமே வருக"  - டி.எம்.எஸ். - சுசீலா பாடும் டூயட்.

"மெதுவா மெதுவா தொடலாமா"  - டி.எம்.எஸ். - சுசீலா பாடும் இந்தப் பாடலின் இணைப்பிசையில் தான் என்ன விறுவிறுப்பு!

"கண்ணனுக்கெத்தனை கோவிலோ"  - பி.சுசீலா தனித்துப் பாடும் பாடல்.  சரண வரிகள் முதலில் விருத்தமாகவும் அதன் பிறகு பாடலாகவும் விரிகின்றன.

"கதாநாயகன் கதை சொன்னான்" - என்று மற்றொரு டூயட். 

"சீட்டுக்கட்டு ராஜா" - பாடலை நகைச்சுவை ஜோடி நாகேஷ் - மனோரமாவுக்காக ஏ.எல். ராகவன் - எல்.ஆர். ஈஸ்வரியைப் பாட வைத்தார் கே.வி. மகாதேவன்.   இன்றளவும் ஹீரோவுக்கான பாடல்களுக்கு நிகராக இந்தப் பாடலும் நிலைத்து நிற்கிறதே!

"வெள்ளிநிலா முற்றத்திலே" - டி.எம்.எஸ். தனித்துப்பாடும் ஒரு அருமையான மெலடி.

இசை வேட்டைதான் ஆடியிருக்கிறார் கே.வி.மகாதேவன்.

*******

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கதை வசனம் இயக்கத்தில் வெளிவந்த படம் "ஆயிரம் ரூபாய்".  ஜெமினி கணேசன், சாவித்திரி, எம்.ஆர்.ராதா, ராகினி ஆகியோர் முக்கிய வேடங்களை ஏற்று திறம்பட நடித்திருந்தனர்.

"மெட்ராஸ்" பாஷையில் புகுந்து விளயாடி இருந்தார் சாவித்திரி.

கண்ணதாசனின் பாடல்களும் மகாதேவனின் டியூனும் இன்றளவும் பாடல்களை நிலைத்திருக்க வைத்து விட்டன.

"ஆனாக்க அந்த மடம்.  ஆவாட்டி சொந்த மடம்"  -  சென்னைத் தமிழில் (உண்மையில் அப்படி ஒரு தமிழ் இருக்கிறதா என்ன?!) கவிஞர் எழுதிய இந்தப் பாடலை பி.சுசீலாவை நடிகையர் திலகம் ஏற்றிருந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாகப் பாட  வைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன். 

"மரத்தே படிச்சவன்தான் மனுசாளைப் படைச்சிருக்கான்.

வாறதை எதுக்கத்தான் மனசைக் கொடுத்திருக்கான்."

"துட்டும் கைலே இல்லே. தூக்கத்துக்கும் பஞ்சமில்லே.

பெட்டியும் தேவை இல்லே.  பூட்டுக்கும் வேலை இல்லே." 

எளிமையான வரிகளில் வறுமையைக்கூட  மலர்ச்சியுடன்  ஏற்றுக்கொள்ளும் ஒரு நாடோடிப் பெண்ணின் கதாபாத்திரத்தை பாடலில் கவியரசர் கொடுக்க அந்த வரிகளுக்கு தன் இசையால் கே.வி. மகாதேவன் உயிரூட்ட  பி.சுசீலாவின் குரலில் பாடலைக் கேட்கும்போதே காட்சி அமைப்பு படத்தைப் பார்க்காமலே யூகிக்க முடியும்.   அந்தப் பெண்ணின் கதாபாத்திரத்தில் அனாயாசமாக நடித்து அசத்தி இருந்தார் நடிகையர் திலகம்.

கண்ணதாசன் - கே.வி.மகாதேவன் - பி.சுசீலா - நடிகையர் திலகம் சாவித்திரி ஆகியோரின் கூட்டணி பாடலை வெற்றிப்பாடலாக்கி விட்டது.

"பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னைப்போல பார்க்கலே.

கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சைப் போல கேட்கலே". -

கதாநாயகன் (ஜெமினி கணேஷ்) இலக்கியத்தமிழிலும் நாயகி (நடிகையர் திலகம்) பேச்சுத் தமிழிலும் பாடி இருக்கும் ஒரு அருமையான டூயட் பாடல்.  இன்றளவும் தொலைக்காட்சிச் சானல்களில் மறுபடி மறுபடி ஒளிபரப்பப் படும் இந்த டூயட் பாடலை பி.பி. ஸ்ரீனிவாஸ் - பி.சுசீலாவைப் பாடவைத்து சிறப்பாக அமைத்துக்கொடுத்து ஒரு வெற்றிப்பாடலாக்கி விட்டிருக்கிறார் மகாதேவன்.  பாடலுக்கான முகப்பிசையில் வயலின்களை உச்சத்தில் ஏற்று நிறுத்தி பல்லவியை மத்யம ஸ்ருதியில் துவக்கி இருக்கும் அழகே தனி.

"நிலவுக்கும் நிழலுண்டு"  - பி. சுசீலாவின் குரலில் ஒரு அருமையான மெலடி.  

"அம்மா இல்லே அப்பா இல்லே"  - முதல் முதலில் எஸ்.ஜானகி பாடிய குழந்தைப் பாடல்.

இப்படி மறக்கமுடியாத பாடல்களை "ஆயிரம் ரூபாய்" படத்துக்காக கொடுத்திருந்தார் கே.வி.மகாதேவன்.  படமும் வெற்றிபெற்றது.

*****

ஆயிரம் ரூபாயில் இப்படி பாமரத்தனமான பாடல்களைக் கொடுத்து மெல்லிசையின் உச்சத்துக்கு சென்றவர் மரபார்ந்த இசையைத் தொட்டு விளையாடிய படம் "வீர அபிமன்யு".

படத்தின் பெயரைச் சொன்னதுமே "பார்த்தேன் சிரித்தேன்" என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் - பி.சுசீலா பாடும் "சஹானா" ராகப் பாடல் கட்டாயம் நினைவுக்கு வருமே.  சஹானா ராகத்தில் எத்தனையோ பாடல்கள் வந்திருக்கலாம்.  ஆனால் ராகத்தின் பெயரைச் சொன்னதுமே பளிச்சென்று நினைவுக்கு வரும் திரைப்படப் பாடல் இந்தப் பாடல் மட்டும்தான்.  இது ஒன்றே போதுமே கே.வி.மகாதேவனின் திறமையைப் பறை சாற்ற.!

**

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் நடிக்க வைப்பதற்காக தனது அடுத்த கதையை தயார் செய்தார் இயக்குனர் ஏ.பி. நாகராஜன்.

அதுவே நடிகர் திலகத்தின் நூறாவது படமாகவும் அமைந்தது.

ஒன்பது மாறுபட்ட வேடங்களில் நடிகர் திலகம் அசத்திய "நவராத்திரி" படம் கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்தது.

நடிகர் திலகத்துடன் நடிகையர் திலகம் இணைந்து நடித்த இந்தப் படத்தில் மகாதேவன் இசையில் பாடல்கள் கேட்கும்படி அமைந்தன.

"நவராத்திரி சுபராத்திரி"  - பி.சுசீலா பாடும் இந்தப் பாடலை பீம்ப்ளாஸ் ராகத்தைப் பயன்படுத்தி இசை அமைத்திருந்தார் கே.வி.மகாதேவன்.

இன்றுவரை ஒவ்வொரு நவராத்திரி பண்டிகைக்கும் தவறாமல் ஒளிபரப்பாகும் பாடல் இது.

"சொல்லவா கதை சொல்லவா"  - பி.சுசீலா.

"இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்"  - டி.எம். எஸ். பாடும் பாடல்.

மனநோய் மருத்துவமனையில் ஒரு கதம்பப் பாட்டு - பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குழுவினருடன் பாடும் பாட்டு.

"போட்டது மொளைச்சுதடி கண்ணம்மா"  - டி.எம்.எஸ்.

நாடகத்தந்தை தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகளில் சத்தியவான்-சாவித்திரி நாடகப் பாடல்களை தொகுத்து அமைத்த தெருக்கூத்துக்கான பாட்டு.  டி.எம்.எஸ். - பி.சுசீலா - எஸ்.சி. கிருஷ்ணன் ஆகியோருடன் வசனப் பகுத்திக்கு நடிகர் திலகமும், நடிகையர் திலகமும்.  இந்தப் பாடல் முழுக்க ஹார்மோனியத்தையும் தபேலாவையும் மட்டுமே பயன்படுத்தி அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.

"நவராத்திரி" படத்தை விமர்சனம் செய்த ஆனந்த விகடன் "நடிப்பிலும், கதையிலும் செலுத்திய கவனத்தை பாடல்களிலும் சற்று செலுத்தி இருக்கலாம்" - என்று விமர்சனம் செய்திருந்தது.

ஆனால் "நவராத்திரி" பாடல்கள் அப்படி ஒன்று சோடை போகவில்லை என்பது இன்றளவும் உண்மை.

படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.  அதற்கு பாடல்களும் உறுதுணையாக இருந்தாலும் ஆக்கிரமித்ததென்னவோ நடிகர் திலகத்தின் நடிப்புத்தான்.

அடுத்து வந்த ஆண்டான 1965இல் ஏ.வி.எம். நிறுவனம் முதல் முதலாக தன் இரு கதவுகளையும் திறந்துவைத்து கே.வி. மகாதேவனை வரவேற்றது.

படம்: காக்கும் கரங்கள்.

எஸ்.எஸ்.ஆர். - விஜயகுமாரி, எஸ்.வி. சுப்பையா ஆகியோர் முக்கிய வேடங்களை ஏற்று நடித்த இந்தப் படம் ஏ.வி.எம். நிறுவனத்துடன் கே.வி.மகாதேவனுக்கு மட்டும் முதல் படம் அல்ல.

ஒரு நடிகராக கலையுலகில் முதல் முதலாக நடிகர் சிவகுமார் அவர்கள் அறிமுகமானதும் இந்தப் படத்தில் தான்.

மகாதேவனின் இசையில் பாடல்கள் அனைத்துமே ஹிட் பாடல்கள் தான்.

"திருநாள் வந்தது தேர் வந்தது." பி. சுசீலா.    

"ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக" - டி.எம்.எஸ். - பி.சுசீலா.

"அல்லித்தண்டு காலெடுத்து அடிமேல் அடி வைத்து" - டி. எம்.எஸ். - பி. சுசீலா. 

-  என்று கேட்கக் கேட்கத் தெவிட்டாத பாடல்களாகக் கொடுத்திருந்தார் கே.வி. மகாதேவன்.

"இருவர் உள்ளம்" படத்திற்குப் பிறகு எல்.வி. பிரசாத் வங்காளத்தில் வெற்றி பெற்ற ஒரு படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்று அதன் உரிமையை வாங்கினார்.  அது கதாநாயகியை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை.  புன்னகை அரசி கே.ஆர்.விஜயா இரட்டை வேடத்திலும், அவருக்கு ஜோடியாக ரவிச்சந்திரனும் ஒப்பந்தமாக படத்தின் வெளிப்புறக் காட்சிகளை காஷ்மீரிலும், நைனிடாலிலும் எடுத்து ஈஸ்ட்மென் கலரில் அருமையான முறையில் படத்தை தயாரித்தார்.

தமிழுக்கென்று சிலபல மாற்றங்களுடன் தயாரான அந்த வண்ணப் படத்துக்கு இசை கே.வி. மகாதேவன்.

உச்ச நட்சத்திரங்களின் படத்துக்கு இணையாக படம் இருபத்தைந்து வாரங்கள் ஓடி வெள்ளி விழாக்  கொண்டாடி  அனைவரையும் பிரமிக்க வைத்தது.

கே.வி. மகாதேவனின் இசையில் மலர்ந்த பாடல்கள் அனைத்துமே - வெற்றித்தடாகத்தில் மிதக்க - மலர்ந்தது "இதயக் கமலம்".

(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)

அக்டோபர்   06 , 2014  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com