பிரியங்களுடன் கி.ரா – 29

பிரியங்களுடன் கி.ரா – 29

28-8-96

புதுவை – 08

நண்பருக்கு நலம். உங்கள் 23-8-96 கடிதம். ‘சமாதிநிலை’ என்பது பொருத்தமான வார்த்தை. வேற வார்த்தை போடவும் முடியாது. அதை நோக்கித்தான் மனசு நகர்ந்து கொண்டிருக்கிறது. பற்று இல்லாமல்ப் போனதினால்தான்;

அதுக்குப் பிறகுவந்த எனது புத்தகங்களை நான் அனுப்ப மறந்தேனோ. “பெண்மனம்”,  “கி.ரா.வின் பதில்கள்”, “அந்தமான் நாயக்கர்”, “கி.ரா.கட்டுரைகள்”, இவை போக நாட்டுப்புறப்பாலியல்கள் இரண்டு தொகுப்புகள் இவைகளில் எதெல்லாம் உங்களை வந்தடைய வேண்டும் என்று தெரியவில்லை.

கடைசியில் சொன்ன இரண்டு தொகுப்புகளை(பாலியல் கதைகளை) நிறங்கள் படிக்க விரும்பிவீர்களா என்கிற தயக்கம் எனக்கு. “மறுவாசிப்பில்” புத்தகம் வித்தியாசமான வரவு. கி.ராவின் இன்னொருபக்கத்தை அடையாளம் காட்டும்.

புத்தகத்தின் கடைசியிலுள்ள நேர்காணல் பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கும். தாத்தாவின் விழா சிறப்பாக அமையும்.

ப.சிதம்பரத்துக்கு ஒரு கடிதம் எழுதினேன் தில்லிக்கு. ரசிகமணியின் உருவம் கொண்ட தபால்தலை கொண்டுவர வேண்டும் என்று.

வரலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எப்பவும் உங்கள்,

கி.ரா.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com