புலன் மயக்கம் 7

ஒரு பாட்டுப் போதாதா என்ன என்று எப்போதாவது எங்கேயாவது கேட்டதுண்டா..? நீங்கள் பிறரிடமாவது பிறர் உங்களிடமாவது ஒரு பாட்டுப் போதாதா என்று எப்போது கேட்டீர்கள்..? நான் முதன் முதலில் கேட்கப் பட்டேன். என்னிடம் இதனைக் கேட்டவர் பெயர் தீபக். ஏற்கனவே இந்தக் கதாபாத்திரத்தை என் முந்தைய பத்திகளில் சில இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். இந்தத் தொடரில் அடிக்கடி வரவிருப்பவர் என்ற அளவில் அவரது நுழைதலைக் கொள்வோம். பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம்.


தீபக்கின் கேஃப்டீரியா திருநகரின் முன்னோடி காஃபி ஷாப்களில் ஒன்று. திருநகர் என்றில்லை,ஒட்டுமொத்த மதுரைக்குமே அப்படியான ஒரு கடை கனவுகளில் மாத்திரம் இருந்து வந்த நிலையில் திருநகர் அண்ணா பூங்காவிலிருந்து பந்தை உதைத்தால் எட்டுகிற தூரத்தில் அமைந்திருந்தது கேஃப்டீரியா. தீபக் வெளேர் நிறத்தில் ஒடிசலாக பழைய பெங்காலி படங்களின் அமோல்பாலேகருக்கு ஒன்றுவிட்ட தம்பி போல் இருப்பார். அதற்குக் காரணம் அவர் வாழ்ந்த பலவருட டெல்லி வாழ்க்கையாகக் கூட இருக்கலாம். இது நிகழ்ந்தது 93 என்பதை கவனத்தில் கொள்க. நான் பதினாறு. தீபக் அப்போது அதிகமிருந்தால் முப்பத்தி இரண்டு வயது இருப்பார்.


 தீபக் ஆரம்பித்த கேஃப்டீரியா வெறும் காஃபி ஷாப் அல்ல. அதன் துரித உணவுகள் அப்போது ஸ்டார் ஓட்டல்களில் மாத்திரம் கிடைக்கவல்லவை அல்லது குறைந்த பட்சம் மெட்ராஸூக்குப் போனால் கிடைக்கும். பர்கர் பீஸா எல்லாம் சென்னைக்கும் மதுரைக்கும் அனேகமாய் முதல் முறை வந்தது ஒரே காலத்தில் எனலாம். அதன் முக்கியக் காரணர் தீபக் தான். அவரது கடையின் தோற்றமும் உள்ளே பொங்கிய தனிமையும் அவரது உபசரிப்பும் எல்லாவற்றுக்கும் மேலாக கால்கள் புதைய கடையின் உட்புறம் கொட்டியிருந்த ஆற்றுமணல் ஆங்காங்கே உறுத்தாத சின்னச்சின்ன மேசைத் தனிமைகள் எனப் பல காரணங்கள். அதற்குப் பின்னரும் இன்றுவரை திருநகரில் அப்படி ஒரு ஸ்தலம் இல்லை என்றே சொல்வேன்.


திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கும் தியாகராஜர் பொறியியற் கல்லூரி மாணவர்கள் வழக்கமாக வரும் இடமாக கேஃப்டீரியா அமைந்தது. நாங்கள் ஒரு பத்துப்பேர் அந்தக் கடைக்கு அடுத்தாற் போல் எப்போதும் அடைத்தே இருக்கும் மாயா ம்யூசிக்கல்ஸ் கடையின் ஷட்டருக்குப் பின்னதான வாசலில் தேவலோகம் காப்போம். மாயா டாப் என்றே பெயர். கேஃப்டீரியாவின் உட்புறம் டீஸண்டான பிறருக்கானது. நாங்கள் அவ்வப்போது ஆட்கள் இல்லாவிட்டால் மட்டும் செல்வதுண்டு. அந்தக் கடையின் வெளிப்புறமே எங்களுக்குத் தேவையான புகை தேநீர் இத்யாதிகள் கிடைக்கப் பெற்றதால் அங்கேயே அவ்வண்ணமே இருந்தோம். கணேஷ் (இப்போது இல்லை) அஷோக் மற்றும் சீனி கார்த்திக் நான் கோன்ஸ் ரமேஷ் என எங்கள் குழு பெரியது. எங்களில் ஒவ்வொருவருடனும் அளவான அழகான ஒரு பந்தத்தை பராமரித்துக் கொண்டிருந்தார் தீபக். வழக்கமாக பெரிய பெரிய கடைகளில் கூட குறைந்த பட்சம் வாசலிலாவது சண்டையிழுத்து இன்பமுறும் வழக்கபழக்கம் கொண்ட நாங்கள் தீபக்கை உற்ற நண்பனாக மதித்தோம். அதற்கு சத்தியமாக அவரது குணகுணாளமே காரணம். நாங்கள் அல்ல.


நிற்க. அந்த தீபக் ஒரு இசைரசிகர். வெறும் ரசிகர் அல்ல. புள்ளிவிபரப் புலி. ஐம்பதுகளிலிருந்து அப்போதைய தொண்ணூறுகளின் தொடக்கம் வரைக்குமான பல பாடல்களை அவர் குறிப்பிடுவதே அழகாக இருக்கும். அதுவும் எப்போதும் கேட்டிராத முதல் தடவை கேட்கும் போதே மனசை லபக்கிக் கொள்கிற மாயப்பாடல்கள் பலவற்றை அவர் தான் எனக்கு அறியச் செய்தார். தீபக் தான் எனது அப்போதைய கூகுள். அவரிடம் கேட்டுப் பதிலடையாத வினாக்களே இல்லை எனும் அளவுக்கு இருந்தது அவரது இசையறிவின் விசாலம்.


அந்த தீபக்கும் நானும் தனியே வாய்க்கிற பொழுதுகளில் எல்லாம் இசை பற்றியும் பாடல்கள் பற்றியுமே பேசிக்கொண்டிருப்போம். எப்போதாவது அங்கே இப்போதைய பிரபல இயக்குநர் சீனுராமசாமியும் தன் நண்பர்களுடன் வருவதுண்டு. தீபக் ஒரு பாடலை ஒலிக்கச் செய்து இதை பாடியது யார் எனக் கேட்டார். நான் எஸ்.என்.சுரேந்தர் என்றேன். அடுத்து ஒரு பாடலை ஒலிக்கவிட்டபோது இது யார் என்றதற்கு நான் சுரேந்தர் தான் என்றேன். மூன்றாவதாக ஒரு பாடலைக் கேட்டு இதுவும் சுரேந்தர் தானா எனக் கேட்டேன். அப்போது தீபக் சிரிக்காமல் சொன்னது தான் விசேஷம்.


 ரவீ..இந்த மூணு பாட்டுமே சுரேந்தர் இல்லைங்க..என்றார்.எனக்கு ஞே என்று ஆகிப்போனது. இல்ல சுரேந்தர் மாதிரி இருந்திச்சி அதான் என்றேன். அவர் பொறுமையாக எனக்கு ஒரே நேரத்தில் மூன்று புதிய அரிய குரல்களை அறிமுகம் செய்து வைத்தார்.

முதல் பாடலைப் பாடியவர் ராஜ் சீதாராம். பாடல் மெல்ல மெல்ல என்னைத் தொட்டு மன்மதன் தன் வேலையைக் காட்ட படம் வாழ்க்கை. அடுத்த பாடல் தென்றல் என்னை முத்தமிட்டது. இதனைப் பாடியவர் கிருஷ்ண சந்திரன் பாடல் இடம்பெற்ற படம் ஒரு ஓடை நதியாகிறது. மூன்றாவது பாடல் அடியேனைப் பாரம்மா பிடிவாதம் ஏனம்மா வணக்கத்துக்குரிய காதலியே என்ற பாடல் இடம்பெற்ற படமும் வணக்கத்துக்குரிய காதலியே பாடியவர் ஜாலி ஆப்ரஹாம். 

வெரைட்டி பற்றி நிறைய்ய நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கேட்ட பாடல் கரையில கேட்பவர் நாள் சில என்பது புரிந்த அந்த தினம் தொட்டு நாளும் புதிய குரல்களையும் வரிகளையும் இசைக்கோர்வைகளையும் தேடிக்கொண்டே இருப்பவனாக நான் மாறிப் போனதற்கும் அந்த ஒரு தினம் வீழ்ந்துருகிய கணம் தான் காரணத்தோற்றுவாயாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.

அப்படித்தான் ஒரு நாள் திருச்சி வானொலியில் ஒரு பாடலைக் கேட்ட நொடி பித்தானது மனசு. அந்தப் பாட்டைத் துரத்தித் துரத்திக் கேட்டுப் பல தடவைகள் ருசித்து மனனம் செய்த பிற்பாடு தான் அடங்கிற்று மனமிருகம்.


ஒரு வீடு ஒரு உலகம் என்னும் படம் பாடல் ரதி தேவி சன்னிதியில் ரகசிய பூஜை எனத் தொடங்கும் பாடல் அமானுஷ்யமாய்த் துவங்கி ஆன்ம நிரடலுடன் தொடர்ந்தோடும் மந்திர நதி போலப் பெருகவல்லது. டீ.எல்.மகராஜனும் சசிரேகாவும் பாடியது அப்பாடல். இசை விஸ்வநாதன்.


ஒரே வானம் ஒரே பூமி படத்தில் வருகிற மலைராணி முந்தானை  பாடலுக்கு முந்தைய லாலா என்று தொடங்கும் தொகையறாவைக் கேட்பவர்கள் நூறுமுறை சத்தியம் செய்தாலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் அதைப் பாடியவர் ஏசுதாஸ் என்று. தீபக்கிற்கு உமா ரமணன் என்றால் மிகவும் பிடிக்கும். உமா ரமணன் குரலின் தனித்துவம் பற்றிப் பல முறை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இளையராஜா இசையில் தன் பெரும்பான்மைப் பாடல்களைப் பாடினார் உமா. தொண்ணூறுகளின் நடுவிலிருந்து வித்யாசாகர் தன் எல்லா சூப்பர்ஹிட் படத்திலும் எதாவதொரு டூயட் பாடலை உமாவுக்கு வழங்கியது உபசெய்தி. உமாவின் குரல் இருளும் மழையும் தனிமையும் கலந்து தனித்து ஒலிப்பது.


விஜயகாந்தின் ஆரம்ப காலப் படமான நீரோட்டம் படத்துக்கு இசை அமைத்தவர் ஏவி ரமணன் இவருடைய மனைவி தான் உமாரமணன். இவ்விருவரும் சேர்ந்து பாடிய ஆசை இருக்குது நெஞ்சுக்குள்ளே பாடலை முதல்முறை மதுரையில் இருந்து உசிலம்பட்டி செல்லும் பஸ் பயணமொன்றில் எனக்கடுத்து அமர்ந்திருந்தவரின் செல்பேசியில் அவருக்கு மாத்திரமே கேட்கிற சப்தத்தில் பல பாடல்களைக் கேட்டபடி வந்தார். என் பாடல்களை நானும் உடனழைத்து வரவில்லையே என்று வருந்தினேன். பொதுவாக எனக்கு செல்பேசியில் பாடல் கேட்பது பிடிக்காது. அதற்கான டெக்னிகல் விளக்கங்கள் பிற்பாடு விளக்கப்படும். இப்போதைக்கு பிடிக்காது என்றே இருக்கட்டும்.


அந்தப் பாட்டை மாத்திரம் கொஞ்சம் சப்தமாக வைக்க முடியுமா என்று கேட்டேன். அவரும் புன்னகையோடே தாராள மனசோடு சப்தமாக வைத்தார். என்னாலான அளவு அந்தப் பாடலின் முதல் வரிகளை இசைக்கோர்வையை எனக்குள் சேமித்துக் கொண்டேன். அவருக்கு அது என்ன படம் என்று தெரியவில்லை. அதற்குப் பின் ஒரு நாலைந்து நாட்களில் நீரோட்டம் என்ற தகவல் கிடைத்தது.


நிற்க..கொஞ்சம் உமா ரமணனைப் பேசி விட்டு மறுபடி இந்தப் பாட்டுக்கு வருவோம்.சில பாடகர்கள் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடுவதற்கும் சிற்சிலர் ஒன்றிரண்டு பாடல்களோடு முற்றுப்பெறுவதும் வெறுமனே வாய்ப்பு சம்மந்தப் பட்ட விஷயம் அல்ல என்றே நினைக்கிறேன்.ஒரு குரலின் தன்மையும் கூட அதன் வாலிடிட்டி பீரியடைத் தீர்மானிக்கலாம் தானே..?

உமா ரமணன் குரல் ஒரு வித்யாசமான வகைமையைச் சேர்ந்தது. வாணி ஜெயராம் குரலுக்கு அடுத்ததாகவோ முன்னதாகவோ வரிசைப்படுத்துவேன் உமாவின் குரலை. லேசான கண்ணீர்த் தன்மை அல்லது மேலோட்டமான சந்தோஷச் சிணுங்கல் இவற்றைப் பிரதிபலிக்கிற குரல் உமாவினுடையது. உமா பாடிய பெருவாரிப் பாடல்கள் ஹிட் அடித்தன அல்லது ஹிட் பாடல்கள் பல அவருக்கு வழங்கப்பட்டன.


பெண் குரலின் தனிமையை ஏகாந்தத்தை மிக லேசான தாபத்தை வெளிப்படுத்தக் கூடிய தென் திசைப் பாடகிகளில் உமாவுக்குத் தனி இடம் உண்டு. வேறாராலும் பாட முடியாத பாடல்களையே உமாரமணன் பாடி வந்திருக்கிறார் என்பதை உற்று நோக்கின் உணரமுடியும்.


பொன் விலங்கு படத்தில் சந்தனக் கும்பா உடம்பிலே எனும் பாடல் உமாவின் அதிரிபுதிரி. இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் வசீகரம். இளையராஜாவின் இசையும் உமாவுக்கான பாடல்களை அவர் தேர்வெடுப்பதிலிருந்தே அவற்றின் வகைமை விலக்கத்தை உணரமுடியும். இந்தப் பாடல் காமம் தொனிக்கும் சூழலில் ஒரு பெண் உருகுகிற பாடல். இதை எஸ்.ஜானகி பாடியிருந்தால் எங்கே தொடங்கி இருப்பாரோ அதற்குச் சற்றும் சம்மந்தமே இல்லாத ஒரு குரலில் உமா இதனைத் தொடங்கி இருப்பார். இந்த சூழலுக்கான நூற்றுக்கணக்கான பாடல்களை ஜானகி பாடி இருந்தாலும் உமா பாடியதாலேயே அத்தனை பாடல்களுக்குக் குறையாத ஓரு உச்சத்தில் சந்தனக் கும்பா பாடல் தனித்தொலிக்கிறது.


காமசூழ் ததும்பு குரலின் தேவைக்கான பாடல் என்றாலும் பதின்பருவத்தில் இன்னமும் குழந்தமை முற்றிலும் விலகாத ஒரு குரல் உமாவினுடையது. காதலும் காமமும் சேர்கின்ற ஓரிடத்தில் இப்பாடலைத் தொடங்கி காமம் உச்சம்பெறுவதற்கு வெகுதொலைவு முன்பே முடிவடைந்து போகக் கூடியது இந்தப் பாடல். வெட்டுக்கத்தி போல அதனை சாத்தியமாக்கியது உமாவின் குரல்.


எனக்கு மறக்க முடியாத உமா பாடல் என்றால் ஆகாயவெண்ணிலாவே  எனும் பாடலைச் சொல்வேன். ஜேசுதாஸூம் உமாவுன் இணைந்து இளையராஜாவின் இசையில் ஒரு ராகதீபாவளியை நேர்த்தி இருப்பார்கள். அதிலும் வாலியின் வரிகள் அந்தப் பாடலை சாகாவரமாக்கிற்று என்பேன்.


             தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று 
             பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று 
             தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு 
             மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று 
             இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும் 
             கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்.
             கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட 
             நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட....


இந்தப் பாடல் ஏன் பிடித்தது என்பதற்கான காரணங்கள் ஒன்று இரண்டல்ல. அதில் முக்கியமான காரணம் இசையும் தமிழும் ஒன்றோடொன்று இயைந்த தன்மை.    

ஆரம்பத்திலிருந்தே பார்த்தால் கடந்த நாற்பது ஆண்டுகளில் பூங்கதவே தாழ் திறவாய் (நிழல்கள்) ஆசை ராஜா ஆராரோ (மூடுபனி) ஆனந்த ராகம் (பன்னீர்ப்புஷ்பங்கள்) அமுதே தமிழே (கோயில்புறா) பூபாளம் இசைக்கும் (தூறல் நின்னு போச்சு) செவ்வந்தி பூக்களில் செய்த வீடு (மெல்லப் பேசுங்கள்) கண்மணி நீ வரக் காத்திருந்தேன் (தென்றலே என்னைத் தொடு) கஸ்தூரி மானே கல்யாணத் தேனே (புதுமைப் பெண்) யார் தூரிகை தந்த ஓவியம் (பாரு பாரு பட்டணம் பாரு)  ஊரடங்கும் சாமத்திலே (புதுப்பட்டி பொன்னுத்தாயி) மன்னவா மன்னவா மன்னாதி (வால்டர் வெற்றிவேல்)


முழுமையான பாடகி உமா ரமணன் தான் பாடிய கிட்டத் தட்ட அத்தனை பாடல்களையுமே சூப்பர் ஹிட் பாடல்களாக அடைந்தவர்.அவரது குரலும் அதற்கொரு காரணம் என்ற போதும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் இல்லை. இன்றைக்கும் நடுங்காத தன் குரலால் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.


உமாவின் குரலில் நீரோட்டம் படத்தின் ஆசை இருக்குது நெஞ்சுக்குள்ளே பாடல் தமிழின் சுழலிசைப் பாடல்களுக்கான சிறந்ததோர் உதாரணம். பல்லவியின் இசை முடிந்து முடிந்து தொடங்கும். சரணத்தின் இசை வேறாக ஒலித்துச் சுருளும்.மீள்கையில் மறுபடி பல்லவி இசையுடன் சேர்ந்தொலிக்கும். இதன் சுழலிசைத் தன்மையைத் தாண்டி உமாவின் குரலும் இதனை ஒரு அற்புதமாக்கி இருக்கும்.

ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே 
ஆசை இருக்குது நெஞ்சுக்குள்ளே அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லெ
இது பருவத்தாலே மாறிவரும் ரசனை அல்லவா
இள மனதோடு மலர்ந்து வரும் ஆசை அல்லவா
இந்த மயில் கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே
வண்ண மயில் கூட மழையைக் கண்டால் ஆடுகின்றதே...

எப்போது கேட்டாலும் மனதினுள் தன் அதே ஒரே இடத்தை ஆக்ரமித்துக் கொள்ளும் தனித்துவப்பாடல் இது. இது போன்ற எண்ணற்ற பாடல்களது எதிர்பாராப் போழ்து வருகைகளையும் அவற்றினூடே தொலைகின்ற தினங்களையும் கொண்ட மாபெரும் தேடல் தானே வாழ்தல் என்பது..?

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com