மங்கம்மாள் சத்திரம்

மதுரைக்காரய்ங்க-23

இது மதுரை மண்ணின் வரலாற்று அரசியல் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பரபரப்பான அரசியல் தொடர், காலத்தின் முன்னும் பின்னும் சென்று, முக்கியமான அரசியல் நிகழ்வுகளை இத்தொடரில் படம் பிடிக்கிறார் சஞ்சனா மீனாட்சி

மத நல்லிணக்கத்தில் ராணி மங்கம்மா ஆர்வம் காட்டியவர். கிறிஸ்துவர்களுக்கு மட்டுமல்லாமல், இசுலாமியர்களுக்கும் மங்கம்மாள் மானியம் அளிக்கத் தவறவில்லை. 1701-ல் இசுலாமியர்களின் நல்வாழ்விற்காகவும் பள்ளிவாசல் பாதுகாப்பிற்காகவும் திருச்சியிலுள்ள நிலங்களை மானியமாக வழங்கியது குறித்துக் கல்வெட்டு உள்ளது.

மதப்பிரச்சாரம் செய்து வந்த பாதிரியார்கள், தஞ்சாவூரை ஆண்டு வந்த மராத்திய மன்னன் ஷாஜியால் எச்சரிக்கப்பட்டனர். மேலும் அந்தப் பாதிரியார்களை நாடு கடத்த ஷாஜி உத்தரவிட்டான்.   மன்னனின் உத்தரவை மீறி மதம் மாறிய பாதிரியார்கள் மீது புது வரிகளை சுமத்தினான்.  வல்லத்தில் ஒரு பாதிரியார் கொல்லப்பட்டுள்ளார். (ஆதாரம்:வீரமாமுனிவர் கட்டிய திருக்காவலூர் (ஏலாக்குறிச்சி) கோவில் வரலாறு- கையேடு). அப்போது மங்கம்மாள் மதுரையை ஆண்டு வந்தார்.

அத்தோடு நிறுத்தாமல் தனது செயலை ஆதரிக்கும்படி மற்ற நாட்டு மன்னர்களுக்குக் கடிதம் எழுதினான் ஷாஜி. அக்கடிதத்தில் 'கிறிஸ்தவர்களை விரோதிகளாய்ப் பாவித்து, பாதிரியார்களை நாட்டை விட்டுத் துரத்தும்படி ', வேண்டி இருந்தான்.

 உடையார்பாளையம் அரசன் இதை ஆதரித்தான். மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பாதிரியார்களைப் பிடித்துச் சிறையில் போட்டான். அக்கைதிகளின் மீது அன்பு கொண்டிருந்த காவலர்கள் அவர்கள் தப்பிச் செல்ல உதவினர். அந்த நான்கு பேரின் சொத்துக்களும் உடையார்பாளையம் அரசனால் பறிமுதல் செய்யப்பட்டது. கிறிஸ்தவர்கள் விஷயத்தில் தங்களைப் போலவே செயல்படுமாறு ஷாஜி, ராணி மங்கம்மாளுக்கும் கடிதம் எழுதினான்.

ராணி மங்கம்மாள், தஞ்சை மன்னனின் இக்கடிதத்தைக் கண்டித்துப் எழுதிய பதிலில், '...நாட்டில் ஒரு பகுதியினர் அரிசியை உணவாகவும், மற்றொரு பகுதியினர் மாமிசத்தை உணவாகவும் எவ்விதம் கொண்டிருக்கின்றனரோ, அவ்விதம் நாட்டு மக்களில் ஒரு சிலர் இந்து மதத்தையும், மற்றொரு பகுதியினர் கிறித்துவ மதத்தையும் சார்ந்திருக்கின்றனர். எல்லோரும் அரிசியையே உணவாகக் கொள்ள வேண்டும் என்றோ, அன்றி, மாமிசத்தையே உணவாகக் கொள்ளவேண்டும் என்றோ நாம் கட்டாயப்படுத்த முடியாது. அவ்விதம் நாம் அதிகாரத்தைப் புகுத்த முற்படுவது முட்டாள்தனமான காரியமாகும். ஆகவே இந்து மதத்தைப் பிரச்சாரம் செய்ய இந்துக்களுக்கு இருக்கும் உரிமை போன்று, கிறித்துவ மதத்தைப் பிரச்சாரம் செய்ய கிறித்தவ மதத்தினருக்கும் உரிமை உண்டு. அதை மறுக்க முடியாது. கிறிஸ்துவ மதத்தை விரும்பாத மக்கள் அதைப் பரவாதிருக்கச் செய்ய வேண்டுமானால், பலாத்காரமான முறையில் அழிக்க முற்படுவது சரியல்ல. தங்கள் மதத்தைப் பற்றி நன்கு பிரச்சாரம் செய்ய முற்படலாமே!.. ' என்று குறிப்பிட்டிருந்தார்.

 ஆட்சி காலத்தில் நல்ல பல திட்டங்களைத் தீட்டி மதுரையைச் சிறப்பாக ஆண்டார். ராணி மங்கம்மாள் மக்கள் நலம் பேணும் பல அறச் செயல்களைச் செய்தார். மதுரையில் பெரியதொரு அன்னச்சத்திரம் அமைத்தார். அது 'மங்கம்மாள் சத்திரம்' என இன்றும் அழைக்கப்படுகிறது. மதுரை - கன்னியாகுமரி சாலையில் 108 சத்திரங்களைக் கட்டி, பயணிகளுக்கு வசதிகள் செய்து தந்தார். அப்படி உருவாக்கப்பட்ட சத்திரங்களில் பல இன்றும் இடிந்துபோன நிலையில் சாலையோரம் இருப்பதைக் காணலாம். தென் தமிழகத்தில் இன்னும் பல ஊர்களின் பெயரில் சத்திரம் என்று வருவது மங்கம்மாள் உருவாக்கிய சத்திரங்களின் நினைவில்தான்.

சாலைகள் அமைக்கவும் சந்தைகள் உருவாக்கவும் மங்கம்மாள் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். அதற்காக கணிசமாக செலவு செய்தார். தென் தமிழகத்தில் உள்ள முக்கியமான சாலைகள் ராணி மங்கம்மாள் அமைத்தவை. புதிய சாலைகள் பலவற்றை அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அவர் அமைந்த நெடுஞ்சாலை ' மங்கம்மாள் சாலை' என அழைக்கப்படுகிறது.

நீண்ட தூரம் சாலைகள் அமைப்பது எளிதான பணி அல்ல. பல்வேறு ஊர்களில் சாலை போடுவதற்கான நிலம் கைவசப்படுத்துவதிலும், சாலை எந்த வழியாகச் செல்ல வேண்டும் என்பதிலும் பிரச்னைகள் ஏற்பட்டன. இதைச் சமாளிக்க உள்ளூர் இனக்குழுத் தலைவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தி வெற்றி கண்டார் மங்கம்மாள்.

நீண்ட தூர சாலைகளில் குதிரைகள், பசுக்கள், காளைகள் போன்றவை நீர் அருந்துவதற்காக சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்க ஆணையிட்டார். மாட்டு வண்டிகளை நிறுத்த வண்டிப் பேட்டைகள் அமைக்கப்பட்டன. சாலையை மையப்படுத்தி சிறிய நகரங்கள் உருவாகின.

அவ்வாறு உருவான புதிய நகரங்கள் தான்  இன்றைக்கு முக்கிய நகரங்களாக விளங்கும் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி, கயத்தாறு போன்றவை. இன்றும், கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை மங்கம்மாள் சாலை என்றே மக்கள் குறிப்பிடுகின்றனர். மங்கம்மாள் இந்தச் சாலையை அமைத்ததைப் பற்றி வாய்மொழிக் கதை ஒன்று இருக்கிறது. விரத நாட்களில் மங்கம்மாள் வெற்றிலை போடுவது கிடையாது. அதை மறந்து ஒரு நாள் அவள் இடது கையால் வெற்றிலை போட்ட காரணத்தால், அதற்குப் பரிகாரமாக மக்களுக்குப் பயன்படும் சாலையை அமைத்துக் கொடுத்தாள் என்று கூறுகிறது ஒரு நாட்டுப்புறக் கதை. ஆனால்,  மங்கம்மாள் சாலை முக்கியமான வணிகப் பாதையாக விளங்கியது. வளர்ந்துவரும் சந்தை வணிக முயற்சிகளை மேம்படுத்தவும், படைகள் சென்று வருவதற்கும் உதவியாகவே மங்கம்மாள் சாலைகள் அமைத்தார் என்கிறது வரலாற்றுச் செய்திகள்.

பொது மக்களுக்காக  அனைத்து ஊர்களிலும் குடிநீர் ஊருணிகள், கிணறுகள் ஆகியவற்றைத் தோண்டச்செய்தார். தொழில் வளர்ச்சி, வாணிகம், மக்கள் தொடர்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்தார். சிற்றூர்களின் வளர்ச்சியிலும் தொடர்ந்து கவனம் செலுத்தினார்.

பண்டைகாலத்தில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அப்படியே விட்டுவிடும் வழக்கம் இருந்தது. ஆனால், மங்கம்மாள் இதிலிருந்து மாறுபட்டிருந்தார். இயற்கை சீற்றத்தால் ஏற்படும் அழிவுகளை மீட்டெடுக்க இன்றைக்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மங்கம்மாளே முன்னுதாரணம் எனலாம். அதற்கு ஒரு உதாரணம்,  கொள்ளிடத்தில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் துன்புற்ற போது அவர்களுக்கு உணவு, உடை, வீடு மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்கு ஆணையிட்டார். வெள்ளத்தால் அழிந்த கரையோரத்துச் சிற்றூர்களையும் சீரமைத்தார்.

ராணி மங்கம்மாளின் சிறந்த நிர்வாகம் தஞ்சை சிக்கதேவராயனுக்கு பொறுக்கவில்லை. தஞ்சை மற்றும் திருச்சிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நதியின் குறுக்கே தற்போது கண்ணம்பாடி அணை உள்ள பகுதியில் அணை கட்டி காவிரி நீரைத் தடுக்க எண்ணினான். அப்போது மங்கம்மாள் பகையை மறந்து அவனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தஞ்சை- மதுரைக் கூட்டுப்படை ஒன்றை உருவாக்கினார். படை கிளம்பும் வேளையில் மைசூர்ப் பகுதிகளில் கடும் மழை பெய்ததால் சிக்க தேவராயன் கட்டிய அணை உடைந்தது. சிக்கல் எதுவும் இல்லாமல் காவிரிப் பிரச்சினை தற்காலிகமாக முடிவடைந்தது. அப்போது தற்காலிகமாக முடிந்தது இன்னும் தொடர்வது தான் வேடிக்கையும் வேதனையும்.

பாட்டி  ராணிமங்கம்மாளின் கம்பீரமான ஆட்சி நடந்து கொண்டிருக்கையில் அவருக்குப் பிடிக்காதவர்கள் பேரன் விஜய ரங்க சொக்கநாத நாயக்கரை தங்கள் கைப்பாவையாக பயன்படுத்திக் கொண்டனர். அவருக்கு தவறான வழிகாட்டினர். அதன் விளைவாக விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் ராணி மங்கம்மாளைத் தனது எதிரியாகக் கருதினார். மங்கம்மாளை சிறையிலிட்டார். மனமுடைந்து போல மங்கம்மாள் நாற்பது நாட்களில் 1706- ல் இறந்தார்.

ராணி மங்கம்மாளின் மரணத்திற்குப் பின் புதிய தளவாய் கஸ்தூரி ரங்கய்யாவும், பிரதானி வெங்கடகிருஷ்ணய்யாவும் கூறிய யோசனைகளின்படி விஜயரங்கசொக்கநாதன் அரசின் வருவாயைப் பெருக்கக் கருதி கொள்ளையடிப்பது போல் மக்கள் மீது அதிக வரிச்சுமைகளைத் திணித்தான். கொடுமைப் படுத்தினான்.

அவன் இட்ட புதிய வரிப்பளுவைத் தாங்க இயலாமல் மதுரைச் சீமை மக்கள் அரசுக்கு எதிராகக் கொதித்து எழுந்தார்கள். கிளர்ச்சிகளும் கலகங்களும் மலிந்தன. ஆட்சி அமைதி இழந்தது. முன்பு தானமாகக் கொடுக்கப்பட்ட இறையிலி நிலங்களுக்குக்கூட இப்போது வரி கொடுக்குமாறு அதிகாரிகளால் மக்கள் வற்புறுத்தப்பட்டார்கள்.    தனது இறையிலி நிலத்துக்கு வரி கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியது பொறுக்காமல் கோயில் பணியாளர் ஒருவர் கோபுரத்தின் உச்சியில் ஏறிக் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். மங்கம்மாள் பதினெட்டு ஆண்டுகள் கட்டிக்காத்த ஆட்சியைப் பதினெட்டு மாதங்கள் கூட அவரது பேரனால் ஆள முடியவில்லை என்பது தான் வேதனையான வரலாறு.

கோடை காலத்தில்  தங்குவதற்காக தமுக்கம் மைதானம் அருகில் மங்கம்மாள் கட்டிய அரண்மனையே இன்று கம்பீரமாகத் திகழும் காந்தி மியூசியம்.. யானைச் சண்டை முதலான பொழுதுபோக்கு விளையாட்டுக்களும் அரச விழாக்களும் நடைபெற்ற இடம் தமுக்கம் மைதானம்,  அங்கு நடக்கும் பொழுதுபோக்கு விழாக்களை மங்கம்மாள் கண்டு களித்ததுண்டு.

  ராணி மங்கம்மாள் ஆட்சி வீழ்ந்த பின்னர்  இந்த மாளிகை கர்நாடக நவாப் வசமானது. அதன் பிறகு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்த அரண்மனை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டது. 1959-ம் ஆண்டில் காந்தி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. பிரதமராக இருந்த நேரு திறந்து வைத்தார். காந்தியடிகளின் நினைவாக, இந்தியாவிலேயே முதன்முதலில் மதுரையில்தான் மியூசியம் துவங்கப்பட்டது.. அதன் பிறகே புதுதில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் காந்தி மியூசியங்கள் தொடங்கப்பட்டன. இன்றைக்கும் மதுரையிலுள்ள பல பேருக்கு இது ராணி மங்கம்மாளில் கோடை கால அரண்மனை என்ற விஷயம் தெரியாது. நாம தான் வரலாற்றை சொல்லிக்கொடுப்பதே இல்லையே..

(தொடரும்)

சஞ்சனா மீனாட்சி மதுரையை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர், தமிழின் முக்கியமான செய்தித்தாள்கள், வார இதழ்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவர் எழுதும் இத்தொடர் வாரந்தோறும் புதன் அன்று வெளிவரும்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com