ஒரு தேசத்தின் தனிமை

ஒரு தேசத்தின் தனிமை

பெண்ணென்று சொல்வேன் -17

பெண்ணின்  மொழி, திசை, இசை, வாசம் வீரம்,ஈரம், கவிதை, உயிர் என பெண்பாலை பற்றிப் பேசும் உலகப்படங்களை பற்றி ஜா.தீபா எழுதும் இத்தொடர் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அந்திமழையில் வெளிவரும்.  - See more at: http://andhimazhai.com/news/view/-a-separation.html#sthash.pPuuIlPm.dpuf

பெண்ணின்  மொழி, திசை, இசை, வாசம் வீரம்,ஈரம், கவிதை, உயிர் என பெண்பாலை பற்றிப் பேசும் உலகப்படங்களை பற்றி ஜா.தீபா எழுதும் இத்தொடர் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அந்திமழையில் வெளிவரும்

பெண்ணின்  மொழி, திசை, இசை, வாசம் வீரம்,ஈரம், கவிதை, உயிர் என பெண்பாலை பற்றிப் பேசும் உலகப்படங்களை பற்றி ஜா.தீபா எழுதும் இத்தொடர் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அந்திமழையில் வெளிவரும்.  - See more at: http://andhimazhai.com/news/view/-a-separation.html#sthash.pPuuIlPm.dpuf

 போதுமான மனோ திடம் இருக்குமிடத்தில் தனிமைப்படுத்துதல் என்பது எத்தனை நீண்டதாக இருந்தாலும் நம்மை சிதைக்காது” – தனது நீண்டகால தனிமை வாழ்க்கைக்குப் பிறகு இந்த உறுதியான வார்த்தைகளை தனது அனுபவச் செய்தியாகச் சொன்னவர் ஆங் சான் சூ யி. உலக வரைபடத்தில் உள்ளங்கை அளவே இருக்கிற பர்மாவின் புரட்சி வரலாற்றோடு தன்னையும் இணைத்துக் கொண்ட சூ யி, ஒரு காலகாட்டத்தில் அத்தனை தேசங்களையும் தன்னை நோக்கித் திரும்ப வைத்தவர். உலகத்தின் முக்கிய அரசியல் கைதிகளாக இருந்தவர்களின் பட்டியலில் மிக முக்கிய இடம் பெறுகிற சூ யியினுடைய  பர்மா  பிரவேசத்தின் முக்கிய காலக்கட்டத்தை பதிவு செய்கிற விதமாக வெளி  வந்திருக்கிற ஒரு திரைப்படம் ‘The Lady’

பர்மாவின் நவீன ராணுவத்தை கட்டமைத்தவரும், பர்மீய மக்களின் விடுதலைக்காக போராடியவருமான ஆங் சான்-னின் இரண்டு வயது மகளான சூ யி, தனது அப்பாவிடமிருந்தே பர்மாவின் வரலாற்றை தெரிந்து கொள்கிறாள். எத்தனை முறை பர்மாவின் சரித்திரத்தைக் கேட்டபோதும் அந்த சின்னப் பெண்ணுக்கு அலுப்பதே இல்லை. அதைச் சொல்லிக் கொண்டே இருப்பதில் அந்தத் தகப்பனுக்கும் தொய்வு ஏற்படுவதில்லை. பிரிட்டிஷ் பிடியில் இருந்து சுதந்திரம் பெற்று பர்மாவில் மக்களாட்சி நிறுவ வேண்டிய முக்கியமானதொரு வரலாற்று சம்பவம் நடக்கவேண்டிய சில நொடிகளுக்கு முன்பு ராணுவப் புரட்சியாளர்களால் ஆங் சான் கொல்லப்படுகிறார்.

அதன் பிறகு நாம் சூ யியை இங்கிலாந்தில் சந்திக்கிறோம். இப்போது அவர் தனது இரண்டு மகன்களுடனும், அவரைப் பிரியமுடன் பார்த்துக் கொள்ளும் கணவன் ஆரிஸுடனும் நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அப்படியான ஒரு நேரத்தில், பர்மாவில் மாணவப் புரட்சி வெடித்திருப்பது குறித்து தொலைக்காட்சி தனது செய்தியினை தெரிவிக்கிறது. ராணுவவீரர்கள் மாணவர்களை துரத்தித் துரத்தி அடிப்பது போன்றதான காட்சி சூ யியை வெகுவாக பாதிக்கிறது. அதிலிருந்து மீள்வதற்குள்ளாக பர்மாவில் இருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. சூயியின் அம்மா உடல்நலம் இல்லாமல் அரசாங்க மருத்துவமனையில் இருக்கும் செய்தியைத் தாங்கி வரும் அந்தத் தொலைபேசி அழைப்பு சூயியை மேலும் கவலைக்குள்ளாக்குகிறது.    

சூயி பர்மாவுக்குப் பயணமாகிறார். விமான நிலையத்தில் தொடங்கி அவருடைய ஒவ்வொரு பேச்சும், செய்கையும், அசைவும் ராணுவத்தினரால் கண்காணிக்கப்படுகிறது. அரசாங்க மருத்துவமனையின் வாசலில் வந்திறங்கும் சூயிக்கு, ‘தாய் நாட்டை நேசியுங்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிற ஒரு வாசகம் கசப்பைத் தருகிறது.

படுக்கையில் கிடக்கும் அம்மாவை நலம் விசாரிக்கிற சூயிக்கு அரசாங்கத்தின் வெவ்வேறு அடக்குமுறைகளால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் பர்மீய மக்கள் நோயாளிகளாக சுற்றிலும் காணக்கிடைக்கிறார்கள். அதில் அநேகம் பேர் ராணுவத் தாக்குதலில் அடிபட்ட மாணவ மாணவிகளாக இருக்கிறார்கள். மின்சார வசதி இல்லாத, கரப்பான் பூச்சிகளின் நடமாட்டங்களுக்கு நடுவே அன்றைய இரவை மருத்துவமனையில் கழிக்கிறார் சூயி. மறுநாள் விடியலில் மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்குகிறது. கலவரம் வெடிக்கிறது. போராடும் மாணவர்களின் கைகள் தனது அப்பாவின் புகைப்படத்தை தூக்கிப் பிடித்திருப்பதைப் பார்க்கும் சூயி திகைத்துப் போய் நிற்கிறார். அவர் கண் முன்னே ராணுவம் மாணவர்களை இரக்கமில்லாமல் அடிக்கிறது. அடிபட்டு ரத்தம் வழிய மருத்துவமனை நோக்கி ஓடி வருபவர்களை சூயி கைத்தாங்கலாகப் பிடித்து உள்ளே  அழைத்துப் போகிறார். இந்த சம்பவம் சூயி மனதினுள் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. 

அம்மாவை அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் சொன்ன காரணத்தால் மருத்துவமனையில் இருந்து ரங்கூனில் இருக்கும் தனது வீட்டுக்கு வருகிறார் சூயி. ரம்மியமான சூழலில் இருக்கும் அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலும் பின்னாளில் தனக்கு உற்ற துணையாக இருக்கப்போகிறது என்பது தெரியாமலேயே ஒவ்வொரு அறையையும் நிதானமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் அவரைத் தேடி மாணவர்கள், பேராசியர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் மாற்றம் விரும்புபவர்கள் என பலரும் வரத் துவங்குகிறார்கள். அவர்கள் அனைவருமே சூயியிடம் அவரது அப்பாவின் சாயலை கண்டடைகிறார்கள்..

சூயியின் ஒவ்வொரு செயலுமே கண்காணிக்கப்பட்டு ராணுவ ஜெனரலுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மாந்திரீக விஷயங்களில் நம்பிக்கை வைத்திருக்கிற ஜெனரலிடம், ‘ஆபத்து தூர தேசத்தில் இருந்து வந்திருப்பதாக’ சூனியக்கார கிழவி ஒருத்தி குறி சொல்ல, சூயி மேல் அவரது கண்காணிப்பு மேலும் இறுகுகிறது.

சூயியின் கணவர் ஆரிசும், அவரது மகன்களும் அவரைக்காண  பர்மாவுக்கு வருகின்றனர். சூயிக்கு பர்மாவில் கிடைத்திருக்கிற வரவேற்பு ஆரிசை ஆச்சர்யப்படுத்துகின்றன. இதற்கிடையில் ராணுவ ஜெனரல் பதவி விலகியதாகவும், விரைவில் பர்மாவில் பொதுத் தேர்தல் நடைபெறப் போவதாகவும் அறிவிப்பு வருகிறது. சூயி திகைப்புக் கொள்கிறார். இத்தேர்தலில் பங்குபெறச் சொல்லி சூயியின் நல விரும்பிகள் அவரை வற்புறுத்துகின்றனர். ஆரிசும் தன் பங்குக்கு சூயியை உற்சாகப்படுத்துகிறார். முடிவில் சூயி தேர்தலில் நிற்க ஒத்துக் கொள்கிறார்.

‘நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரசி’ என்ற கட்சியின் சார்பாக மக்களை சந்தித்து  பேச வருகிறார் சூயி. இளைஞர்களும், மாணவ மாணவிகளுமாக சூயியைச் சூழ்ந்து கொண்டு கொண்டாடுகின்றனர். அவர் மேடைக்குச் சென்று உரையாற்றும் முன்பு ஆரிசிடம், ‘நான் இதுவரை பொது மேடையில் பேசியதில்லை...’ என்கிறார். தைரியம் சொல்லி அனுப்பி வைக்கிறார் ஆரிஸ். சூயி பேசுகிற ஒவ்வொரு வார்த்தையையும் அவர் கவனத்துடன் கேட்டுக் கொள்கிறார். சூயினுடைய இக்கன்னிப்பேச்சுக்கு பர்மீய மக்கள் மிகுந்த வரவேற்பை அளிக்கிறார்கள்..

குறி சொல்லும் கிழவியின் பேச்சை நம்பி மக்களின் மதிப்பைப் பெற்றுவிடலாம் என பதவியை ராஜினாமா செய்த ஜெனரலுக்கு இந்த சம்பவம்  பலத்த அதிர்ச்சியைத் தருகிறது. ஒரு கோடி பேர் கலந்துகொண்ட அந்த கூட்டத்தின் ஒற்றுமையை இனிமேல் எப்படி கலைப்பது என்கிற தீவிர ஆலோசனையில் இறங்குகிறது ராணுவம்.

அதே சமயம் பர்மாவின் ஒவ்வொரு திக்கிலும் சூயிக்கு ஆதரவு மேலும்மேலும் பெருகிக் கொண்டே வருகிறது. திகைத்த ராணுவம் முதலில் இங்கிலாந்துக் காரரான ஆரிசின் விசாவை நிறுத்தி வைத்து அவரை உடனே இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கிறது. அதுவரை எந்த சூழலையும் சமாளிக்கலாம் என்று நினைத்திருந்த சூயிக்கு தனது கணவனின் பிரிவு தளர்வை உண்டு பண்ணுகிறது. இதே சமயத்தில் சூயியின் அம்மாவும் இறந்து போகிறார்.

அடுத்தடுத்து சூயியின் ஆதரவாளர்கள் கண்காணாத இடங்களுக்கும், சித்திரவதைக் கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இது குறித்து சர்வதேச அமைப்புகளின் கவனத்தைப் பெரும் முயற்சியில் இறங்குகிறார் சூயி. இது பெரும் தலைவலியை ஜெனரலுக்கு உண்டாக்குகிறது. மிகத் தீவிரமான ஆலோசனைக்குப் பிறகு சூயியை வீட்டுக் காவலில் வைக்கவேண்டும் என்கிற ஜெனரலின் முடிவை ராணுவ உயர்மட்டம் எடுக்கிறது. அதன்படி சூயி யாருமில்லாத அவரது வீட்டில் வெளி உலகத் தொடர்பு துண்டிக்கப் பட்டு ராணுவத்தினர் சூழ்ந்திருக்கப் பணிப்பெண்ணுடன் தனித்து விடப்படுகிறார். பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் சூயி கட்சியே பெரும்பான்மையான  இடங்களையும் கைப்பற்றுகிறது. ஆனாலும் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளாத ராணுவம் சூயியைத் தொடர்ந்து காவலிலேயே வைத்திருக்கிறது,.

சர்வதேச அங்கீகாரத்தினை பெறுவதன் மூலம் சூயியை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்கலாம் என முடிவு செய்யும் ஆரிஸ் அவருக்கு  அமைதிக்கான நோபல் விருதை பெற்றுத் தரும் முயற்சியில் இறங்குகிறார். அதன் பலனாக 1991ஆம் ஆண்டுக்கான நோபல் விருது சூயி க்கு வழங்கப்படுகிறது. விருது  விழாவை நேரடி அலைவரிசையில் கேட்பதற்காக வானொலி முன் ஒரு குழந்தைக்கான ஆர்வத்துடன் காத்திருக்கிறார் சூயி. விருதைக் காட்டிலும் அத்தருணத்தில் தனது குடும்பத்தினர் பேசும் குரல்களைக் கேட்பதிலேயே சூயி அதிக விருப்பத்துடன் இருக்கிறார். சரியாக அந்த நேரத்தில் மின்சாரம் தடைபடுகிறது. நொந்து போகிற சூயிக்கு பேட்டரியில் இயங்கும் ஒரு ரேடியோவினைத் தந்து உதவுகிறார் பணிப்பெண். உலகத்தின் மிக முக்கிய விருதாகக் கருதப்படும்  நோபல் பரிசினை சூயிக்கு வழங்கப்படும் அந்த நேரத்தில், தனித்த அறையின் இருளில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள யாருமேயின்றி அழுகையினூடே ஆங் சான் சூயி பியானோவை வாசித்துக் கொண்டிருக்கிறார்.

இதையெல்லாம் கூட அமைதியாக கடந்து விடும் சூயிக்கு பெரும் வருத்தத்தையும் பாதிப்பையும் தருகிறது ஆரிசின் உடல்நிலை. புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகும்  ஆரிசை சந்திக்க சூயி எடுக்கிற ஒவ்வொரு முயற்சியும் தோல்வியாகிறது. ஆரிஸ் பர்மா வருவதற்கான விசாவும் நிராகரிக்கப்படுகிறது. ஆரிசை சந்திக்க சூயி இங்கிலாந்து போனால் அவர் திரும்பி வருவதற்கு பர்மீய ராணுவம் அனுமதி அளிக்காது  என்பதால் வேறு வழியற்று இருவரும் தொலைபேசியிலேயே பேசிக் கொள்கின்றனர். அடிக்கடி தொடர்பு அறுந்து போகிற அவரது உரையாடல்களில் ஒருவரின் துயரம் மற்றவருக்கு தெரியக்கூடாது என்பதில் இருவரும் கவனமாகவே இருக்கின்றனர்.

தனது இறுதிக் காலங்களில் கூட சூ யியின் போராட்டத்திற்கு மிகுந்த உத்வேகம் கொடுத்துக் கொண்டே இருக்கும் ஆரிஸ் தனது ஐம்பத்தி மூன்றாவது பிறந்த நாளின் போது இறந்து போகிறார். ஆரிஸ் இறந்து போகிற செய்தி கூட வானொலி வழியாகவே தான் சூயிக்குத் தெரிய வருகிறது. தொடக்கக் காலத்தில் இருந்து தன்னை செதுக்கியவரும், தனக்காகவும், பர்மிய மக்களுக்காகவும் சிந்தித்தவருமான ஆரிசின் பிரிவு சூயியை நீண்ட கால சோர்வுக்குள் தள்ளுகிறது.

பல வருடங்கள் கழித்து புத்த பிக்குகள் தெருவில் இறங்கி போராடியதாலும், தொடர்ந்து வந்த சர்வதேச நெருக்கடியின் காரணமாகவும் 2010ஆம் ஆண்டு வீட்டுக் காவலில் இருந்து சூயி வெளியேறுவது காட்டப்படுவதோடு படம் நிறைவடைகிறது.

1989 ஆம் ஆண்டு தொடங்கி 2010 வரை சூயி பலமுறை வீட்டு சிறையில் இருந்திருக்கிறார். தனிமைத் தன்னை பாதித்துவிடாதபடியிருக்க  தன்னை உத்வேகப்படுத்தும் தலைவர்களின் வரிகளை எழுதி வீடு முழுவதும் ஒட்டி வைத்துக் கொள்கிறார். அவற்றில் முக்கியமான ஒருவராக இருக்கிறார் காந்திஜி. ராணுவம் தன் நெற்றியின் முன் துப்பாக்கியை  உயர்த்தும்போதெல்லாம் காந்தியின் அஹிம்சை வழியையே அவர் பின்பற்றுகிறார். அதனாலேயே அவரைக் குறி வைக்கிற துப்பாக்கிகளுக்கு நடுவே சலனமற்று மிக அமைதியாகவும், உறுதியாகவும் அவரால் நடக்க முடிந்திருக்கிறது. தன்னுடைய ஆதரவாளர்களை சித்ரவதை கூடத்தில் அடைக்கும்போது அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் உண்ணாவிரதத்தில்  இறங்க முடிகிறது. சூயின் அரசியல் போராட்டம் என்பது நீண்ட வரலாற்றை உடையது என்பதால் அதைக் கோடிட்டு காட்டுகிற அதே நேரம் அரசியலுக்காக தன் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் பொழுதுகளில் அவர் கொண்டிருந்த மனநிலையையும் பதிவு செய்கிறது ‘the lady’.

‘அரசியலைப் பிண்ணனியாக கொண்ட அற்புதமான காதல் காவியம்’ என்று இந்தப்படத்தைப் பற்றி சொல்கிறார் சூயியாக நடித்த பிரபல நடிகை Michelle yeoh. இந்தப் படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்ததோடல்லாமல் , பர்மீய மொழியை சரளமாகப் பேசவும் கற்றுக்கொண்டு தனது சொந்தக் குரலிலேயே பேசவும்  செய்திருக்கிறார் இவர். இதோடு சூயிக்கு பிடித்த இசைக்கருவியான பியானோவையும் கற்றுக் கொண்டிருக்கிறார்.  2011ஆம் ஆண்டு பர்மாவுக்கு வருகைத் தந்திருந்த இவரை சூயியாக நடித்தவர் என்பதாலேயே நாட்டை விட்டு வெளியேற்றியது பர்மா அரசு.

இந்தப் படத்தை இயக்கிய Luc Besson ஃபிரெஞ்சு திரைப்பட இயக்குனர். பர்மாவில் அதிகமாக விற்கப்பட்ட ‘திருட்டு டிவிடி’ இந்தப் படம் தான். ஹிலாரி கிளின்டன் சூயியை சந்திப்பதற்கு முன்பு அவரைப் பற்றி தெரிந்துகொள்ள இந்தப் படத்தை தான் பார்த்திருக்கிறார்.

‘நீங்கள் அரசியலைக் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அரசியல் எப்போதும் உங்களைக் கண்காணித்தபடியே இருக்கிறது’ என்பது சூயியின் பிரபலமான வார்த்தைகள். இவர் சொல்வது போல பர்மா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக அரசியலும் தனது ஒரு கண்ணை சூயியிடமே விட்டு வைத்திருந்தன. அரசியல் போராட்டத்திற்காக கணவன், குழந்தைகள், சராசரி ஆசைகள். அடிப்படை சுதந்திரம் என எல்லாவற்றையும் இந்த நூற்றாண்டில் ஒரு பெண் தியாகம் செய்திருக்கிறார் என்பதையே இந்தப் படம் நிறுவுகிறது.

ஜா.தீபா சென்னையில் வாழும் எழுத்தாளர் , திரைப்படத்துறையில் உதவி இயக்குநராக பணிபுரிகிறார்

ஜா.தீபா சென்னையில் வாழும் எழுத்தாளர் , திரைப்படத்துறையில் உதவி இயக்குநராக பணிபுரிகிறார். - See more at: http://andhimazhai.com/news/view/-a-separation.html#sthash.pPuuIlPm.dpuf

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com