கரையில் ஒதுங்கும் இசைக் குறிப்புகள்

கரையில் ஒதுங்கும் இசைக் குறிப்புகள்

பெண்ணென்று சொல்வேன்-18

பெண்ணின்  மொழி, திசை, இசை, வாசம் வீரம்,ஈரம், கவிதை, உயிர் என பெண்பாலை பற்றிப் பேசும் உலகப்படங்களை பற்றி ஜா.தீபா எழுதும் இத்தொடர் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அந்திமழையில் வெளிவரும்

’பியானோவின் கட்டைகள் கருப்பு வெள்ளை தான். ஆனால் அது எழுப்புகிற இசை மனதின் கோடிக்கணக்கான வர்ணங்களை எழுப்பக்கூடியது.” புகழ்பெற்ற எழுத்தாளர் மரியா மேனாவின் வாக்கியங்கள் இவை. இந்த வாக்கியங்களின் முழுத் தன்மையையும் உணரக்கூடிய அளவில் ஆஸ்திரேலிய நாட்டுப் படமான  ‘தி பியானோ’ வில் நிறுவிக் காட்டியிருக்கிறார் பெண் இயக்குனரான ஜேன் கேம்பியன்.

பத்தொன்பதாவது நூற்றாண்டின் மத்தியில் நியூசிலாந்தின் மலை கிராமம் ஒன்றில் நடக்கிற கதையாக பதிவு செய்திருக்கிறார் இந்தப் படத்தை. எப்போதும் ஆவேசமான அலைகளையே வீசிக்கொண்டிருக்கும் அந்த கடற்கரையில் ஒரு காலை நேரத்தில் எடாவும், அவளது ஆறு வயது மகளும் வந்து இறங்குகிறார்கள். எடாவிற்கு ஆறு வயதாக இருக்கும்போது அவள் என்னக் காரணம் என்று தெரியாமலேயே தனது பேச்சு சக்தியை இழந்திருக்கிறாள். அதன் பிறகான அவளது வாழ்க்கை முழுவதும் பியானோ இசைப்பதிலேயே கழிகிறது. இப்போது இந்த கடற்கரைக்கும் கூட அவள் தன்னுடைய மகள் ப்ளோராவுடன் மட்டுமல்லாமல் தன் பியானோவுடனே வந்திருக்கிறாள்.  இவர்களை இறக்கி விட்டு விட்டுப் படகு சென்றதும் தனிமையான கடற்கரையில் யாருடைய வருகைக்காகவோ காத்திருக்கத் தொடங்குகின்றனர் தாயும் மகளுமாக. அந்நேரத்தில் ப்ளோரா எடாவிடம் சைகையில் பேசுகிறாள். அவர்களின் பேச்சு மூலம் எடா, ஸ்டூவர்ட் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்வதற்காக தனது அப்பாவால் இங்கே அனுப்பபட்டிருக்கிறாள் என்பது தெரிகிறது. ப்ளோரா மணலில் விளையாடிக் கொண்டிருக்க, எடாவின் விரல்கள் பியானோவின் கட்டைகளை இஷ்டம்போல தடவிக் கொண்டிருக்கின்றன. அவர்களை அழைத்துப் போகும் ஆட்கள் வந்து சேராததால் கடற்கரையிலேயே அவர்களின் அன்றைய இரவுப் பொழுது கழிகிறது.

மறுநாள் காலை இவர்கள் எதிர்பார்த்த ஸ்டுவர்ட் வந்து சேருகிறான்.  அவனுடன் பெயின்ஸ் என்கிற நண்பனும், பொருட்களைத் தூக்கி செல்ல சில ஆட்களும் வந்திருக்கின்றனர். அனைவருக்குமே அத்தனைப் பெரிய பியானோவைப் பார்த்ததும் ஆச்சரியம் ஏற்படுகிறது. மற்ற பொருட்களைத் தூக்கிக் கொள்ளும் ஆட்கள், பியானோவை மட்டும் எடுத்துச் செல்ல மறுக்கின்றனர். கடினமான பாதையைக் கொண்ட மலைப்பகுதியில் பியானோவோடு செல்ல முடியாது என்பதால் கடற்கரையிலேயே விட்டு விட்டு வரும்படி ஸ்டூவர்ட் எடாவிடம் சொல்கிறான். அவள் கோபம் வந்து அதனை மறுக்கிறாள். அவன் சொல்கிற சமாதானத்தை கொஞ்சமும் கண்டுகொள்ளாத எடா தன்னுடைய போக்கில் பேசிக் கொண்டே போக, அதை வேகவேகமாக மொழிபெயர்த்துக் கொண்டே இருக்கிறாள் ப்ளோரா.

வேறுவழியில்லாமல் ஸ்டூவர்டின் தீர்மானத்தின்படி பியானோ கடற்கரையிலேயே இருக்கிறது. அதை விட்டுச் செல்ல மனமில்லாமல் ஏக்கமாக அதனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வருகிற எடாவை கவனித்தபடி இருக்கிறான் பெயின்ஸ். அந்த ஒருநாள் சம்பவத்திலேயே ஸ்டூவர்டை எடாவுக்கு பிடிக்காமல் போகிறது.

மிகுந்த பிரயாசைக்கிடையே, மலைத்தொடருக்குள் இருக்கும் மாவ்ரி பழங்குடியினரின் குடியிருப்புக்கு வந்து சேருகிறார்கள் அவர்கள். மழை பொழிகிற ஒரு நேரத்தில் அங்கு வைத்து எடாவுக்கும், ஸ்டூவர்டுக்கும் திருமணம் நடக்கிறது. திருமண சடங்குகளில் எந்தவித அக்கறையும் காட்டாது இருக்கும் எடாவின் நினைவெல்லாம் மழையில் நனைந்துகொண்டிருக்கும் கடற்கரையோர பியானோவிலேயே இருக்கிறது.

தான் எப்படியாவது எடாவிடம் அன்பைப் பெற்றுவிடவேண்டும் என ஸ்டூவர்ட் எடுக்கிற முயற்சிகள் எடாவை நெருங்காமலே போய்விடுகிறது. எடாவின் முதல் கணவனைப் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு ப்ளோராவிடமே அவனைப்பற்றி விசாரிக்கின்றனர் அங்குள்ள பெண்கள். தன்னுடைய அப்பாவைப் பற்றி அம்மா சொன்ன ஒரு கதையை  அவர்களிடம் விவரிக்கிறாள் ப்ளோரா. அது ஒரு மாயாஜாலக் கதையில் வருகிற சம்பவம் போலவே இருக்கிறது.

ஒரு கட்டத்தில் தன் கணவன் மூலம் பியானோ கிடைக்காது என்று தெரிந்துவிட்டதால் பெயின்ஸிடம் எடா உதவி கேட்க, அவளுடைய உறுதியை மறுக்கஇயலாத அவன் அம்மாவையும், மகளையும் கடற்கரைக்கு அழைத்துப் போகிறான். பியானோவை கண்டதும் தனது ஜீவனையே அங்கு பார்த்துவிட்ட நெகிழ்ச்சியோடு அதனை வாசிக்கத் துவங்குகிறாள் எடா. காலை தொடங்கி அந்திநேரம் வரை விடாது அந்தக் கடற்கரை எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது எடாவின் இசை. அவளது ஆர்வமும், மகிழ்ச்சியும் பெயின்சை ஆச்சர்யப்படுத்துகிறது.

அந்த பியானோவைத் தான் கூலி கொடுத்து மலையில் தனது வீட்டுக்குக் கொண்டு செல்வதாகவும், அதற்கு பதிலாக எடா அவனுக்கு பியானோ கற்றுத் தரவேண்டும் என்றும் கேட்கிறான் பெயின்ஸ். ஒத்துக் கொள்கிறான் ஸ்டூவர்ட். தன்னுடைய பியானோவை யாரும் தொட அனுமதிக்க முடியாது என்று மறுக்கும் எடா, அந்த பியானோவை ஸ்பரிசிக்காமல் இருக்க முடியாத காரணத்தால் பெயின்சுக்கு சொல்லித் தர முடிவெடுக்கிறாள்.

அதன் காரணமாக அடிக்கடி பெயின்ஸ் வீட்டிற்கு செல்லத் தொடங்குகிறாள் எடா. அவளை வாசிக்கச் சொல்லி விட்டுத் தான் தள்ளி நின்று கொண்டு அவளது இசையை கேட்க மட்டும் செய்கிறான் பெயின்ஸ். இந்தச் சுதந்திரம் எடாவைக் கவருகிறது. இசையின் உச்சம் பெயின்சை பித்தம் கொள்ளச் செய்கிறது. தான் சொல்வதை எடா செய்தால்  ஒரு நாளைக்கு ஒரு கட்டை வீதம் பியானோவை அவளுக்கேத் தந்து விடுவதாக உறுதித் தருகிறான் பெயின்ஸ். இந்த ஒப்பந்தம் அவர்களுக்குள் நாளுக்கு நாள் நெருக்கத்தை ஏற்படுத்தி விடுவதாக அமைந்துவிடுகிறது. மனதளவில் ப்ளோரா ஸ்டூவர்டை அப்பாவாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கிய காரணத்தால் அம்மா பெயின்சுடன் நெருக்கமாக பழகுவது பிடிக்காமல் போகிறது.

இவர்களின் நெருக்கத்தை ஒருநாள் நேரிலேயே சந்த்தித்துவிடுகிற ஸ்டூவர்டினால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போகிறது. ஆனாலும் எடாவிடம் தன்னை விட்டுப் போகவேண்டாம் என கெஞ்சுகிறான். அவளை வீட்டினுள் வைத்துப் பூட்டுகிறான். எடா அவனுடைய ஒவ்வொரு செய்கைக்கும் எதிர் வினையில்லாமல் அமைதியாகவே இருக்கிறாள். பெயின்ஸ் திரும்பத் தந்துவிட்ட தன்னுடைய பியானோவை வாசிப்பதிலேயே அவளது நேரங்கள் இரவும் பகலும் எனச் செல்கின்றன.

ஒருநாள் பியானோ கட்டை ஒன்றில் எடா ‘உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் பெயின்ஸ்’ என்று எழுதி அதை பெயின்ஸிடம் தரச் சொல்லி ப்ளோராவிடம் கொடுத்து அனுப்புகிறாள். அவள் நேராக ஸ்டூவர்டிடம் கொடுத்துவிடுகிறாள். ஆத்திரத்தில் ஸ்டூவர்ட் எடாவை இழுத்து வீட்டை விட்டு வெளியேத் தள்ளுகிறான். அதுவும் தீராமல், கோடாரியால் அவளது சுட்டுவிரலையும் வெட்டிவிடுகிறான். எடா அதிர்ச்சியில் இருந்து மீண்டு, தனக்கு நடந்ததை அறிந்து கொள்ளுகிற சுதாரிப்புக்கு வந்ததும், ஒரு தீர்மானம் கொண்டவளைப்போல் எந்தக் கதறலோ, அழுகையோ இல்லாமல் ரத்தம் சொட்டும் விரலோடு அமைதியாக உறைந்து இருக்கிறாள். அன்றைய இரவுப் பொழுது வரை கூட அவளது அமைதி நீடிக்கிறது. இது ஸ்டூவர்டை கலவரப்படுத்துகிறது. அவளை சமாதானம் செய்யும் முயற்சியாக அவளோடுப் பேசத் தொடங்குகிறான். ஆனால் அவளது தீவிரமான பார்வை அவனை நெருங்கிப் பேசவிடாமல் செய்கிறது.

ஸ்டூவர்ட் அந்த இரவில் கிளம்பி பெயின்சைப் பார்க்கச் செல்கிறான். அவனிடம், ‘உன்னிடம் இதுவரை எடா ஏதாவது பேசி இருக்கிறாளா? எனக் கேட்கிறான். ‘சைகை மொழியிலா?’ என்று ஒன்றும் புரியாமல் பெயின்ஸ் கேட்க, ‘இல்லை வார்த்தையாக ஏதேனும் பேசியிருக்கிறாளா?’ என்கிறான். இல்லை என்கிறான் பெயின்ஸ். ‘இன்று என்னிடம் பேசினாள். அவள் உதடுகள் அசையவில்லை. ஆனால் அவள் பேசியது இது தான், ‘நான் என்னுடைய மனதை நினைத்து பயப்படுகிறேன். அது விசித்திரமானது, திடமானது. நான் போகிறேன். என்னைப் போகவிடுங்கள்’ என்று அவள் சொன்னாள். அதை என்னால் தெளிவாக என் மூளைக்குள் கேட்க முடிந்தது’ என்று சொல்லி விட்டு அங்கிருந்துப் போகிறான்.

அடுத்தக் காட்சியில் எடா வந்து இறங்கிய கடற்கரைக் காட்டப்படுகிறது. எடாவும், ப்ளோராவும் பெயின்சுடன் படகில் ஏறுகின்றனர். கூடவே பியானோவும். பாதிவழியில் கப்பல் சென்று கொண்டிருக்கும்போது, பியானோவைக் கடலில் போட்டுவிடும்படி திடீரென சொல்கிறாள் எடா. பெயின்சின் எந்த சமாதானத்தையும் எடா கண்டுகொள்ளாமல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறாள். பியானோவின் கயிறு துண்டாக்கப்படுகிறது. அது கடலில் விழுந்த சமயம், கயிற்றின் மற்றொரு முடிச்சில் தனது காலை விட்டுக் கொள்கிறாள் எடா. பியானோ எடாவையும் இழுத்துக் கொண்டு கடலுக்குள் செல்கிறது. கடலின் அடிவாரத்தை நெருங்கும்போது, சட்டென தந்து மனதை மாற்றிக் கொள்கிறாள் எடா. தனது காலை விடுவித்துக் கொண்டு கடலின் மேற்புறத்திற்கு வருகிறாள். அவளைக் காப்பாற்றிவிடுகின்றனர். அந்த நேரத்தில் அவளது மனதின் குரல் இப்படி சொல்கிறது, ‘என்ன ஒரு மரணம்? எப்பேர்பட்ட சந்தர்ப்பம்? என்னவொரு ஆச்சரியம்? எனது மனது வாழ்வதைத் தான் தேர்ந்தெடுத்துள்ளதா?” கேள்விகளின் முடிவில் அவள் மகிழ்ச்சியுடன் குடும்ப வாழ்க்கை நடத்துவதாக முடிகிறது திரைப்படம்.

இந்தப் படத்தில் ஒருவிதமான கற்பனை உலகில் தனக்குள்ளே வாழ்கிற ஒரு பெண்ணாக எடா இருக்கிறாள். எந்த முடிவை அவள் மனம் எடுத்தாலும் சட்டென்று அந்தக் கணத்தின் தீவிரத்தை அது அடைந்து விடுகிறது. இதைத் தான் அவள் தனது மனதின் விசித்திரப் போக்காக பார்க்கிறாள். தனது மனதின் வெவ்வேறு வண்ணங்களை இசை மூலமாகவே அவளுக்கு மொழிபெயர்க்கத் தெரிந்திருக்கிறது. அவளின் ஆதாரத்தை ஸ்டூவர்ட்டினால் கடைசி வரை புரிந்து கொள்ள முடியாமலே போகிறது. ஒரு சராசரியான பெண்ணாக தன்னுடைய எதிர்பார்ப்பை அவள் பூர்த்தி செய்ய வேண்டுமென்பதே அவனுடைய எதிர்பார்ப்பாக இருந்திருக்கிறது.

பியானோ படத்தின் இசை உலகளவில் பேசப்பட்டது. ‘எனக்கு இசை குறித்து எந்த அறிவும் கிடையாது. ஆனால் இசை சம்பந்தப்பட்ட படம் எடுக்க வேண்டும் என்று மட்டுமே எனக்குத் தோன்றியது. அது ஆச்சரியம் தான். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் மிக்கேல் நைமனிடம் கதையை சொன்னபின் எப்படிப்பட்ட இசை தேவை என்பதை எனக்கு துல்லியமாகச் சொல்லத் தெரியவில்லை. எடாவின் மனநிலையை பியானோ பிரதிபலிக்க வேண்டும் எனபது மட்டும் எனக்கு தெரியும். அவளின் மனநிலையில் பேசக்கூடிய பெண்ணாக இருந்தால் என்னவெல்லாம் பேசியிருப்பாள் என்பதை வசனங்களாக எழுதிக் கொடுத்தேன். மிக்கேல் அதை சரியாக புரிந்து கொண்டார்” என்கிறார் படத்தின் இயக்குனர் ஜேன் கேம்பியன்.

இயல்பாகவே மனித இனத்தின் வேர்கள் குறித்து ஆய்வு செய்வதில் ஆர்வம் கொண்டிருக்கிற ஜேன் கேம்பியனின் முந்தைய படங்களுமே நியூசிலாந்து குறித்த அவரது ஆழமான அறிவை சொல்லுவதாகவே இருக்கிறது. இந்தப் படத்திலும் கூட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவன் அந்தக் காட்டை விலைக்குத் தரும்படி கேட்கிறபோது, மாவ்ரி இனத்தின் மூத்த குடிமகன், ‘இந்தக் காடு முழுவதும் எனது மூதாதையரின் சடலங்கள் புதைந்து கிடக்கின்றன. நீ கொடுக்கும் காசுக்கு அவர்களின் எலும்புகளை விற்க சொல்கிறாயா?” என்று கேட்கிறார். மேற்கத்திய கலாசாரம் நியூசிலாந்தை எப்படி ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது என்பதை படத்தின் பின்னணி அங்கங்கே சொல்லிக் கொண்டே நகருகிறது.

கடந்த இருபது வருடங்களாக ‘கிளாசிக்’ என்று வகைப்படுத்தப்பட்ட படங்களின் வரிசையில் ‘பியானோ’ படத்திற்கு ஒரு இடம் இருக்கிறது. ‘படத்தின் கதையை யோசிக்கும்போது எல்லாம் சரியாக இருந்தது. அதைத் திரைக்கதையாக மாற்றும்போது தான் கஷ்டம் தெரிந்தது. எழுத்தில் எப்படி கொண்டு வருவது என்பதிலேயே எனக்கு பல நாட்கள் ஆகிவிட்டன’ எனச் சொல்லும் ஜேன் கேம்பியன் ‘சிறந்த திரைக்கதைக்கான’ ஆஸ்கர் விருதை இந்தப் படத்திற்காக பெற்றார்.

ஒரு படத்தின் பிரமாண்டத் தன்மை என்பது காட்சிகளை அழகுபடுத்துவதில் இல்லை, அதன் தீவிரத்தைக் காட்டுவதிலேயே இருக்கிறது என்பதை  இந்தப் படம் தொடங்கியதுமே உணர்த்திவிடும். அது படம் முடியும் வரையிலும் தொடர்கிறது. 

(ஜா. தீபா சென்னையில் வாழும் எழுத்தாளர். திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் பணிபுரிகிறார்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com