மொழி எப்போதுமே பாமரனின் சொத்து !

மொழி எப்போதுமே பாமரனின் சொத்து !

தெய்வத் தமிழ் நாட்டினிலே வெண்ணிலாவே...18

" ஊருக்கு புறப்படுவதற்கு முன்பு கம்ப்ளீட் செக் - அப் ஒன்று செய்து கொள்ளுங்கள் " என்று கபிலனைப் பார்த்து சொல்லியவாறு நடந்தாள் டாக்டர் செண்பா.

அமெரிக்கவில் உள்ள அவர்களுடைய மகனுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது சில நாட்களில் புறப்பட இருக்கிறார்கள்.

" செண்பா ! ஆங்கிலம் சேர்க்காமல் பேச முடியாதா உன்னால் ! ' கப்ம்ளீட் செக்கப்' என்பதற்கு முழுமையான உடல் பரிசோதனை என்று கூறலாமே " என்றான் கபிலன்.

" உண்மை ! சொல்லலாம் ! நல்ல தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தவே ஆசை.. முடியவில்லை " என்றாள் செண்பா.

தமிழ் வேந்தன் சிரித்தான் " ஒரு நிகழ்ச்சி ! பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஒரு விழாவில் பேராசிரியர் அன்பழகனும், தமிழ் அறிஞர் அ.ச.ஞானசம்பந்தனும் பேசினார்கள். பேராசிரியர் தமிழில் பிற மொழி சொற்கள் கலக்காமல் பேசுவதை வற்புறுத்தினார் அ.ச.ஞா. , ' அது அவ்வளவு அவசியமில்லை' என்றார் ' தமாஷ் என்னவென்றால் , பேராசிரியர் பேச்சில் பிற மொழி சொற்கள் முப்பதுக்கும் மேல் இருந்தன! அவசியமில்லை என்று கூறிய அ.ச.ஞா. பேச்சில் பிறமொழி சொற்கள் ஒன்று கூட இல்லை" - தமிழ் வேந்தன் கூறினான் !

"ஓ !" என்றாள் செண்பா.

"எல்லாமே பழக்கப்படுத்திக் கொள்வதில் இருக்கிறது . இன்னொரு நிகழ்ச்சி ! கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் ஆரம்பத்தில் தூய தமிழில் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ' தூய தமிழில் பேச வேண்டும் ' என்கிற மறைமலை அடிகளார் போன்றோர் நடத்திய இயக்கத்தில் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஒரு முறை பல்லாவரத்தில் உள்ள மறைமலை அடிகளார் வீட்டிற்கு சென்றார் அவரை நேரில் பார்க்க ஆசை ! அழைப்பு மணியை அடித்தார். " யாரு ? போஸ்ட்மேனா ?" என்று கேட்டவாறு கதவைத் திறந்தார் மறைமலை அடிகளார்!"

"அடடா!" என்றான் கபிலன்.

" ஜீவா புரிந்து கொண்டார் . சாதாரணமாக பேசும்போது பிறமொழி நாம் அறியாமல் நுழைந்து விடுகிறது ! ஒன்று அறிந்து கொள்ளுங்கள். பேராசிரியர் அன்பழகன் மிகச் சிறந்த தமிழ் அறிஞர்.எதையும் வியப்பு தரும் அளவுக்கு தெளிவாகப் பேசும் ஆற்றல் மிக்கவர். ' வள்ளுவம்' பற்றி அவர் பேசினால்.... அற்புதம் ! அதே போல மறைமலை அடிகளார் ஒரு அறிவுக்கடல்... தமிழுக்கும் சைவத்துக்கும் அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது. நாகப்பட்டினத்தில் அவர் சிலையை நான் பார்க்க நேர்ந்தால் பூமாரி மொழிந்து விட்டே நகர்வேன் " என்றார் தமிழ் வேந்தன்.

" ஆமாம் ! நீ கூறிய இரண்டு நிகழ்ச்சிகளும் எதேச்சையாக நடந்தவை . அதையடுத்து அவர்களது புலமையை யாராது எடை போடுவார்களா என்ன ! மறைமலை அடிகளார் தூய தமிழில் எழுதாத நூலுக்கு முன்னுரை தரவே மறுத்தவர். " மணிப்பிரவாள நடை நூலுக்கு முன்னுரை அளிப்பது என் குறிக்கோளுக்கு எதிரானது " என்று பதில் எழுதிவிடுவார்கள்" - கபிலன் கூறினான்.



"உயர்ந்த நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் வாழ்க்கையில் கடைபிடித்த பெரியவர் மறைமலை அடிகளார். யாராவது மாநாட்டுக்கு அழைத்தால் , தனக்கு என்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதில் இருந்து மாநாட்டு பந்தல் எப்படி அமைய வேண்டும் என்பதுவரை முன் கூட்டி கடிதம் எழுதிவிடுவார். ' பந்தலுக்கு நாற்புறமும் காற்று வருவதற்கு சாளரங்கள் வைத்த அடைப்பு இருக்க வேண்டும் . மேலே துணி கட்டி அழகுபடுத்தி விளக்குகள் தொங்க விடுக. சிற்றுண்டியும் உணவும் மிகவும் சுவையாக இருக்கும்படி கைதேர்ந்த சமையற்காரர்களை ஏற்படுத்துக ' என்று எல்லாவற்றையும் குறிப்பிடுவார்" என்றான் தமிழ்வேந்தன் .

" இம்மாதிரி தமிழ் அறிஞர்களை ஆண்டவன் நமக்கு மீண்டும் தரட்டும் " என்றான் கபிலன்.

அன்று மெரினா கடற்கரையில் புயல் எச்சரிக்கை காரணமாக கூட்டம் குறைவு அலை ஓசை உரக்க கேட்டது. மூவரும் சற்று நேரம் அமைதியாக இருந்தன.

செண்பா கேட்டாள்:

" தமிழில் இருந்து பல சொற்கள் பல மொழிகளுக்கு போயிருக்கின்றன அல்லவா ?"

" ஆம் ! தமிழ்தான் உலகின் முதல் மொழி எல்லா மொழிகளிலும் தமிழ் சொற்களின் ஆதிக்கம் இருக்கிறது. ' நேவி ' என்கிறார்கள். 'நாவாய் ' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து போனதுதான்!" என்றான் கபிலன்.

" தமிழ் வேந்தரே நீங்கள் இதை இன்னமும் சற்று விளக்க முடியுமா?" என்றாள் செண்பா- கபிலன் சொல்வதில் திருப்தி ஏற்படாமல்! தமிழ் வேந்தன் பேசினான்.

"தமிழ் மொழியின் சொற்கள் திரிந்தும் மாறியும் பல மொழிகளில் உள்ளன. சீன மொழியில் இப்போதும் நிறைய தமிழ் சொற்கள் உள்ளன. 'பாழ்' என்ற சொல்லை எகிப்திய மொழியில் 'பாட்' என்று ஆகிறது. 'விழி'என்பது இலத்தீனில் ' VIDE ' ஆகி , வீடியோ பிறந்தது. 'பாழ்'என்பதை BAD என்கிறது இங்கிலீஷ். பழந்தமிழில் ' மிசிரம் என்றால் எகிப்து நாடு. எகிப்தியர் தம் நாட்டை ' மிசிர் ' என்று இன்றும் அழைக்கின்றனர். இது போன்ற அருமையான செய்திகளை ' சாத்தூர் சேகரன் ' என்பார் எழுதிய 'இடைக்கால தமிழ்' என்ற நூலில் படிக்கலாம். அது ஒரு அற்புதமான ஆய்வு புத்தகம். தமிழின் பெருமையை தமிழர் உலகெங்கும் பரவி இருந்ததை உணர்த்தும் நூல். மொழி எப்போதுமே பாமரன் சொத்து. பண்டிதர்கள் இலக்கியம் படைக்க முடியுமே தவிர மொழியை தம் விருப்பம் போல ஆட்டி படைக்க முடியாது என்ற ஒரு அழகான கருத்தை சாத்தூர் சேகரன் கூறி இருப்பார். எழுதுவது இடவலமாக மாறிய இடங்களில், தமிழ் சொற்களும் மாறின.'ஓது' என்கிற தமிழ் சொல். (துஓ) துவா என்று அரபிச் சொல் ஓர் உதாரணம்."

- தமிழ்வேந்தன் முடித்த போது , பலத்த காற்று வீசியது. தூறல்கள் பலமாக விழுந்தன. மூவரும் எழுந்தனர்.



" யு . எஸ். போவதற்கு முன் இன்னும் சில முறை தான் சந்திக்க முடியும் " என்றாள் செண்பா.

- தொடரும்

ஞாயிறு விட்டு ஞாயிறு தோறும் தமிழ்வேந்தனின் 'தெய்வத் தமிழ் நாட்டினிலே வெண்ணிலாவே...' அந்திமழையில் வெளிவரும்....

'தெய்வத் தமிழ் நாட்டினிலே வெண்ணிலாவே...பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

  டிசம்பர்   14 , 2008

அடுத்து>>>

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com