கம்பனும் காந்தியடிகளும்

கம்பனும் காந்தியடிகளும்

தெய்வத் தமிழ் நாட்டினிலே வெண்ணிலாவே...19

முன்பனிக்கால இரவு . வானில் நிலா இல்லை. கரு முகில்கள் தவழ்ந்து கொண்டிருந்தன இதமான குளிர்.

மெரினா கடற்கரையில் , காந்தியடிகள் சிலை அருகே சற்று நின்று தமிழ்வேந்தன் , கபிலன் , டாக்டர் செண்பா மூவரும் நடந்தனர்.

"மகாத்மாவின் இந்த அற்புதமான சிலையை பார்க்கும் போதெல்லாம் எனக்கு கம்பனும் , இராமபிரானின் உயர்ந்த குணமும் பளிச் சென்று நினைவுக்கு வரும் " என்றாள் செண் பா.

"டாக்டர் அம்மையாரே ! தங்களிடம் கம்பனின் அருமை பெருமையை கேட்டு நாளாயிற்று ! மகாத்மாவுக்கும் கம்பனுக்கும் என்ன உறவு " கேட்டான் தமிழ் வேந்த்ன்.

"செண்பா!கம்பனைப் பற்றி பேசு" என்றான் கபிலன்.
செண்பா பேசினாள் :

" நாமக்கல் கவிஞரை தமிழ் உலகம் மறக்க கூடாது. ' இலக்கிய இன்பம் ' என்கிற அவரது புத்தகம் படித்து வியந்திருக்கிறேன். யுத்த களத்தில் மாவீரன் ராவணன் உயிர் இழந்து வீழ்ந்து கிடக்கிறான் . அவன் முகத்தில் இதுவரை இல்லாத கம்பீர களை – பொலிவு ! அருகில் வந்து இதை பாரத்த ராமன் வருந்துகிறான். கருணாமூர்த்தி அல்லவா! அடடா ! கல்வியும் அழகும் ஆற்றலும் உள்ள இவனை நாம் வசப்படுத்தி , நல்லறிவு வரும்படியான மன மாற்றத்தை உண்டாக்கி , இவனையும் வாழவைத்து நாமும் மகிழ்ச்சி அடையாமல் கொன்று விட்டோமே ! இந்த கொலை த்தொழிலால் அடைந்த வெற்றி உண்மையான வெற்றி இல்லை. இவனை கொன்றதைக் காட்டிலும் நான் ( உண்ணாவிரதம் இருந்து ) பட்டினி கிடந்து இறந்து போயிருந்தால் அழியாத புகழாவது கிடைத்திருக்கும். என்று வருந்தி ராமன் தன் தோழன் விபீஷனிடம் இவ்வாறு கூறுகிறான்.

இது தான் காந்தியத்தின் எண்ணம் என்று சுட்டிக் காட்டுகிறார் நாமக்கல்லார். தாம் தியாகம் செய்து துன்பங்களை சகித்துக் கொண்டு , எதிரிக்கு நல் உணர்வு வரக்கூடிய மன மாறுதலை உண்டாக்கவேண்டும். அது முடியாவிட்டால் பட்டினி கிடந்து செத்துபோகவேண்டும்.கொலைத் தொழில் இறங்கிவிடக்கூடாது என்பதே காந்தீயத்தின் கருத்து.

காந்தியடிகளின் உண்ணாவிரத போராட்டம் புதுமையாக இருந்தது. கம்பன் தமிழுக்கு அதை பழமை ஆக்கிவிட்டான்" – செண்பா உற்சாகமாக நிறுத்தினாள்.



" செண்பா ! அந்த கம்பன் கவிதை என்ன ?" என்றான் தமிழ் வேந்தன் செண்பா மீண்டும் பேசினாள்.

"மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும்
வயங்கு இசை முயங்க மாட்டாது.
ஊண் தோழில் உகந்து தெவ்வர்
முறுவல் என் புகழை உண்ண
பூண் தொழில் அமைந்த மார்பா!
போர்புறம் கொடுத்தார் போன்ற
ஆண் தொழிலோரிற் பெற்ற
வெற்றியும் அவத்தம் என்றான்.

இது தான் அந்த பாடல். மகாத்மா கடைபிடித்துக் காட்டிய அகிம்சை வழி பற்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கம்பன் சொல்லியிருப்பதை நாமக்கல்லார் அழகுற கூறினார்! "

"கம்பன் என்றொரு மானிடன் என்று பாரதி அதிசயப்பட்டது உண்மை . கருணை வடிவமான ராமன் கொல்லா விரதம் பற்றி நினையாமல் இருப்பானா ? மகாத்மா ராம நாமம் எப்போதும் சொல்லி வந்ததை கம்பன் நியாயப்படுத்தி விட்டானே " என்றான் கபிலன்.

அவர்கள் கடற்கரையில் வழக்கமான இடத்தில் வந்து அமர்ந்தார்கள்.கபிலன் கண்களை சற்று கசக்கிக் கொண்டதை பார்த்த தமிழ் வேந்தன் –
"இப்படி கசக்காதே ! கண் ஒரு மெல்லிய அமைப்பு " என்றான்.

" என்ன காரணத்தினாலோ காலையில் இருந்து எரிச்சலாக இருக்கிறது " என்றான் கபிலன் .

" சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை ஒரு மாதமாக நிறுத்தியிருக்கிறார் " என்றாள் செண்பா.

தமிழ் வேந்தன் சிரித்தான் .


"எண்ணெய் விற்கிற விலையில் இப்படி ஆண்கள் பயன்படுத்துவது சரியா ? அது தவிர சனிக்கிழமை அண்கள் ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் ? 'சனி நீராடு' என்கிற பழமொழியை சொல்வீர்கள் . 'சனி நீராடு' என்றால் ஓடுகிற தண்ணீர் என்று பொருள்.நதியில் குளிக்க வேண்டும்" என்றான் தமிழ் வேந்தன்.

"ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன் என்பது ஆயிரம் பேரைக் கொன்றவன் என்று மாறியதைப் போல " என்றான் கபிலன்.



" இப்படி பல பழ மொழிகள் மாறிவிட்டன. நதிகளின் நடுவில் இருக்கும் மண் குதிர். அதை நம்பாதே என்பது மண் குதிரையை நம்பி சவாரி செய்வது போல் என்றாகிவிட்டது அல்லவா " என்றான் தமிழ் வேந்தன்.

திடீர் என்று சாலையில் 'வாழ்க' என்கிற கோஷங்களும் வெடி ஓசைகளும் கேட்டன."ஏழை பங்காளன் வாழ்க' என்ற வாழ்த்தொலி கேட்டது ஒரு அரசியல் தலைவர் திறந்த காரில் கையை அசைத்தவாறு சென்றார்.

"ஏழைப் பங்காளன் வாழ்க என்கிறார்களே " என்று தமிழ் வேந்தனும் கபிலனும் சிரித்தார்கள்.

"ஏன் சிரிக்கிறீர்கள் ?" என்றாள் செண்பா.


"ஏழைப்பங்காளன் என்ற சொல் மாணிக்க வாசகரின் அருமையான கண்டுபிடிப்பு வார்த்தை. அவர் பயன்படுத்திய சொல். உமை ஒரு பாகமாய் கொண்டவனை சிவ பெருமானை – அர்த்தநாரீஸ்வரனை குறிக்கும் ஏழை என்றால் பெண் . பெண்ணை தன் உடலின் ஒரு பங்காக வைத்திருப்பவன் ஏழைப்பங்காளன் ! " என்று விளக்கம் தந்தான் கபிலன்..

" அருமையான சொல் " என்றாள் செண்பா.

மூவரும் எழுந்த போது "அடுத்த வாரம் யுஎஸ் பயணம் . இன்னும் ஒரு சந்திப்பு உண்டு " என்று செண்பா கூறினாள்.



- தொடரும்

ஞாயிறு விட்டு ஞாயிறு தோறும் தமிழ்வேந்தனின் 'தெய்வத் தமிழ் நாட்டினிலே வெண்ணிலாவே...' அந்திமழையில் வெளிவரும்....

'தெய்வத் தமிழ் நாட்டினிலே வெண்ணிலாவே...பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

 டிசம்பர்   29 , 2008

அடுத்து>>>

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com