குபேரபட்டணம் கொள்ளை போனது !

குபேரபட்டணம் கொள்ளை போனது !

தெய்வத் தமிழ் நாட்டினிலே வெண்ணிலாவே...20

அன்று வழக்கத்திற்கு மாறாக சற்று சீக்கிரமாகவே மெரினா கடற்கரையில் அவர்கள் மூவரும் வந்து அமர்ந்தனர். மூவரிடமும் சற்று நேரம் அமைதி.

"இன்று காலை தமிழ் இசைசங்கத்தில் தேவாரம் பற்றிய ஓர் ஆய்வு சொற்பொழிவு இருந்தது. போகலாம் என்று திட்டம் போட்டோம். யு.எஸ். போகிற கலாட்டாவில் முடியாமல் போய்விட்டது " என்று மணலில் கையால் கிறுக்கியவாறு டாக்டர் செண்பா கூறினாள்.

"சொற்பொழிவு - தமிழில் உள்ள அழகான வார்த்தை இது "என்றான் கபிலன்.

"உண்மைதான் ! இந்த ' சொற்பொழிவு ' பிறந்த கதை தனியானது " என்றான் தமிழ்வேந்தன்..

"சொல்லுங்கள் .... சொல்லுங்கள்" என்று அவசரப்படுத்தினாள் செண்பா.

தமிழ்வேந்தன் பேசினான் :

"ஒரு சொல் ஒரு மொழியில் எப்படி உருவானது , வந்து சேர்ந்தது என்று சொல்ல இயலாது. ஆனால் சில சொற்கள் வந்தது எப்படி என்று பார்க்க முடியும். 'கணிணி' போன்ற சொற்கள் புதிய கண்டுபிடிப்புக்கு ஏற்ற புதிய சொல். ஆனால் சொற்பொழிவு அப்படி அல்ல. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 'பிரசங்கம்' என்று சொல்லே வழங்கி வந்தது ' சொற்பொழிவு ' - ' திருநெல்வேலியில் பிறந்தது ' தருமபுரி ஆதீனத்தின் தமிழ்ப்புலவராக இருந்தவர் பால்வண்ண முதலியார் அவருக்கு 'பிரசங்கம்' என்ற வார்த்தை கொஞ்சமும் பிடிக்கவில்லை. பல நாட்கள் ஆராய்ந்தார். 'சொற்பொழிவு' என்ற வார்த்தையை உருவாக்கினார். இந்த நல்ல வார்த்தையை பரப்பவேண்டும் என்பதற்காகவே 'சொற்பொழிவாற்றுப்படை' என்ற நூல் ஒன்றை எழுதினார். மேடையில் எப்படி பேசவேண்டும் என்றெல்லாம் பதில் எழுதி இருந்தார். அந்த புத்தகத்தை இலவசமாக எல்லாருக்கும் கொடுத்தார் !"

"ஓ ! அதனால்தான் ' சொற்பொழிவு ' என்ற சொல் பரவியதா ?" என்றாள் செண்பா.

"அப்படி இல்லை ! ஆரம்பத்தில் இந்த வார்த்தையை யாரும் ஏற்கவில்லை. கேலி செய்தனர். பால்வண்ண முதலியார் வந்தால் , ' அதோ சொற்பொழிவு வருகிறது பார் !' என்று சிரித்து கேலி செய்தனர். அவர் காதுபட கூறினர். அந்த பெரியவர் கவலைப்படவில்லை. அவர் காலத்துக்குப் பிறகு , சொற்பொழிவு ஆட்சி செய்கிறது . பிரசங்கம் மறைந்தது!"



"தமிழ் அறிஞர்கள் எத்தனை சிரமப்பட்டு இருக்கிறார்கள் " என்று வருந்தும் குரலில் கபிலன் கூறினான்.

சற்று அமைதி . " நாளை விடியற்காலை புறப்பட்டு பாண்டிச்சேரி சென்று அரவிந்த ஆசிரமத்துக்கும், மணக்குள விநாயகர் ஆலையத்துக்கும் செல்ல இருக்கிறோம் " என்றாள் செண்பா.

"கபிலா! பாண்டிச்சேரி என்றதும் உனக்கு என்ன நினைவுக்கு வருகிறது - பாரதிதாசனைத்தவிர !" என்று கேட்டான் தமிழ்வேந்தன்.

"அனந்தரங்கம் அவரது நாட்குறிப்பும்" என்றான் கபிலன்.

"எனக்கு அனந்தரங்கம் பிள்ளைபற்றி அறிய நீண்ட காலமாக ஆவல் உண்டு... இன்று நாம் அவரைப் பற்றி பேசலாமே! " என்றாள் செண்பா. தமிழ்வேந்தனை ஏறிட்டுப் பார்த்தாள்.

தமிழ்வேந்தன் மீண்டும் ஒரு பெரிய ' சொற்பொழிவுக்கு ' தயாரானான்:

"அனந்தரங்கம் பிள்ளை சென்னை பெரம்பூரில் பிறந்தவர். பாண்டிச்சேரியை ஆண்ட பிரஞ்சுக்காரர்கள் சென்னையில் இருந்த சுறுசுறுப்பான பல வியாபாரிகளை தங்கள் பகுதிக்கு இழுத்தார்கள். அனந்தரங்கம் பிள்ளையின் தந்தை அதனால்தான் புதுச்சேரி வந்தார். அனந்தரங்கம் பிள்ளை முதன் முதலில் ஒரு சிறு பாக்குக் கடைதான் பாண்டிச்சேரியில் திறந்தார்! பிறகு வேறு பல பொருட்களும் வியாபாரம் செய்தார். கடுமையான உழைப்பால் உயர்ந்தவர். 'ஆனந்தப் புரவி' என்ற பெயரில் வியாபாரக் கப்பலையே - புதுச்சேரி - கொழும்புக்கு இடையே நடத்தினார் என்றால் பாருங்கள் !" புதுச்சேரி பிரஞ்சுக்காரர்களின் நல்ல மதிப்பை பெற்றார் ! இவர் 1736 முதல் 1760 வரையிலான கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் தான் பார்த்த கேட்டவற்றை நாட்குறிப்பு போல எழுதி வைத்தார்! அது நமக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம் ! எத்தனையோ செய்திகளை அது நமக்கு வாரி வழங்குகிறது . டூப்ளே கவர்னராக வந்த பிறகு, புதுச்சேரியில் பலவித அபசகுணங்கள் ஏற்பட்டதை எழுதிஇருக்கிறார். ஒரு பூசணிக்காய் சைஸ் நட்சத்திரம் வானில் இருந்து எரிந்து விழுந்தது, ! வால் நட்சத்திரம் தோன்றியது. பெருமாள் பவனி வந்த தேர் , ஒரு மரத்தில் மோதி , குடை அறுந்து விழுந்தது. இது போன்ற தகவல்களில் இருந்து ... பற்பல தகவல்கள் !அப்போது தலைமை துவிபாஷியாக ( மொழிபெயர்ப்பாளர் ) இருந்தவர் இறந்து போனார். அந்தப் பதவி பெற போட்டா போட்டி. டூப்ளேயின் மனைவிக்கே லஞ்சம் கொடுத்து பதவி பெற முயற்சி நடக்கிறது. அனந்தரங்கருக்கே அது கடைசியில் கிடைத்தது !"

- தமிழ்வேந்தன் சற்று நிறுத்தினார்.


"சுவையான தகவல்கள் ! இன்னும் சொல்லுங்கள் ! " என்றாள் செண்பா.

"மார்க்கோ போலோ குறிப்பிட்ட காயல் துறைமுகம் பற்றி இவரது நாட்குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. காயல் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து விலைமதிப்பற்ற முத்து , வைடூரியம் , சங்கும் கிடைத்தன என்கிறார். செங்கழுநீர்பட்டு என்று ஓர் ஊர் பற்றி எழுதுகின்றார் - செங்கல்பட்டு ! செங்கழுநீர் பூ நிறைந்து இருந்திருக்க வேண்டும் ! கிளைவுக்கு ஆங்கில அரசு ஆதரவு கிட்டியது போல , டூப்ளேக்கு பிரெஞ்சு நாட்டு அரசின் ஆதரவு தேவைப்பட்டபோது கிடைக்கவில்லை. பிரெஞ்சு தோல்விக்கு அது ஒரு காரணம். டூப்ளேயின் மன வருத்தங்கள் நாட்குறிப்பில் தெரிகிறது. ஆங்கிலேயரிடமிருந்து சென்னையைக் கோட்டையை கைப்பற்றிய பிரெஞ்சுப் படைத்தலைவர் லபோர்டினே நகரைசூறையாடியதை குபேர பட்டினம் கொள்ளை போனது ' என்று அனந்தரங்கர் குறிக்கிறார் ! லபோர்டினே பத்து லட்சம் வராகன் சுருட்டிக் கொண்டதாக அனந்தரங்கர் கூறும் தகவலைக் கேட்டு , டூப்ளே துடிக்கிறான் ! நியாயமாக தனக்கு வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும் என்ற தவிப்பு ! " - எழுந்தவாறு கூறினான் தமிழ்வேந்தன்.



"அடடா ! அற்புதமான தகவல்கள் !" அனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை முழுமையாக படிக்க வேண்டும் " என்றாள் செண்பா.

மூவரும் எழுந்து நின்றனர். " நாளை இரவு யு.எஸ்.பயணம்...பிரிவோம் ... மீண்டும் சந்திப்போம் " என்ற கபிலன் , தமிழ்வேந்தனை அன்புடன் இறுக தழுவினான்.

அடுத்து , செண்பாவும் சகோதர பாசத்துடன் தமிழ்வேந்தனை தழுவியவாறு " நண்பரே ! எத்தனை எத்தனை தகவல்கள் ! மூன்று மாதமாக நம் சந்திப்பால் அறிந்தவை ...... ! கணினி மூலமும் நாம் பேச வேண்டும் " என்றாள் உணர்ச்சி பெருக்கோடு !

"அனந்தரங்கர் போல யு.எஸ். பயணம் பற்றி தினமும் குறிப்பு எழுதுங்கள். உலகம் சுற்றிய தமிழன் ஏ.கே.செட்டியார் , சோமலே போன்றோர் தங்கள் பயணம் பற்றி மெச்சத்தக்க நூல்கள் எழுதி இருக்கிறார்கள் ! " என்றான் தமிழ்வேந்தன். வெவ்வேறு திசை நோக்கி அவர்கள் பிரிந்தார்கள்.

தமிழ்வேந்தன் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான் . அவர்கள் பிரிவதை விரும்பாதது போல, வெண்ணிலா வேகமாக ஓடி மேகத்தில் தன்னை மறைத்துக் கொண்டது.

வாழிய செந்தமிழ் !

வாழ்க நற்றமிழர் !

ஜனவரி   11 , 2009 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com