பட்டினிப்போர்! - போதியின் நிழல் 8

பட்டினிப்போர்! - போதியின் நிழல் 8

மன்னன் கியோ தன் கோட்டை வாயிலில் அந்த நடு இரவிலும் காத்திருந்தான். அவனது ராணி தன் தோழியர்களுடன் அவன் அருகே நின்றிருந்தாள். கியோவின் சிறுமகன்களும் ஆவல் பூத்த முகங்களுடன் தூக்கம் தொலைத்து நின்றனர். மன்னனே வந்து வாயிலில் நிற்கையில் காவ்சாங் நகர பிரஜைகள் என்ன உறங்கவா செய்வர்? அவர்களுடன் ஆவலுடன் வந்து நின்றனர். இசைக்கருவிகள், வாழ்த்தொலி எழுப்புவதற்கான பணியாட்கள், ஏவல் செய்யும் திருநங்கையர், உயர்ந்த விளக்குகளை ஏந்தியோர், மன்னனின் கொடிகள், கொற்றக்குடைகள் ஏந்தியோர் என்று கோட்டை வாயில் கலகலத்தது.

சிவப்புப் பட்டால் ஆன ஆடையொன்றை இடையில் உடுத்து வெற்று மார்பில் பொன் பதித்த சங்கிலி ஒன்று ஆட கியோ அமைதியாக நின்றிருந்தான். அவன் காதுகள் எதையோ கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தன. திடீரென்று அவன் நிமிர்ந்தான். தூரத்தில் குதிரைகள் பல வரும் ஓசை. அப்புரவிகள் வாயிலில் வந்ததும் நின்றன. அவற்றில் வந்த வீரர்கள் வழிவிட உயரமாக இருந்த ஓர் இளம் துறவி உள்ளே வந்தார். அவரைக் கண்டதும், கியோ வருக,, வருக என்று வரவேற்றான். இசைக்கருவிகள் முழங்கின. வாழ்த்தொலிகள் ஒலித்தன.

யுவான் சுவாங் தனக்குக் கிடைத்த இந்த வரவேற்பால் சற்று சங்கடமடைந்தார்.

‘‘பிக்குவே, தங்களைக் காணும் நாளுக்காகக் காத்திருந்தேன். நீங்கள் வர இரவி அகாலம் ஆகிவிடும் என்று சொன்னார்கள், ஆனாலும் உங்களைப் போன்றவர்கள் வருகையில் காத்திருந்து வரவேற்பதைவிட எனக்கு எதுவும் பெரியதில்லை’’ என்றான் கியோ.

காவ்சாங் நகருக்கு வருவது என்பதை உண்மையில் யுவான் தவிர்க்கவே விரும்பினார். அவர் தன் பயணத்தை மேற்கு நோக்கித் தொடரவே விரும்பினார். ஆனால் அப்படித் தொடர்வது என்பது அவர் விருப்பமாக இருந்தாலும் கியோவின் ஆணையை மீறித் தொடர்வது சாத்தியமில்லை என்று அவருக்கு உணர்த்தப்பட்டது. முரட்டு வீரனாகத் தோன்றிய கியோவின் படைத்தலைவன் அவரிடம் வர மறுத்தால் அப்படியே அலுங்காமல் தூக்கிவருமாறு உத்தரவு இருப்பதைக் கூறினான். யுவான் பயணத்தை போதிசத்துவரின் மேல் போட்டுவிட்டு இங்கே வந்திருந்தார். அவருக்காக ஒழிக்கப்பட்டு தயார் செய்யப்படிருந்த மாளிகையில் யுவான் தங்க வைக்கப்பட்டார். கியோ அவரை விட்டு அகலாமல் அவரது பயண அனுபவம் பற்றி விசாரித்துக்கொண்டே இருந்தான். தன் கனவில் ஓயாது வந்துகொண்டிருந்த ததாகதர் பற்றியும் கூறினான்.

ஆனால் பயணக்களைப்பால் யுவானின் கண்களும் உடலும் கெஞ்சவே, ஒரு கட்டத்தில் வாய்விட்டே உறங்கவேண்டும் என்று மன்னனிடம் கூறிவிட்டார். அதன்பிறகுதான் அவன் அம்மாளிகை விட்டு அகன்றான்.

நல்ல உறக்கத்துக்குப் பிறகு காலையில் எழுந்த யுவான் குளித்துவிட்டு வந்தார். தயாராகக் காத்திருந்த ஒரு திருநங்கை மன்னர் வந்து காத்திருப்பதாக அறிவித்தாள். யுவான் சற்றுவியப்புடன் தன் அறையை விட்டு மாளிகையில் அகன்ற கூடத்துக்கு வந்தார்.

அவருக்கு முன்பே காவ்சாங் நகர பிக்குகளும் அமைச்சரவை உறுப்பினர்களும் அமர்ந்து காத்திருந்தனர். மன்னரும் ராணியும் தனி ஆசனங்களில் அமர்ந்திருந்தனர். யுவானுக்காக ஓர் உயர்ந்த ஆசனம் போடப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடுகளைக் கண்ட யுவான் வியப்பில் ஆழ்ந்தார். மன்னன் அவரை வரவேற்று ஆசனத்தில் அமர்த்தினான். பின் அங்கிருந்தோரைப் பார்த்து சொல்லலானான்:
‘‘ எம் மக்களே, அன்பிற்குரிய துறவிகளே, சீனதேசத்தின் இணையற்ற பௌத்த அறிஞர்களில் ஒருவரான யுவான் சுவாங் இங்கு வந்திருக்கிறார். அவர் இனி நம்முடன் இருந்து பௌத்த தர்மத்தின் அத்துணை அம்சங்களையும் விளக்குவார். நான் இன்றுமுதல் அவரது அடியவன் ஆகிவிட்டேன். இவரைப் போன்ற தூய மனிதர்கள் மட்டுமே இவர் மேற்கொண்ட கொடும் பயணம் போன்ற ஒரு அனுபவத்தில் இருந்து மீண்டு வரமுடியும். அவ்வளவு துன்பங்கள் நிறைந்த ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார்’’ கடைசி வரியைக் கூறுகையில் கியோ தழுதழுத்து கண்ணீர் விட்டான்.

அங்கிருந்த முதிய துறவிகள் ஒவ்வொருவராக வந்து யுவானை சந்தித்தனர். அதிலிருந்த ஒரு சிலர் சீனத்தலைநகரான சங்கானில் பயின்றவர்கள். அவர்களுடன் அளவளாவினார் யுவான். பலரும் சீனாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்து கேட்டறிந்துகொண்டனர்.
இப்படியே பத்துநாட்கள் கழிந்தன. யுவானைச் சந்தித்த துறவிகள் அனைவரும் சொல்லிவைத்தது போல் அவரைப் பயணத்தைக் கைவிட்டு அங்கேயே தங்குமாறு கேட்டுக்கொண்டனர். மன்னன் எல்லோருக்கும் தன் மனதை மாற்ற முயற்சி செய்யுமாறு கூறியிருக்கிறான் என்பதை உணர்ந்தார் பிக்கு.
மறுநாள் மன்னன் காலையிலேயே யுவானை சந்திக்க வந்தான்.

‘‘மன்னா, நீங்கள் எனக்கு செய்த இந்த உபசரிப்புகளுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லை. ஆனால் நான் புறப்படவேண்டும். நான் இன்னும் கற்றிராத பல பௌத்த ஞான நூல்களைப் பயிலவேண்டும். எனக்கு விடைதாருங்கள்’’ என்றார் அவனிடம்.

மன்னன் புன்னகைத்தான்.

‘‘ எமது நகரத் துறவிகள் எல்லோரும் உம்மை இங்கேயே தங்கச்சொல்லி கேட்டிருப்பரே... அதை நீங்கள் கவனத்தில் கொள்ளலாமே?’’

‘‘ இது மன்னரின் ஆசை என்பதை நான் அறிவேன். உங்களைப் பொறுத்தவரை அது சரியாகத் தோன்றலாம். ஆனால் என் இதயம் அதை விரும்பவில்லை’’


‘‘அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பிக்கு அவர்களே, உங்களைப் பார்த்த கணமே உங்கள் சேவகனாக என்னை நான் வரித்துக்கொண்டு விட்டேன். உங்களை இனி ஒருநாளும் பிரிய நான் சம்மதியேன். உங்கள் சீன தேசத்துக்கு நான் இளைஞனாக இருக்கையில் என் குருவுடன் வந்துள்ளேன். அங்கு எத்தனையே பௌத்த பள்ளிகளுக்குச் சென்று பல குருமார்களைக் கண்டுள்ளேன். ஆனால் எவரைக் கண்டு துள்ளாத என் உள்ளம் உங்களைக் கண்டது துள்ளி, பேரமைதியைக் கண்டது. உங்களை நான் இங்கேயே இருக்குமாறு வற்புறுத்த என்னை அனுமதியுங்கள். உங்கள் வாழ்நாள் முழுக்க தாங்கள் இங்கே இருக்கலாம். நான் மட்டுமல்ல, என் தேச மக்கள் அனைவரும் உங்களுக்கு அடிமையாகத் தொண்டு செய்கிறோம். எங்கள் அனைவருக்கும் தர்மத்தைப் போதியுங்கள். நீங்கள் ஆணையிடும் சுவடிகளை சுமந்து வரிசையில் நிற்கும்படி இங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான பிக்குகளுக்கும் நான் கட்டளையிடுகிறேன். அருள்கூர்ந்து என் வேண்டுதலுக்கு இணங்குங்கள். மேற்கு நோக்கிச் செல்லும் பயணத்தைக் கைவிடுங்கள்.‘‘
முழங்கால்களை மடித்து தரையில் பணிந்து அமர்ந்தான் மன்னன் கியோ.

‘‘ மன்னா... நானோ ஓர் ஏழைத் துறவி. இவ்வளவு பெரியமரியாதைகள் எனக்கு எதற்கு? உம்மை மறுதலிக்கும் நிலையில் கூட நான் இல்லை. ஆனால் நான் இப் பயணத்தை எனக்காக மேற்கொள்ளவில்லை. தர்மத்தை அதன் உண்மையான வடிவில் கண்டறிந்து பரப்புவதற்காகவே நான் மேற்கொள்கிறேன். என் நாட்டில் முழுமையான ஞானம் இல்லை என்பதை அனுபவ ரீதியா உணர்ந்துள்ளேன். இருக்கும் சுவடிகளோ சரியாக எழுதப்படாத அரைகுறை சுவடிகள். அவற்றை முழுவது அறிந்தவர்களோ யாரும் இல்லை. தருமத்தின் இனிய பனித்துளியைத் தேடிச்செல்கிறேன். அதை சேகரித்து இந்த கிழக்கின் பூமியில் எல்லோருக்கும் வாரி வழங்குவேன். என்னைத் தடுக்காதீர்கள். தங்கள் மனத்தை மாற்றிக்கொள்ளுங்கள்’’

‘‘ பிக்குவே, நீர் பேசப்பேச உம்மீது நான் கொண்ட அன்பு பன்மடங்கு பெரிதாகிறது. நீங்கள் மேற்கு நோக்கிச் செல்வேன் என்று கூறக்கூற உம்மை இங்கேயே இருக்கச் செய்ய வேண்டும் என்ற என் உறுதி இருமடங்காகப் பெருகுகிறது. என்னைப் புரிந்துகொள்ளுங்கள். தங்கள் மீது நான் வைத்திருக்கும் மரியாதை சந்தேகத்துக்கு இடமற்றது’’

‘‘மன்னா, நீங்கள் இம்மண்ணின் குடிகளுக்கு அரசர் மட்டுமல்ல. புத்த தர்மத்தின் பாதுகாவலரும் கூட. எனவே தர்மத்தைப் பரப்பும், கற்கும் பணியில் பயணம் மேற்கொள்பவனை பாதியிலேயே தடை செய்வது தர்மம் ஆகுமா?’’

‘‘ இனிய துறவியே, பௌத்த தர்மம் பரவுவதற்கு முட்டுக்கட்டை போடும் பாவியல்ல நான். என் அரசில் தர்மத்தை என் மக்களுக்கு உணர்த்த தகுதி வாய்ந்த பெரும் பிக்குகள் யாரும் இல்லை. எனவேதான் தங்களை நான் இங்கேயே இருக்கச் சொல்கிறேன்’’
மன்னனின் குரல் உயர்ந்தது.

பிக்கு ஏற்க மறுப்பதாக தலையை அசைத்து உணர்த்தினார்.

‘‘ஓ..’’ கியோ கோபமடைந்ததை அவன் சிவந்த முகமே காட்டியது.

‘‘ நீங்கள் என் கோரிக்கையை ஏற்கமறுத்தால், உங்களை நான் கைது செய்து உங்கள் சீன தேசத்துக்கே அனுப்பிவிடுவேன்’’
கர்ஜித்தான் அவன்.

யுவான் புன்னகை செய்தார். குளிர்ந்த புன்னகை.

கியோ திரும்பிப்போய்விட்டான்.

அன்றிலிருந்து மூன்றுநாட்கள். யுவான் தண்ணீர் கூட அருந்தவில்லை. கொலைப் பட்டினி கிடந்தார். மூன்றாவது நாள் யுவான் துவண்டு படுத்திருக்கையில் வந்து சேர்ந்த கியோ பதறிப்போனான். அந்த பிக்குவின் உறுதிக்கு முன் மன்னனின் ஆணை தவிடுபொடி ஆனது.
வெட்கத்தால் தலைகுனிந்த அவன், ‘‘ பிக்குவே, தாங்கள் விருப்பபடியே பயணத்தை மேற்கொள்ளலாம். இப்போது உணவருந்துங்கள்’’ என்று வேண்டிக்கொண்டான்.

யுவான் நம்பவில்லை.

‘‘சூரியனை சாட்சியாக வைத்து இந்த வார்த்தைகளை மீண்டும் சொல்லுங்கள் மன்னா...’’

‘‘ பிக்குவே, நான் இதை புத்தபிரான் முன்னிலையிலேயே சொல்கிறேன். வாருங்கள்’’ என்றவாறு அவரைக் கைத்தாங்கலாக அம்மாளிகையில் இருந்த பிரார்த்தனைமண்டபத்துக்கு அழைத்துச் சென்று அங்கு ததாகதர் முன்பாக உறுதி கொடுத்தான் கியோ.

‘‘ஆனால் ஒன்று, திரும்பி வருகையில் என் நகரில் நீங்கள் வந்து மூன்று ஆண்டுகள் தங்கி தர்மத்தைப் போதிக்கவேண்டும்’’
யுவான் பலவீனமாக புன்னகை செய்தார்.

‘‘ இன்னுமொரு பிறவியில் நீங்கள் புத்தராகப் பிறப்பீர்கள் என்றால் என்னை பிரசேனஜிதனாகவோ பிம்பிசாரனாகவோ பிறக்குமாறு அருள்புரிவீர்களாக. உமக்கு சேவை செய்யும் பேறு எனக்குக் கிட்டட்டும்’’ மன்னன் கண்களில் குளமாக கண்ணீர் தேங்கியது.

யுவான் அவனது வேண்டுகோளைத் தட்ட இயலாமல் ஒருமாதகாலம் அங்கே தங்கி இருந்து சில முக்கியமான சூத்திரங்களை பிக்குகளுக்குப் போதித்தார். தத்துவங்களை விவாதித்தார். அந்த ஒருமாதகாலம் அவரது பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை மன்னன் செய்தான். அவர் போகும் வழியில் உள்ள மன்னர்களுக்கெல்லாம் அறிமுக ஓலைகளை எழுதி வைத்தான் அவன். இனி மேற்கே செல்லச் செல்ல குளிரும் என்பதால் குளிர்கால ஆடைகள், கையுறைகள், காலணிகள் ஆகியவற்றையும் ஏராளமான தங்க, வெள்ளிநாணயங்களையும் அளித்தான். இன்னும் இருபது ஆண்டுகள் இவற்றை வைத்துக்கொண்டு அவர் பிரயாணம் செய்ய முடியும். துணைக்கு 24 வேலையாட்களையும் தரம்வாய்ந்த 30 குதிரைக்ளையும் யுவானிடம் அளித்தான்.

புறப்படும் நாள் வந்தது. மந்திரிகள், ராணிகள் சூழ கோட்டைக்கு வெளியே வந்து யுவானுக்கு பெரிய வழியனுப்பும் வைபவமே நடைபெற்றது. பின் எல்லோரையும் கோட்டைக்குள்ளே அனுப்பி விட்டு, பல மைகல்கள் தூரம் மன்னன் மேற்கு நோக்கி யுவானுடன் கூடவே வந்தான். பிரிய மனமே இல்லாமன் விடைபெற்றுக்கொண்டான். நன்றியுடன் அவனுக்கு விடை கொடுத்தார் யுவான். அவன் தலை மறையும் வரை நின்று பார்த்துக்கொண்டிருந்துவிட்டு மேற்கு திசை நோக்கி அவர் திரும்பினார்.
முப்பது குதிரைகள், நிறைய பணியாட்கள் என்று பெரும் குழுவாக அவரது பயணம் வளர்ச்சி பெற்றிருந்தது. இனியும் யுவான் சீனாவிலிருந்து ஒற்றையாளாக தப்பி ஓடிவரும் துறவி அல்ல. மன்னர்களின் ஆதரவைப் பெற்ற பயணி. யுவான் சுவாங் தான் காவ்சங்கிலேயே விட்டுவிட்டு வந்த தன்னுடைய சிவப்புக் குதிரையைப் பற்றி நினைத்துக்கொண்டார்.

-பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com