பறந்து செல்லும் புன்னகை

பெண்ணென்று சொல்வேன் -20

பெண்ணின்  மொழி, திசை, இசை, வாசம் வீரம்,ஈரம், கவிதை, உயிர் என பெண்பாலை பற்றிப் பேசும் உலகப்படங்களை பற்றி ஜா.தீபா எழுதும் இத்தொடர் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அந்திமழையில் வெளிவரும்.

மனிதம் என்பதுதான் என்ன?’  மனிதனாக இருப்பது என்றால் அதன் பொருள் என்ன? – என்னை நானே அடிக்கடிக் கேட்டுக் கொள்ளும் கேள்விகள் இவை. எனது படங்களில் வன்முறை மிகையாக இருப்பது பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கிறது வன்முறை. அது தன் எல்லையைக் கடக்கும்போது ஏற்படும் விளைவுகளின் சிறு சிறு உதாரணங்கள் மட்டுமே என்னுடைய படங்கள். தென் கொரியா இயக்குனர் கிம் கி துக் அபூர்வமாய்த் தருகிற பேட்டிகளில் அவரது படங்களின் வன்முறைக் காட்சிகள் குறித்து முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு சொல்கிற பதில் இது.

பார்த்த பின்பும் தனது வெளிக்குள்ளிருந்து அகல விடாத தன்மையை  நமக்குள் ஏற்படுத்தி விடக் கூடியவை கிம்கிதுக்கின் திரைப்படங்கள். காதலைத் திகட்டத் திகட்டக் கொண்டாடிக் கொண்டிருந்த தென்கொரியப் படஉலகில் இவருடைய பிரவேசம் விமர்சகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் ஏற்றுக் கொள்ள முடியாத அதிர்ச்சியைத் தந்து கொண்டிருந்தது. உலக அரங்கில் இவருடைய படங்கள் விருதுகளைக் குவித்தப் பின்னரே தென்கொரியா இவர் பக்கம் லேசாகத் திரும்பிப் பார்த்தது.  இப்போதும் இவருடைய படங்களை தயக்கத்துடனேயே நாட்டு மக்கள் அணுகிறார்கள் என்கிறார் கிம்கிதுக்.

ராணுவ சேவையில் சில காலங்கள் , ஓவியங்களை வரைந்து பாரிஸ் நகரத் தெருக்களில் விற்றது சிலகாலங்கள் என வாழ்க்கை இவருக்குக் கற்றுத் தந்ததும், இவர் தேடிய தேடலும் என அனுபவம் இவரது ஒவ்வொரு படங்களையும் செழுமைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. காதல், அன்பு, வன்மம், குரூரம், ஏக்கம் இவை அனைத்துமே இவரது படைப்புகளில்  ஒருவித உயிர்ப்புடன் தீவீரம் பெறுகின்றன.

மேற்கத்திய உலகின் பாதிப்பில் தென் கொரியாவின் இளைய தலைமுறை தங்களை அதன் வேட்கைக்கு எந்தளவு பலி கொடுக்க துணிகிறார்கள் என்பதை வலிநோகத் தனது பாணியில் சொல்லியிருக்கும் ஒரு படம் ‘Samaritan Girl’.

யோஜின் -னும், ஜேயங் -கும் பள்ளியில் ஒன்றாகப் படிக்கிற நெருங்கிய தோழிகள். எப்போதும் கனவுகளில் மிதக்கும் அவர்களின் வாழ்நாள் லட்சியம் ஐரோப்பா செல்லுவதாக இருக்கிறது. அதற்கு நிறைய பணம் வேண்டுமே என்கிற போது ஜேயங் ஒரு முடிவெடுக்கிறாள். அதன்படி இணையதளம் மூலமாகவும், ஃபோன் மூலமாகவும் ஆண்களிடம் மயக்கமாக பேசி ஒரு இடத்திற்கு வரவழைக்கிறாள். அங்கு வருபவர்களோடு பாலியல் உறவு வைத்துக் கொள்கிறாள்.  போலீஸ்காரர்கள் வந்துவிட்டால் தகவல் சொல்வதற்காக யோஜின் வெளிப்புறத்தில் காவல் இருக்கிறாள்.

இந்த சம்பவங்களுக்கெல்லாம் நேரெதிராய் இருக்கிறது யோஜின்னின் வீட்டுச்சூழல். அம்மா இல்லாத யோஜின் ஒவ்வொரு நாளும் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் முன்பாக, அவளது அப்பா மெல்லிய இசையை ஓடவிட்டு அவள் காதுகளின் மீது ஹெட்ஃபோனை வைத்து அருகிலேயே காத்திருக்கும் தந்தையாக இருக்கிறார். காவல் துறை அதிகாரியாக இருக்கும் அவர் பள்ளிக்கூடத்திற்கு யோஜின்னைக் காரில் அழைத்து செல்லும் போது பலவிதமான கதைகளையும் , உலக அரசியலையும் குறித்தெல்லாம் பேசுபவராக இருக்கிறார். ஆனால் அவருடைய  பேச்சு அவளுக்குத் தூக்கத்தையே தருகிறது. எப்போதும் தான் பேசும்போது தூங்கிவிடுகிற யோஜின்னின் தூக்கத்திற்கு சிறுகுழந்தைக்குத் தருகிற புன்னகையையே அவர் வைத்துக்கொண்டிருக்கிறார்.

எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல் குழந்தைத்தனமிகுந்த சிரித்த முகத்துடன் இருக்கும் ஜே யங் ஒரு நாள், ‘இனி தன்னை வசுமித்ரா’ என்று அழைக்கும்படி யோஜின்னிடம் வேண்டுகிறாள். இந்தப் பெயரில் உள்ள வசீகரம் யோஜின்னைக் கவருகிறது. அந்தப் பேருக்கான காரணத்தை அவள் கேட்க ஜே யங், ‘இந்தியாவில் பல வருடங்களுக்கு முன்பு வசுமித்ரா என்ற பாலியல் தொழில் செய்யும் பெண் இருந்தாள். அவளிடம் உறவு கொள்ளும் ஆண்களை  அன்றே அவள் புத்த மதத்தில் இணைத்து விடுவாள். அந்தளவு உயர்வான மகிழ்ச்சியைத் தந்தவள்’ என்கிறாள். அதுமுதல் ஜேயங்கை வசுமித்ரா என்றே கூப்பிடத் தொடங்குகிறாள் யோஜின்.

ஒரு சமயம் ஜேயங் இசையமைப்பாளர் ஒருவனுடன் பழகப்போக அதன்பின் அது அவனோடு மனதளவிலும் நெருக்கமாகிறது. இது பிடிக்காத யோ ஜின் அவளைக் கண்டிக்கிறாள். ஆனால் ஜேயங் அவனைப்பற்றி புகழத்துவங்குகிறாள். ‘அவன் எனக்காக பாடிக் காட்டினான் தெரியுமா?’ என்பது போன்ற ஏக்கங்களுடன்.

அதன் பிறகு வந்த ஒரு நாளில் வழக்கம் போல ஜேயங்கிற்காக யோ ஜின் காவல் இருக்கையில், ஜே யங்கின் விடுதியை சோதனை செய்ய காவல் துறையினர் வந்து விடுகின்றனர். எதிர்பாராத இந்த நடவடிக்கையின் போது யோஜின்னால் எச்சரிக்கை விடக்கூட முடியாதபடிக்கு நிலைமை மோசமாகி விடுகிறது. போலீசிடம் சிக்கி விடக்கூடாது என முடிவெடுக்கும் ஜேயங் விடுதியின் மாடி ஜன்னலில் இருந்து கீழேக் குதித்து விடுகிறாள். அடிபட்டுக் கிடக்கும் அவளைக் காப்பாற்றத் தனது தோளிலேயேத் தூக்கிக்கொண்டு ஓடும் யோஜின்  அவளை மருத்துவமனையில் சேர்க்கிறாள். அவளது குடும்பத்தினர் பற்றியத் தகவல்கள் எதுவும் தெரியாத யோஜின்னே  உடன் இருந்து கவனித்துக் கொள்கிறாள்.

ஜேயங்கின் நிலைமை மோசமாகிவிடுகிறது. அவள் தனது கடைசி  ஆசையாக இசையமைப்பாளனைப் பார்க்க வேண்டும் என்று விரும்ப, யோஜின் அவனைப் போய் பார்த்து அழைக்கிறாள். அவன் வர மறுக்கிறான். யோஜின் கெஞ்சுகிறாள். அவளது கெஞ்சலைப் பொருட்படுத்தாத அந்த இசையமைப்பாளன் சூழலின் விபரீதத்தை வைத்து, யோஜின்னின் உடலையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறான். நேரம் கடந்து கொண்டிருக்கிறது.

அதன் பின்னும் வருவதற்கான எந்த அறிகுறியுமற்று இருக்கும் இசையமைப்பாளனை அவசரமாக அவசரமாக இழுத்துக் கொண்டு ஓடி வருகிறாள் யோஜின். அவள் வரும் அச்சமயத்தின் போதுதான்  அவர்களைக் கடந்து செல்கிறது ஜேயாங்கின் உடல். எப்போதும்போல அப்போதும் சிரித்த முகத்துடனே இருக்கும் ஜேயங்கின் புன்னகை சடலத்தைப் பார்த்து கதறுகிறாள் யோஜின். ‘இன்னும் எதற்காக சிரிக்கிறாய். சிரிக்காதே ஜே யங்...சிரிக்காதே ‘ என்று  திரும்பத் திரும்பச் சொல்கிறாள்.

ஜேயங்கின் மரணம் யோஜின்னை வெகுவாகப் பாதித்து விடுகிறது. அழுது தீர்த்தாலும் தீராத அதீதத் துக்கத்தோடு அவளுக்கு குற்ற உணர்வும் ஏற்படுகிறது. இதுவரை சேர்த்த பணத்தை மீண்டும் அதனைத் தந்த ஆண்களிடமே திருப்பித் தர முடிவெடுக்கிறாள். ஆனால், அதற்கு முன்பு ஜேயங்கின் நினைவிலிருந்து மீளாத அவள் ஜேயங்கைப் போலவேத் தானும் நடந்துக் கொள்ளவும் தீர்மானிக்கிறாள். ஜேயங்கின் டைரியில் இருக்கும் நபர்களுக்கு அழைப்பு விடுத்து, அவர்களுடன் தங்கிவிட்டு , அவர்களிடம் பணத்தைத் திருப்பியும் தருகிறாள். பலருக்கும் இவளது இந்த செயல் புதிராகவே இருக்கிறது.

ஒரு கொலை நடந்த இடத்தில் விசாரணையில் ஈடுபட்டிருந்த ஜோயின்னின், தந்தை தற்செயலாக எதிர் மாடி ஒன்றில் ஒரு ஆணுடன் யோஜின்  நெருக்கமாக இருப்பதைப் பார்த்து விடுகிறார். அவருக்கு சந்தேகம் வந்த அந்த நிமிடத்தில் இருந்து அவர் அவளைப் பின்தொடர்கிறார். அவளைத் தேடி ஆண்கள் வருவதைக் கண்டு அவர்களை வழிமறித்துத் திருப்பி அனுப்புகிறார். மகளைப் பார்த்திருக்கக் கூடாத ஒருநிலையை சந்தித்துவிட்ட கட்டத்தில் அவரது கோபம், வெறுப்பு, அழுத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்து யோஜின்னுடன் இருந்த ஒருவனைக் கொலையே செய்யும் அளவுக்கு போய்விடுகிறது.

ஜேயங் சந்தித்த அத்தனை ஆண்களிடமும் பணத்தைத் திருப்பித் தந்துவிடுகிற யோஜின் டயரியைத் தூக்கிப் எறிகிறாள். அவளைப் பின்தொடர்ந்து வருகிற அவளின் தந்தை அந்த டயரியை எடுத்துக் கொள்கிறாள்.

மகளுக்குத் தெரியாமல் ஒரு கொலையை செய்துவிட்ட தகப்பனும் , அப்பாவுக்குத் தெரியாமல் தனது தோழியின் ஆன்மாவுக்காக மகள் செய்த காரியமுமாக இருவரும் தவித்த, மனநிலையில் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் தனது மகளுக்காக அப்பா எடுக்கிற முடிவை படத்தின் இறுதிக் காட்சிகள் உருக்கமாய் சொல்கின்றன.

‘இப்படியெல்லாம் நடக்குமா?’ என்று நாம் கேள்விகளாய் முன்வைக்கிற நிகழ்வுகளைத் தான் தனது படைப்பாக மாற்றி வருகிறார் கிம் கி துக்.. திரைப்படத்தை உருவகமாக மாற்றுவது முக்கியம் என நினைக்கிறேன்

.

ஒரு இயக்குனர் தான் பேசுவதை விட அவரது திரைப்படம் பேசவேண்டும் எனவே நினைக்கிறேன் எனக்கூறும் கிம்கிதுக்கின் திரைப்படங்களின் அநேக கதாப்பாத்திரங்களும் குறைவாகவே பேசுகின்றன. சில பாத்திரங்கள் பேசுவதே இல்லை. காட்சிகளையும் சப்தங்களையும் வடிவமைக்கும் முறையில்தான் ஒரு திரைப் படத்தின் மூலம் தனது கலைத்தேர்ச்சியை ஒரு இயக்குனர் தன்னை நம்பும் ரசிகனை அனுபவிக்க வைக்க முடியும். கிம்கிதுக்கின் கலைத் தேர்ச்சி அவரது அழகியல் நுட்பத்தையும் உள்ளடக்கியது. அந்த நுட்பத்தின் மூலமே அது எல்லையற்ற விவரணைகளை ஆரவாரமின்றி வழங்கிக் கொண்டிருக்கிறது.

அதிகமும் பாலியல் தொழில் செய்யும் பெண் கதாபாத்திரங்கள் இவர் படங்களில் உலவுவதைப் பார்க்க முடிகிறது. அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை என்பது இயக்குனரின் வாதமாகவும் இருக்கிறது. இதிலும் கூட ஜேயங் எந்த இடத்திலும் துயரக் குணம் உடையவளாகவோ, கழிவிரக்கமோ அதுபோன்ற ஏதும் கொண்டவளாகவோ இருக்கவில்லை. மனப்பூர்வமான ஒரு கடமையை செய்வது போலவே அவள் முகம் இருக்கிறது. அன்பைத் தவிர மீதி எல்லாமே அவளுக்கு விளையாட்டாய் இருக்கிறது. அதனால் தான் முதன் முறை போலீஸ் தேடி வரும்போது சிரித்தபடி தெருத்தெருவாக இருவராலும் ஓட முடிகிறது.

தனது பெண்ணின் வயதையொத்த ஒரு பெண்ணிடம் சென்று வந்த ஒருவனை அவன் குடும்பத்தின் முன்னால் யோஜின்னின் அப்பா அடித்து கேட்கும்போது அவன் குற்ற உணர்வில் மாடியிலிருந்து குதிக்கும் அளவு குற்ற வேதனை அடைகிறான். ஜேயங்குடன் தனது பொழுதை சந்தோஷமாக கழித்ததாக சொல்லும் மற்றொரு ஆண், யோஜின் பணத்தைத் திருப்பிக் கொடுத்ததும், தனது மகளுக்கு போன் செய்து நடுக்கத்துடன் நலம் விசாரிக்கிறான். இப்படி பலவீன மனமுள்ளவர்களின் நேரடியான அகப்புறத்தையும் கிம்கிதுக்கின் திரைப்படம் காட்டிக் கொண்டே போகிறது. நம்மை சாட்சியாக நிறுத்தும் இந்த விதமான உணர்வு அணுகுமுறைத் தன்மையை அவரது அநேகப் படங்களில் கண்டடையலாம். கிம்கிதுக்கின் சமரசமற்ற உலகம் இது.

கிம்கிதுக்கின் மற்ற படங்களைப் போலவே இதுவும் தென் கொரியாவில் வசூலாகவில்லை. ஆனால் பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வானது.

(ஜா. தீபா சென்னையில் வாழும் எழுத்தாளர். திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் பணிபுரிகிறார்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com