மரணம் நெருங்கிவிட்டது! - போதியின் நிழல் 7

மரணம் நெருங்கிவிட்டது! - போதியின் நிழல் 7

கால்கள் மண்ணில் புதைந்ததும் எனக்கு சற்று அச்சம் வந்தது. திரும்பி ஓடிவிட வேண்டும் என்று கருதினேன். இது இயல்பான உணர்ச்சிதான். விலங்குகளுக்கே உரிய இயற்கையிலேயே அமைந்த உணர்வு. ஆனால் நான் என்னுடைய அனுபவத்தில் அந்த உணர்வை வெல்லும் வல்லமை பெற்றிருந்தேன். என் மேல் அமர்ந்திருப்பவரின் உணர்வுகளுடன் என்னை ஒருங்கிணைத்துப் பயணம் செய்வது என்பதைக் கற்றிருந்தேன்.

அத்துடன் எனக்கு இப்பயணத்தின் போது மிகமுக்கியமான பணி ஒன்றில் ஈடுபட்டிருப்பதாகத் தோன்றியது. என் பிற பயணங்களும் இதற்கும் வித்தியாசம் இருந்தது. என் மேல் அமர்ந்திருப்பவரோ சீன தேசத்தின் மிகப்பெரிய அறிஞர். சீனத்தில் கற்றது போதாது என்று அத்தேசம் விட்டு வெளியே செல்கிறார். அவரைச் சுமந்து செல்லும் பேறை விட என்ன ஒரு குதிரைக்குக் கிடைத்துவிட முடியும்?

ஒன்று சொல்ல வேண்டும் அவரும் நானும் பயணம் செய்ய ஆரம்பித்து ஐந்துநாட்களுக்கு மேல் ஆகின்றன. ஆனால் இதுவரை அவர் என்னை நோக்கி ஒரு கடுஞ்சொல் கூடச் சொன்னதில்லை. ஒருமுறை கூட கடிவாளத்தை இழுத்துப் பிடித்ததில்லை. சாட்டையைச் சுழற்றியதில்லை.இதோ என்னைச் சுற்றி மணல்வெளி. சிவந்த புழுதி. கொடுமையான இவ்வெயிலில் எங்கு பார்த்தாலும் மணல்.எந்த விதத்திலும் ஒதுங்க நிழலோ, காண்பதற்கு ஒரு பறவையோ, குடிக்க ஒரு சொட்டு நீரோ இல்லாத பூமி. எங்கு பார்த்தாலும் மணல். பூமியே மணல் பரப்பாகிவிட்டதோ. நானும் இத்துறவியும் தவிர்த்தால் இப்பூமியில் யாருமே இல்லையோ? கால்போன போக்கில் நான் போய்கொண்டிருக்கிறேன் என்று தோன்றுகிறது. ஒரு பகல் முழுக்க நடந்துவிட்டோம். அனல் வீசும் இப்பாலை முடிவே இல்லாதது போல தொடர்ந்துகொண்டிருக்கிறது. எனக்கோ தாகம் தாங்கமுடியவில்லை. இன்று மதியம் துறவி செய்த ஒருகாரியத்தை என்னால் மன்னிக்கவே முடியாது.

குடிப்பதற்காக தண்ணீர் குடுவையை எடுத்தார்.வாயில் வைத்து அருந்தினார். பின் கை நடுக்கத்தில் கீழே தவறவிட்டுவிட்டார். எல்லா நீரும் போய்விட்டது. இப்போது அவரும் தாகத்தில் தான் இருக்கவேண்டும்.

இருட்டிவிட்டதால் ஓரிடத்தில் என்னை நிறுத்தி இறங்கினார். பாலையில் எங்கே தங்குவது? அப்படியே வழியில் ஓய்வெடுக்க வேண்டியதுதான். பாயை விரித்து மல்லாந்தார் அவர். உறக்கம் அவருக்கும் வராது என்பதை நான் அறிவேன். தலையை உயர்த்தி மேலே நோக்கினேன். இரவின் வானத்தில் ஏராளமான விளக்குகளாக விண்மீன்கள் ஜொலித்தன. அவற்றில் ஒன்றோ பலவோ இத்துறவியின் இறைவனாக இருக்கலாம். என்னைச் சுற்றிலும் கறுப்பான போர்வையை போட்டு போர்த்தியது போல் இருட்டு. என் காலே என் கண்ணுக்கு தெரியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

துறவியையும் காணவில்லை. ஆனால் அவர் எதையோ விடாமல் முணுமுணுத்துக்கொண்டிருப்பது மட்டும் எனக்குக் கேட்டது. ஆகா இந்த இருட்டில் கண்பார்வையால் பலனில்லை. ஆனால் அதைப்போல் இல்லாமல் காது கேட்கும் திறனாவது வேலை செய்கிறதே.. அம்மட்டில் நன்றே என்று நினைத்துக்கொண்டேன்.

நான் நின்ற இடத்தில் இருந்து இடதுபுறமாகப் பார்த்தபோது திடுக்கிட்டேன். வெளிச்சம் தெரிந்தது. தீயே உருவான உயரமான உருவம் ஒன்று. அதைத்தொடர்ந்து திடீரென்று எங்களைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான நெருப்பு உருவங்கள் தோன்றின. அகோரமான உருவங்கள். நீண்ட பற்கள், நகங்கள்.... அச்சத்தால் என் கால்கள் நடுங்கின. என்னையறியாமல் சிறுநீர் வெளியேறிற்று.

பிக்குவும் அந்த உருவங்களைக் கவனித்திருக்கவேண்டும். அவரது முணுமுணுப்பு சற்றுவலுவான குரலாக மாறியது. ஆனாலும் அந்த உருவங்கள் எம்மை நோக்கி வருவது நிற்கவில்லை. பிக்கு அசரவில்லை. சற்று நிறுத்தினார். அதற்குள் அவை கிட்டே வந்துவிட்டன. இன்னும் சில விநாடிகளில் அவை எங்களைப் பிடித்துவிடக்கூடும். நான் அச்சப்படுவதை நிறுத்தியிருந்தேன். அவ்வுருவங்களை இவ்வளவு கிட்டே பார்த்த நிலையில் என் உணர்வுகள் மரத்துப்போயிருந்தன. தீயிலான அவற்றின் நாவுகள் புயல்காற்றாக சுழன்றன. பிக்கு இப்போது வேறொரு மந்திரத்தை சொல்லத்தொடங்கினார். மறுகணம் அனைத்து உருவங்களும் காணாமல் போயின. இருள் பழையபடி எங்களை அணைத்துக்கொண்டது.வெகுநேரம் எந்த சலனமும் இல்லை. பிக்குவும் உறங்கிப்போய்விட்டார். எனக்கும் உறக்கம் வந்தது. நின்றுகொண்டே தூங்கிப்போனேன்.காலையில் கண் விழித்தபோது பிக்கு எனக்கு முன்னே எழுந்து உட்கார்ந்திருந்தார். அவரை ஏற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். எனக்கு அவரை விட்டால் யாரும் இல்லை. அவருக்கோ என்னை விட்டால் யாரும் இல்லை. எங்களுக்குத் துணையாக வருவது எங்கள் நிழல்கள் மட்டுமே.இந்த நிலையில் எந்த மனிதருக்கும் பித்துப்பிடித்துவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பிக்கு விதிவிலக்கானவராக இருக்கலாம்.

‘‘குதிரையே..’’

பிக்குதான் அழைக்கிறார். போச்சு.... பித்துபிடித்துவிட்டது போல் தெரிகிறதே..

‘‘பேசாமலே வருவதற்குப் பதிலாக ஏதாவது உன்னிடம் பேசலாமே என்றுதான் பேசுகிறேன். இப்போது உன்னை விட்டால் எனக்கு யார் துணை? நேற்றிரவு நடந்ததைக் கவனித்தாயல்லவா? அவலக்குரல்களுக்கு ஓடிவந்து உதவும் குவாயின் போதிசத்துவரின் துதிகளை உச்சரித்துவந்தேன். இதுவரை எல்லா அபாயங்களிலும் கைகொடுத்தார் போதிசத்துவர். ஆனால் இம்முறை ஏனென்று தெரியவில்லை. அவரது பெயரைச்சொல்லி உதவி கேட்டபோது அந்த தீய உருவங்கள் சற்றுத்தயங்கினவே தவிர விலகவில்லை.’’
நான் கேட்டுக்கொண்டே நடந்தேன்.

‘‘பல ஆண்டுகளுக்கு முன்பு தெருவில் ஒரு முதியவரைக் கண்டேன். அவர் உடல் முழுக்க புண்கள். பெரும் வேதனையில் இருந்தார். அவரை மடாலயத்துக்குக் கொண்டுவந்து அவருக்கு மருந்திட்டேன். உணவளித்தேன். புத்தாடைகளும் கொடுத்தேன். அம்மனிதர் நன்றியில் கண்ணீர் பெருக்கினார். தன் கிழிந்த பையில் இருந்து ஒருகசங்கிய சுவடியை என்னிடம் அளித்தார். அதில் இருந்தது பஞ்சோசின் சூத்திரம். பிரஞாபரமிதஹிருதய சூத்திரம் என்று ஜம்புத்வீபத்தில் இதைக் கூறுவர். எனக்கு ஏதேனும் பேரபாயம் நேரிடில் அதைச் சொல்லுமாறு பணித்தார். அந்த சூத்திரத்தை நேற்றிரவு கூறியதும் தீய உருவங்கள் உடனே விலகிச்சென்றன’’

பிக்குவே தொடர்ந்தார்.

‘‘குவாயின் போதிசத்துவரைப் பற்றி நீ அறிவாயல்லவா? சீன தேசமெங்கும் அந்த பிக்குனியின் அழகிய உருவத்தை வணங்குகிறார்கள். பிராமணர்களின் தேசத்தில் இப்போதிசத்துவரை ஆண் வடிவில் அலோகதேஸ்வரர் என்ற பெயரில் வணங்குகிறார்கள். பயணம் செல்பவர்களின் அவலக்குரலுக்கு உடனே செவி சாய்ப்பார் இந்த போதிசத்துவர். ஆஹா அவரது கதைதான் எவ்வளவு அருமையானது? உலகில் இருக்கும் அவலங்களையெல்லாம் தீர்க்க ஒரு தலை போதவில்லையே என்று அவர் ஏங்கினாராம். அவரது ஏக்கம் பெருகி, அவரது தலை வெடித்து பத்தாக சிதறிவிட்டது. புத்தர் பெருமான் அவருக்கு பத்து தலைகளை அளித்தார். ஆனால் குவாயின் போதிசத்துவருக்கு இன்னொரு குறை... அழுபவர்களின் கண்ணீரைத் துடைக்க இரு கரங்கள் போதவில்லையே என்று கவலை கொண்டார். அவரது கரங்கள் தூள் தூளாகின. புத்தர் அவருக்கு ஆயிரம் கரங்களை அளித்தார். ஒருமுறை அவர் மண்ணுலகில் இருந்து சொர்க்கம் ஏகினார். போய்க்கொண்டிக்கையில் மனிதர்களின் அவலக்குரல்கள் தொடர்ந்து ஒலித்தன. வழியிலேயே அவர் திரும்பிவிட்டார். இம்மனிதர்களின் அவலம் நீங்கும்வரை நான் பூமியிலேயே இருப்பேன் என்று கூறிவிட்டார்’’
பிக்கு பேசிக்கொண்டே போனார். மஹாயான பௌத்தத்தில் கரை கண்ட மனிதர் அல்லவா?

நான்கு இரவுகள், ஐந்து பகல்கள்... தண்ணீரோ உணவோ இன்றி நாங்கள் அலைந்தோம். எப்படி உயிரோடு இருந்தோம் என்று கேட்கவேண்டாம். உயிர் என்றோ ஏதோ ஒன்று எப்படியோ எங்கள் உடலில் ஒட்டிக்கொண்டிருந்தது. பல நேரங்களில் ஆமை போல முன்னேறினோம். வழி தவறிவிட்டோம் என்பது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது. செத்து மடிந்து எலும்புக்கூடாக இப்பாலை வனத்தில் கிடக்கப்போகிறோம். ஆனால் எங்களைச் சாப்பிட நாய் நரிகளோ, பறவைகளோ இங்கு இல்லை.

பிக்கு விழுந்துவிட்டார். என்னாலும் நடக்க இயலவில்லை. குதிரைகளாகிய நாங்கள் எப்போது தரையில் படுக்கமாட்டோம். அப்படிப் படுத்தால் ஒரு நொடியில் எழுந்துவிடுவோம். ஆனால் நானும் விழுந்துவிட்டேன். இனி எழமாட்டேன் என்றே தோன்றியது. ஓயாத வெயிலில் உணவின்றி அலைந்து நான் எலும்புக்கூடாக மாறிவிட்டேன். பிக்குவோ மணலில் உழன்று, உதடுகள் வெடித்து, தோல்வறண்டு, ஆடைகள் கிழிந்து, நைந்து போய்க்கிடந்தார். அவருக்கு உயிர் இருக்கிறது என்பதை அவர் உதடுகள் அசைவதை வைத்தே சொல்ல இயலும். குவாயின் போதிசத்துவரைத்தான் அவர் வேண்டிக்கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான்குநாட்களாக வந்து உதவாத அந்த பிக்குனி இப்போதா வந்து உதவப்போகிறார்? மந்திரம் சொல்வதை நிறுத்துங்கள் பிக்குவே.
என் புலன்கள் தளர்கின்றன. பார்வை மங்குகிறது. இப்போது எந்த வேதனையும் இல்லை. சுகமாக இருக்கிறது. மரணம் நெருங்கிவிட்டதல்லவா?
அட ஏதோ குளிர்காற்று வீசுகிறது. பாலை வனத்தில் ஏதடா குளிர்காற்று. ஆனால் வீசுகிறது. கண்விழித்தேன். என் உடல் வலிமை பெற்றது போல் தோன்றியது. பசியும் இல்லை. தாகமும் இல்லை. எழுந்து நின்றேன். இன்னும் நான்கு நாட்களுக்கு நிற்காமல் ஓடலாம் போலிருக்கிறது. பிக்குவும் தளர்ச்சி நீங்கியிருந்தார். களைப்பில்லாமல் வலிமையுடன் இருந்த அவர் என்மீது ஏறிக்கொண்டார்.

குவாயின் போதிசத்துவருக்கு அவர் நன்றி சொல்வது கேட்டது.
கிளம்பினோம். சற்று தூரம் சென்றதும் நான் புல்வாசனையை நுகர்ந்தேன். அத்திசை நோக்கி ஓடினேன். கொஞ்ச தூரம் சென்றதும் நான் கண்ட காட்சி...

பச்சைப்பசேல் என்று புற்கள் செழிப்பாய் வளர்ந்திருந்தன. நடுவே ஒரு அழகிய குளம். தண்ணீரை நோக்கி ஓடினேன். பிக்கு இறங்கி மண்டியிட்டு தண்ணீரைக் குடித்தார். நான் அவருக்கு முன்னே குடிக்கத்தொடங்கியிருந்தேன். பின்னர் நான் போய் என்னிஷ்டத்துக்கு வளர்ந்திருந்த சுவையான புற்களை தின்னத் தொடங்கினேன். பிக்கு அமைதியாக கொஞ்சநேரம் படுத்திருந்தார். பின்னர் வழியில் எனக்குக் கொடுக்க புற்களை வெட்டி கட்டாகக் கட்டினார். தண்ணீர்குடுவையை நிரப்பிக்கொண்டார்.

ஒரு நாள் முழுக்க அங்கேயே ஓய்வெடுத்தோம். பின்னர் புறப்பட்டோம். இரண்டு நாட்கள் முழுமையான பயணத்துக்குப் பிறகு பாலைவனம் முடிவடையும் அறிகுறிகள் தோன்றின. தொலைவில் தெரிந்த பசுமையான மரங்கள் என்னை உற்சாகப்படுத்தின. பிக்குவும் உற்சாகம் அடைந்தார்.‘‘குதிரையே.. உனக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. எப்படிப்பட்ட ஆபத்தான பயணத்தில் என்னுடன் இருந்து உதவி செய்திருக்கிறாய்?’’ என்றார். நான் தலையை மட்டும் அசைத்தேன். பாலைவனத்தில் இருந்து தப்பித்ததே பெரிய விஷயமாய் எனக்குப் பட்டது.
அது இகு நகரம். நாங்கள் ஒரு பௌத்த மடாலயம் சென்றோம். அதற்குள் நாங்கள் வந்த சேதி மன்னருக்குப் போய்விட்டது. அவர் தம் பரிவாரங்களுடன் பிக்குவைப் பார்க்க வந்துவிட்டார். அங்கிருந்த துறவிகள் நம் பிக்குவை அணைத்து கண்ணீர்விடுவதைக் கண்டேன். மன்னரிடமிருந்து பரிசுப்பொருட்கள் வந்தன. அந்த மடாலயம் பெரும் விழாக்கோலம் கொண்டதைப் பார்த்தவாறே நான் உறங்கிப்போனேன்.

-பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com