மூலைக்குச் செல்லும் பல்லக்குகள்

மூலைக்குச் செல்லும் பல்லக்குகள்

பெண்ணென்று சொல்வேன்- 22

பெண்ணின்  மொழி, திசை, இசை, வாசம் வீரம்,ஈரம், கவிதை, உயிர் என பெண்பாலை பற்றிப் பேசும் உலகப்படங்களை பற்றி ஜா.தீபா எழுதும் இத்தொடர் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அந்திமழையில் வெளிவரும்.

‘பெண்கள் உற்சாகமாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள். ஆனால் ஈரானில் அது ஒன்றும் அத்தனை சுலபமானது இல்லை’ – Entertainment weekly  என்கிற சர்வதேச இதழ் ‘OFFSIDE’ படத்தின் விமர்சனத்தில் இப்படித்தான் குறிப்பிட்டிருந்தது. இதுபோன்ற விமர்சனங்களை ஈரானிய தேசம் பூசி மறைக்க மேற்கொண்ட முயற்சிகளை, அங்குள்ளத் திரைப்பட இயக்குனர்களே தங்களது படைப்புகளின் மூலம் வெளிதேசங்களுக்கு நிலைமைகளை அம்பலப்படுத்தி விடுகின்றனர்.

அரசியலில் தணிக்கை, தணிக்கையில் அரசியல் போன்ற காரணங்களால் சிறார்ப் படங்களை எடுப்பதில் ஈரானிய இயக்குனர்கள் பெரும் ஆளுமைகளாக மாறிவிட்டனர். ஆனாலும் இப்படங்களின் ஊடாக கிடைக்கும் சிறிய இடைவெளி சந்தர்ப்பத்திலும் அங்கு நடக்கிற அரசியல் கோமாளித்தனத்தையும், சமூகக் கோளாறுகளையும் சொல்லாமல் விடுவதில்லை. அதனால் தான் சமூக விரோதிகளுக்கான கண்காணிப்பை அங்குள்ள இயக்குனர்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்த கண்காணிப்பு அச்சுறுத்தல்கள் ஒன்றும் இயக்குனர் ஜாஃபர் பனாஹிக்கு புதிதில்லை தான். சிறைச்சாலை எல்லாம் சென்றுவிட்டு திரைப்படங்கள் எடுப்பதற்கு தடை பெற்றபோதிலும் தனது கருத்துக்களை ஆவணப்படங்களின் மூலமாகவும், பகிரக் கிடைக்கிற சந்தர்ப்பங்கள் வாயிலாகவும் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்.

அவருடைய சிறந்த படங்களில் ஒன்றானதாகவும், பல விதங்களில் ஈரானிய தணிக்கைக் குழுவால் நெருக்கடி கொடுக்கப்பட்டதுமான ஒரு படம் Offside.

கால் பந்தாட்டப் போட்டியை அது நடக்கும் விளையாட்டு மைதானத்தில் உட்கார்ந்து பார்க்க ஈரானிய பெண்களுக்கு தடை விதித்திருக்கிறது அந்த நாட்டு அரசாங்கம். ஆனால் நிலைமை என்னவென்றால் அந்த நாடு முழுக்கவே ஆண், பெண் என பேதமில்லாமல் கால் பந்தாட்டப் போட்டியின் வெறிபிடித்த ரசிகர்களாக இருக்கிறார்கள். இப்படியான சூழலில் 2006ம் ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்தாட்டப் போட்டியைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டத் திரைப்படமே இந்த Offside.  

அந்தப் போட்டியில் ஈரான் பஹ்ரைனுடன் மோதுகிறது. இதில் ஈரான் ஜெயித்தால் உலகக்கோப்பையின் இறுதிக்கு தகுதி பெற்று விடலாம். டெஹ்ரனில் வைத்து ஆடப்படும் அந்த அரைஇறுதி நாளில் தலைநகரமே ஆவலோடும், பரபரப்போடும் காணப்படுகிறது. இந்தப் போட்டியை நேரடியாக மைதானத்தில் உட்கார்ந்து ரசித்துவிட தீராத ஆவல் கொண்ட பெண்கள் சிலர் தாங்கள் மாட்டிக்கொள்ளாமலிருக்கும் பொருட்டு ஆண்களைப்போல உடையணிந்து வந்துவிடுகிறார்கள்.  அனைவருமே கல்லூரி அல்லது பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள். துணையேதுமில்லாமல் தனியாக வந்திருக்கும் நால்வரை காவல்துறையினர் பிடித்துவிடுகிறார்கள்.

பிடிபட்ட அந்த நான்கு பெண்களும் மைதானத்தின் சுவருக்கு அப்பால் உட்கார வைக்கப்படுகிறார்கள். உள்ளே எழுகிற பார்வையாளர்களின் உற்சாக கூக்குரல்கள் அவர்களின் பொறுமையை பதம்பார்க்கிறது. இவர்களைப் பார்த்துக் கொள்ள மூன்று காவலாளிகள் தனியாக நியமிக்கப்படுகிறார்கள். அதில் இரண்டுபேர் கால்பந்தாட்ட பிரியர்கள். இன்னொருவர் மூத்த அதிகாரி.  வேலை முடிந்து வீட்டுக்குப் போக இருந்த தன்னை இந்தப் பெண்கள் திரும்பவிடாமல் நிற்கவைத்துவிட்ட கோபத்துடன் சிடுசிடுத்த முகமாக காவல் காக்கிறார். அவரிடம் போய்   ‘’ஒரு ஓரமாக நின்றாவது விளையாட்டைப் பார்க்கிறோமே’’ எனக் கெஞ்சுகிறாள் ப்ளாக்கில் எட்டாயிரம் ரூபாய் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கிய அந்தப் பெண்களில் ஒருத்தி. இன்னொரு சின்ன பெண் விளையாட்டைப் பார்க்க முடியாத சோகத்தால் அரற்றஆரம்பித்து விடுகிறாள். மற்ற இரு பெண்களும், தங்களது பரபரப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்பின் என நடந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் இந்த பரபரப்பான போக்கு அந்த மூத்த காவலாளிக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த நேரத்தில் ஆண் உடையுடன் இருக்கும் இன்னொரு பெண்ணும் பிடிபட்டு விட அவளும் அங்கு கொண்டு வரப்படுகிறாள். வந்ததுமே முதலில் அவள் ஒரு சிகரட்டினை எடுத்துப் பற்ற வைத்துக் கொள்ள இது மூத்த காவலாளிக்கு மேற்கொண்டு எரிச்சலை ஏற்படுத்துகிறது. அவளிடம் அந்தப் பெண்கள் ஒருவருக்கொருவர் பேச்சைத் தொடுக்கத் துவங்குகின்றனர். புதிதாக வந்த பெண் அங்குள்ள மூத்த காவலாளியிடம் பேச்சுவாக்கில் தான் ராணுவத்தில் சேர ஆசைப்படுவதாகச் சொல்ல, கடுப்புத் தாங்காத அவர் அவளைத் திட்டுகிறார்.

மீதமிருக்கும் இரண்டு காவலாளிகள் சுவர்களின் இடைவெளி வழியாக விளையாட்டைப் பார்த்து ஆட்டத்தின் போக்கில் நடப்பவைகளை இந்தப் பெண்களுக்கு சொல்லத் துவங்குகிறார்கள்.வேறு மார்க்கமில்லாமல் மூத்த காவலாளியும் இதனை அனுமதித்துவிடுகிறார்

.

ஒருசமயம் திடீரென்று ஒரு பெண் தனக்கு அவசரமாக சிறுநீர் கழித்தேயாக வேண்டுமெனக் கூற, மூத்த காவலாளிக்கு தர்மசங்கடமாகிவிடுகிறது. ‘இங்கு ஆண்கள் மட்டும் பயன்படுத்தும் கழிவறை தான் இருக்கிறது இங்கெல்லாம் போகமுடியாது....’ என்கிறார் அவர் கோபமாக.

அந்தப் பெண்ணும் விடாது ‘’பரவாயில்லை...நான் அதையே பயன்படுத்திக் கொள்கிறேன்’ என்கிறாள்.

மூத்தக் காவலாளிக்கு கோபம் வந்துவிடுகிறது. ‘இந்த டெஹ்ரான் பெண்களுக்கு என்னாகி விட்டது. ஒரு பெண் ராணுவத்தில் சேரவேண்டுமென்கிறாள், நீ ஆண்கள் கழிவறைக்குப் போவேன் என்கிறாய்?’ எனக் கத்துகிறார். அந்தப் பெண்ணும் விடாமல் அவரை நச்சரிக்க வேறு வழியின்றி மற்றொரு காவலாளியின் துணையுடன் அவளை அனுப்பி வைக்கிறார்.

அவளை அழைத்துக் கொண்டு போகும் வழியில் காவலாளி அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுக்கிறான்.

‘ஏன் இப்படியெல்லாம் சிக்கலில் மாட்டிக் கொள்கிறாய்? எனக் கேட்கிறான் காவலாளி.

‘எனக்கு பக்கத்தில் இருந்து விளையாட்டைப் பார்க்க வேண்டும்.’ என்கிறாள் அந்தப் பெண்.

‘அது என்ன அவ்வளவு முக்கியமா?’

‘எனக்கு சாப்பாட்டை விட விளையாட்டு தான் முக்கியம். நான் ஃபுட்பால் விளையாடுவேன் தெரியுமா?’

‘அது சரி...அதற்காக இங்குள்ள லட்சம் ஆண்களின் முன் விளையாடுவாயா?’

‘இங்கெல்லாம் விளையாட மாட்டேன். நான் பெண்கள் முன்பாகத் தான் விளையாடுவேன். அங்கெல்லாம் ஆண்களை அனுமதிக்க மாட்டார்கள்’

‘ஒருவேளை பெண்கள் உடையணிந்து ஆண்கள் வந்தால் என்ன செய்வீர்கள்?’

‘ஆண்கள் இந்தளவுக்கு தைரியமாக எதையும் செய்வதில்லை. அதனால் அப்படியெல்லாம் நடந்ததே இல்லை‘.

‘வீட்டிலேயே டாய்லெட் போய்விட்டு வந்திருக்கலாம் இல்லையா?’

‘எனக்கு பதட்டத்திலும், பரபரப்பிலும் வந்துவிட்டது. ஃபுட்பால் விளையாடும்போதோ, பார்க்கும்போதோ எனக்கு இப்படி வந்துவிடும். என்னால் கட்டுப்படுத்தவே முடியாது.’

‘அதனால் தான் ஃபுட்பால் ஆண்களின் விளையாட்டாக இருக்கிறது’

மாறி மாறி வாக்குவாதம் செய்துகொண்டே கழிவறையை அடைகிறார்கள்.

அவளை உள்ளே அனுப்புமுன், ‘கண்களை மூடிக் கொண்டு போ...சுவற்றில் பெண்களைப் பற்றி தரக்குறைவாக எழுதி இருப்பார்கள். அதையெல்லாம் நீ படிக்கக் கூடாது’ என்ற விதிமுறையோடு அனுப்பி விட்டு வேறு ஆண்கள் உள்ளே போய்விடாதபடி காவல் காக்கிறான் காவலாளி.

வெகுநேரமாகி விடுகிறது. அவள் திரும்பி வரவில்லை. கழிவறைக்குள் போக வேண்டிய ஆண்கள் கூச்சலிடுகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்துவதில் காவலாளி கவனமாக இருக்கும்படி நேர அந்தப் பெண் வெளியில் தப்பித்துப் போய் பார்வையாளர் கூட்டத்தில் கலந்து விடுகிறாள். காவலாளி கூட்டத்தில் அவளைத் தேடத் தொடங்குகின்றான்.

இந்த நேரத்தில் மற்ற பெண்கள் இருக்கும் இடத்தில், ராணுவத்தில் சேரப் போவதாக  சொன்ன பெண், மூத்த காவலாளியிடம்,

‘ஏன் பெண்களை ஆண்களுடன் அமர்ந்து விளையாட்டைப் பார்க்க அனுமதிக்க மறுக்கிறீர்கள்? என்று பேச்சுக் கொடுக்கிறாள்.

‘பெண்கள் ஆண்களுடன் விளையாட்டு மைதானத்தில் சேர்ந்து உட்காரவே கூடாது’ என்கிறான் அவன்.

‘ஜப்பானுக்கும் ஈரானுக்கும் போட்டி நடக்கும்போது அதைப் பார்க்க ஜப்பானிய பெண்கள் மட்டும் ஏன் இங்கு அனுமதிக்கப் பட்டார்கள்?’

‘அவர்களெல்லாம் ஜப்பானியர்கள்’.

‘ஆக, நான் ஈரானில் பிறந்தது தான் உங்கள் பிரச்சனை. நான் ஜப்பானில் பிறந்திருந்தால் என்னை நீங்கள் அனுமதித்திருப்பீர்கள் இல்லையா?’

‘அவர்கள் நமது மொழியைப் பேசவில்லை. ரசிகக் கூட்டத்தினர் கெட்டவார்த்தைகளால் பேசும்போதும், திட்டும்போதும் அவர்களுக்குப் புரியாது’.

‘ஒ ! அப்படியென்றால் கெட்ட வார்த்தைகள் தான் உங்களது பிரச்சனையா?’

‘அது ஒன்று மட்டுமல்ல. ஆணும், பெண்ணும் சேர்ந்து உட்காரக்கூடாது. அவ்வளவு தான்’.

‘சினிமா தியேட்டரில் மட்டும் சேர்ந்து உட்காருகிறார்கள். அதிலும் அங்கு இருட்டாக வேறு இருக்குமே..,’ என அவள் விடாமல் பேசிக்கொண்டே போக, அவர் அவளுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். இப்போது இன்னொரு பெண்ணும் அங்கு வருகிறாள். ஒரு காவலாளியின் உடையை அணிந்து ஏமாற்றி விளையாட்டைப் பார்க்க வந்திருக்கும் அவள், எதையும், யாரையும் பற்றி கவலைப்படாமல் இருக்கிறாள் என்பதற்காக கையில் விலங்கு மாட்டப்பட்டிருக்கிறாள். புதிதாக ஒருத்தி வந்ததும் அங்கு ஏற்கனவே இருக்கும் பெண்கள் அவளை ஆரவாரமாக வரவேற்கின்றனர். மூத்த காவலாளிக்கு கழிவறைக்குப் போன பெண் தப்பித்துப் போனது வேறு பெருங்கவலையைத் தருகிறது. ‘இந்தப் பெண்களால் தனது வேலையே பறிபோகப்போகிறது ‘ எனப் புலம்புகிறார்.

கழிவறையிலிருந்து காணாமல் போன பெண் சிறிது நேரம் கழித்து அவளாகவே அங்கு வந்து சேருகிறாள். ‘நல்ல வாய்ப்பு. ஏன் திரும்பி வந்தாய்?’ என மற்றப் பெண்கள் கேட்க, ‘இதோ இந்த அதிகாரியின் வேலை போய்விடுமே என்று தான் திரும்ப வந்துவிட்டேன்’ என்கிறாள் மூத்த அதிகாரியைக் காட்டி. இதைக் கேட்டதும் அசந்து போகும் அவரின் முகம் கனிவுடையதாக மாறுகிறது. தான் பார்க்கையில்   நடந்த விளையாட்டு நிகழ்வுகளை அங்கிருக்கும் பெண்களுக்கு விவரிக்கத் தொடங்குகிறாள் அவள். அதனை மூத்த காவலாளி, மற்றும்  இரு காவலாளிகள் என அனைவரும் தங்களை மறந்து வேடிக்கைப் பார்க்கத் தொடங்குகின்றனர்.

மாலை நேரம் வருகிறது. இவர்களை விசாரணைக்காக அழைத்துப் போக ஒரு வேன் வருகிறது., அதில் ஏறி உட்கார்ந்து கொள்ளும் அப்பெண்கள் உற்சாகமாக காவலாளிகளை கிண்டல் செய்துகொண்டு வருகிறார்கள். ஒரு கட்டத்தில் மூத்த அதிகாரி இவர்களுக்காக, ரேடியோவை சரிசெய்து நேரடி ஒலிபரப்பைக் கேட்க வைக்கிறார். அந்தப் போட்டியில் ஈரான் வெற்றி பெற்று விடுகிறது. அதன் தொடர்ச்சியாக படமும் முடிகிறது.

கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்ற போதிலும், ஒரு இடத்தில் கூட விளையாட்டை காட்டாமல், ஆனால் அதன் பரபரப்பை குலைக்காமல் காட்சியை நகர்த்தியது சிறந்த திரைக்கதைக்கான எடுத்துக்காட்டு. அதிலும், விளையாட்டின் கடைசி நேரத் துளிகளை வேனில் நேரடி அலைவரிசைக் கேட்கும் பெண்களின் முகத்தில் காட்டியிருப்பது பனாஹியின் திறமையின் மேன்மை..

உண்மையிலேயே உலகக் கோப்பை நடக்கும் நேரத்தில் பொதுமக்களுக்குத் தெரியாமல் பதிவு செய்யப்பட்ட காட்சிகளைப் படத்தில் பல இடங்களில் பார்க்க முடிகிறது. தேவைக்காக கொஞ்சம் ஆவணப்படத்தின் சாயல் இருப்பது போன்ற திட்டமிடுதலுடனேயே இக்காட்சிகள் கையாளப்பட்டிருக்கின்றன.

அரசாங்கத் தடையை எதிர்த்து எழுதப்பட்ட இந்தக் கதைக்கு அனுமதி கிடைக்காது என்பதால், ஆறு சிறுவர்கள் கால்பந்தாட்டத்தைப் பார்க்கப் போகிறார்கள் என்பதாக கதையை எழுதி அதற்கு அனுமதி பெற்று பனாஹி இந்தப் படத்தினை எடுத்திருக்கிறார். இடையில் உண்மைக் கண்டுபிடிக்கப்பட்ட போது பனாஹி அதற்குள் படத்தினை எடுத்து முடித்து விட்டிருந்தார். அரசாங்கத்தால் ஈரானில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது, இன்று வரையிலும் அந்தத் தடையை ஈரானிய அரசு நீக்கிகொள்ளவில்லை. ஆனால் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களால் இந்தப் படம் பார்க்கப்பட்டு, திரை விழாக்களிலும் தொடர்ந்து வெகுவான அங்கீகாரத்தைப் பெற்றுவருகிறது.

ஜாஃபர் பனாஹியின் மகள் தீவிர கால்பந்தாட்ட ரசிகை. எப்படியேனும் தான் மைதானத்தில் அமர்ந்து விளையாட்டைப் பார்த்துவிடவேண்டுமென எடுத்த முயற்சிகள் தான் பனாஹியை இந்தப் படத்தினை எடுக்கத் தூண்டியிருக்கிறது. இதில் நடித்த பெண்கள் யாருமே தொழில்முறை நடிகர்கள் இல்லை என்பது ஒரு ஆச்சரியம். பல கல்லூரிப் பெண்களிடம் ரகசியமாக கதை சொல்லப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றவர்கள் தான் இந்தப் படத்தில் நடித்த பெண்கள்.

படத்தில் ஒரு காட்சியில், தனது பக்கத்து வீட்டு பெரியவரைப் பார்த்ததும், பிடிபட்ட பெண்களில் ஒருத்தி தனது ஆண் உடைக்கு மேல் பர்தாவை  எடுத்து மாட்டிக் கொள்வாள்.

“பர்தா அணிந்த பெண் கதாபாத்திரத்தைத் திட்டமிட்டே கொண்டு வந்தேன். , இங்கு இருக்கும் பிரச்சனை பெண்கள் பர்தா அணிந்து வருகிறார்களா இல்லையா என்பதில் இல்லை. பெண்கள் ஆண்கள் கூடி இருக்கும் எந்த இடத்திற்கும் வரக்கூடாது என்பது தான் முக்கிய எண்ணமாக இருக்கிறது. இதை நான் சொல்ல விரும்பினேன். அப்படி வருகிற பெண்கள் மதப் பாகுபாடு இல்லாமல் நசுக்கப்பட்டார்கள். பெண்களை அவர்களின் அடையாளம் மறைத்து ஆண்கள் போல வேடமிடத்தூண்டும் சமூகத்தின் அவமானம் இது” என்கிறார் படத்தைப் பற்றி பனாஹி.

இந்தப் படத்தில் பல காட்சிகள் நம்மை சிரிக்க வைக்கக் கூடியவை தான். ஆனால் சிரிப்பின் கூடவே, அந்தப் பெண்களின் நிலைமை நம்மை துயரப்படுத்தியும் விடுகிறது. பெண்களைத் தவறாக யாரேனும் சொன்னால் அடிக்கக்கூட தயங்காத ஒரு பெண், இந்தப் போட்டியைப் பார்க்காமலே இறந்துபோன தனது நண்பனை நினைத்து அழுகிற ஒரு பெண், திருட்டுத்தனமாக போலிஸ் உடையைப் போட்டுக் கொண்டு , பின்பு கையில் விலங்கோடு வீட்டுக்கு எப்படி போவேன் என துயரப்படுகிற மற்றொரு பெண், தான் ஒரு கால்பந்தாட்ட வீராங்கனை என்பதில் எப்போதும் பெருமிதமாய் இருக்கும் ஒரு பெண், இவர்கள் மேல் கோபம் கொண்டு பின்பு தன்னுடைய சகோதரிகளாக அனைவரையும் நினைத்து அவர்களுக்கு உதவி செய்கிற காவலாளி, இந்தப் பெண்களிடம் கடைசியில் சிக்கும் ஒரு பதினாறு வயது இளைஞன் என ஒவ்வொரு காட்சியுமே பெண்ணியம் என்பதை விட மனிதத்தையே அதிகம் பேசுகின்றன.

கதவு வழியாக போகக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், ஜன்னல் வழியாக நுழைந்துவிட வேண்டும்’ என்பது பனாஹி அடிக்கடி சொல்லுகிற வார்த்தைகள். இதையேதான் ஈரானியப் பெண்கள் மட்டுமல்லாமல் எங்கெல்லாம் சுதந்திரம் மறுக்கப்படுகிறதோ, அங்கேயெல்லாம் பெண்கள் பின்பற்றுகிறார்கள்.

(ஜா. தீபா சென்னையில் வாழும் எழுத்தாளர். திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் பணிபுரிகிறார்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com