வளர்திரை மாற்றம்!

வளர்திரை மாற்றம்!

பெருவழிப்பாதை 5

தமிழ்த்திரைப்படம் கண்ட மறுமலர்ச்சிகளில் இரண்டு கட்டங்கள் முக்கியமானவை என்று கருதுகிறேன். அதில் முதன்மையானது புராணீக, அரச கதைகளிலிருந்து சமூகக்கதைகளுக்கு மாறியது.

1949-இல் வேலைக்காரி, 1951-இல் ஓர் இரவு ஆகிய அறிஞர் அண்ணாவின் கதைகள் திரைப்படங்களாக வெளிவந்தன.

1946-இல் ராஜகுமாரி,1948-இல் அபிமன்யு என்று தொடங்கிய கலைஞர் மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி என்று தொடர்ந்து 1951-இல் பராசக்தியைப் படைத்தார்.

அதைத் தொடர்ந்து 1952-இல் திருவாரூர் தங்கராசு எழுத்தில் வெளியான ரத்தக்கண்ணீரும் தமிழ்த்திரையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. அதன்பிறகு கலைஞர் திரையை திராவிடக் கருத்துகளின் பிரச்சார ஆயுதமாக மாற்றினார், திரையில் நடந்த இந்த உள்ளடக்க மாற்றம் அரசியல் மாற்றத்திற்கும் துணை நின்றது.

ஒரு அரசியல் இயக்கம் திரைப்படத்தை ஆயுதமாகப் பயன்படுத்தியது இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் முதலில் நிகழ்ந்தது. கலைஞரின் பங்களிப்பைத் தொடர்ந்து சோலைமலை இயல்பான மொழியில் வசனங்களை எழுதினார்.  பீம்சிங்-சோலைமலை  கூட்டணி பெரும் சாதனைகளை நிகழ்த்தியது.

வசனங்களைத் தாண்டி காட்சி அனுபவங்களை நோக்கிய நகர்வை ஶ்ரீதர் தொடங்கிவைத்தார். பின்னர் வந்தவர் பாலச்சந்தர், தனது நாடகங்கள்,வேற்று மொழிப்படங்களின் தழுவல்கள் என கதைக்களங்களை அமைத்துக்கொண்டார்.. பெண்கள் குறித்த அன்றைய திரை மதிப்பீடுகளை அவர் படங்கள் மாற்றிக்காட்டி அதிர்ச்சியூட்டின.

எனினும் நாடக அனுபவங்களின் காரணமாக பாலச்சந்தரின் படங்கள் வசனத்தையே முதன்மையாகக் கொட்டிருந்தன.

 இப்படியானதொரு சூழலில் தமிழ்த்திரைப்படத்தை காட்சியனுபவமாக மாற்றிக்காட்டியது பாரதிராஜாவின் வருகை.

அவரது வருகைக்குப் பிறகு திரையனுபவம் வாழ்வியல் கொண்டாட்டமாக மாறியது. இதற்காகவே காத்திருந்ததுபோல இளைய ராஜாவும் இதனோடு துணைசேர்ந்தார்.

1977-ல் ஒரு மாற்றத்தை பாரதிராஜா தொடங்க, 1979-ல் மகேந்திரன் உதிரிப்பூக்களோடும், 1982-ல் பாலுமகேந்திரா மூன்றாம்பிறையோடும் வந்து இந்த மாற்றத்தை உறுதி செய்தார்கள்.. மற்ற இருவரும் தங்கள் வசதிக்குட்பட்ட எல்லைகளுக்குள் நின்றுகொண்டு தொடர்ந்த நேரத்தில் பாரதிராஜா கடைசிப் பார்வையாளன்வரை ரசனை மாற்றத்தைக் கொண்டு சென்றார்.

கமல், ஸ்ரீதேவி, ரஜனிகாந்த் என்ற நட்சத்திரங்களின் பெருந்துணையோடுதான் தனது பயணத்தைத் தொடங்கினார் பாரதிராஜா, ஆனால் 16 வயதினிலே படத்தின் பாத்திரங்களுக்குள் அவர்கள் தங்கள் சொந்த அடையாளமற்றுக் கடந்துபோனார்கள், எனவேதான் பாரதிராஜா புதுமுகங்களைக் கொண்டே படங்களைச் செய்தார் என்னும் அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது.

அரங்கங்களுக்குள் அடைபட்டுக்கிடந்த திரைப்படத்தை கிராமங்களுக்குள் கொண்டுசென்றது வெறும் படப்பிடிப்புத்தளத்தின் மாற்றம் மட்டுமன்று, ஒரு பண்பாட்டு மாற்றம், கேமராவை கிராமங்களுக்குள் கொண்டு சென்றதைவிட கிராமங்களை கேமராவுக்குள் கொண்டு சேர்ந்த்தால் நிகழ்ந்த மாற்றங்களால், திரைப்படங்களுக்குள் நுழையத்தேவையாக இருந்த அனைத்து புனிதத்தகுதிகளும் உடைந்தன என்பதே முக்கியமானது. (பிரமாண்டமான மிக்சல் கேமிராவின் காலம் முடிந்து எளிதில் எடுத்துச்செல்லும் ஆரி கேமிராவின் வருகையும் பாரதிராஜாவின் வெளிப்புறப்படப்பிடிப்பு மாற்றத்துக்குத் துணை நின்றது)

கிராமத்துக்கதைகளை கிராமத்திற்கே போய் எடுத்ததைத்தவிர பாரதிராஜா என்ன செய்துவிட்டார் என்னும் கேள்வி எழலாம்.

2001-இல் நீலவானம் என்னும் எங்கள் முதல்தொடரின் படப்பிடிப்பு திருவையாற்றில் நடந்தது. நடிகர் ஶ்ரீகாந்த் அதில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்தார். அவர் நடித்த பத்து நாட்களில் முப்பது முறையாவது பாரதிராஜா வந்ததுக்கப்புறம் சினிமாவுக்கான மரியாதையே போச்சு என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருப்பார். இந்த வலியை உணர்ந்தால் மட்டுமே பாரதிராஜா எதை மாற்றினார் என்பதைப் புரிந்துகொள்ள இயலும்.

செட்டுகளுக்குள்ளிருந்த படப்பிடிப்பை தெருக்களுக்குக் கொண்டுவந்துவிட்டார் என்பது மட்டுமே இந்தக் குற்றச்சாட்டுக்குக் காரணமன்று, வெளுத்த தோல் மட்டுமே நடிகர்களுக்கான அடையாளம் என்பது தொடங்கி யாரெல்லாம் எதைப் படமெடுக்கலாம், யார்யார் படமெடுக்கலாம் என்ற வரைமுறைகளையும் அவர்  உடைத்தார் என்பது யார்யார் அரசியலுக்கு வரலாம் என்ற வரைமுறைகளை அண்ணா உடைத்ததற்கு நிகரானது.. இது சற்று அதிகப்படியான ஒப்பீடாகத் தோன்றினாலும் அதனை பாரதிராஜாவைப் புகழ்வதற்காக அல்லாமல், அன்றைய சூழலைப் புரியவைக்கவே பயன்படுத்துகிறேன்..

தன் எல்லைகளைத் தாண்டாத எளிய கல்வி, ஊர்ஊராக, வீடுவீடாக அலைந்து திரிய வாய்ப்பளித்த மலேரியா ஆய்வாளர் வேலை என்று கிடைத்த அனுபவங்கள் அசல் கிராமங்களையும், மனிதர்களையும் அவர் திரையில் கொண்டுவருவதற்கு அனுபவ உதவியாக இருந்தன.. அதற்கு இணையான வாழ்வியல் சூழலும், அதற்குமேலான கம்யூனிஸ்ட்கட்சியின் பிரச்சாரமேடைகளின் அனுபவங்களும்கொண்ட இளையராஜா துணையாக அமைந்ததும் பெரும் வளர்திரை மாற்றமானது.

குளோசப் காட்சிகளில் நடிகர்களின் உணர்வுகளுக்கும், வசனமற்ற காட்சிகளில் இசைக்கும் அவர்கொடுத்த முக்கியத்துவம் வசனத்தை மட்டும் நம்பாமல் காட்சிமொழியை நம்பியதாலேயே கிடைத்ததன.. இளையராஜா போலவே ஆர்.செல்வராஜ், கலைமணி, ரத்னகுமார் போன்ற மண்ணிலிருந்து வந்த எழுத்தாளர்களையும் அவர் சரியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

தமிழ்த்திரை வரலாற்றில் பாரதிராஜாவின் பங்கு குறித்து ஒவ்வொரு படமாகவும், பாத்திரமாகவும் எடுத்து விவரிக்க இங்கு இடமில்லை.. அதனை யாராவது எப்போதாவது செய்வார்கள் என்று நம்புகிறேன்.

அவரோடு இருந்த நாள்களில் அவதானித்த வகையில் அவரது திரைமுயற்சிகள் யாவும், எந்த முன்முயற்சிகளும் இல்லாமல் இயல்பாக நடந்தவையென்றே தோன்றியதுண்டு. வெற்றி தோல்விகளைத் தாண்டியும் தான் எதற்காகக் கொண்டாடப்படுகிறோம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறாரா என்னும் சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. தனது அரசியல் குறித்த கூர்மையும், ஓர்மையும் அவருக்கு இன்னும் இருந்திருக்கவேண்டும் என்னும் எண்ணம் எனக்கு எப்போதுமுண்டு.

படங்களின் உள்ளீடாகத் தொடர்ந்திருக்க வேண்டிய அரசியலை காலத்திற்கேற்ப மேம்படுத்தி யிருந்தால், இப்போதுள்ள இடத்தைவிடவும் அவர் இந்தியா முழுமைக்கும் மேலான ஓர் அடையாளமாகத் திகழ்ந்திருக்க முடியும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com