வா.மணிகண்டன்

கவிதைத்திருவிழா

மீன்களோடு நொறுங்கும் தொட்டி

பந்த‌ல் சலித்த‌‌
வெய்யிலில் பேசிக் கொண்டிருந்தோம்.
தீராத இரவுகள் பற்றி பேசினீர்க‌ள்
நெருங்க முடியாத வனம் குறித்துச் சொன்னீர்கள்
விடையில்லாத‌ புதிர்க‌ளை சிலாகித்தீர்க‌ள்.

பேச‌ எத்த‌னித்தேன்.

நொறுக்கினீர்கள்.

மீன்க‌ளால் நிறைந்த‌
க‌ண்ணாடி தொட்டியொன்றை.

***********

கதை சுமந்து திரியும் வாசம்

குறுகிய சந்தொன்றில்
ஒடுங்கிக் கிடக்கிறது அறை.

அடைக்கப்பட்ட இருளுக்குள்
ஒளிக்கோடிடுகிறது தெருவிளக்கு.

ஈரத்துணியின் மெல்லிய வாடை
அலைவீசும் தனிமையின்
ஆழ்ந்த மெளனத்தில்
நெட்டி முறிக்கிறது
நொடிமுள்.

நேற்றைய உன் வாசம்
சொல்லப்படாத கதையொன்றை
சுமந்து அலையும் இத்தருணம்-

ப‌சிக்கிற‌து.

****************************

எழுதிவிட முடியாத கவிதை


ஒவ்வொரு கணமும்
கனக்கிறது
--
உடைக்கவே முடியாத
மெளனம்.
மின்னல் முறிவது போல்
வந்து செல்லும்
முத்தத்தின் ஞாபக
மிச்சங்கள்.
மடங்கிய காகித நுனிக்குள்
சிக்கியிருக்கும்
குங்குமத் துகள்.
--
யாராலும் எழுதிவிட முடியாத
ஒரு கவிதை இன்னும் இருக்கிறது.

*********************

யாரும் பதிக்காத கால்தடங்கள்

உனக்கு எழுதி முடித்த கடிதத்தின்
கோடொன்று
சலனமில்லாத் தனிமையில்
இருள் துளைத்து
மரங்களற்ற பரப்பொன்றில்
சாலையாக நீள்கிறது.

சிரிப்புகளின் அதிர்வொலி
திட்டுக்களாகி இருக்கும்
அதன் பாதையில்
யாரும் பதிக்காத கால்தடங்கள்
பறவையின் எச்சத்தைப் போல‌
கிடக்கின்றன.

ரகசியப் பேசுக்கள் யாவும்
உறைந்து கிடக்கும்
காற்று வெளி நிசப்தத்தில்
உன் வாசல் தொட்ட கணம்
சுருங்கிய கோடு
நசுங்கிய ரோஜாச் சாற்றின்
புள்ளியாக
கடிதத்தில் படிகிறது.

வெறுமை கவிந்து கிடந்த அந்த இதழ்
உன்னை
இறுதியாகத் தொட்டவைகளில்
தானும் ஒன்றென பதறுகிறது.

************************

எந்த‌ப் புகாருமில்லை

இந்தக் குழ‌ந்தைக்கு எந்த‌ப் புகாருமில்லை
இந்தக் குழ‌ந்தைக்கு எந்த‌க் க‌வ‌லையுமில்லை
இந்தக் குழ‌ந்தைக்கு எந்த‌க் குழப்ப‌முமில்லை

பாறைக‌ளில் இர‌த்த‌ம் வ‌டிகிறது.
குழந்தை
ந‌தியைக் காட்டிச் சிரிக்கிற‌து

உட‌ல் சிதைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின்
மூச்சு
காற்று வெளியில் த‌கிக்கிறது.
குழ‌ந்தை
ப‌ற‌வையை கை நீட்டி அழைக்கிற‌து

கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் க‌ண்க‌ள் வ‌ரிசையாக‌ அடுக்க‌ப்ப‌டுகின்ற‌ன.
குழ‌ந்தை
உதிர்ந்த‌ இலைக‌ளைச் சேக‌ரிக்கிற‌து

இந்த‌க் குழ‌ந்தைக்கு எந்த‌ விர‌க்தியுமில்லை
இந்த‌க் குழ‌ந்தைக்கு எந்த‌ துக்க‌முமில்லை

குழ‌ந்தையாக இருக்கும் வ‌ரையில்
இந்த‌க் குழ‌ந்தைக்கு எந்த‌ப் புகாருமில்லை.

- வா.மணிகண்டன்


இருபத்தைந்து வயதாகும் வா.மணிகண்டனின் சொந்த ஊர் கோபி செட்டிபாளையம். முதல் கவிதை 2005 ஆம் ஆண்டில் உயிர்மை இதழில் வெளி வந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக உயிர்மை, காலச்சுவடு, உன்னதம், புதிய பார்வை, உயிர் எழுத்து, தக்கை, அம்ருதா உட்பட தமிழின் முக்கியமான இலக்கிய பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதி வருகிறார்.

டிசம்பர்   14, 2007

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com