சைபர் உலகில் காணாமல் போன சிறுவன்

சைபர் உலகில் காணாமல் போன சிறுவன்

விரல்நுனி விபரீதம் 3

என் பதினேழு வயதில் ஊரை விட்டு படிப்பு, வேலை என்று வெளிவந்தேன். என் வாழ்நாளில் இனிமேல் ஒரு மாதம் தொடர்ச்சியாக எப்போது அங்கு இருக்கப் போகிறேன் என்று தெரியாது. மேலோட்டமாக ஒன்றுமே இல்லாத இந்தப் பிரிவின் துக்கம் மிகக் கொடுமையானது. கிராமப்புறங்கள் அல்லது நடுத்தரக் குடும்பங்களிலிருந்து வெளிவரும் பலரின் நிலைமையும் இதுதான். எனக்கு அடுத்த தலைமுறைக்கு இந்த நிலைமை இன்னமும் மாறியிருக்கிறது. கவனித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட ஐந்து வயதில் ஒவ்வொரு குழந்தையும் கிட்டத்தட்ட தனித்து விடப்பட்டுவிடுகிறார்கள். ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு முன்னதாக தனித்த குழந்தைகளுக்கு துணையாக வீட்டில் டி.வி. இருந்தது. ஒளியும் ஒலியுமோ அல்லது மேல்மாடி காலியோ அவர்களை சோபாவில் பிணைத்த ஆயுதங்களாக இருந்தன. இப்பொழுது இன்டர்நெட் இருக்கிறது. இன்டர்நெட்டில் கிடைக்காத தகவல் என்று ஒன்று மீதம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அம்மா,ஆடு,இலை என்ற அகரம் தொடங்கி எல்லையற்ற தகவல்களை தனக்குள் அடக்கிக் கிடக்கும் பூதமாக இருக்கிறது. தொடர்ச்சியாக ஒரு குழந்தை இன்டர்நெட்டில் என்னதான் செய்ய முடியும் என்று யோசிக்கும் போதே பயங்கரம் தொற்றிக் கொள்கிறது.

கெவின் மிட்நிக். இந்தப் பெயரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் பரவாயில்லை. உங்களுக்குத் தெரிந்த பையனோ/பெண்ணோ சாப்ட்வேர் துறையில் "நெட்வொர்க்கிங்"ல் இருந்தால் கேட்டுப் பாருங்கள், தெரிந்து வைத்திருப்பார்கள். கணிணித் துறையில் பாதுகாப்பிற்கான ஆலோசனைகளை அள்ளி வழங்கும் 'கெவின் மிட்நிக் கன்சல்டிங்' என்ற புகழ்பெற்ற நிறுவனத்தின் நிறுவனர்தான் மிட்நிக். இந்த நிறுவனத்தினர் சொல்வது போல, "நெட்வொர்க்" பாதுகாப்பில் மட்டுமல்லாமல் இவர்களின் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளரின் மொத்த டிஜிட்டல் தகவல்களையும் பாதுக்காப்பதற்கான அறிவுரைகள், நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த நிறுவனத்தைப் போல உலகம் முழுவதுமாக எண்ணற்ற நிறுவனங்கள் இருக்கின்றன. 'மிட்நிக் கன்சல்டிங்' நிறுவனத்தில் மட்டும் என்ன சிறப்பம்சம் என்று கேட்பவர்களுக்குத்தான் பின்வரும் தகவல்கள்.

மிட்நிக் சிறுவயதில் இணையத்தில் செய்த குற்றங்களுக்காக "சைபர் உலகில் காணாமல் போன சிறுவன்" என்று அழைக்கப்படுகிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனையை பெற்று வெளிவரும் போது, கணினி "போதை"யிலிருந்து மிட்நிக் மீண்டு வருவதற்கான சிகிச்சையை கெவினுக்கு அளிக்கும்படி நீதிபதியால் அறிவுறுத்தப்பட்டது. தொலைபேசி தவிர வேறு எந்தவிதமான தகவல் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தக் கூடாது என தடையும் விதிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த கெவின் நீதிமன்றத்தில் இந்தத் தடை மனிதனின் அடிப்படை உரிமையை தகர்ப்பதாக உள்ளது என வழக்குத் தொடர்ந்து இணையத்தை பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்று தன் நிறுவனத்தை தொடங்கினார். திருடன் போலீஸாக மாறுவது போல் இப்பொழுது இணையத்திருட்டை தடுக்கும் நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார் மிட்நிக்.

கெவின் 1963 அமெரிக்காவில் பிறந்தவர். அவர் பிறந்த கொஞ்ச நாட்களில் அவரின் பெற்றோர் விவாகரத்து பெற்றுவிட்டார்கள். கேட்பாரற்று சுற்றி வளர்ந்த கெவினுக்கு பீட்ஸா கடைகளில் சந்தித்துப் பேசும் கம்ப்யூட்டர் கேடிகள் நண்பர்களானார்கள்.கணிணியுலகின் புதிய கதவுகளையும் கில்லாடி நண்பர்கள் திறந்துவிட்டார்கள்.



அந்தச் சமயத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர‌ பேருந்துகளில் பயணம் செய்ய டிஜிட்டல் தகவல்கள் பதிக்கப்பட்ட "பஞ்ச் கார்ட்" என்னும் அட்டை முறை புழக்கத்தில் உண்டு. இதுதான் கெவினின் முதல் ப்ராஜக்ட். பக்காவாக ஒரு அட்டையை தானாகவே தயார் செய்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தன் சொந்த அட்டையை வைத்துக் கொண்டு எந்த மூலைக்கும், எந்த பேருந்திலும் சென்று வரும் வசதியை அடைந்தார்.இந்த பஞ்ச் கார்ட் முறையை தன்னால் ஏமாற்ற முடியும் என்று உணர்ந்து அதனை வெற்றிகரமாகவும் செயல்படுத்திய போது கெவினின் வயது 12.

இதன் பின்னர் அடுத்து வந்த சில வருடங்களுக்கு சிறு சிறு சைபர் குற்றங்கள் செய்வது(கெவினுக்குத்தான் அவை சிறு குற்றங்கள். உங்களுக்கும் எனக்கும் அவை பிரம்மாண்டமான குற்றங்கள்)தன் அடையாளத்தை அடிக்கடி மாற்றுவது, பாஸ்வேர்ட் உடைத்தல் போன்ற சில காரியங்களை செய்து வந்தார். தன் அடையாளத்தை எப்படி மாற்றித் திரிந்தார் என்று பார்ப்பதற்கு முன்னர் மிட்நிக்கின் "மாஸ்டர் அட்டாக்"ஐ சொல்லிவிடுகிறேன்.

கெவினுக்கு 24 வயது இருக்கும் போது அவரது நண்பன் 'டி.இ.சி' என்ற நிறுவனத்தின் தொலைபேசி எண்ணைக் கொடுக்க,கெவினின் துறு துறு மூளை விழித்துக் கொண்டது. கெவினின் அதிர்ஷ்டமோ அல்லது அந்நிறுவனத்தின் துரதிர்ஷ்டமோ தெரியவில்லை, அந்த எண் 'டி.இ.சி' நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்பான ஆர்.எஸ்.டி.எஸ்/இ என்ற மென்பொருளை வைத்திருந்த கணிணியோடு இணைக்கப்பட்டிருந்தது.

இரவு பகலாக கண்விழித்து மூலமாக தன் வீட்டில் உள்ள தொலைபேசியுடன் இணைந்திருக்கும் கணிப்பொறியின் உதவியோடு 'டி.இ.சி' நிறுவனத்தின் தொலைபேசியோடு இணைந்திருந்த கணிப்பொறியை தொடர்பு கொண்டார். இரண்டு தொலைபேசியின் மூலமாக மனிதர்கள் பேசிக்கொள்வது போல இரண்டு தொலைபேசி வழியாக இரண்டு கணிணிகளை பேசச் செய்தார். அவ்வளவுதான். டி.இ.சி நிறுவனத்தின் பெரிய குழு ஒன்று தயாரித்த பல மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட மென்பொருள் தொலைபேசிக் கம்பி வழியாக கெவினின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. 'டி.இ.சி' நிறுவனம் 'லப்பொதிபோ' என்று வாயிலும் வயிற்றிலுமாக அடித்துக் கொண்டு நீதிமன்றங்களின் படியேறி, ஒரு வழியாக கெவினை கூண்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தியது.அறிவுத் திருட்டான இக்குற்றம் நிரூபிக்கப்பட்டு கெவினுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இப்பொழுது சொல்லப்பட்ட கைது(இருபத்து நான்கு வயதில்),கெவினின் ஐந்தாவது கைது. இந்தக் கைதிற்கு முன்னதாக‌ பல கணிணி குற்றங்களில் சிக்குவதும் வெளியேறுவதமாக இருந்திருக்கிறார். இன்றும் கூட கணிணிக் குற்றங்களை ஒருவர் செய்ததாக நிரூபிப்பது என்பது காவல்துறையினருக்கு குதிரைக் கொம்பு. அது அமெரிக்காவானாலும் சரி. உகாண்டாவாக ஆனாலும் சரி. இருபது வருடங்களுக்கு முன்னாலான கதையே வேறு. "நான் அவனில்லை" என்று எளிதாக வெளிவந்துவிடலாம். சில குற்றங்கள் நிரூபிக்க இயலாத காரணத்தால் காவல்துறையின் பதிவேடுகளில் இருந்து அவை இருந்ததற்கான அடையாளம் எதுவுமேயில்லாமல் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஐந்தாவது முறையில்தான் வேறுவழியே இல்லாமல் கெவின் அகப்பட்டிருக்கிறார்.

தனது சிறு குற்றங்களின் சமயத்தில் கெவின் அமெரிக்கத் காவல்துறைக்கு தன் அடையாளத்தை மாற்றிக் காட்டி பெரும் சவாலை விடுத்தார். அமெரிக்க அரசின் குடிமக்களின் அடையாளத்தை நிர்வகிக்கும் முறை முற்றிலும் கணிணி மயமாக்கப்பட்டிருந்தது. இந்த கணிணி மயமாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை ஏமாற்றி அரசாங்கத்தின் கண்களில் மண் தூவினார். பிறந்த உடன் அல்லது மூன்று வயதிற்குள்ளாக இறக்கும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை தனக்குச் சாதகமாக உபயோகப்படுத்தினார். அந்தக் குழந்தைகள் சமூகத்தில் வேலையிலோ அல்லது வேறு எந்த பதிவுகளிலுமோ இல்லாதவர்கள். அந்தக் குழந்தைகளின் அனைத்து விபரங்களையும் தன் விபரங்களாக மாற்றிக் கொள்வார்.அதாவது மூன்று வயது குழந்தையின் அடையாளங்களோடு சுற்றும் இருபது வயதான வாலிபர்.எங்குமே பதிவாகாத ஒரு மனிதரின் பெயரில் சுற்றும் இன்னொரு மனிதனை கண்டுபிடிக்க காவல்துறை மென்று தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. குழந்தைகளின் அடையாளங்கள் மட்டுமில்லாது, இறந்த மனிதர்களின் பெயர்களோடும் கெவின் சுற்ற ஆரம்பித்தார். கலிபோர்னியாவில் பிறந்து லாஸ் ஏஞ்சலீஸில் இறந்தவனின் பிறப்புச் சான்றிதழை உபயோகப் படுத்தி இறந்தவனின் பெயரில் சுற்ற ஆரம்பிப்பார். இவற்றை எல்லாம் எப்படி கண்டறிவது என்று அமெரிக்கப் புலனாய்வுத் துறை மண்டையை உடைத்துக் கொண்டது பெரும் தனிக் கதைகள்.



கெவின் தன் சாகசங்களை புத்தகமாக எழுதவிருக்கிறார். இப்புத்தகத்தில் உலகின் மற்ற கணிணிக் கில்லாடிகளின் கதைகளையும் சேர்த்து, அக்கதைகளை தருபவர்களுக்கு கணிசமான பணமும் அளிக்கப்போகிறாராம். பயங்கர சுவாரசியமான புத்தகம் ஒன்றிற்கு கணிணி உலகம் தயாராகிறது.


(இன்னும்...)

ஞாயிற்றுக்கிழமை தோறும் 'விரல்நுனி விபரீதம்' அந்திமழையில் வெளிவரும்....
'விரல்நுனி விபரீதம்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

வா.மணிகண்டன்

ஹைதரபாத்தில் கணிணித்துறையில் பணியாற்றும் வா.மணிகண்டனுக்கு வயது இருபத்தைந்து.சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம். முதல் கவிதை 2005 ஆம் ஆண்டில் உயிர்மை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக உயிர்மை, காலச்சுவடு, உன்னதம், புதிய பார்வை, உயிர் எழுத்து, தக்கை, அம்ருதா உட்பட தமிழின் முக்கியமான இலக்கிய பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதி வருகிறார்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பு "கண்ணாடியில் நகரும் வெய்யில்" உயிர்மை வெளியீடு.

ஏப்ரல்   28 , 2008

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com