வைரஸ் - 'எம'காதகன்

வைரஸ் - 'எம'காதகன்

விரல்நுனி விபரீதம் 4

கம்யூட்டர் உலகில் பரவலாக புழங்கிவரும் ஹேக்கிங், ட்ராஜன் என்பது பற்றி எல்லாம் தெரியாமலிருந்தாலும் கூட வைரஸ் என்னும் சொல்லை கேள்விப்படாமல் யாருமே இருக்கமாட்டோம்.

வீட்டில் உபயோகப்படுத்தும் கணிணியை பாதிக்கும் வைரஸிலிருந்து ஒரு பெரிய நிறுவனத்தையே முடக்கிப் போடுகின்ற வைரஸ்கள் வரை ஏகப்பட்ட விதங்களில் உலா வருவதும், அடித்துப் பிடித்து அவற்றை எதிர்த்துப் போராடுவதும் "கம்யூட்டர்ல இதெல்லாம் சகஜமப்பா" என்கிற அளவில் இயல்பான விஷயங்கள் ஆகிவிட்டன.

வைரஸ் என்பதும் கம்யூட்டரில் எழுதப்படும் புரோகிராம் தான். ஒரு கூட்டல் கணக்கைச் செய்வதற்கு ஒரு புரோகிராம் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். 2+2 என்பதன் விடை 4 என்பதோடு ஒரு கூட்டல் புரோகிராம்மின் பணி முடிகிறது.

இந்த புரோகிராமையே கூட வைரஸாக மாற்ற முடியும். வைரஸ் என்றால் திரும்ப திரும்ப கம்ப்யூட்டரை கூட்டச் சொல்லும்.2+2+2+....என முடிவே இல்லாமல் கம்ப்யூட்டர் கூட்டிக் கொண்டே போகும். கம்யூட்டரும் முடிந்த வரைக்கும் கூட்டிவிட்டு மூச்சுத் திணறி மண்டையை போட்டுவிடும். இந்த கூட்டல் வைரஸ் உதாரணத்துக்காக சொன்ன மிக மிக எளிமையான ஒன்று. இதனை விட பன்மடங்கு சிக்கலான, புரிந்து கொள்ளவே முடியாத பல்லாயிரக் கணக்கான வைரஸ்களை உலவ விட்டிருக்கிறார்கள்.

பொதுவாக வைரஸ்களை வடிவமைக்கும் போதே அவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பரவும் படியாக செய்திருப்பார்கள். ஆகவே ஒரு வைரஸ் இங்கு ஒரு கம்ப்யூட்டரின் உயிரை எடுக்கும் சமயத்தில் அதன் சந்ததி வைரஸ் உலகின் வேறொரு மூலையில் வேறொரு கம்ப்யூட்டரை நாசமாக்கிக் கொண்டிருக்கும்.
வேறு மாதிரியாகச் சொன்னால் இன்னும் எளிதாக இருக்கலாம்.

நாம் மழையில் நனைந்து விடுகிறோம். இது நம் உடலில் உயிருள்ள வைரஸை வளர்க்கிறது. இந்த வைரஸ் தும்மல்,சளி, காய்ச்சல் போன்ற துன்பங்களைக் கொடுக்க்கிறது. இந்த வைரஸ் நம் உடலில் பல்கிப் பெருகி வேறொருவரின் உடலுக்குள்ளும் நுழைந்து அவர்களுக்கும் நோயை கொடுக்கிறது. உடலில் நுழைந்த வைரஸை எதிர்க்க அதற்கான மருந்தை எடுத்துக் கொள்கிறோம். நமக்கு ஏற்கனவே உடலில் தேவையான அளவு நோயெதிர்ப்பு சக்தி இருக்குமானால் வைரஸ் நுழையவே முடியாமல் போகிறது.



இப்படித்தான் கம்யூட்டர் வைரஸ்ஸூம் செயல்படுகிறது. ஒரே வித்தியாசம் கம்யூட்டர் வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்ட உயிரற்ற புரோகிராம்கள். கம்யூட்டர் வைரஸ் என்பது ஒரு கம்யூட்டரில் புகுந்து அதன் செயல்பாட்டை தடுக்கலாம், அதன் தகவல்களை மாற்றலாம் அல்லது அவற்றை மொத்தமாக அழிக்கலாம். அழிப்பதோடல்லாமல் தொடர்ந்து பரவிக் கொண்டேயிருக்கும். மனிதர்கள் மருந்து எடுத்துக் கொளவது போல, கம்ப்யூட்டர்களுக்கு வைரஸ்களை அழிக்கவும், வைரஸ் நுழையாமல் தடுக்கவும் ஆண்ட்டிவைரஸ் சாப்ட்வேர்கள் தேவைப்படுகிறது.

இந்தக் கம்ப்யூட்டர் வைரஸ்கள் யாவுமே மனிதர்களால் எழுதப்படும் புரொகிராம்கள்தான் என்றாலும் அவை எதற்காக எழுதப்படுகின்றன என்று கேட்காதீர்கள். அடுத்தவன் அவதிப்பட்டால் உள்ளுக்குள் வரும் குரூர சந்தோஷம்தான் காரணமாக இருக்க முடியும். அல்லது தனியாளாக இத்தனை பேரை அலற வைக்க முடியும் என்ற சந்தோஷம். எதிரி நாட்டின் ராணுவ கணிப்பொறிகளுக்குள் வைரஸ் பரவச் செய்தல், தன் எதிரி நிறுவனத்தின் கணிப்பொறிகளுக்குள் வைரஸை நுழைத்து, நிறுவனத்தை முடக்கச் செய்வது என்று எதிரிகளை எதிர்க்கவும் வைரஸ்களை அவர்களின் நெட்வொர்க்கிற்குள் பரவச் செய்கிறார்கள்.

முதலில், இண்டர் நெட் பரவியிருக்காத காலங்களில் வைரஸ்கள் "பிளாப்பி டிஸ்க்"கள் வழியாகவே பரவத் தொடங்கின. நம் நேரம் நல்லதாக இருந்தால் தான் ஒட்டிக் கொண்ட‌ "பிளாப்பி"யை மட்டும் அழிப்பதோடு அந்த வைரஸ் தன் வரலாற்றை முடித்துக்கொள்ளும். நேரம் கெட்டிருந்தால் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து கொண்டு விளையாட ஆரம்பித்துவிடும்.

இண்டர்நெட் பரவலாக வந்தவுடன் மின்னஞ்சல்கள், வைரஸ்கள் பரவுவதற்கு உதவும் முக்கிய ஊடகங்களாகின. உண்மையான வைரஸ் (நோய் பரப்பும் வைரஸ்) பரவ மனித உடலையோ அல்லது விலங்கு/பறவையின் உடலையோ ஊடகமாக பயன்படுத்திக் கொள்வது போல, கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராம் பரவ மற்றொரு புரோகிராம்மின் உதவி தேவை. ஏதேனும் கணிணி கோப்புகளின் (புரோகிராம், புகைப்படம் என கணிணியில் சேகரிக்கப்பட்டிருக்கும் எந்தக் கோப்பாகவும் இருக்கலாம்) வாலை பிடித்துக் கொண்டு வைரஸ் உலவ ஆரம்பிக்கும்.

1999ல் மெலிஸா என்ற வைரஸ் உலகம் முழுவதுமாக புகழ்பெற்றது. பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வேர்ட் கோப்புகளில் இவை ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக் கொண்டு செல்லும் இடங்களில் உள்ள கம்ப்யூட்டரில் தங்கி அதன் கதையை முடிப்பதோடு தன் வாரிசை மின்னஞ்சல் மூலமாக அடுத்த கம்ப்யூட்டருக்கு அனுப்பிவைக்கும். இதன் ஆட்டம் தாங்காமல் மைக்ரோசாப்ட் முதலிய பெரும் நிறுவனங்கள் தங்களின் மின்னஞ்சல் சேவையை தற்காலிகமாக முடக்க வேண்டி வந்தது.

இதற்கு அடுத்த வருடம் யாரோ ஒரு குறும்பன் கிளப்பிவிட்ட வைரஸ்ஸின் பெயர் "ஐ லவ் யூ". இந்த வைரஸ் புரோகிராம் மிகச் சிறியது. மின்னஞ்சலில் ஒட்டிக் கொண்டு மின்னஞ்சலின் இணைப்பாக(அட்டாச்மென்ட்)அடுத்த கணிணிக்குச் செல்லும். வைரஸ் என்பது தெரியாமல் நமக்கு யாரோ மின்னஞ்சலில் லவ் லெட்டர் அனுப்பி இருப்பதாக நினைத்து திறந்தால் வைரஸ் அந்தக் கம்ப்யூட்டரில் குடி கொண்டு விடும்.



நம் மின்னஞ்சலில் நாம் சேகரித்து வைத்திருக்கும் மற்ற மின்னஞ்சல் முகவரிகளை தேடியெடுத்து அந்த முகவரிகளுக்கும் அதுவாகவே தன் பயணத்தைத் தொடங்கிவிடும். இந்த வைரஸின் அட்டகாசம் தாங்காமல் "ஐ லவ் யூ" சொல்லி காதலனோ காதலியோ மின்னஞ்சல் அனுப்பி இருந்தாலும் கூட திறக்க வேண்டாம் என்று நிறுவனங்கள் மின்னஞ்சல் உபயோகிப்பாளர்களை கெஞ்சிக் கொண்டிருந்தன.

'மைடூம்' என்றொரு கம்ப்யூட்டர் கொல்லி வைரஸ் 2004 ஆம் ஆண்டு பரவியது. இது ஒரு கொடூர வைரஸ். ஒரே நாளில் உலகம் முழுவதுமாகப் பரவி கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கம்ப்யூட்டர்களை அழித்து வெற்றிப் புன்னகை பூத்தது.

வைரஸ்கள் உலவுவதாலேயே பல்லாயிரக் கணக்கான சாப்ட்வேர் வல்லுநர்களில் ஒரு பிரிவினருக்கு வாழ்க்கை வசந்தமாக இருக்கிறது. இந்தப் பிரிவினர் வைரஸ்களை தடுப்பது குறித்தும், வந்த வைரஸ்களை அழிப்பதும் குறித்தும் ஆராய்கிறார்கள். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் எழுதுகிறார்கள்.அவற்றை நல்ல விலைக்கும் விற்கிறார்கள். ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர்களுக்கு எப்பொழுதுமே கிராக்கி உண்டு.

நோய் இருக்கும் ஊரில் டாக்டர்களுக்கு மவுஸ் இருக்கும் என்பது போல.

(இன்னும்...)

ஞாயிற்றுக்கிழமை தோறும் 'விரல்நுனி விபரீதம்' அந்திமழையில் வெளிவரும்....
'விரல்நுனி விபரீதம்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

வா.மணிகண்டன்

ஹைதரபாத்தில் கணிணித்துறையில் பணியாற்றும் வா.மணிகண்டனுக்கு வயது இருபத்தைந்து.சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம். முதல் கவிதை 2005 ஆம் ஆண்டில் உயிர்மை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக உயிர்மை, காலச்சுவடு, உன்னதம், புதிய பார்வை, உயிர் எழுத்து, தக்கை, அம்ருதா உட்பட தமிழின் முக்கியமான இலக்கிய பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதி வருகிறார்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பு "கண்ணாடியில் நகரும் வெய்யில்" உயிர்மை வெளியீடு.

   மே   06 , 2008  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com