எழுத்தாளர் சுகா
எழுத்தாளர் சுகா

அம்மையப்பனும், அம்மையும்

காலையிலேயே குஞ்சு சொன்னான்.

‘எல! இப்பம்லாம் இந்த வாட்ஸ் அப் பயவுள்ளேளு நெல்லையப்பர ரொம்ப பேமஸ் ஆக்கிட்டானுவோ. கடுமையான கூட்டம். நான் காலைல ஆறு மணிக்கே போயிட்டு வந்துட்டேன். லேட்டா போனா கூட்டத்துல மாட்டிக்கிடுவே. என்ன ஒண்ணு? வெளியூர் பொம்பளேளப் பாக்கலாம்'.

குஞ்சு சொன்னது சரிதான். கீழ ரதவீதியிலேயே ஆனி மாசத்துக் கூட்டம் அலை மோதியது. உள்ளே சென்றேன். ஊஞ்சல் மண்டபத்தில் யாரோ ஒரு பெண்மணி மஞ்சள் முகத்துடன் திருவிளையாடல் புராணம் சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு முன் இரண்டு வரிசைகளில் அமர்ந்தபடி சில பெண்களும், குழந்தைகளும் கேட்டுக் கொண்டிருந்தனர். முன்பெல்லாம் அங்கு சமய சொற்பொழிவு நடக்கும்போது கோயில் எலக்ட்ரீஷியனும், அவரது மனைவியும் மட்டும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். கேட்பதற்குக் காரணம், சொற்பொழிவாளருக்கு முன் போடப்பட்டிருக்கும் எழுத்து மேஜை எலக்ட்ரீஷியன் வீட்டு மேஜை. அதுபோக கோயிலுக்குள் ஆங்காங்கு சில வெள்ளைச் சீலை ஆச்சிகளும், சடகோபன் சித்தப்பாவைப் போன்ற மனைவியின் தொல்லையிலிருந்துத் தப்பிக்க காந்திமதியம்மையிடம் தஞ்சம் புகுந்த வேறு சில சித்தப்பாக்களும் காற்று வாங்கிக் கொண்டு ஓரக்கல்படிகளில் அமர்ந்திருப்பார்கள்.

‘வாயத் தொறந்தாலே சண்டதான்டே! கல்யாணம் ஆன புதுசுல ஒங்கம்ம என்ன சொன்னா தெரியுமான்னு ஆரம்பிச்சு நித்தமும் எளவுதான் பாத்துக்கோ. இவ்வளவுத்துக்கும் எங்கம்மை செத்து முப்பது வருசமாச்சு'. பெரும்பாலான சித்தப்பா, மாமாக்களின் புலம்பல் இது.

குஞ்சு சொன்னது சரிதான். காந்திமதி அம்மையை நெருங்கவே முடியாத அளவுக்குக் கூட்டம். முகம் பார்த்து நிதானமாக அம்மையிடம் பேச முடியவில்லை.

(எழுத்தாளர் சுகா தன் முகநூல் பக்கத்தில்)

15 ரூபாய்க்கு படுகொலை

 தேநீர்க் கடை ஒன்றில் புகையிலை வாங்கி இருக்கிறார்கள் பைக்கில் வந்த இருவர். அதற்கான தொகை 15 ரூபாயைக் கொடுக்குமாறு அந்த கடைக்காரர் கேட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து நடந்த வாய்ச்சண்டையில் சட்டென்று துப்பாக்கியில் சுட்டுவிட்டு இருவரும் ஓடிவிட்டனர். சுடப்பட்டவர் அங்கேயே இறந்துவிட்டார். சம்பவம் நடந்த இடம் மீரட், உத்தரப்பிரதேசம் மாநிலம். 15 ரூபாய்க்கெல்லாமா சுடுவாய்ங்க? லியோ படம் பாத்தவய்ங்களா இருப்பாங்களோ?

அணை உயரம் குறைப்பு 

இந்திய - நேபாள வடக்கு எல்லையில் அமைய உள்ள சப்தகோஷி அணைத் திட்டத்தில் மாற்றம் செய்ய இரு நாடுகளும் ஒப்புகொண்டுள்ளன. அணையின் உயரத்தில் 35 மீட்டரைக் குறைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அணையால் பல பகுதிகள் மூழ்கிவிடும் என அப்பகுதிகளில் வாழும் மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அணைத்திட்டமே தொடங்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் இந்த முடிவுக்கு வந்துள்ளன. இதே மாதிரி தமிழ்நாடு- கர்நாடகா இடையிலும் என்னவாச்சும் செய்ங்கப்பா..

ஒரு லட்சம் கோடி அப்பே.. 

எல்லோருமே கையில் ஸ்மார்ட்போன் வைத்துள்ளோம். இயற்கையாகவே போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபம் அதிகரிப்பதில் வியப்பில்லை. சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டில் இந்தியாவில் தன் வருவாய் ஒரு லட்சம் கோடியைத் தாண்டும் என அறிவித்துள்ளது. இதில் போன்கள் விற்பனையால் மட்டும் சுமார் எழுபதாயிரம் கோடி வருவாய்! போன்களுக்கு நம் நேரத்தை மட்டுமல்ல நாம் அளிப்பது..அந்நிறுவனங்களுக்கு வருவாயையும் தான்!

கொல்லப்பட்ட எழுத்தாளர் 

ஹெபா அபு நாடா
ஹெபா அபு நாடா

பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் நடக்கும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் இறப்போர் எண்ணிக்கை உலகையே அதிர வைத்துள்ளது. இறந்தவர்களில் பாலஸ்தீன பெண்ணியக் கவிஞரும் ஆக்ஸிஜன் இஸ் நாட் பார் தி டெட் என்ற நாவலை எழுதியவருமான ஹெபா அபு நாடா என்பவரும் ஒருவர் என்பது இலக்கிய வாசகர்களை கூடுதலாக வருத்தப்படச் செய்துள்ளது. அரபு படைப்பிலக்கிய விருதுப் பட்டியலில் இரண்டாம் இடத்தை 2017-இல் பிடித்தது இந்த நாவல். கொலை ஆயுதங்கள் எதையும் பார்ப்பதில்லை!

 ‘போர் ஒருநாள் முடிவடையும்

தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள்

இறந்து போன மகனின் வருகைக்காக

வயதான தாய் காத்திருப்பாள்

காதல் கணவனை எதிர்பார்த்து காத்திருப்பாள்

அந்தப் பெண்

அந்தக் குழந்தைகள்

தங்கள் சாகச அப்பாவின் வருகையை

எதிர்பார்த்து காத்திருப்பார்கள்

எங்கள் மண்ணை யார் விற்றார்கள்

என எனக்குத் தெரியாது - ஆனால்

அதற்கான விலையை யார் தருகிறார்கள்

என்பதற்கு சாட்சி நான்..'

-பாலஸ்தீனக்கவிஞர் மஹ்முத் தர்விஷ்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com