ஆரோக்கிய பானமா?

ஆரோக்கிய பானமா?

உயரமாக வளரவேண்டுமா? ஹார்லிக்ஸ் சாப்பிடுங்க, போர்ன்விட்டா குடியுங்கோ என்று சொல்லிவந்த விளம்பரங்களைப் பார்த்தே டப்பா டப்பாவாக அவற்றை வாங்கித் தின்ற பரம்பரை நம்முடையது. ஆனால் திடீரென மத்திய அரசுக்கு ஞானம் வந்து, சில ஆய்வு   முடிவுகளுக்குப் பின் இந்த பானங்களை ஆரோக்கிய பானங்கள் என்ற பட்டியலில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பூஸ்ட், ஹார்லிக்ஸ் ஆகிய இரண்டு பிராண்டுகளை வைத்துள்ள ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் அவற்றில் இருந்து ஆரோக்கிய பானம் என்ற சொற்களை மட்டும் நீக்கி அறிவித்துள்ளது. அதற்குப் பதிலாக நியூட்ரிஷன்ல் ட்ரிங்க் என்று மட்டும் அவற்றை பிராண்ட் பண்ண இருக்கிறார்கள். போர்ன்விடாவுக்கு, இதே கதைதான். நெஸ்லே கம்பெனியின் செரிலாக் வகைகளில் இருக்கும் சர்க்கரை பற்றியும் ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதாகச் சொல்கிறார்கள். நாம் வளர்ந்திருவோம்னு அயல்நாட்டு சதியா?

சூப்பர் மக்கானா!

பீஹார் மாநிலத்தைப் பற்றி பல விஷயங்களைக் கேள்விப்பட்டுள்ளோம். நல்லது கம்மிதான். அதில் ஒன்று இங்கு உற்பத்தியாகி உலகெங்கும் செல்லும் மகானா எனப்படும் ஒருவித அல்லி விதைகள். தாமரை விதைகள் என்றும் சொல்கிறார்கள். கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகமாகவும் இருக்கும் இந்த பொரிக்கப்பட்ட விதைகள் இப்போது பரவலாக உண்ணப்படுகின்றன. ஏற்றுமதியாகின்றன. மகானா உற்பத்தியில் 80 சதவீதம் பீஹாரில்தான் நடக்கிறது. அதுவும் மதுபானி மாவட்டத்தில் ஏராளமான நீர்நிலைகளில் இதை சாகுபடி செய்கிறார்கள். பீஹாரில் பிறந்து உலகெங்கும் செல்லும் இந்த மகானா விதைகளை கடைகளில் நாமும் வாங்கி உண்ணலாம் ப்ரெண்ட்ஸ்!

குறைகிறதாமே?

140 கோடிப் பேர் கொண்ட இந்தியா உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இந்த வேகத்தில் போனால் என்ன ஆகும்? என்று பல கணிப்புகள் உள்ளன.ஆனால் இதில் ஒரு கணிப்பு சுவாரசியமானது. இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஒப்பிட்டுச் செய்யப்பட்ட இந்த கணிப்பில் நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதமானது குறைந்துகொண்டே போகிறது என்பதாகும். இதற்கு இரண்டு காரணங்கள்.ஒன்று, அதிகரித்துவரும் மலட்டுத் தன்மை. உலக சராசரிக்கும் கீழாக இந்திய கருவுரும் வீதம் இருக்கிறது! மக்களில் வயதானவர்கள் அதிகம் இருப்பதால் இறப்பு வீதம் அதிகரிக்கப்போகிறது! குழந்தைப் பிறப்பு குறைவாகவும் இறப்பு வீதம் அதிகமாகவும்

இருப்பதால் நாட்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் இனி குறைவாகவே இருக்கும் என்று அந்தக் கணிப்பு கூறுகிறது!

டேஸ்டி மோதல்!

வட இந்திய உணவு வகைகள் என்றால் பட்டர் சிக்கன், தால் மக்னி இரண்டும் உடனடியாக ஞாபகம் வரும். டெல்லியில் எந்த  உணவகத்துக்குப் போனாலும் இவை இரண்டும் இல்லாமல் இருக்காது. இந்த இரண்டின் அடிப்படையில் அங்கே இரண்டு உணவகங்கள் நீதிமன்றப் படி ஏறி இருக்கின்றன. மோதிமஹால், தரியாகஞ்ச் ஆகிய இரண்டு உணவகங்களுக்கு இடையில்தான் சண்டை.  என்ன? தரியாகஞ்ச் உணவகம் 2019-இல் தொடங்கப்பட்டது. மோதிமஹால் 1947-இல்.  தரியாகஞ்ச், உணவகம் தொடங்கப்பட்டபோது பட்டர்சிக்கனையும் தால் மக்னியையும் உருவாக்கியவர்கள் என்று சொல்லிக் கொண்டதுதான் சிக்கல். ஏனெனில் 1947-இல் பெஷாவரில் இருந்து வந்த ஜக்கி என்பவர் தன் நண்பருடன் இணைந்து தொடங்கியதுதான் மோதிமகால். இவர்தான் பட்டர் சிக்கனையும் தால் மக்னியையும் உருவாக்கி முதன்முதலில் விற்றவராம்! 1997-இல் அவர் மோதிமஹாலில் இருந்து விலகிவிட்டாராம்! தரியாகஞ்ச் உணவகத்தைத் தொடங்கியவர் இந்த ஜக்கியின் பேரன்! தாத்தாவுக்கு நாங்கள் சேர்க்கும் பெருமை இந்த உணவகம் என்கிறார்!... சரி யார் கண்டுபிடிச்சா என்ன? டேஸ்டா இருந்தா சரி என்கிறீர்களா?

அங்கேயும் இப்படியா?

நியூயார்க் நீதிமன்றம் ஒன்றின் முன்பாக அசாரில்லோ என்ற 37 வயது  மனிதர் ஏப்ரல் கடைசியில்  தீக்குளித்து இறந்துபோனார். அந்த நேரத்தில் அந்த நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்த வழக்கு விசாரணை முக்கியமானது. அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், பாலியல் பட  நடிகை ஒருவருடன் தான் கொண்ட உறவைப் பற்றி அவர் பேசாமல் இருப்பதற்காக பணம் கொடுத்தது தொடர்பான வழக்கு. இதன் விசாரணை சில நாள்களாக நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் இவர் தீக்குளித்தார். என்ன காரணம்? ஆள் சில ஆண்டுகளாகவே வதந்திகளைப் பரப்புவதும் நம்புவதுமாக இருந்ததாகவும் உலகப் பணக்காரர்கள் உலகில் பாசிசத்தைப் பரப்புவதாகவும் சொல்லி வந்தவர். அதன் நீட்சியாக இந்த தற்கொலை என்கிறார்கள்! இதுதான் உண்மைக் காரணமா என்றெல்லாம் தெரியாது. ஆனால் உயிர் மலிவானதா? இந்தியா உள்ளிட்ட ஆசியப் பகுதிகளில்தான் இப்படி தீக்குளிப்புகள் அதிகம். அமெரிக்காவிலும் நடந்திருப்பது கவனத்தைக் கோருகிறது!

logo
Andhimazhai
www.andhimazhai.com