இறங்கிய இரண்டாம் பாதி!

இறங்கிய இரண்டாம் பாதி!

அக்டோபருக்குள் போவதற்கு முன் சென்ற மாத இறுதியில் வந்த சித்தா, சந்திரமுகி 2, இறைவன் ஆகிய மூன்று படங்கள் பற்றி பார்ப்போம்.

இறைவன், ‘என்றென்றும் புன்னகை' இயக்குநர் அஹமத்தின் படம். இதை நம்பிப் போனவர்களை டார்ச்சர் செய்துவிட்டார் என்றே கூறலாம். சைக்கோ கொலைகாரனைத் தேடும் போலீஸ். இதுதான் கதை.

சீரியல் சைக்கோ கில்லர் படங்களில், கொலை செய்யும் விதம் ஷாக்கிங்காக இருக்கும் என்பதைக் குறைவாகக் காட்டிவிட்டு அவனைப் பிடிக்கும் முயற்சிகளையும் அதில் நடக்கும் ட்விஸ்ட்களை அதிகமாகவும் காட்டுவார்கள். இதில் கொலையை கொடூரமாகவே காட்டுகிறார்கள். அதைக் கண்டுபிடிப்பதில் நம் ஆர்வம் போய், இந்தக் கொடூரக் காட்சிகளிலேயே நாம் டயர்ட் ஆகிவிடுகிறோம். யுவன் பாடல்களில் ஏமாற்றினாலும், பின்னணி இசையில் கவர்கிறார்.

சந்திரமுகி - 2, முதல் பாகத்தின் ஃபோட்டோகாபி. ஆனால், டோனர் போன மிஷினில் எடுத்த ஃபோட்டோகாபி. பாழடைந்த கோயில், அரண்மனை, கூட்டம் கூட்டமாக ஆர்டிஸ்டுகள், பாதாள அறை என்று இந்த மாதிரிப் படங்களுக்கேயுரிய டெம்ப்ளேட் செட்கள். டெம்ப்ளேட் காட்சியமைப்புகள். இசையும் சோபிக்கவில்லை. திரைக்கதையாக சிறப்பாகப் பரிமளிக்காததால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

சித்தா - கவர்ந்தது. அண்ணன் மகள்மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் சித்தார்த் ஒரு பாலியல் புகாருக்கு உள்ளாக்கப்படுகிறார். அதிலிருந்து அவர் மீளும் நேரத்தில் அண்ணன் மகள் காணாமல் போகிறார். தன் மீதான களங்கத்தைப் போக்கினாரா, அண்ணன் மகளை மீட்டாரா என்பதை சமூகப் புரிதலோடு காட்சிப்படுத்தியிருக்கிற படம்தான் சித்தா. பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படும் சிறார்கள், அந்தக் கொடுமைக்குப் பிறகு குடும்பம் மற்றும் சமூகத்தில் எப்படி எதிர்கொள்ளப்படுகிறார்கள், அவர்களின் மனக் குழப்பங்களை உடனிருப்பவர்கள் எவ்வாறு கையாளவேண்டும் என்பதை நேர்த்தியான திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளின்மூலம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். படம் நெடுக சித்தார்த்தின் மிளிர்ந்த பங்களிப்பு அதற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.

அக்டோபர் முதல் வாரத்தில் 800. முத்தையா முரளிதரனின் பயோபிக். பலவித சர்ச்சைகளைத் தாண்டி 800 டெஸ்ட் விக்கெட்கள் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியதை விவரிக்கிறது படம். நாயகன் மதுர் மிட்டல்தான் படத்தின் பெரும் பலம். ஆரம்ப ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு முத்தையா முரளிதரனாகவே மாறி நிற்கிறார் மதுர். ஜிப்ரானின் பின்னணி இசை, ஆர்.டிராஜசேகரின் கேமரா ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்தாலும் படம் ஆஹா ஓஹோ இல்லை. ஆனாலும் மோசமில்லை என்பது ஆறுதல்.

அதேவாரத்தில் வெளியான ரத்தம், வெறுப்புக் குற்றங்களைப் பற்றிப் பேசுகிறது. ஆங்காங்கே நடக்கும் கொலைகளுக்குப் பின் ஒளிந்திருக்கும் சதியைப் பேசுகிறது ரத்தம். ஆனால் நாடு இருக்கும் நிலையில் வெறுப்புப் பிரசாரத்தின் மூலம் நிகழ்த்தப்படும் கொலைகளுக்குப் பின் பர்சனல் காரணங்களே உள்ளன என்பது போலப் படமெடுத்திருப்பது ஏன் என்றுதான் புரியவில்லை. சி.எஸ்.அமுதனின் ஸ்பெஷலான நகைச்சுவையை இந்தப் படத்தில் வேண்டாம் என்று முடிவெடுத்தது ஏன் என்பதும் தெரியவில்லை.

முதல் வாரத்தில் வந்தவற்றில் இறுகப்பற்று, மிகவும் நேர்த்தியான படைப்பாக இருந்தது. மூன்று தம்பதிக்குள் நடக்கும் சின்னச் சின்ன மனக் கசப்புகள் எப்படிப் பெரிதாக உருமாறி அவர்கள வாழ்க்கையைப் பிரிக்கப் பார்க்கிறது என்பதை அட்டகாசமான திரைக்கதையில் பின்னியிருக்கிறார் யுவராஜ் தயாளன். இல்வாழ்க்கைச் சிக்கல்களை எளிமையான காட்சிகள்மூலம் விளக்கியதோடு, அதற்கான தீர்வை ஆன்மாவைத் தொடும் வசனங்கள்மூலம் கொடுத்திருக்கிறார். மூவரின் குடும்பத்திலும் நடப்பவற்றில், யோசித்தால் எதுவுமே பெரிய பிரச்னை இல்லை. ஆனால் ‘புருஷன் பொண்டாட்டிக்குள்ள பிரச்னை வரதுக்கு பெரிசா காரணம் தேவையில்ல.. அவங்க புருஷன் பொண்டாட்டியா இருக்கறதே பெரிய காரணம்தான்' எனும் படத்தின் வசனம் போலவே சின்னச் சின்ன சண்டைகள்தான் பெரிதாகின்றன. அதிலும் முக்கியமாக இந்தச் சண்டைகளுக்கு குடி, உறவினர்கள், திருமணம் மீறிய உறவு என்று எந்தப் புறக்காரணிகளும் சொல்லப்படவில்லை என்பதே படத்தின் எழுத்தின் சிறப்பு. விதார்த் - அபர்ணதி, ஸ்ரீ - சானியா ஐயப்பன், விக்ரம் பிரபு - ஷ்ரத்தா ஸ்ரீநாத் என்று மூன்று இணையருமே படத்துக்கு அப்படிப் பொருந்திப்போய் அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். இந்த மாதிரி ஃபீல் குட் படங்கள் என்றால் ஜஸ்டின் பிரபாகரன் டபுள் உற்சாகத்தில் ரெடியாவார் போல. பின்னணி இசையும் பாடல்களும் வாவ்!

19ம் தேதி வெளியானது லியோ. முதலில் விஜய் மாதிரியான ஒரு ஸ்டார் + எக்கச்சக்க கதாபாத்திரங்களை வைத்து படமெடுத்து , குறித்த நேரத்தில் முடித்து ரிலீஸும் செய்ததற்கே படக்குழுவுக்கு வாழ்த்துகள்.

இமாச்சலப் பிரதேசத்தில் காபி ஷாப் வைத்துக்கொண்டு தானுண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்கும் பார்த்திபன் (விஜய்)தான் லியோ என்று சஞ்சய் தத், அர்ஜூன் கேங்குக்கு சந்தேகம் வருகிறது. அவர்கள் வேறு யாருமல்ல. அப்பா, சித்தப்பாதான். அதற்காக பார்த்திபன் விஜய்யைத் தேடி ஆட்கள் அனுப்புகிறார்கள், சஞ்சய் தத்தும் வருகிறார். ஆனால் நான் லியோ அல்ல என்று கதறிக் கத்திக் கூப்பாடு போட்டுக்கொண்டே இருக்கிறார் பார்த்திபன் விஜய். ஏன் சஞ்சய் தத் தேடி வருகிறார், அப்பா சஞ்சய் தத்தை விட்டு லியோ பிரிந்தது ஏன், பார்த்திபன் தான் லியோவா என்பதையெல்லாம் ஆயிரம் கொலைகளோடு சொல்லியிருக்கும் படம் தான் லியோ. முதல் பாதி முழுவதும் இருந்த விறுவிறுப்பை சடாரென்று இறக்கி விடுகிறது தொய்வான திரைக்கதையில் அமைந்த இரண்டாம் பாதி. விஜய் தன் உடல்மொழி, நடனம், நடிப்பு என்று மிளிர்ந்து படத்தை தன் தோளில் தாங்கியிருக்கிறார். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும், அன்பறிவின் சண்டை இயக்கமும் படத்தை ஒரு படி மேலே தூக்கி நிறுத்துகின்றன. படம் இத்தனை வசூல், அத்தனை வசூல் என்று நாளுக்கொரு செய்தி வந்துகொண்டிருக்கிறது. படம் ஹிட்டுதான் என்றும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் வன்முறைப் படங்களில் இருந்து விலகி, வேறொரு ஜானரை இயக்கி மகிழ்விப்பாரா லோகேஷ் என்ற ஏக்கமும் ஒருபுறம் எழுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com