அடங்காத அசுரன்தான்!
ஷங்கரின் இந்தியன் 2-வும் தனுஷின் 50வது படமான ராயனும் வருவதாலோ என்னமோ, ஜூலையில் பெரிய படங்கள் எதும் வெளியாகவில்லை; ஆர்.பார்த்திபனின் டீன்ஸைத் தவிர. ‘அவர் மட்டும் மோதிப்பாத்துடலாம்... உங்களுக்கு 600-700 தியேட்டர் கிடச்சா, எனக்கு நூறு தியேட்டராச்சும் கெடைக்காதா என்ன?’ என்று இந்தியன் 2-வுடன் களத்தில் குதித்தார்.
முதலில் இந்தியன் 2.
சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷிகாந்த் ஆகிய நால்வரும் யூட்யூப் சேனல் ஒன்றை நடத்துகிறார்கள். குப்பைப் பிரச்னைகளை பேசிக்கொண்டிருக்கும் அவர்கள் கண் முன்னே ஒரு பெண் தற்கொலை செய்துகொள்வதைப் பார்க்கிறார்கள். அதற்காகக் குரலெழுப்ப ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அதிகாரத்தின் முன் இவர்கள் குரல் ஒன்றுமில்லாமல் போக, விரக்தியில் இந்தியன் முதல் பாகத்தில் எஸ்கேப் ஆன இந்தியன் தாத்தாவைக் கூப்பிடுவோம் என முடிவெடுக்கிறார்கள்.
இவர்கள் அழைக்கும்வரை இந்தியா சுபிட்சமான நாடாகிவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தாரோ என்னமோ இந்தியன் தாத்தா, இந்த ஹேஷ்டேக் டிரென்ட் ஆனதும் திருட்டுப் பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு - இந்தியாவில் இருக்கும் திருடர்களை - ஊழல்வாதிகளைக் கேள்வி கேட்க வருகிறார்.
வருவதற்கு முன் சும்மா இருக்காமல், ‘ஃபர்ஸ்ட் பார்ட்ல நான், என் பையனையே இழந்தேனே.. நான் மட்டும் என்ன இளிச்சவாயனா, ஆளாளுக்கு அவங்க வீட்ல இருக்கற யாரைனா போட்டுக்குடுங்க’ என்று உசுப்பேத்துகிறார்.
அதை நம்பி இந்த நாலு பேரும் இன்ன பிற இளைஞர்களும் என்ன செய்தார்கள், அதனால் என்ன ஆனது, அதற்குப் பின் என்ன ஆனது, க்ளைமாக்ஸில் என்ன ஆகிறது என்பதே இந்தியன் 2.
ஒரு கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்த்த மகள் கஸ்தூரியைக் காப்பாற்றக்கூட லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று கமல் மறுத்த ஒரு காட்சியே போதுமானதாக இருந்தது. இதில் ஒரே காட்சியை சித்தார்த் + 3 பேர், ப்ளஸ் குஜராத், ப்ளஸ் மேற்கு வங்கம், ப்ளஸ் அங்கே இங்கே என்று 'திரும்பத் திரும்பப் பேசற நீ' மோடில் விளக்கி எடுத்து சோதித்திருக்கிறார்கள்.
சரி, கதை இழுவையை விடுங்கள்; கமல்ஹாசனாவது காப்பாற்றினாரா என்றால் ம்கூம். அவரது கெட்டப்பில் அவரையே காணவில்லை. படத்தின் ஒரே ஆறுதல் விவேக் மட்டுமே.
அந்தப் படத்துடனே வந்தது இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் டீன்ஸ். பதின்ம வயதில் இருக்கும் 13 சிறுவர்கள் கொஞ்சம் ஜாலியாக ஊர் சுற்ற நினைத்து பள்ளிக்கு கட் அடிக்கிறார்கள். அப்படிச் செல்லும் வழியில் ஒரு கோயில் அருகே மண்டை ஓடு, எலும்புத் துண்டுகளைப் பார்க்கின்றனர். அதிலிருந்து பயந்து ஓடுபவர்களில் சிலர் காணாமல் போகின்றனர். அவர்களுக்கு உதவ ஒரு முதியவர் வருகிறார். இவர்கள் என்ன ஆனார்கள், முதியவர் உதவினாரா என்பதை மீதிப் படத்தில் சொல்கிறார் இயக்குநர். பேய்ப்படம் என்று போய் எங்கெங்கோ அலைகிறது திரைக்கதை. சிறுவர்கள் படத்தில் ஒட்டாத சில 'இதெல்லாம் ரொம்ப ஓவர்' டைப் வசனங்கள். க்ளைமாக்ஸ் ஓரளவு ஓகே என்றாலும் அதற்கு வருவதற்குள் ரசிகர்களை சோதிக்கிற காட்சிகள்; வசனங்கள். ஏமாற்றம்தான் மிச்சம்,
கடைசி வாரத்தில் தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ராயன். சிறுவயதில் தாய் தந்தை காணாமல் போக, இரு தம்பிகள், தங்கையோடு ஊர் விட்டு ஊர் வருகிறார் தனுஷ். எந்த வம்பு தும்புக்கும் போகாமல் இருக்கும் தனுஷின் முதல் தம்பி சந்தீப் கிஷன், ஒரு வேலை வெட்டி இல்லாத ஊர் சுற்றி. இரண்டாம் தம்பி காளிதாஸ் ஜெயராம் கல்லூரி மாணவர். தங்கை துஷாரா விஜயன் மீது உயிரையே வைத்திருக்கிறார் தனுஷ். சந்தீப் கிஷனின் ஒரு செயல், தனுஷின் குடும்பத்தின் மீது அந்தப் பகுதி பெரிய கையான சரவணனின் பகையை சம்பாதிக்கிறது. பதிலுக்கு அவருக்கு எதிராக களமிறங்கும் தனுஷை இன்னொரு புறம் எஸ். ஜே.சூர்யா தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார். இந்த வேலையெல்லாம் வேண்டாம் என்று இருக்கும் தனுஷ் என்ன முடிவு எடுக்கிறார், அதனால் என்னென்ன விளைவுகளை சந்திக்கிறார் என்பதே படம். அமைதியான தனுஷ். அடங்காத ஒரு தம்பி, அடக்கமான இன்னொரு தம்பி என்று போகும் கதையின் இடைவேளையில் ஆக்ரோஷ வேகமெடுக்கிறார் தனுஷ். ஆஹா ஓஹோ என்று பேசிக்கொண்டே பாப்கார்ன் சாப்பிட்டுவிட்டு வந்து உட்கார்ந்தால் அப்படியே உல்டாவாக எதையெதையோ கிண்டிக் கிளறி கொஞ்சமும் நம்ப முடியாத காட்சிகளும் தேவையில்லாத வெட்டு குத்துமாக முடித்திருக்கிறார்கள். தனுஷுக்கு நடிகராக 50ஆவது படம். தானே இயக்கியிருக்கிறார். தேவையற்ற இருண்மைக் காட்சிகள்; ஒட்டாத ட்விஸ்டுகள் என்று படத்தின் மைனஸ்கள் அதிகம். பின்னணி இசையிலும் க்ளைமாக்ஸ் பாடலிலும் தான் அடங்காத அசுரன்தான் என்று சொல்லியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். தம்பிகளை தலையில் வைத்துக் கொண்டாடும் அண்ணனின் கதையான ‘வானத்தைப் போல' படத்தின் rugged versionஆக முடித்திருந்தால் படம் இன்னும் பேசப்பட்டிருக்கும்!