மலையாள ஆதிக்கம்!

மலையாள ஆதிக்கம்!

வடக்குப்பட்டி ராமசாமி. ‘நான் அந்த ராமசாமி இல்ல‘ என்ற டீசரில் கவனம் பெற்ற இந்தப் படம், கார்த்திக் யோகி இயக்கத் தில் சந்தானம் - கோ நடித்து வெளியானது.

பானை வியாபாரம் செய்பவராக சந்தானம். அவரது பானை ஒன்றால், ஊருக்குள் இருந்த 'காட்டேரி' பிரச்னை விலகுகிறது. மக்களின் மூட நம்பிக்கையை வைத்து காசு பார்க்கத் திட்டமிடும் சந்தானம், கோயில் ஒன்றை எழுப்புகிறார். கோயில் சொத்தை அடைய முயற்சிக்கிறார் தாசில்தார் தமிழ். அதற்கு சந்தானம் ஒத்துழைக்காததால் கோயிலை மூடப்படுகிறது. மீண்டும் திறக்க என்ன செய்கிறார் சந்தானம் என்பது மீதிக்கதை.

சந்தானத்தின் ஒன்லைனர்கள், உடன் நடித்த மாறன், சேஷு உட்பட்டோரின் காமெடி அதகளங்கள் என்று படம் முழுக்க ஆங்காங்கே சிரிக்க முடிகிறது. சில காட்சிகளுக்கான லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் இதுல அதெல்லாம் பாக்க வேணாம்பா என்று தோன்றுவதால் படம் தப்பிக்கிறது.

டெவில், திருமணம் மீறிய உறவைச் சுற்றி நடக்கும் கதை. ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா,திருகுன் இன்னும் பலர் நடித்திருக்கும் படத்தில் பூர்ணாவுக்கு ஒரு நட்பும், விதார்த்துக்கு அலுவலத் தில் ஒரு நட்பும் கிடைக்கிறது. நட்பு, அடுத்த கட் டத்துக்குப் போகிறது. இப்படிப் போகும் கதையில் பின்னால் அமானுஷ்யம், ஹாரர் என்று கலந்து கட்டி முடித்திருக்கிறார்கள்.

உறவுச்சிக்கல்களைச் சொல்லும் படங்கள் மிகக்குறைவு. இப்போதுதான் திருமண வாழ்வில் உறவுச் சிக்கல்களைப் பேசிய இறுகப்பற்று பேசப்பட்டது. அதே போல, உரையாடல்களில் உறவுகளை அலசும் படங்கள் இந்தியில் அதிகம் வந்திருக்கிறது. அப்படியான படமாக இருந்திருக்க வேண்டிய இப்படம், எல்லா ஜானரிலும் கலந்து கட்டிப் பயணித்ததால் ஆயாசம்தான் மிஞ்சுகிறது. பூர்ணாவின் நடிப்பு ஒன்றுதான் ஆறுதல்.

எங்கப்பா ஒண்ணும் சங்கி இல்லை‘ என்று இசை வெளியீட்டில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொல்ல, லால் சலாம் ஃபீவர் இரண்டு நாள் இருந்தது. படமும் வந்தது. வந்த கையோடு போனது.

இந்து -  முஸ்லிம், ஒற்றுமையான கிராமம், தேர்த்திருவிழா, கிரிக்கெட், மதப்பிரச்னை, அரசியல் எல்லாவற்றையும் ஒரு குடுவையில் போட்டு குலுக்கி எடுத்த கதை. விஷ்ணு விஷால், விக்ராந்த் என்று இளம் நடிகர்களின் நடிப்புக்கும் ரஜினி என்ற ஆளுமையின் பிம்பத்திற்கும் ஆஹா ஒஹோ என்று பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதை ஏன் இங்க சொல்ற என்று ரசிகர்கள் ஒதுக்கிவிட்டனரோ என்று தோன்றுகிறது.

பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீகௌரி ப்ரியா நடித்து வெளியானது லவ்வர். காதலர்களுக்குள் நடக்கும் பொசசி வ்நஸ் பஞ்சாத்துகளால் 'அய்யோ இவன்கூட எப்டி வாழறது' என்று பெரியதொரு முடிவெடுக்கிறார் நாயகி. நாயகன் என்ன செய்கிறான், அவர்கள் உறவு என்ன ஆனது என்பதே கதை காதலில் பேசாப்பொருளான டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பை பேசியிருக்கிறது படம். இக்கால இளைஞர்களுக்கு தேவையான அட்வைஸை, அழகான கதை மூலம் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

ஆண் மைய மனோபாவத்தில் நடித்திருக்கும் மணி கண்டனும், அதைப் பொறுத்துக்கொள்வதா, எதிர்த்து நிற்பதா என்ற குழப்பத்தில் இருக்கும் ஸ்ரீகௌரி பிரியாவும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசமும் படத்துக்கு ஆகச்சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

கடைசி வாரத்தில் தமிழில் மட்டும் ஏழெட்டு படங்கள் வெளியாகின. ஜெயம் ரவியின் சைரன் மட்டும் கொஞ்சம் பேசப்பட்டது. ஆனால் முக்கியமான விஷயம் அதுவல்ல.

மலையாளத் திரையுலகினர் சென்னை தியேட்டர்களை ஆக்கிரமித்ததுதான் ஹைலைட்டாக பலரின் பேசுபொருளாக இருந்தது.

பிரேமலு பிப்ரவரி முதல் வாரம் முடிந்ததும் வந்தது. அழகான காதல் கதை. அதை காமெடியோடு, உணர்வுகளோடும் சொன்னது. பல இடங்களில் சிரிக்கவும் பல இடங்களில் மன நிறைவைத் தரவ்ம் செய்தது இந்தப்படம்.

அதேபோன்ற பரவலான கவனத்தைப் பெற்றது, அடுத்த வாரம் வந்த மம்முட்டி நடித்த பிரமயுகம். ஒரு சிலர் ‘படமாய்யா இது' என்றாலும் பலர் கொண்டாடினர். மம்முட்டியின் நடிப்பையும் படம் சொல்லும் ஆழமான கதையையும் பேசி சமூக ஊடகங்களில் புகழந்தனர்.

மூன்றாவதாக மஞ்ஞுமல் பாய்ஸ் என்றொரு படத்தை இறக்கினார்கள் சேட்டன்கள். கொடைக்கானல் குணா பாறையில் சிக்கிய ஒரு இளைஞரை, நண்பர்கள் சேர்ந்து காப்பாற்றும் கதை. உண்மையாக நடந்ததைப் படமாக்கியிருந்தனர். இந்தக் கதையில் புதியதாக ஒன்றுமே இல்லை.

ஆனால் இடைவேளைக்குப் பின் மொத்த தியேட்டரும் கொடைக் கானலில் அந்த இளைஞன் சிக்கி விழுந்த குடைக்குழிக்குள்தான் கிடந்தது. மூன்று படங்களுமே தியேட்டரில் ஹவ்ஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கின்றன, காரணம் மூன்று படங்களும் எழுதப்பட்ட விதம்!

மல்லுவுட்டிடம் கற்றுக்கொள்ள எதோ இருக்கிறது!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com