பாஸிடிவ் தொடக்கம்!

பாஸிடிவ் தொடக்கம்!

தமிழ்த் திரை உலககுக்கு மிகவும் பாஸிடிவாகத் தொடங்கியிருக்கிறது இந்த 2024. ஜனவரியில் வெளியானவற்றில் பலவும் வெற்றிப்படங்களாக அல்லது பேசப்படும் படங்களாகவே அமைந்தன.

8 வருடங்களுக்கு முன் பேசப்பட்டு, ஐந்து வருடங்களுக்கு முன் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட அயலான், இந்த மாதம் வெளியானது.

வேற்று கிரகத்தில் இருந்து கிடைத்த ஸ்பார்க் என்ற கல்லின் மூலம் பூமியைத் துளையிட்டு கனிமங்களை கைகொள்ள நினைக்கும் வில்லன் ஆர்யன். பூமியைக் காப்பாற்ற வந்த 'டாட்டூ' எனும் ஏலியன். அந்த ஏலியன் தேர்ந்தெடுக்கும் 'நண்பன்', சிவகார்த்திகேயன். இப்படி சிம்பிளான ஒன் லைன்.

எஸ்கேவுக்கு அவரது ஃபேவரைட்டான 'எல்லோர்க்கும் நல்லான்' ரோல்.  சிறப்பாகவே செய்திருக்கிறார். ஏலியனுடன் எஸ்கே நண்பர்கள் குழாமில் செய்யும் நகைச்சுவைகளுக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ். இடைவேளையில் ஏலியனின் சக்தி எஸ்கேவுக்கும் கிடைத்துவிட படம் இன்னும் டபுள் ஸ்பீடில் போகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது.

ஆனால் இரண்டாம் பாதி படம் அங்கே இங்கே என்று அலைபாய்ந்து முடிகிறது. ‘ஆள விடுங்கடா' என்ற சலிப்பெல்லாம் இல்லை. ஆனாலும் எமோஷனாகக் கனெக்ட் ஆகாமல், சண்டைக்காட்சிகள் மட்டுமே ஆக்ரமித்திருப்பது போன்ற உணர்வு. ஆனாலும் ஏலியன் காப்பாற்றுகிறான்.  விஎப்எக்ஸ் எனும் தொழில்நுட்பத்தை, இவ்வளவு தத்ரூபமாகப் பயன்படுத்த முடியுமா என ஆச்சர்யப்படுத்தியிருக்கும் படம்.  அந்த வகையில் தமிழ் சினிமாவில் எப்போதும் பேசப்படும் படமாக அயலானைப் படைத்த இயக்குநர் ஆர்.ரவிகுமாருக்கு வாழ்த்துகள்.

தமிழகத்தின் தெற்குப்பகுதி கிராமமொன்றில் வாழ்கிற பழங்குடி மக்களின் அடிமைக் கதையைப் பேசியிருக்கிறது கேப்டன் மில்லர். ஆதிக்க சாதியினர், பிரிட்டிஷ் அரசாங்கம் ஆகியோரின் ஒடுக்கு முறையிலிருந்து மக்களைக் காக்க இராணுவத்தில் சேரும் தனுஷ் அவர்களை மீட்டாரா என்பதே கதை.

காலனிய ஆட்சிக் காலத்தைக் கதைக்களமாக எடுத்துக் கொண்டதில் பாஸாகிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அனலீசனாக வரும் தனுஷ், கேப்டன் மில்லர் எனும் ஆயுதப் போராளியாக மாறுவதற்கான நியாயங்களைப் படம் பேசியிருப்பதும் படத்தின் பலம். ஆனால் இடைவேளைக்குப் பின் வெறும் சண்டைக்காட்சிகள் ஆக்ரமிப்பாக இருப்பது பெரும் குறை. சிவராஜ் குமாரின் கெஸ்ட் ரோல் கவனிக்க வைக்கிறது.

அதே வாரத்தில் வெளியான விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்துக்கும் ஆங்காங்கே வரவேற்பு இருந்தது. மும்பைக்கு துபாயிலிருந்து வரும் விஜய் சேதுபதி அங்கே கத்ரீனா கைஃபுடன் நட்பாகிறார். அவருடைய வீட்டுக்கு பார்ட்டிக்கு செல்கிறார். பிறகு இருவருமாக வெளியில் சென்றுவிட்டு வரும்போது கத்ரீனாவின் கணவர் கொலையுண்டு கிடக்கிறார். அதன்பின் என்ன ஆனது, யார் கொலையாளி என்பதே கதை.

இந்தியா முழுவதும் பேசப்பட்ட அந்தாதூன் (டாப்ஸ்டார் பிரசாந்தின் அந்தகன்!) இயக்குநர்  ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வந்த இந்தப் படமும் மேலே நாம் பார்த்த முதல் இரண்டு படங்கள் போலவே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தி, தமிழ் இரண்டிலுமே எடுக்கப்பட்டதாகசொல்லப்பட்டாலும் தமிழ் வசனங்களில் அந்நியத்தன்மை.

அருண் விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர் 1 - படமும் இப்படங்களுடன் களமிறங்கியது.

தன் மகளின் ஆபரேஷனுக்காக ஒரு குற்றம் செய்யத் துணிந்து வெளிநாட்டில் சிறையிலில் மாட்டிக்கொள்கிறார் அருண் விஜய், தன் மகளின் சிகிச்சைக்காக அவர் மீண்டு வரவேண்டும். ஆனால் அங்கே சிறையில் மூன்று தீவிரவாதிகளைத் தப்பிக்க வைக்க வில்லன் முயல்கிறார் என்பதை அறிந்து அவரும் எமி ஜாக்‌சனும் அத்திட்டத்தை முறியடிக்க முயல்கிறார்கள். வென்றார்களா என்பதே கதை.

ஆக்‌ஷன் படங்களென்றால் அல்வா-வாக அள்ளிச் சாப்பிடுகிறார் அருண் விஜய். அவருடைய உடல்வாகுக்கு சண்டைக்காட்சிகள் பொருந்திப் போகின்றன. ‘இனி இதெல்லாம் எடுத்தா செல்லாது' என்று பலரும் ஒதுங்கிவிட்ட தீவிரவாதிகள் என்ற கான்செப்ட் சலிப்பு.

கடைசி வாரத்தில் வந்தவற்றில் சிங்கப்பூர் சலூன் - ப்ளு ஸ்டார் மோதிக்கொண்டன. ஆர்ஜே பாலாஜியின் நடிப்பில் கோகுலின் இயக்கத்தில் வெளிவந்தது சிங்கப்பூர் சலூன்.

முடி திருத்துனராக பெரிய லெவலில் வரவேண்டும் என சிறுவதிலிருந்தே லட்சியம் கொண்ட ஆர்.ஜே.பாலாஜி. அதை அவர் அடைவதில் நடக்கும் தடைகள் அவற்றைத் தாண்டி ஹீரோ வெல்வது என்பதே கதை. ஆர்.ஜே.பாலாஜி நடிகராக இதில் ஒரு மார்க் எக்ஸ்ட்ரா வாங்குகிறார். முதல் பாதி ப்ளாஷ்பேக் படத்தின் பெரும் குறை. ஒரு மாதிரி சிரிப்பும் வராமல், ஒன்றவும் முடியாமல் இருக்கும்போது சத்யராஜ் வந்து ஆக்ஸிஜன் கொடுக்கிறார். அவரது கதாபாத்திர வடிவமைப்பும், நடிப்பும் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

அதே படத்துடன் வெளிவந்த ப்ளூ ஸ்டார், அறிமுக இயக்குநர் எஸ்.ஜெயகுமார். வசனங்கள் தமிழ்பிரபா.

அரக்கோணத்தில் வசிக்கும் அசோக் செல்வனும், சாந்தனுவும் கிரிக்கெட் விரும்பிகள்; ‘லோக்கல் கிரிக்கெட்' வீரர்கள். உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இருவரும் மோதிக்கொள்ள, வெற்றியைக் குறிவைத்து சாந்தனு தொழில் முறை கிரிக்கெட் வீரர்களை தன் அணிக்குள் அனுமதிக்கிறார். அதன்பிறகு அந்த வீரர்களாலேயே அவமானத்துக்குள்ளாகிறார். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் அந்த தொழில்முறை கிரிக்கெட் வீரர்களை கிரிக்கெட் மைதானத்தில் களம் காண வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சாந்தனு, அசோக் செல்வன் இரு அணியினரும் என்ன செய்தார்கள் என்பதே கதை.

விளையாட்டு, விளையாட்டு மட்டும் அல்ல என்பதை அழுத்தமாகவே பதிவு செய்திருகிறார்கள். குற்றக் கலாசாரத்தில் இருந்து இளைஞர்களை விளையாட்டு மீட்கும் என்பதைப் பேசிய ப்ளூ ஸ்டார் நிச்சயம் முக்கியமான ஒரு படைப்பாக மிளிர்கிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com