தங்கலான்: திரைவிமர்சனம்
நிலம் எங்கள் உரிமை என ’காலா’ படத்தில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி நிலத்தை இழந்து அடிமையானார்கள் என்பதை ’தங்கலான்’ படத்தின் மூலம் பேசியிருக்கிறார்.
19 ஆம் நூற்றாண்டில் தொடங்கும் படத்தின் கதை, வட ஆற்காடு பகுதியை கதைக்களமாகக் கொண்டிருக்கிறது. வேப்பூர் கிராமத்தில் தனது மனைவி (பார்வதி) பிள்ளைகள் மற்றும் ஊர் மக்களுடன் விவசாயம் செய்துவரும் தங்கலான், ஜமீன்தாரின் சூழ்ச்சியால் தனக்கு இருந்த கையளவு நிலத்தையும் இழக்கிறார்.
அப்போது, தங்கலானின் உதவியை நாடி வருகிறார் ஆங்கில துரை கிளெமண்ட் (டேனியல் கால்டாகிரோன்). தனக்கு தங்கத்தை எடுத்துக் கொடுத்தால், அதில் பங்கு தருவதாக உறுதியளிக்கிறார். இதற்கு ஒப்புக் கொள்ளும் தங்கலான் தன்னுடைய கூட்டத்திலிருந்த சிலரை அழைத்துக் கொண்டு அந்த வெள்ளைக்காரர்களுடன் புறப்படுகிறார். செல்லும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் என்னென்ன? அவர்களுக்கு தங்கம் கிடைத்ததா என்பதே படத்தின் திரைக்கதை.
மேலே சொன்னதுதான் படத்தின் மையக் கதையாக இருந்தாலும், திரைக்கதை பல்வேறு அடுக்குகளை கொண்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு, அவர்கள் தொடர்பான வாய்மொழி கதைகள், நினைவுகள் என பலவற்றைப் படம் சுமந்து செல்கிறது. நேரிடையான கதை சொல்லலாக இல்லாமல் புனைவு, மாய எதார்த்தம் என திரைக்கதை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித். தன் முந்தைய படங்களிலிருந்து புதிய கதை சொல்லல் முறையை கையாண்டிருக்கிறார்.
விக்ரம் என்ற நடிப்பு அசுரனுக்கு தீனிபோட்டிருக்கிறது தங்கலான். அசர வைக்கும் அவரின் உடல்மொழி, வசன உச்சரிப்பு, முகபாவனை என அனைத்திலும் அபார உழைப்பைக் கொட்டியிருக்கிறார். அவருக்கு இணையான காட்சிகள் பார்வதிக்கும், மாளவிகா மோகனனுக்கு இல்லையென்றாலும் கிடைத்த வாய்ப்புகளில் கலக்கி இருக்கிறார்கள். வைணவ பக்தராக வரும் பசுபதியின் கதாபாத்திரம் தனித்து கவனம் பெறுகிறது. எந்த கதாபாத்திரம் என்றாலும் ஊதித் தள்ளிவிடுவார் பசுபதி.
அசுரன் படத்துக்கு பிறகு கதைக்கு ஏற்ற பின்னணி இசை, பாடலில் அதகளம் செய்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இடைவெளிக்கு பிறகு தொய்வடையும் சில காட்சிகளில் ஜி.வியின் இசை காப்பாற்றுகிறது.
சலிப்படையச் செய்யும் பல காட்சிகளில் படத்தைக் காப்பாற்றுவது ஜி.வி.யின் பின்னணி இசைதான். படத்தின் மற்றொரு பலம், கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு, பதினேழாம் நூற்றாண்டை கண்முன் நிறுத்துகிறது. தங்க வயல், வறண்ட பூமி, என ‘ரா’வாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார். கலை இயக்குநர் மூர்த்தியின் உழைப்பு நிச்சயம் இந்த படத்தின் மூலம் கவனம் பெறும். படத்தில் வரும் புத்தர் சிலை, வீடு, தங்கவயல் என அத்தனையையும் அசலாக உருவாகியுள்ளார். விக்ரம் – மாளவிகா காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவதைத் தவிர்த்திருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
அழகிய பெரியவன், தமிழ் பிரபா எழுதியுள்ள வசனம், ரஞ்சித் பேசும் அரசியலை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளது. அது கதையின் போக்கை தொந்தரவு செய்யவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் விக்ரம் பேசும் வசனங்களைப் புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது.
சாதி, பண்ணை அடிமை முறை, நிலமானிய முறை, பிராமண மேலாதிக்கம், பவுத்தம், ராமானுஜர் பட்டியலினத்தவர்களுக்கு பூணூல் அணிவித்தது, ஆங்கிலேயரின் நயவஞ்சகம் போன்ற பல வரலாற்று நிகழ்வுகள் படத்தில் பேசப்பட்டுள்ளன. இதில் ஆரத்தி தொடர்பாக வரும் மாய உலக காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களை நிச்சயம் சோதித்துப் பார்ப்பவை. ஒட்டுமொத்தத்தில் தங்கலான் வரலாற்றையும் – புனைவையும் நேர்த்தியாக பேசிய திரைப்படம்தான். ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் தெரியாமல் தங்கலான் என நினைத்து இன்று வெளியான டிமாண்டி காலனி படத்துக்கு மாற்றி வந்துவிட்டோமா என்று பேசிக்கொண்டார்கள் என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்!