ஹாட் ஸ்பாட். நான்கு கதைகளைக் கொண்ட ஆந்தாலஜி. தயாரிப்பாளர் ஒருவரிடம் நான்கு கதைகளைச் சொல்கிறார் வாய்ப்புத் தேடும் இயக்குநர் ஒருவர். கணவன், மனைவியாகவும் மனைவி கணவனாகவும் வாழ்ந்தால்? / ரிலேஷன்ஷிப்பின் இருக்கும் இருவருக்கும் ஒருகட்டத்தில் அண்ணன் தங்கை உறவு என்று தெரிந்தால்? / பாலியல் தொழிலாளி ஆகும் காதலனைக் காதலி எப்படிக் கையாள்வாள்? / ரியாலிட்டி ஷோக்களின் குழந்தைகள் எப்படிக் கையாளப்படுகிறார்கள்? - இந்த நான்குமே நான்கு (குறும்) படங்களின் கதைக்களன்கள்.
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் இப்புது முயற்சிக்கு வாழ்த்துகள். படமும் நேர்த்தியாகவே படமாக்கப்பட்டிருந்தது. ஆனால் சமூக நோக்கும், இவ்வாறான அரசியல் கலந்த சப்ஜெட்டுக்குத் தேவையான அழுத்தமான காட்சிகளும் வசனங்களும் கொஞ்சம் குறைவாகவே காணப்பட்டது. ஆனாலும் வரவேற்க வேண்டிய முயற்சி.
அடுத்து, வெப்பம் குளிர் மழை. அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து, தன் முதல் படத்திலேயே பேசத் தயங்கும் ஒரு கதைக்களனை எடுத்துக்கொண்டிருக்கிறார். ‘கல்யாணமாகி மூணு நாலு மாசமாச்சு. எதும் விசேஷமுண்டா?’ என்ற கேள்வியை எதிர்கொள்ளும் பெண்ணின் சமூக அழுத்தத்தைப் பேசுகிறது படம்.
மேற்கண்ட இரண்டுமே சென்ற மாதக் கடைசியில் வந்தவை. இம்மாதம் முதல் வாரத்தில் வெளிவந்தது. ஜி.வி.பிரகாஷ் குமார், பாரதிராஜா நடிப்பில் ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர் இயக்கியுள்ள படம் கள்வன்.
வனக்காவலராகும் முயற்சியில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவைத் தாத்தாவாக தத்தெடுக்கிறார். எதற்காக அப்படிச் செய்கிறார் என்பதும், ஜி.வி.பிரகாஷ் போடும் திட்டம் என்னவானது என்பதுமே கதை. ஜி.விக்கு வரிசையாக வரும் படங்களில் இன்னுமொரு படமாகக் கொள்ள முடியாது என்பதுபோல கொஞ்சம் அழுத்தமான கதை. ஆனால் எமோஷன்களோ, நச்சென்ற திரைக்கதையோ இல்லாதது மைனஸ். பாரதிராஜாதான் ஓரளவு படத்தைக் காப்பாற்றுகிறார். ஒளிப்பதிவாளராக படம் முழுவதும் கொள்ளைகொள்ளும் காட்சிகளை அள்ளித் தந்திருப்பது மட்டும் பெரிய ப்ளஸ்.
இரண்டாவது வாரம் வெளியானது. DeAr. Deepika - ஐஸ்வர்யா ராஜேஷ், Arjiun - ஜி.வி.பிரகாஷ் குமாரின் பெயர்ச்சுருக்கம்தான் DeAr. குட் நைட்-டில் பார்த்த அதே களம். ஆனால் ரிவர்ஸில். சின்ன சத்தமென்றாலும் தூக்கம் தொலைக்கும் ஜி.வி.பிரகாஷ். குறட்டைவிடும் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு கட்டத்தில் விவாகரத்து வரை செல்லும் இந்தப் பிரச்னை என்னவானது என்பதே கதைக்களம்.
ஏற்கெனவே வந்து பேசப்பட்ட கதைக்களம் என்பதாலேயே படத்திற்கான எதிர்பார்ப்பு குறைந்துவிடுகிறது. இரண்டாம் பாதி எங்கெங்கோ அலைபாய்வதால் மேலும் நம்மை சோதிக்கிறது. இளவரசு, காளி வெங்கெட் ஆகியோர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகின்றனர்.
விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் ரோமியோ. கதாநாயகியாகத் துடிக்கும் மிருணாளினியைக் காதல் செய்து கரம் பிடிக்கிறார் விஜய் ஆண்டனி. ஆனால் மிருணாளினி கணவனை ஒதுக்கி வைப்பதால் அவரது கனவை ஈடேற்றும் வகையில் படம் தயாரிக்கிறார் விஜய் ஆண்டனி. படம் என்ன ஆனது, படத்துக்குள் வந்த படம் என்ன ஆனது என்பதே கதை.ஆனால் வலுவான திரைக்கதை இல்லாததால் படம் பேசவேண்டிய அளவுக்கு பேசப்படவில்லை.
இவை போக இரண்டு படங்களைக் குறிப்பிடவேண்டும். ஒன்று ஆவேஷம். ஃபகத் ஃபாசில் நடித்து வந்த மலையாளப் படம். ஜிகிர்தண்டா டைப்பில் ஒரு தாதாவிடம் மாட்டிக்கொள்ளும் மூன்று கல்லூரி மாணவர்கள்.
மாட்டிக்கொள்ளும் என்றால் அடக்குமுறையால் அல்ல, அன்பினால். தாதா + அம்மூவருக்குமான பிணைப்பு எப்படியெப்படி வளர்ந்து என்னவாகிறது என்பதே கதை. ரோமாஞ்சம் என்ற ஹிட் குடுத்த ஜித்து மாதவனின் இயக்கமும் சுஷின் ஷியாமின் இசையும் கைகொடுக்க படம் ரகளையாக வந்திருக்கிறது.
அதே போலவே அமர்சிங் சம்கீலா. இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. கொச்சையான பொருள்கொண்ட பாடல்கள் பாடி (இரட்டை அர்த்தமெல்லாம் இல்லை; ஒரே அர்த்தம்தான்!) புகழ் பெற்ற அமர்சிங் சம்கீலா என்ற பஞ்சாப் பாடகனின் கதை. இப்படி ஒரு கதையை யார் எடுத்தால் நச்சென்று வருமோ அப்படியான ஒருவரின் கைக்குப் போயிருக்கிறது படம். இம்தியாஸ் அலி, திரைக்கதையில் சாஜித் அலியுடன் கைகோத்து ஒரு தரமான படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் தன் பங்குக்கு அவார்டுகளை அள்ள ரெடியான பாடல்கள் + பின்னணி இசையால் கவர்ந்திருக்கிறார். தவற விடக்கூடாத படம்!
கடைசி வாரத்தில் விஷாலை ஹரி ஓடவிடும், ரத்னம் வருகிறான். அதை அடுத்த மாதம் பார்ப்போம்!