அலங்கு திரைப்படம் 
சினிமா

வருட கடைசியில் 12 திரைப்படங்கள்! - ஹாப்பியா...?

Staff Writer

2024ஆம் ஆண்டின் கடைசி கட்டத்தில் இருக்கிறோம். இந்த வருடம் முடிய இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், இதுவரை 200 படங்களுக்கு மேல் வெளிவந்துள்ளன. இந்த நிலையில், இந்த இந்த வாரம் மட்டும் 12 படங்கள் வெளியாகின்றன. இதில் 2 டப்பிங் படங்களும் அடக்கம்.

இப்படி வருட கடையில் வரிசை கட்டி வெளியாகும் படங்களின் பட்டியல் இதோ...

அலங்கு

'உறுமீன், பயணிகள் கவனிக்கவும்' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். குணாநிதி என்ற புதுமுக நாயகனுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அம்பானி, ஸ்ரீரேகா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

தமிழக - கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள், விலங்குகளின் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து மற்றும், புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கை ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

திருமாணிக்கம்

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா, இளவரசு, நாசர், சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, என பல பிரபலங்கள் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜிபிஆர்கே சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஷால் சந்திரசேகர் இசையில், சுகுமார் ஒளிப்பதிவில், குணா எடிட்டிங்கில் படம் உருவாகி இருக்கிறது. இப்படம் குடும்ப பின்னணி கொண்ட கதையம்சத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி ஸ்மைல் மேன்

தி ஸ்மைல் மேன் சரத்குமாரின் 150வது திரைப்படம். சியாம் பிரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் டிசம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான, மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், எட்டு தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இப்படத்தை உருவாக்கியுள்ளது.

ராஜாகிளி

தம்பி ராமையா கதை, வசனம் எழுதி அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள திரைப்படம் 'ராஜாகிளி'. இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, டெப்பா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு தம்பி ராமையா இசையமைத்துள்ளார்.

கூரன்

ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் கூரன். இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், ரோபோ சங்கர் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மழையில் நனைகிறேன்

பிரபல மலையாள நடிகர் அன்சன் பால் தமிழில் நடிக்கும் 5ஆவது தமிழ் திரைப்படம் இது. காதலை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இத்திரைப்படம் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாவதாக இருந்த நிலையில், அன்று வெளியாகவில்லை. வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இது உனக்கு தேவையா

இயக்குநர் ஹரி தேவா இயக்கத்தில் தர்மராஜ், நந்தா ஆகியோர் நடித்துள்ளனர். வடசென்னையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

நெஞ்சு பொறுக்குதில்லையே

சின்னத்திரை நட்சத்திரங்களான அரவிந்த் ரியோ, காளிதாஸ், புவனேஸ்வரி ரமேஷ் பாபு, நித்யா ராஜ் உட்பட பலர் சினிமாவில் அறிமுகமாகும் படம், ’நெஞ்சு பொறுக்குதில்லையே’. ‘நவரச கலைக்கூடம்’ சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருவர் என்ற பெயரில் பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவி தினேஷ்குமார் இணைந்து இயக்கியுள்ளனர். எம்.எல்.சுதர்சன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு அப்துல் கே.ரகுமான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறும் காதலர்கள் சந்திக்கும் பிரச்சினையை மையமாக வைத்து சமூகத்தில் நடக்கும் அவலங்களையும், இன்றைய இளைஞர்களின் மனநிலையையும் வெளிப்படுத்தும் படம் இது.

வாகை

இயக்குநரும் நடிகருமான ராமகிருஷ்ணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் வாகை.

இயக்குநர் ராம் சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சாந்தினி தமிழரசன், மறைந்த நடிகர் டி.பி. கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, சித்ரா லட்சுமணன், 'கருத்தம்மா' ராஜ ஸ்ரீ, 'பருத்திவீரன்' சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வெங்கட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ சாய் தேவ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை லுமினாஸ் சினி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி. ஜனார்த்தனன் தயாரித்திருக்கிறார்.

பீமா சிற்றுண்டி

ஸ்மித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் யானைக்கும் பாகனுக்கும் உள்ள உறவு பேசுவதாக எடுக்கப்பட்டுள்ளது.

ஜேபி ஜெயராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 27 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படங்களுடன் Barroz, Max என்ற இரண்டு டப்பிங் திரைப்படங்களும் வெளியாகின்றன.