அல்லு அர்ஜுன்  
சினிமா

சிறையிலிருந்து விடுதலையான அல்லு அர்ஜுன்!

Staff Writer

திரையரங்க நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு, ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதை அடுத்து, இன்று சஞ்சல்குடா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், பிரபல நடிகர்கள் அல்லு அர்ஜுன், பகத் பாசில், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா - 2 தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில், கடந்த 5ஆம் தேதி வெளியானது.

இந்த படத்தின் சிறப்பு காட்சி, ஹைதராபாதில் உள்ள சந்தியா தியேட்டரில், கடந்த 4ஆம் தேதி இரவு திரையிடப்பட்டது. இதை பார்க்க ஏராளமானோர் தியேட்டரில் குவிந்தனர். அப்போது, சிறப்பு காட்சியை பார்க்க, முன்னறிவிப்பின்றி நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த பொதுமக்கள், அவரை காண குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். மேலும், அவரது 9 வயது மகன் காயமடைந்தார்.

இது தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் மீது ஹைதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே, உயிரிழந்த ரேவதி குடும்பத்தினருக்கு, நடிகர் அல்லு அர்ஜுன் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கினார்.

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி முறையிட்டார். இதை நிராகரித்த நீதிமன்றம், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அவரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் தரப்பில் உடனடியாக மேல் முறையீடு செய்யப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நான்கு வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் நேற்று இந்த உத்தரவு நீதிமன்றத்தில் இருந்து வராததால், சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று அல்லு அர்ஜுனுக்கு, ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதை அடுத்து, சஞ்சல்குடா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.