சினிமா

25 ஆண்டுகள் நிறைவு… ‘ஆனந்தமாக’ இருக்கிறாரா லிங்குசாமி?

முத்துராமலிங்கம்

இன்று நாள் மே 25. 2001 மே 25 அன்று இயக்குநர் லிங்குசாமியின் முதல் படமான ‘ஆனந்தம்’ ரிலீஸாகியிருந்த நிலையில், அவரது காலம் சரியாக 25 ஆண்டுகள் முன்னோக்கி நகர்ந்திருக்கிறது.

ஆனந்தம் படத்தை அதன் ரிலீஸுக்கு முந்தைய நாள் தேவிஸ்ரீதேவி பிரிவியூ தியேட்டரில் பார்த்த ஞாபகம் அப்படியே இருக்கிறது. இன்று சில மீள் பதிவுகள் அப்படத்தின் 25 ஆண்டு நிறைவை அடுத்தடுத்து பகிர்ந்துவந்த நிலையில் எனக்குள் வந்து உட்கார்ந்துகொண்ட ஒரு கேள்விதான் இச்செய்தியின் தலைப்பு.

இயக்குநராக 25 ஆண்டுகால பயணம் என்பது அவ்வளவு எளிதான ஒன்றன்று. வெற்றி என்கிற ஒன்றைக்கூட கொஞ்சம் கஷ்டப்பட்டு அடைந்துவிடலாம். ஆனால் அதன் சுவடுகளோடு தொடர்ந்து தாக்குப்பிடித்து நிற்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. முதல் படத்தோடு காணாமல் போனவர்கள், சில படங்களில் சிதறி ஓடியவர்கள், தொடர்ந்து போராட முடியாமல் தொலைந்துபோனவர்கள்,என்று இங்கே பெரும் பட்டியல் உண்டு. ஆக 25 ஆண்டுகளாக கோடம்பாக்கத்தில் இருந்துகொண்டு இருப்பது என்பதே ஒரு பெரும் சாதனைதான்.

இந்த 25 ஆண்டுகளில், ஆனந்தம், ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி2, வாரியர் [தெலுகு] ஆகிய 10 படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார் லிங்குசாமி. இவற்றில் 4 வெற்றி. தனது சகோதரர்கள் பெயரில் துவக்கிய திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் வாயிலாக தயாரித்த, இறுதி நேரத்தில் வாங்கி வெளியிட்ட படங்களின் எண்ணிக்கை இருபதை நெருங்குகிறது. இவைகளின் வெற்றி நிலவரமும் அதே 40 சதவிகிதம்தான்.

ஒரு தயாரிப்பாளராக அவரது 19 படங்களை ஒரு தட்டிலும் ஒரே ஒரு படத்தை இன்னொரு தட்டிலும் வைத்தால் அந்த இன்னொரு படம் வெயிட் தாங்காமல் பூமியைப் பொழந்துகொண்டு நிற்கும். அந்த இன்னொரு படம் இண்டஸ்ட்ரியின் மூத்த பிரதர் கமலை வைத்து இளைய திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த ‘உத்தம வில்லன்’. அப்படத் தயாரிப்பில் அந்த பிரதரால் இந்த பிரதர்கள் நொந்த கதை இந்த இடத்துக்கு தேவையில்லாதது என்பதால் இன்னொரு சமயத்தில் பேசுவோம்.

ஓவர் டு இயக்குநர் லிங்குசாமி.

திரையுலகில் ‘ஒன் ஃபிலிம் ஒண்டர்’ என்கிற ஒரு பிரசித்தபெற்ற பிரயோகம் உண்டு. பத்துப் படங்கள் இயக்கி அதில் 4 மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை லிங்குசாமியும் ஒரு ஒன் ஃபிலிம் ஒண்டர்தான். ஏனெனில் லிங்கு தன் வாழ்நாளில் ஆனந்தம் போன்றதொரு படத்தை இன்னொருமுறை இயக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர் அதற்கான முயற்சிகளிலும் கூட ஈடுபடவில்லை. காரணம் அவரது இரண்டாவது படமும் மிகச் சிறந்த மசாலா படமுமான ’ரன்’னில் ‘சம்பாதித்த பெயர். இயக்குநர்களுக்கு மசாலாப்பட வெற்றி என்பது உச்சபட்ச போதை. அதிலிருந்து அவர்கள் எப்போதுமே மீளமுடியாது என்பது மட்டுமின்றி அதற்கான முயற்சிகளில் கூட அவர்கள் ஈடுபடமாட்டார்கள்.

மூன்றாவது படத்தில் அப்போது மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் அஜித்தும் லிங்குவும் இணைகிறார்கள். அப்படம் பெரும் தோல்வி அடைய மீண்டும் ரன் ஸ்டைலில் விஷாலை வைத்து ‘சண்டக்கோழி’தான் இயக்குகிறார் அவர். இப்படத்தின் வெற்றி அவரை கைதேர்ந்த மசாலாப்பட இயக்குநராகவே மாற்றுகிறது. ஆனால் முன்னணி நடிகர்களான விக்ரம்,ஆர்யா, சூர்யா, மீண்டும் விஷால்களை வைத்து அடுத்து அவர் இயக்கிய அத்தனை படங்களும் படு தோல்வி. நடுவில் தப்பிப்பிழைத்த ஒரே படம் தமன்னா,கார்த்தியை வைத்து இயக்கிய ‘பையா’ மட்டுமே. அடடா மழைடா அடைமழைடா என்றபடி தமன்னா மழையில் நனைய ரசிக ஜனங்களுக்கு ஜலதோஷம் பிடித்தது. அடுத்து லிங்குசாமிக்கு சனி பிடித்தது.

அந்த பையா ரிலீஸாகி சரியாக 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 16 ஆண்டுகளில் அவர் இயக்கிய 4 படங்களுமே தோல்வி. சரி தமிழர்கள்தான் நம்மைக் கைவிட்டுவிட்டார்கள் என்று ‘வாரியர்’ என்றொரு தெலுங்குப் படத்தையும் இயக்கிப் பார்த்தார். ரிசல்ட் என்னவோ ஏமிரா இதிதான்.

இந்த நீண்டநெடிய தோல்விப் பயணம் வேறொருவருக்கு அமைந்திருந்தால் அவர்கள் நிச்சயம் திரைத்துறையை விட்டே ஓட்டம் பிடித்திருப்பார்கள். ரன் எடுத்தவர் அவ்வளவு சுலபத்தில் ஓடிவிடுவாரா என்ன?

சூர்யாவை வைத்து அஞ்சான்2 எடுப்பது, கார்த்தி கிடைத்தால் பையா2 எடுப்பது, கழுவுகிற மீனில் நழுவுற மீனாக அவ்வப்போது ஆயிரம் கோடிகளில் ஆசை வார்த்தை காட்டி வரும் பாஜக பார்ட்டிகளின் தயவில் ‘ராமாயணம்’ என்று சிலபல புராஜக்டுகளை உருட்டிக்கொண்டேதான் இருக்கிறார் லிங்கு.

ஆனால் ஒரே படத்தில் தன்னை உச்சாணிக் கொம்பில் அமர வைத்த ஆனந்தம் போன்றதொரு நிஜவாழ்வியலைச் சொன்ன இன்னொரு படத்தை மட்டும் இயக்கும் ஆசையோ எண்ணமோ ஏனோ அவருக்கு வரவேயில்லை.

ஏனென்றால் அவர் நிஜமாக ஆனந்தத்தை இழந்து இன்றோடு 25 ஆண்டுகள் ஆகின்றன.