எழுத்தாளர் பெருமாள் முருகனின் மண்சார்ந்த கதைகள் அந்த நிலத்தையும் மக்களின் மனநிலையையும் அசலாகப் பிரதிபலிப்பவை. அப்படியான அவரது சிறுகதைகளில் ஒன்று ‘கோடித்துணி’. இந்த சிறுகதை தற்போது ‘அங்கம்மாள்’ என்ற படமாகியிருக்கிறது. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ‘அங்கம்மாள்’ கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்திருக்கிறார். படம் எப்படி இருக்கிறது?
தான் நினைப்பதே சட்டம், தான் சொல்வதே சரி என பிடிவாத குணம் கொண்டவர் அங்கம்மாள். அவருக்கு பரணி, சரண் என இரண்டு மகன்கள். மூத்த மகன் பரணி ஊரோடு விவசாயம் பார்த்து, மனைவி-மகளுடன் பிழைப்பு நடத்த இளையமகன் சரண் வெளியூர் சென்று மருத்துவம் படிக்கிறார். அங்கு சென்ற இடத்தில் வசதி வாய்ப்புள்ள பெண்ணான முல்லையரசியுடன் சரணுக்கு காதல் மலர்கிறது. இருவீட்டிலும் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க முல்லையரசி வீட்டு தரப்பில் இருந்து சரண் வீட்டிற்கு வர ஏற்பாடு நடக்கிறது. கிராமத்து மனுஷியான அங்கம்மாள் ரவிக்கை அணியாத பழக்கம் கொண்டவர். இதை பெண் வீட்டார் எப்படி எடுத்துக் கொள்வார்கள் எனத் தயங்கும் சரண் தன் அம்மாவின் இந்தப் பழக்கத்தை தன் அண்ணியின் மூலம் அவருக்கு எடுத்து சொல்லி மாற்ற முயற்சிக்க வீட்டில் பிரச்சினை வெடிக்கிறது. இறுதியில் என்ன ஆனது என்பதுதான் ‘அங்கம்மாள்’ படத்தின் கதை.
‘அங்கம்மாள்’ கதாபாத்திரத்தில் கீதா கைலாசத்தை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாது என சொல்லும் அளவிற்கு சீரும் சிறப்புமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் கீதா கைலாசம். கோபம் வந்தால் இஷ்டத்திற்கு வசைபாடுதல், சுருட்டு, டிவிஎஸ்ஸில் ஊரில் சுற்றி வருவது அழுத்தமும் பிடிவாதமும் கொண்ட அந்த கதாபாத்திரத்தை கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். அதிலும் முதன்முறையாக ரவிக்கை அணிந்து கொண்டு அவர் படும் அவஸ்தை ‘நடிப்பில் கிளாஸ்’!. கீதா கைலாசத்தின் கதாபாத்திரங்களை ‘அங்கம்மா’ளுக்கு முன், ‘அங்கம்மா’ளுக்கு பின் எனப் பிரிக்கலாம். அந்த அளவிற்கு இதற்கு முன் நடித்திருந்த அத்தனை கதாபாத்திரங்களை விடவும் மிகவும் தெளிந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அங்கம்மாளுக்கு பயந்து அவரின் பாசத்திற்கு ஏங்கும் அமைதியான மூத்த பையன் கதாபாத்திரம் பரணிக்கு. அவரது சினிமா கரியரில் நிச்சயம் பெயர் சொல்லக் கூடிய கதாபாத்திரம். அதை உணர்ந்து நடித்திருக்கிறார் பரணி.
இளையமகனாக சரண். நகரத்து மருத்துவராக அவரது தோற்றமும் தாயிடம் அவர் வைக்கும் விவாதங்களும், கோபத்தை அடக்குவது எனப் பல இடங்களில் அவர் கவனிக்க வைக்கிறார். முல்லையரசி, தென்றல் என படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தின் மற்றொரு மிகப்பெரிய பலம் அஞ்சோய் சாமுவேலின் ஒளிப்பதிவும் முகமது மக்பூல் மன்சூரின் இசையும். கிராமத்து அழகியலை அதன் இயல்பு மாறாமல் கொண்டு சென்றதில் இவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. உறுத்தாத சிங்க்-சவுண்டும் பல இடங்களில் ஆச்சரியப்படுத்துகிறது.
படத்தின் குறைகள் என்றால் பல காட்சிகள் தொடக்கமும் முடிவும் இல்லாமல் தொக்கி நிற்பது முழுமையடையாத உணர்வை தருகிறது. கதாபாத்திரங்கள் பல நேரங்களில் கொங்கு தமிழும் பல நேரங்களில் நெல்லை தமிழும் பேசுவது பார்க்கும் நமக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த சில குறைகள் தவிர்த்து ‘கோடித்துணி’ சிறுகதைக்கு ‘அங்கம்மா’ளாக நியாயம் சேர்த்திருக்கிறார் இயக்குநர் விபின். திரையரங்குகளில் நிச்சயம் பார்க்கலாம்