இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள்
இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் 
சினிமா

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி: மன்னிப்புக் கேட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்!

Staff Writer

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை என்று ரசிகர்கள் குற்றம்சாட்டிய நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையை அடுத்த பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடக்க இருந்த இந்த இசை நிகழ்ச்சி, மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது.

இதற்காக வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என ரூ.2000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் இசைக்கச்சேரி நடைபெறும் இடத்திற்குச் சென்றனர்.

ஆனால், அங்கு ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். காரணம், சரியான பார்க்கிங் வசதி இல்லாததால் பல மணி நேர காத்திருப்புக்குப் பின்னரே, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் சென்றுள்ளனர். ஆனால், ரூ.5,000 மதிப்புள்ள டிக்கெட் இருந்தும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை. மேலும், கூட்டத்திற்குள் சிக்கி வெளியே வரமுடியாமல் பலரும் திணறி உள்ளனர்.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கடுமையான விமர்சனம் எழுப்பிய நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ ரசிகர்களிடையே மன்னிப்பு கேட்டுள்ளது.

மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் வீடு திரும்பிய நிகழ்வுக்கு முழு பொறுப்பையும் தாங்களே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ நிறுவனத்தின் ட்வீட்டை ஏ.ஆர்.ரஹ்மானும் ரீட்வீட் செய்துள்ளார்.

அவர் தனியாகவும் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், “இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் திரும்பிச் சென்றவர்கள் டிக்கெட் நகலை arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். அது தொடர்பாக விசாரித்து நடவடிக்கப்படும்.” என்று ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் உறுதி அளித்துள்ளார்.