இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் குறித்த அவதூறு விடியோக்களை நீக்க வேண்டும் என சமூக ஊடகங்கள், யுடியூப் சேனல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரம் அல்லது அதிகபட்சம் 24 மணிநேரத்துக்குள் அவதூறு பதிவு மற்றும் விடியோக்களை நீக்க வேண்டும் என ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு வழக்குரைஞரிடமிருந்து நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏ.ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ரோஜா படம் மூலம் அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான், இந்தி, ஆங்கிலம் என பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
1995ஆம் ஆண்டு சாய்ரா பானுவை ஏ.ஆர். ரஹ்மான் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹீமா என 2 மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் தனது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர். இருவரின் உறவில் ஏற்பட்ட உணர்வுப்பூர்வமான அழுத்தங்களால், இந்த முடிவை எடுத்திருப்பதாக ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும்போதே ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றும் பாடகி மோகினி டே, தன் கணவர் மார்க் ஹர்ட்சுவை பிரிவதாக அறிவித்தார். இந்நிலையில் இவர்கள் இருவர் குறித்தும் சில தகவல்கள் வதந்திகளாக ஊடகங்களில் பரப்பப்பட்டது.
இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கறிஞர் குழு சமூக ஊடகங்களுக்கு எதிராக நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், “எங்கள் கட்சிக்காரர் விவாகரத்துக் குறித்த முடிவுக்கு தங்களின் வருதத்தையும், ஆறுதலையும் கொடுத்த நலம் விரும்பிகளுக்கு அவரின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். சில சமூக ஊடகத் தளங்களும், பல யூ-டியூபர்களும் எங்கள் கட்சிக்காரரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றித் தங்களின் சொந்தக் கற்பனைக் கதைகளுடன், அவதூறாகப் பதிவிடத் தொடங்கியிருக்கிறார்கள். இது எனது கட்சிக்காரரின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதோடு, அவரது குடும்பத்தாரையும் புண்படுத்தும். இந்த நோக்கம் கொண்ட எந்தவொரு நேர்காணல்களிலும், பதிவிலும் சிறு துளியும் உண்மை இல்லை என்பதை தெரிவிக்குமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
எனது கட்சிக்காரரின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் சமூக ஊடக நபர்கள், அவர்களின் மலிவான குறுகிய கால விளம்பரத்திற்காக எனது கட்சிக்காரரை அவதூறு செய்ய கற்பனையான கதைகளை உருவாக்குகிறார்கள். அதுபோன்ற பதிவுகள் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானவை என்பதையும் உணர வேண்டும். எனவே, அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அதிகபட்சம் 24 மணி நேரத்துக்குள் அந்த ஆட்சேபனைக்குரிய பதிவுகளை அகற்றும்படி எனது கட்சிக்காரர் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறார். இல்லையென்றால், பாரதீய நியாயா சன்ஹிதாவின் 356வது பிரிவின் கீழ் தகுந்த குற்றவியல் அவதூறு வழக்கைத் தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்த சட்ட விதியின் கீழ் குற்றவாளிகள் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படுவார்கள். மேலும், ஊடகங்களுக்கு தவறான தகவல்களைப் பகிர்ந்தவர்களுக்கு எதிராக பொருத்தமான சிவில் நீதிமன்றத்தில் உரிய அவதூறு வழக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவிப்பு குறிப்பாக யூடியூப், எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ஆன்லைன் செய்தி இணையதளங்கள் உள்ளிட்ட தளங்களில் இயங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுப்பப்படுகிறது." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.