தந்தையுடன் மகள்
தந்தையுடன் மகள் 
சினிமா

கச்சிதமான கிராமத்துப் பெண்குரல்! பவதாரிணி நினைவுகள்

Staff Writer

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி கடந்த ஜனவரி 25ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றை நேற்று (பிப்ரவரி -01) அறிவுச் சமூகமும் – இசை ஆய்வு நடுவமும் ஒருங்கிணைத்திருந்தது.

இந்தக் கூட்டத்தில் பல்துறை சார்ந்த அறிஞர்களும் ஆளுமைகளும் கலந்து கொண்டு கொண்டு பேசினர். அதிலிருந்து சில பதிவுகள்.

ரவிசுப்பிரமணியன்

எழுத்தாளர் ரவி சுப்ரமணியம்:

இளையராஜா வீட்டில் இரண்டு முறை ஒளிப்பதிவுக்காக இருந்துள்ளேன். எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஜேஜே சில குறிப்பில் புத்தகத்தில் குறைந்த வயதில் இறந்தவர்கள் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருப்பார். பாரதியார், அழகிரிசாமி, கு. ப. ராஜகோபாலன், புதுமைப்பித்தன், தளையசிங்கம் பற்றி எழுதுகையில், மேதாவிலாசத்துக்கும் அற்ப ஆயுளுக்கும் அப்படி என்னதான் நமக்கு ரகசிய உறவோ என்று எழுதியிருப்பார்.

பவதாரிணியை மேதாவிலாசத்துக்காகச் சொல்லவில்லை. அப்பாவித்தனம், குழந்தைத் தனத்துக்காக சொல்கிறேன்.

கனிமொழியின் ஒரு கவிதையை இசையமைப்பதற்காக இளையராஜாவுடன் இருந்தேன். அப்போதுதான் தெரியும், பவதாரணிக்கு தமிழில் எழுத தெரியாது என்று.

“என்னம்மா… அப்பா பெரிய கவிஞர். பட்டெல்லாம் எழுதுறார்… உனக்கு தமிழ் எழுத தெரியாதுனு சொல்றீயா” என்றேன்.

அதுக்கு பவதாரணி, “அங்கிள் சீக்ரெட். யார்கிட்டையும் சொல்லாதிங்க” என்றார்.

நான் கூறிய வரிகளை பவதாரிணி ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டார். பாடல் பாடும்போது நிறைய டேக் வாங்கினார். ”கவனமாக பாடனும்” என இளையராஜா கடிந்து கொண்டார். பவதாரிணி பாடுவதில் இளையராஜா ரொம்ப சந்தோஷப்பட்டார்.

இயக்குநர் தங்கர் பச்சான்:

“இளையராஜாவுக்கு மகிழ்ச்சியான சூழலை தரக்கூடியதில் அவரது குடும்பம் முக்கியமானது. அதில், பவதாரிணி ரொம்ப முக்கியமானவர். அவர் சிறுமியாக இருந்ததிலிருந்தே எனக்குத் தெரியும். புன்னகையிலேயே அன்பை அள்ளிக் கொடுத்துவிடுவார். பவதா என் வீட்டு மகள், என் தங்கை. அதைத்தாண்டி சொல்ல எதுவும் இல்லை.

நான் ஒளிப்பதிவாளராக வேலைப் பார்த்த ‘கருவேலம்பூக்கள்’ படத்தில் பவதாரிணி இரண்டு பாடல் பாடினார். பாரதி படத்தில் ‘மயில் போல பொண்ணு’ பாடலுக்கான காட்சிகளை திருவாவடுதுறை பக்கத்தில் ஒளிப்பதிவு செய்தோம். அந்த பாடல் ஒலிப்பதிவு முடிந்ததும் பவதாரிணியிடம் சொன்னேன், “பவா உனக்கு நிச்சம் தேசிய விருது கிடைக்கும்” என்றேன். எப்போதும் போல் சிரித்தார். நான் சொன்னதுபோல், அவருக்கு விருது கிடைத்தது. அந்த விருது கிடைக்கவில்லை என்றால் பவாவைப் பற்றிப் பேசியிருக்க மாட்டார்கள்.

பின்னர் நான் இயக்கிய அழகி படத்தில் ‘ஒளியிலே தெரிவது தேவதையா’ பாடலை பாட வைத்தேன். அந்த பாடலுக்கான ஒலிப்பதிவு காலையில் 7:30 மணிக்கு நடந்தது. அதற்காக பவதாரிணியையும் கார்த்தியையும் அதிகாலையிலேயே வரவைத்து சொல்லிக் கொடுத்தேன்.

பவதாரிணிக்கு நேரடியாக தமிழ் எழுதி, படிக்கத் தெரியாது. ஆனாலும் அவரின் உச்சரிப்பு துல்லியமாக இருக்கும். குழைவு, பாவம் அழகாக இருக்கும். அழகி படத்தை தாங்கி நின்றது அவரின் குரல் தான். அழகி மீண்டும் ஏப்ரல் மாதம் மறுபடியும் வெளிவர உள்ளது.

சீனு ராமசாமி

இயக்குநர் சீனு ராமசாமி

1999-இல் நிறைய விளம்பரப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். அந்த படங்களுக்கு கார்த்திக் ராஜா தான் இசையமைத்தார். நம்பர்-05, முருகேசன் தெருவுக்கு செல்வேன். அதுதான் இளையராஜா வீடு. அந்த வீட்டிலேயே ஒளிப்பதிவுக்கான அனைத்து வேலையும் நடக்கும்.

ஒரு பாட்டுக்கு பவதாரிணி பாடினால் நல்லாருக்கும் என்றேன். அவங்களும் பாடிக் கொடுத்தார். “நல்லா பாடுனீங்க மா” என்றேன், “ரொம்ப தேங்ஸ்ணா” என்றாங்க. அப்போதுதான் பவதாரிணியை முதல் முறையாக நேரில் பார்த்தேன்.

என்னுடைய மாமனிதன் படத்தில் “பண்ணைப்புரத்து சின்ன குயிலே” பாடலை பாடினார். அந்த பாடலுக்கான காட்சிகளை பண்ணைப்புரத்திலேயே எடுத்தோம். இந்த மரணம் ஏற்க முடியாதது.

ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன்:

என்னுடைய ஞான ஆசிரியர்களில் ஒருவராக இளையராஜாவைக் கொண்டிருக்கிறேன். என்னுடைய வெண்முரசுவின் முதல் நூலை இளையராஜாவுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். இந்த சமயத்தில் இளையராஜாவுக்கு ஆறுதல் சொல்லவோ, தேறுதல் சொல்லவோ நான் தகுதியானவன் அல்ல.

ஆறுதலையும் தேறுதலையும் அவர் வணங்கும் தெய்வமும், அதன் கொடையாகிய இசையும் அவருக்கு அளிக்கும் என்று நம்புகிறேன். தன் வாழ்க்கை முழுக்க இசையை ஒரு உபாசனையாக கொண்டிருப்பவர், இசையின்றி வாழ்ந்து வருபவர்.

பவதாரிணியை நான் சந்தித்ததில்லை. ஆனால், ஒரு முறை இளையராஜா பவதாரிணி பற்றி என்னிடம் பேசியிருக்கிறார். அப்போது, அவர் முகத்தில் தெரிந்த பரவசமும் பிரியமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. தன்னுடைய மகளைப் பற்றி அவர் கொண்டிருக்கும் பெரும் கர்வம் இந்த தருணத்தில் என்னை நெகிழ்ச்சியடையச் செய்கிறது.

இந்த தருணத்துக்காக நான் சொல்லவில்லை. எனக்குப் பிடித்த பாடகி பவதாரிணி. திரைக் குரல்களுக்கு இரண்டு குணாதிசயங்கள் உண்டு. இனிமை, கச்சித தன்மை, முழுமை.

பவதாரிணி குரல் கள்ளம் கபடமற்ற ஒரு கிராமத்துப் பெண்ணின் குரல். அல்லது அறியப்படாத இல்லத்தின் பெண்ணின் குரல். பாட்டை பயின்று சரியாகப் பாட வேண்டும் என்று நினைக்காமல், அந்த உணர்வுக்குள் சென்று பாடக்கூடிய தன்மை அவருக்கு உண்டு. அவர் பாடிய பாடல் தற்செயலாக விழுந்த பாடலாகத் தோற்றம் தருகிறது.

மிக அரிதான குரல். மனம் ஒன்றக்கூடிய குரல். அவரின் இறப்பு என்னைப் போன்ற ரசிகர்களுக்கு பெரும் துயரம் தரக்கூடியது.