நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரை கலைஞர்களின் வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், விமான நிலையங்கள், நீதிமன்ற வளாகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இன்று (நவம்பர் 11) வெடிகுண்டு மிரட்டல் இமெயில் வந்துள்ளது. அதில் சென்னையில் உள்ள நடிகர் அஜித் வீடு, எஸ்.வி.சேகர் வீடு, நடிகை ரம்யா கிருஷ்ணன் வீடு, காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்திய மூர்த்தி பவன், ஈவிபி பிலிம் சிட்டி ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் வந்தாலும் குற்றவாளிகளை கண்டறிய இயலாமல் போலீசார் திணறி வருகின்றனர்.