சென்னை சர்வதேச திரைப்பட விழா
சென்னை சர்வதேச திரைப்பட விழா 
சினிமா

சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது!

Staff Writer

21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியது. இந்த திரைப்பட விழா டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) சார்பில் நடக்கும் 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் 2003ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவானது நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, திரையிடப்படும். இதில் தேர்வாகும் சிறந்த படங்களுக்கு, சிறப்பு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியானது, ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது.

சர்வதேச திரைப்பட விழாவிற்காக 57 நாடுகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட படங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அதில், சிறந்த 126 படங்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல், விழாவிற்கு 25 தமிழ்ப் படங்கள் அனுப்பப்பட்டிருந்த நிலையில், சிறந்த 12 படங்கள் தேர்வாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் இருந்து தேர்வான 12 படங்களிலிருந்து சிறந்ததாகத் தேர்வு செய்யப்படும் முதல் 3 படங்களுக்கு ரூபாய் 7 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது. உலக சினிமாவில் தேர்வாகும் சிறந்த 3 படங்களுக்குக் கோப்பை, சான்றிதழ் என மொத்தம் 9 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.

போட்டிப் பிரிவில் திரையிட தேர்வான 12 தமிழ் படங்கள்:

1. வசந்தபாலனின் 'அநீதி'

2. மந்திரமூர்த்தியின் 'அயோத்தி'

3. தங்கர் பச்சானின் 'கருமேகங்கள் கலைகின்றன'

4. மாரி செல்வராஜின் 'மாமன்னன்'

5. விக்னேஷ் ராஜாவின் 'போர் தோழில்'

6. விக்ரம் சுகுமாரனின் 'ராவண கோட்டம்'

7. அனிலின் 'சாயாவனம்'

8. பிரபு சாலமனின் 'செம்பி'

9. சந்தோஷ் நம்பிராஜனின் 'ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்'

10. கார்த்திக் சீனிவாசனின் 'உடன்பால்'

11. வெற்றிமாறனின் 'விடுதலை' பார்ட் 1

12. அமுதவாணனின் 'விந்தியா பாதிக்கப்பட்ட தீர்ப்பு V3'