நித்யா மேனன் 
சினிமா செய்திகள்

பாரில் தகராறு, கடத்தல் - நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு!

Staff Writer

கேரளத்தில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மதுபான விடுதியில் அண்மையில் நடைபெற்ற தகராறில், ஐடி ஊழியர் அலியார் ஷா சலீம் என்பரை காரில் கடத்திச் சென்று லட்சுமி மேனனும் அவரின் நண்பர்கள் மூவரும் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, லட்சுமி மேனனுடன் காரில் சென்ற அவரது நண்பர்கள் மிதுன், அனீஷ் மற்றும் ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சுமி மேனனை தொடர்புகொண்டு விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்திருந்த நிலையில், அவர் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து, லட்சுமி மேனனை காவல்துறையினர் தேடி வருகின்றனர், மேலும், லட்சுமி மேனனுடன் காரில் பயணித்த பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, எதிர் தரப்பில் ஒருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

27 வயதாகும் நடிகை லட்சுமி மேனன், கும்கி, சுந்தர பாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழில் பிரபலமானார். கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், மார்ச் மாதம் வெளியான சப்தம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.