நடிகர் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு, மரியாதையும் கண்ணியமும் சமரசம் செய்யக்கூடியவை அல்ல என்று அர்ஜூன் விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில், அர்ஜூனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் இத்தாலியில் நடைபெற்றது. அப்போது, அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த உறுதிபடுத்தப்படாத தகவல்கள் சமூக ஊடகப்பக்கத்தில் பேசுபொருளாகின.
இந்நிலையில், இதுகுறித்து நடிகர் அர்ஜூன் கூறியுள்ளதாவது:
"முதலில், அஞ்சனாவின் திருமணத்தை முன்னிட்டு அவருக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் தங்களது அன்பையும், மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது இளைய மகளின் திருமணத்தின்போது, எனது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு யூகங்களும், விவாதங்களும் எழுந்தன. அவரது தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல், அவரது தனியுரிமையை மதித்து, அது குறித்து கருத்து தெரிவிப்பதை நான் திட்டமிட்டே தவிர்த்து வந்தேன்.
ஆனால், இதுபோன்ற ஒரு விஷயத்தைப் பொதுவெளியில் பேச வேண்டிய சூழல் ஏற்படும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், தனக்குப் பிடித்தபடி வாழும் சுதந்திரமும் உள்ளது. அவர் விரும்பினால், சரியான நேரத்தில் தனது தரப்பிலான விளக்கத்தை அவரே தெரிவிப்பார்.
ஆனால், ஒரு தந்தையாக, எனது மகளையும், அவரது குணத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிவைத்து ஆதாரமற்ற, மிகவும் இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது.
நடிகர்களாகிய நாங்கள் பொதுவாழ்க்கையில் இருக்கும்போது, யூகங்களும் விமர்சனங்களும் தவிர்க்க முடியாதவை என்பதைப் புரிந்துகொண்டுள்ளோம். ஆனால், யூகங்களுக்கும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் திட்டமிட்டு பரப்புவதற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது. பொதுவெளியில் இருப்பது என்பது யார் வேண்டுமானாலும் கதைகளைப் புனைந்து பரப்புவதற்கோ, ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்கோ உரிமம் அளிப்பதல்ல. எந்தவித ஆதாரமும் இன்றி ஒரு பெண்ணை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று முத்திரை குத்துவது உட்பட்ட ஆதாரமற்ற, இழிவான கருத்துகளைத் தெரிவிப்பது மிகவும் பொறுப்பற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.
தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படுவதற்கும், பெரிதாக்கப்படுவதற்கும் எங்களது அமைதி இடமளிக்காது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான புகார் அளித்து, உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இனிவரும் காலங்களில் சம்பந்தப்பட்டவர்கள் உரிய கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரப்பப்பட்டாலோ அல்லது மேலும் பெரிதாக்கப்பட்டாலோ, அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மரியாதையும் கண்ணியமும் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக்கூடியவை அல்ல." என்று நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.